Friday 27 February 2015

தி.ஞானசேகரன் சிறுகதைகள் - ஒரு பார்வை.

                                                                                                                                                                                                                              


ஞானசேகரன் அவர்கள் வைத்திய அதிகாரியாக இலங்கையில் பணியாற்றுபவர். சிறுகதை உலகில் கடந்த நாற்பது வருடங்களாக சளைக்காமல் எழுதி வருபவர். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவர். காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுப்புகள், புதியசுவடுகள்(1977), குருதிமலை(1980), லயத்துச்சிறைகள் நாவல்கள், கவ்வாத்து குறுநாவல், அவுஸ்திரேலியப்பயணக்கதை பயண இலக்கியம் என்பவை இவர் இலக்கிய உலகிற்கு தந்த படைப்புகள். இவற்றுள் புதியசுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டும் இலங்கை அரசின் சாகித்திய விருதுகளைப் பெற்றவை. மேலும் குருதிமலை நாவலிற்கு 'தகவம்', இலக்கியப் பேரவை என்பவற்றின் சான்றிதழும் கிடைத்துள்ளன. கவ்வாத்து சுபமங்களா சஞ்சிகை நடத்திய ஈழத்து நாவல் போட்டியில் பரிசு பெற்றது.

ஞானம் என்ற இலக்கிய சஞ்சிகையை கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். மல்லிகைக்கு அடுத்தபடியாக இலங்கையிலிருந்து தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை இது.

Sunday 22 February 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

கண்ணகி - அதிகாரம் 18

இந்தியாவின் வீடு கட்டும் வேலை நிறைவேறிவிட்டது. இரண்டு படுக்கை அறைகள். வரவேற்பறை. சிறிய களஞ்சிய அறை. சமையல்அறை. குட்டிப் போட்டிக்கோ.
வீடு குடிபுகலுக்கு மணி அண்ணை, சுசீலா அக்காவை மட்டுமே அழைத்தேன். கதை கேட்கும் பிள்ளைகளை அழைத்திருந்தால் நிட்சயம் வந்திருப்பார்கள். பெற்றார் விரும்ப மாட்டார்கள்.வாய்ப்பைபயன்படுத்த விரும்பவில்லை.

இன்று காலை பதினொரு மணி. நல்ல நேரம். பால் காய்ச்சி வீடு குடிபுகுந்தோம்.

வரவேற்பறையில் சீமெந்து நிலத்திலிருந்து வயல்கள் பற்றிக் பேசிக்கொண்டிருந்தோம். மிதி வெடிகள் அகற்றி முடிந்து பாவனைக்கு ஒப்படைக்க ஆயத்தம். ராச நாச்சியார் வம்சத்துக்கு நூற்றிபத்து ஏக்கர்.
அப்பொழுது வீதியில் வந்த லொறி ஒன்று கேற்எதிரே நின்றது. ஒருவர் இறங்கி வேகமாக நடந்து வந்தார்.

Friday 20 February 2015

ஆசைகொண்ட நெஞ்சிரண்டு - சிறுகதை

                அரவிந்தன்
                “ஏன் எல்லாரும் அழுகிறியள்? நான் என்ன செத்தா போட்டன்!

                நான் அப்படிச் சொல்லியிருக்கப்படாது தான். ஆனாலும் என்னால் பாவிக்கக் கூடிய கடைசி ஆயுதம் அதைத் தவிர வேறொன்றும் இருந்ததாக எனக்குப் படவில்லை.

                இறந்துவிட்ட ஒரு உடலிற்காக பிணந்தின்னிக் கழுகுகள்போல சுற்றிச் சூழ நின்று ஒப்பாரி வைப்பதால் இழந்து விட்ட ஒன்றை மீண்டும் பெற முடியும் என்பதில் அசாத்திய நம்பிக்கையுடைய வேடிக்கை மனிதர்கள் போல, அவர்கள்.

                தம்பி ஒரு கையைப் பிடித்திருக்கின்றான். மறு கையை அழுத்திப் பிடித்தபடி தங்கைச்சி. அக்கா பக்கத்தில் நிற்கின்றாவாம். அண்ணா வரவில்லையாம். அம்மாதான் சொல்கின்றா.

