Friday, 27 November 2015

எந்தப் பக்கம்? - குறும்கதை



1.
ஞாயிற்றுக்கிழமை. காலை பத்து மணி.

நானும் ஈஸ்வரனும் விரைவாக நடந்து கொண்டிருந்தோம். நேற்று பாடசாலையில் சுந்தரம் ஆசிரியர் தமிழ் படிப்பிக்கும்போது தன்னிடம் நிறைய இலக்கியப்புத்தகங்கள் இருக்கென்றும், விருப்பமானவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்தால் தரமுடியும் என்றும் கூறியிருந்தார்.

கோவில் மணி ஓசை கேட்கிறது. கோவிலின் கிழக்கு வீதிக்கு சற்று முன்பாக சுந்தரம் ஆசிரியரின் வீடு இருந்தது. வீட்டிற்கு முன்புறமாக குரோட்டன்ஸ், செவ்வரத்தைச் செடிகளெல்லாம் செழித்து வளர்ந்திருந்தன. பெரிய வீடு. வாசலில் 'பெல்' இருந்தது. வாத்தியார் நல்ல பணக்காரர் போல. பெல்லை மெதுவாக அழுத்தினோம். உள்ளேயிருந்து மான்குட்டி போல ஒரு பெண் துள்ளி வந்தாள்.

"அம்மா! ஆரோ வந்து நிக்கினம்" உள்ளே ஓடி ஒளிந்தாள்.

சுந்தரம் ஆசிரியர் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து, "தம்பி மாத்திரம் உள்ளே வாரும்" என்று ஈஸ்வரனைக் கூப்பிட்டார்.

'தம்பி மாத்திரம் உள்ளே வாரும்' - தம்பி உள்ளே போனான்.

சற்று நேரத்தில் ஈஸ்வரன் வெறுங்கையுடன் வந்தான். கதவு உட்புறமாக அடித்துச் சாத்தப்பட்டது.
"சேர் நாளைக்கு ஸ்கூலிலை கொண்டு வந்து தாறாராம்."

2.
அடுத்தநாள் எங்களுக்குத் தமிழ் பாடம் இருக்கவில்லை. அதனால் அன்று ஆசிரியர் புத்தகங்களை எடுத்து வந்திருக்கமாட்டார் என்றே நினைத்திருந்தோம். ஆனால் 'சோர்ட் இன்ரேவலின்' போது ஒரு மாணவன் வந்து, சுந்தரம் மாஸ்டர் கூட்டிவரச் சொன்னதாக ஈஸ்வரனைக் கூட்டிக் கொண்டு போனான்.

ஒரு பிளாஸ்ரிக் பாக்கினுள் கொஞ்சப் புத்தகங்களுடன் வந்தான் ஈஸ்வரன். வகுப்பு தொடங்கியிருந்தமையால் என்னை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டான். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பாடசாலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.
"சுந்தரம் மாஸ்டர் உனக்குப் புத்தகங்கள் தரவில்லையடா கோபாலன்" என்றான் தயங்கியபடியே ஈஸ்வரன்.
"ஏன் தரவில்லை?"

"நீதான் வகுப்பிலை முதலாம் பிள்ளையாய் வாறனி. உனக்கும் கொஞ்சப் புத்தகங்கள் தரச்சொல்லி மாஸ்டரைக் கேட்டனான். அதுக்கு மாஸ்டர், கோபாலன் டச்சு றோட்டுக்கு எந்தப்பக்கம் இருக்கிறான் எண்டு கேட்டவர்"
"றோட்டுக்கு எந்தப்பக்கம்தான் இருந்தாலென்ன? றோட்டுக்கும் படிக்கிறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?" இது நான்.

"அதுதாண்டா எனக்கும் விளங்கேல்லை" என்றபடியே பிளாஸ்ரிக் பாக்கைத் திறந்து இலக்கியப்புத்தகங்களைக் காட்டினான்.

கொஞ்சத்தூரம் இரண்டு பேருமே பேசாமல் நடந்தோம்.

"டேய்! எனக்கு இந்தப் புத்தகங்களை வாசிக்க விருப்பமில்லையடா. நீ கேட்டனி எண்டபடியாலைதான் நேற்று உன்னோடை கூட மாஸ்டரின்ரை வீட்டுக்கு வந்தனான். இந்தா நீயே இதுகளை வைச்சிரு. நீ கொண்டுபோய் வாசி" திடீரென்று புத்தக பாக்கை என்னிடம் நீட்டினான் ஈஸ்வரன். எனக்கு ஒருபுறம் திகைப்பும் மறுபுறம் மகிழ்ச்சியும்.

"ஆனா ஒண்டு. இதுகளை வாசிச்சுப் போட்டு என்ன உதுகளிலை கிடக்கு எண்டு எனக்கும் கொஞ்சம் சொல்லு. பிறகு அந்த மனிசனோடை காலம் தள்ளேலாது. குறுக்குக் கேள்வியள் எல்லாம் கேக்கும்."



1 comment: