“விவாகரத்து முடிஞ்சு அடுத்த கிழமையே கலியாணம் கட்டிட்டான். எங்கையெண்டு அலைஞ்சு
கொண்டிருந்திருக்கிறான் றாஸ்கல்” சாய்வனைக் கட்டிலில் இருந்தபடியே
தொணதொணத்தார் நேசம்.
“உவனென்ன வாத்தி. அதுவும்
தோட்டக்காட்டுப் பள்ளிக்கூடத்திலை... மலைநாட்டிலை எத்தினை பெம்பிளப்பிளையள்
மலையிலை இருந்து விழுந்து குதிச்சு செத்துதுகளோ? பொறு உவனுக்குச் செய்யிறன் வேலை” மனதுக்குள் கறுவிக் கொண்டார்.
பத்மினியின் அக்கா விமலா நான்கு
வருடங்கள் கழித்து மீண்டும் நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்தார்.
அவர்கள் வந்திருந்த காலத்தில்
நாட்டுப்பிரச்சினைகள் உக்கிரமடைந்து இருந்தன. அவர்களால் வடபகுதிக்கு செல்ல
முடியாமல் இருந்தது. கொழும்பிலே சிறிது காலம் இருந்தார்கள். விமலாவின் சித்தப்பா
ஒருவர் கொழும்பில் இருந்தார். அவர்களின் குடும்பத்துடன் பொழுது கழிந்தது.
ஒருமுறை ஆடைத்தொழிற்சாலையில் வேலை
செய்யும் ஒரு மனிதருடன் சித்தப்பா வந்தார். வந்தவர் தன்னை டேவிட் என அறிமுகம்
செய்து கொண்டார். கிறிஸ்தவரான அவர் பழகுவதற்கு மிகவும் நல்லவராக இருந்தார். இந்திய
வம்சாவளியச் சார்ந்த அவர்,
தனக்கு பெற்றார் உற்றார் என்று ஒருவரும் இல்லை
என்று சொல்லிக் கொண்டார். நண்பர்களுடன் கொட்டஹேனாவில் வசித்து வந்தார்.
அவரின் வருகையுடன் மீண்டும்
பத்மினியின் கலியாணப் பேச்சு தொடக்கி வைக்கப்பட்டது.
விமலா யாழ்ப்பாணம் வந்தபோது டேவிட்டின்
படத்துடன் வந்தாள். சிறுகச் சிறுக பத்மினியின் மனத்தில் டேவிட்டின் படத்தை விரித்தாள்.
சதா டேவிட்டைப் பற்றியே பேசினாள். “என்ன குணமான மனிசனப்பா... அப்படியொரு ஆளை நான்
இதுவரை சந்திக்கவேயில்லை” பத்மினியின்
காதிற்குள் கிசுகிசுத்தாள்.
பத்மினிக்கு இப்போது ஆண்கள் என்றாலே
பயம். சந்திரமோகனை நினைத்தால் அவளின் மூச்சுக்காற்று சூடேறும். இரண்டாவது
கலியாணத்தின் பொழுது எங்கே டேவிட்டும் அந்தக்கேள்வியைக் கேட்பானோ என்ற அச்சம்
பத்மினியை வாட்டியது.
ஒருநாள் சாப்பாட்டு மேசையில்
குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்த தருணமொன்றில் மெதுவாகக் கதையை அவிழ்த்தாள் விமலா.
“என்ன செபமாலை எண்ணுகிறவனையா இஞ்சை
கூட்டிக் கொண்டு வரப் போறாய்?” சாப்பாட்டுக்
கோப்பையைத் தட்டிவிட்டு எழுந்து கொண்டார் கணபதிப்பிள்ளை. அன்றுதான் அவரது கோபம்
உச்சிக்குச் சென்றதை எல்லாரும் கண்டுகொண்டார்கள். விமலாவின் கணவன் எதையும்
கண்டுகொள்வதில்லை. உதட்டுக்குள் சிரித்தார்.
உண்மையில் அப்பொழுதுதான் அவர் கட்டி முடித்த கந்தசுவாமி கோவில் கொடி
ஏறியிருந்தது.
இரண்டு நாட்களாக நேசம் ஒருவருடனும் கதைக்கவில்லை. அவர் மனதில் ஆயிரம்
எண்ணங்கள் சுற்றின. “என்ன செய்யிறது.... இனி அவளுக்கு ஆரைச்
பிடிச்சிருக்கோ அவரையே கட்டிக் கொள்ளட்டும்” என்றார் முடிவாக.
கோவில் திருவிழா முடியும் மட்டும்
‘அந்தக் கலியாணத்தைப்’ பற்றி
எவருடனும் கதைப்பதை தவிர்த்து வந்தார் கணபதிப்பிள்ளை. திருவிழா முடிந்த மறுநாள்
காலை:
“மினிக்குஞ்சு.... உனக்கு அவரைப்
பிடித்திருக்கிறதா?”
என்றார்.
“அவளும் எவ்வளவு காலம் எண்டு
இருக்கிறது! செய்யட்டும்” நேசம்
சொல்லிக் கொண்டார்.