                கங்கைகள் மலைகளிலிருந்து தான் ஊற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றும் நியதியில்லையே! கண்களிலிருந்தும் உதயமாகும் என்பதை அம்மா அறியமாட்டாளா?

Monday 16 February 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

தம்பி அண்ணர் யோகன் - அதிகாரம் 17
புனர்வாழ்வு நிறைவேறி ஆயிலடிக்கு வர முன்னரே எனது ஜெய்பூர் கால் சேதமாய்ப் போனது. புதிய ஜெய்பூர் கால் பொருத்த யாழ்ப்பாணம் செல்ல இராணுவ அனுமதி வேண்டும்.

களுபண்டா பரிசளித்த பொன்னிற காஸ்மீர் பட்டுச் சேலை. தலைமுடியை லூசாகவிட்டு மல்லிகை மாலை. நெற்றியில் சந்தனப்பொட்டு ஆறு ஆண்டுகளின் பின்னர் செய்த முதல் சிறு அலங்காரம்.
இரு கமக்கட்டுள்ளும் கோல்கள். வளவின் கேற்றைத் திறந்தேன்.

Saturday 14 February 2015

இமைப்பொழுதும் என் நெஞ்சில் - சிறுகதை


நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாப்படம் ஓடியது. வேலையிலிருந்து அரை நாள் லீவு எடுத்து, 'யாழ்' தியேட்டர் போயிருந்தேன். படம் மூடுபனி. தியேட்டருக்குள் புகுந்ததும் கண்களில் விஞ்ஞானமாற்றம் - ஒரே இருளாக இருந்தது. 'ரோச் லைட்' உதவியுடன் எனக்கு இடம் தேடித்தர ஒருவன் முயன்றான். திடீரென்று என் முதுகில் ஒரு கை பதிந்தது.

"அட செந்தில்! ஆளே மாறிப் போய்விட்டாய். எப்பிடி இருக்கிறாய்?"
"பரவாயில்லை. நீ எப்படி?"
"சுமாராகப் போகுது."

அவனுக்குப் பக்கத்தில் ஓர் இடம் காலியாகவிருந்தது. அதற்கடுத்ததாக மூக்கும் முழியுமாக செந்திலைப் போல, அவனைவிட அழகான ஏழு அல்லது எட்டு வயதுப் பையன்.

"உன் மகனா?"
"ஓம். மனைவி ரொயிலற் போய்விட்டாள். வந்து விடுவாள். நீ திருமணம் செய்து விட்டியா?"
"இன்னமும் இல்லை. இதிலை நிண்டு கன நேரம் கதைக்கேலாது. இன்ரேவலுக்கு சந்திப்போமே!"

நழுவிக் கொண்டேன். படம் தொடங்கியது.

படிக்கும்போது செந்தில் ஒரு பெண்ணை விரும்பினான். அவளுக்கு விருப்பமில்லை. பாடசாலையில் நடந்த ஒரு சம்பவத்தினால் மாணவர்கள் பிளவுபட்டார்கள். பாடசாலை குழம்பியது. ஊர் இரண்டு பட்டது. என் வாழ்விலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இது நடந்து இரண்டு வருடங்களுக்குள் செந்தில் இன்னொருத்தியை மணந்துவிட்டான். நேரத்துக்கு நேரம் மனதை மாற்றி, பெண்ணை மாற்றி வாழ இவனைப் போன்றவர்களால் எப்படி முடிகிறது?

 

Thursday 12 February 2015

கற்றுக் கொள்வதற்கு! - சிறுகதை


மூன்றுவார விடுமுறை கிடைத்தது. வியட்நாம் போவதற்கு விரும்பினேன். அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்பு புறப்படும் முதல் பயணம்.

வியட்நாம் - வல்லரசான அமெரிக்காவை நடுங்க வைத்து நிமிர்ந்த தேசம்.

ஆனால் நண்பன் 'வான் மான் நூஜ்ஜின்' அப்படியல்ல; எப்போதுமே எங்களைச் சிரிக்க வைப்பான். ஒவ்வொரு ஈஸ்டர் விடுமுறையின் போதும் அவனது அம்மாவிற்குச் சுகமில்லாமல் வந்துவிடும். "அம்மாவுக்குச் சுகமில்லை!" அவனும் லீவைப் போட்டுவிட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு தனது தாய்நாடான வியட்நாமிற்குப் போய்விடுவான். இந்தமுறை நானும் அவனுடன் கூடச் சென்றேன். போனவிடத்தில் அவனைப் பற்றிய ஓர் அதிர்ச்சியான செய்தி என்னை மலைக்க வைத்தது.

"அம்மாவின் கடைசிக்காலம். கட்டாயம் பக்கத்தில் இருக்க வேண்டும்" இப்படித்தான் நூஜ்ஜின் சொல்லுவான். நூஜ்ஜின் என்பது அவனது குடும்பப் பெயர். அதற்காக 'வான்' என்றோ 'மான்' என்றோ கூப்பிடலாமா? நூஜ்ஜின் சற்றே குட்டையான உருவமுடையவன். சப்பை மூக்குக் கொண்டவன். எப்போதுமே சின்னத்தாடி ஒன்று வைத்திருப்பான். சமயங்களில் அதற்கு மையும் தீட்டிக் கொள்ளுவான். அவன் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பதினாறு வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கின்றான். நான் கடந்த நாலு வருடங்களாக வேலை செய்து வருகின்றேன். அம்மாவிற்கு எண்பத்தியேழு வயதாகின்றது எனவும் தொடர்ந்து படுத்த படுக்கையாக இருக்கின்றா என்றும் நூஜ்ஜின் கவலையுடன் சொல்லுவான். இதை நான் விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டுப் போனேன். அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகளை விளங்கிக் கொள்வது மிகவும் கடினம். 'பிறதர்' என்பதை 'பிறடர்' என்பான். 'அமெரிக்கா' என்பதை 'மேரிக்கா' என்பான்.

நீண்ட நாட்களாக வேலை செய்பவர்களுக்குக் கொடுக்கப்படும் 'லோங் சேர்விஸ் லீவை' பகுதி பகுதியாக எடுப்பான் நூஜ்ஜின். வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவையாவது தாய்நாடு போய்விடுவான். இதுவரை காலமும் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த லீவை, அவனுடன் கரைப்பது என்று முடிவு எடுத்தேன்.

Monday 9 February 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

யாரிடம் முறையிடுவேன் - அதிகாரம் 16 
பாயில் இரண்டு வரிசையாய்ப் பிள்ளைகள் அமர்ந்திருந்தனர்.
'இன்றைக்கு சுகந்தி வரவில்லையா?"
'இல்லை அன்ரி. ஓமந்தைக்குப் போட்டா. போர் முடிந்த வேளை அவவின் மாமா சரணாகதி அடைந்தவர். போராளி. களுத்துறைச் சிறையில் வைத்திருந்தவை. சிங்களக் கைதிகள் கலகம் செய்து தமிழ் கைதிகள் ஆறுபேரைக் கொன்று போட்டான்கள். அதில் அவவின் மாமா கணேசன் இறந்து போனார். செத்தவீடு கொண்டாடுகினம். அப்பா அம்மாவோடு போயிருக்கிறா." கோமதி.

இன்றைக்கு ராச நாச்சியார் குடும்ப கடைக் குட்டிகள்---முல்லை, பாவலன்---கதை."

Friday 6 February 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-13)

மூன்று சகோதரிகள்(Three Sisters)

மூன்று சகோதரிகள் என்ற குன்று அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் நீல மலைகள்(Blue Mountains) என்ற பகுதியில் காணப்படுகின்றது. இது கட்டும்பா என்ற நகரத்திற்கு அண்மையாக உள்ளது.

Jamison Valley ஐச் சூழ்ந்துள்ள மலைச்சிகரங்கள் காலங்காலமாக நடந்து வரும் காற்று, மழை, நீர்ப்பெருக்கு என்பவற்றால் அரிக்கப்பட்டு(erosion) இந்தக் குன்றுகள் வந்ததாகச் சொல்லுவார்கள். இந்தக் குன்றுகள் மூன்றும் முறையே 922, 918, 906 மீட்டர் உயரம் கொண்டவை. கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் இவை உள்ளன.