“வேறு என்னதான் அவள் செய்யிறது?” என்றாள் அழாக்குறையாக விமலா.
பத்மினி மெளனமாக இருந்தாள்.
மூன்றுநாள் கழித்து ஒரு றவலிங்
பாக்குடன் இவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் டேவிட். டேவிட்டின் தோற்றத்தைக்
கண்டதும் எல்லோரும் திகைத்துப் போய்விட்டனர். அவன் நாலடியும் சில
அங்குலங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தான். விமலா எல்லாருக்கும் படம் காட்டினாளே
தவிர டேவிட்டின் தோற்றம் பற்றி வர்ணித்தது கிடையாது.
டேவிட் விமலாவின் சித்தப்பாவின் உறவினர் வீட்டில்
தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த காலங்களில் அடிக்கடி பத்மினியின் வீட்டிற்கு
வந்து போனார். பத்மினியின் மனதில் சிறிது சிறிதாக மாற்றம் நிகழ்ந்தது. ஆனால்
நேசத்திற்கு டேவிட்டை அறவே பிடிக்கவில்லை. அவனுடன் ஒருநாளும் முகம் கொடுத்துக்
கதைத்ததும் கிடையாது.
“என்னம்மா.... அவர் கட்டை
எண்டபடியாலைதானே உனக்கு அவரைப் பிடிக்குதில்லை” பத்மினி தாயாரிடம் கேட்டாள்.
“எடி போடி நீ” என்று தாய்காரி பத்மினியைக் கலைத்தாள்.
“அவர் கட்டை எண்டாலும் தங்கமான குணம்
அம்மா...” என்றாள்
பத்மினி.
இருப்பினும் சந்திரமோகன் கேட்ட
கேள்வியை டேவிட்டும் கேட்கக்கூடும் என்ற அச்சம் அடிக்கடி பத்மினிக்குத் தலை காட்டியது.
அதன் பின்னர் டேவிட் அடிக்கடி
நேசத்திற்கு அருகிலே கதிரையைப் போட்டுவிட்டு அவருடன் உரையாடுவான். ஒருநாள் நேசம்
ஒரு என்வலப்பை டேவிட்டிடம் நீட்டி,
“எட தம்பி இந்த என்வலப்பின்ரை
பின்பக்கத்திலை ‘செக் 500 ரூபா’ எண்டு
இங்கிலீசிலை எழுதித்தாரும்” என்றார்.
டேவிட் cheque என்று எழுதவற்குப் பதிலாக check என்று எழுதிவிட்டான்.
“எட இவன் ஒருத்தன்....” என்று அவரைப் பார்த்து சினந்து
கொண்டார்.
ஒரு சனிக்கிழமை பத்மினியின் கலியாண
எழுத்து மிக எளிமையாக நடந்தது. அதன் பின்னர் பத்மினியின் புதிய அத்தியாயம்
தொடங்கியது. மறுவாரமே டேவிட்டுடன் கொழும்புக்கு ரயிலேறிவிட்டாள் பத்மினி. பிரிவின்
துயர் தாங்காது கணபதிப்பிள்ளையும் நேசமும் ஒரு பாட்டம் அழுது தீர்த்தனர்.
கொழும்பில் கொட்டஹேனவில் இவர்களை
வரவேற்பதற்காக சிலர் காத்திருந்தனர். ஒரு சிறு வீடு. வீட்டு வாசலை கார்
அடைந்ததும், ஒரு பெண் டேவிட்டுடன் கதைத்துவிட்டுச் சென்றாள்.
உள்ளே ஹோலிற்குள் புதுமணத்தம்பதிகள்
கலகலத்து உரையாடிக் கொண்டிருந்தனர். அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அறைக்குள்
ஒரு பெண்ணின் இருமல் சத்தம் கேட்டது. தொடர்ந்து,
“ஆராவது கொஞ்சம் தேத்தண்ணி போட்டுத்
தரமாட்டியளா?”
என்றொரு குரல் கேட்டது. பத்மினி திரும்பி டேவிட்டைப் பார்த்தாள்.
“அது என்னுடைய அம்மா. உள்ளே
படுக்கையில் இருக்கின்றார். போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” அருகேயிருந்த அறையைச் சுற்றிக்
காட்டினான் டேவிட். தயங்கியபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அறைக்குள்
பெருங்குடலைப் பிறாண்டும் நாற்றம் பரவியிருந்தது.
“ஆ... நீயா என் மருமகள்? என்ரை
பீய்த்துணியை துவைத்துப் போடுவியா? எனக்குச் சாப்பாடு, மருந்து எல்லாம்
வேளாவேளைக்குத் தருவியா?” வயது
முதிர்ந்த டேவிட்டின் தாயார், பத்மினியைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
பத்மினிக்கு அழுகை அழுகையாய் வந்தது.
தான் டேவிட்டை அல்ல, டேவிட்டின்
அம்மாவை மணந்து கொண்டிருக்கின்றேன் என்ற உண்மை உறைத்தது.
தொடரும்...
அருமையான பதிவு ... தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி ... http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeletehttp://ypvn.myartsonline.com/