கங்காருப் பாய்ச்சல்கள் (-12)

உமது பெயரில், எனது கவிதை
ஒருமுறை அவுஸ்திரேலியாவில் வதியும் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடும் முயற்சி நடைபெற்றது. கவிதைகளை தொகுப்பவருக்கு உதவியாக, கவிதைகளைச் சேர்த்துக் கொடுக்கும் பணியில் ஒருவர் இருந்தார். அவர் எனது கவிதை ஒன்றையும் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக ரெலிபோனில் சொன்னார். நான் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மரபுக்கவிதை சுட்டுப்போட்டாலும் வராது. அவர் கவிதை எழுதுவதில் அதீத ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்திலும் கவிதை எழுதுவார். அவரது தமிழ்க்கவிதைகளைக் காட்டிலும் ஆங்கிலக்கவிதைகள் பிரசித்தம்.

Monday 2 February 2015

வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 15 - சுதந்திரப் பாதை

ஆரியரத்தின தொலை பேசியை எடுத்து மனைவி நிர்மாலிக்கு விசயத்தைக் கூறினார். சித்தப்பா சிவநேசன் குடும்பத்தின் அஸ்தி ஆயிலடிக்குக் கொண்டு சென்ற சமயம் முல்லையுடனும் பாவலனுடனும் நெருக்கமாய்ப் பழகியவர். அவர்கள் மீது அலாதி பிரியம் காட்டியவர். விடயத்தை அறிந்ததும் பதைபதைத்துப் போனார்.

ஆரியரத்தின இருவரையும் அழைத்துக்கொண்டு அலுவலக பின் கதவால் தனது வாகனத்தில் வீடு சென்றார்.
வீட்டை அடைந்ததும் ஆரியரத்தினவின் மனைவி முல்லையையும் பாவலனையும் கட்டி அணைத்து, முத்தமிட்டு அழைத்துச் சென்றார். 'பயப்படாதையுங்கள். மாத்தையா தன்னாலான உதவியைச் செய்வார். உங்கள் அப்பா அம்மா வெளியே வரும் மட்டும் நான் உங்களைக் கவனிப்பேன். என்னோடு தங்குங்கள். கலங்காதையுங்கள்."

Sunday 1 February 2015

போதிகை (Bearing) - சிறுகதை.

 திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும்.

கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் - கட்டில்.

"என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?" விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான்.

மாபெரும் ஆளுமை எஸ்.பொ – எனது பார்வையில்

எஸ்.பொ அவர்களை நான் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு நேரில் சந்தித்தேன். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் வருடா வருடம் நடத்தும் எழுத்தாளர் விழாவிற்காக சிட்னியில் இருந்து மெல்பேர்ண் வருகை தந்திருந்தார். அப்பொழுது எஸ்.பொவிற்கு வயது 75. அவருடன் மூத்த  தலைமுறைப் படைப்பாளிகளான கலைவளன் சிசு.நாகேந்திரன், காவலூர் இராசதுரை ஆகியோரும் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். இவர்களின் கலை, இலக்கியச் சேவையைப் பாராட்டி விருதும் வழங்கப்பட்டது.

அப்பொழுது அவர் முருகபூபதி அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார்.

அவர்கள் இருவரும் பின்னர் 2011 இல் இலங்கையில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாடு தொடர்பாக முரண்பட்டுக் கொண்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் இவர்கள் இருவருமே நாகரீகமற்ற முறையில் வார்த்தைப் பிரயோகம் செய்திருந்தார்கள். ஈழத்தமிழர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்திச் சென்ற 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் சுவடுகள்  காயும் முன்னே அவசர அவசரமாக நடத்தப்பட்டது அந்த மாநாடு. இப்போது பார்க்கும்போதும் எஸ்.பொவின் கருத்துகளே வலுப்பெற்றிருப்பதைக் காணலாம். அதைப் போன்றதொரு மாநாடு பின்னர் இன்னமும் எங்கும் நட்த்தப்படவில்லை. அதற்குரிய அறிகுறிகளும் இல்லை. எப்படி இருப்பினும் அந்த மாநாடு அரசுக்கு ஆதரவாக நட்த்தப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புலி எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்ட பலர் அப்போது அரச ஆதரவாளர்களாகி நின்றார்கள்.