சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக
நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்ஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன்
பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.
’பிறின்ஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு
யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன்
பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட
எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமயல் அறைக்குள் யார்
யாரெல்லாம் இருப்பார்கள்?
சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர்,
மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப்
பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை.
ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக
வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும்
கவர்ந்திழுக்கும் தோற்றம்.
எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை.
சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும்
முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா.
இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு
வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.
கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால்
முன்னே வந்து விழுந்தது.
குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை
வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான்.
“நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி
இருந்தது.
ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது.
அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க
முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி?
அது எப்படி ஒருநாளும் சந்திக்காமல் கதைக்காமல் “நீங்கள்
தனியாகவா இருக்கின்றீர்கள்?” என்று கேட்க முடியும். ஜனகனின் மனம் புழுவாய்க்
குடைந்தது. ஒருவேளை முதலாளியுடன் கதைப்பதை வைத்துக் கொண்டு தன்னை நல்ல ஆண்மகன் என
அவள் முடிவெடுத்திருக்கலாம்.
இருப்பினும் அடுத்தநாள் காலை கடை திறப்பதற்கு முன்
காத்திருந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிடலாம் என முடிவு செய்தான் ஜனகன்.
எதிர்ப்புறக் கடையில் ஒளித்திருந்தான்.
கடை முதலாளி காரை கடை முகப்பில் நிறுத்துகின்றார்.
முதலாளி அம்மாவும் ஒரு பெண்ணும் காரில் இருந்து இறங்குகின்றனர். ஏதோ சில பொருட்களை
இறக்குகின்றனர். முதலாளி அவர்களுடன் ஏதோ கத்திக் கதைத்துவிட்டு காரைப்
பின்புறமுள்ள தரிப்பிடம் நோக்கிச் செலுத்துகின்றார்.
அந்தப் பெண் பதட்டமடைந்தவளாக திரும்பி சுற்றுமுற்றும்
பார்த்தாள். தரிசனம் கிடைத்தது. ஜனகன் எதிர்பார்த்ததைவிட அழகாக இருந்தாள். மெல்லிய
அந்தப் பெண் அவர்களின் மகளாக இருக்கலாம். அவளே பிற்ன்ஸ் என்று ஜனகனின் மனம்
அடித்துச் சொன்னது.
ஜனகன் வீட்டிற்கு அரக்கப்பரக்க ஓடினான். மேல் ஆடையைக்
கழற்றிவிட்டு ரி சேட் ஒன்றை மாட்டினான். அதன் முன்னும் பின்னும் கொட்டை எழுத்தில் ‘Yes’
என்று எழுதி இருந்தது.
அந்த ரி சேட்டிற்கு பலன் கிட்டியது. அன்று விழுந்த
பேப்பரில்:
‘நான் ஆபத்தில் சிக்கியுள்ளேன். இவர்கள் என்னைத் தினமும்
சித்திரவதை செய்கின்றார்கள், துன்புறுத்துகின்றார்கள். உங்களால் எனக்குப்
பாதுகாப்புத் தர முடியுமா? பதிலை கடை வாசலில் உள்ள பூச்சாடியின் கீழ் வைக்கவும்’
நான்கு நாட்களின் பின்பு இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு
வந்தது.
ஒருநாள் காலை முதலாளியின் கார் வரும் திசைக்கு எதிராக
ஜனகன் தனது காரை நிறுத்தி வைத்திருந்தான். அந்தப்பெண் காரை விட்டு இறங்கியதும்,
குறுக்காக ஓடி ஜனகனின் காருக்குள் ஏறிக் கொண்டாள். கார் நகரத் தொடங்கியது.
●
காரின் பின் சீற்றைத் திறந்து ஏற முற்பட்ட அவளை, ஜனகன்
முன்னால் வந்து ஏறும்படி கத்தினான். கார் மெதுவாக நகரும்போதே அவள் முன் கதவைத்
இழுத்துத் திறந்து தாவி ஏறினாள்.
“உங்கள் பெயர்?” முதன் முதலாக ஜனகன் அவளின் பெயரைக்
கேட்கின்றான்.
“சிவானி…. நீங்கள்?”
“நான் ஜனகன்.”
“நாங்கள் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?”
ஓடிவந்த களைப்பில் சிவானிக்கு மூச்சு இரைந்தது.
“உமக்கு முதல்ல நாலு நாட்கள் ஹோட்டல் எடுத்து வைச்சிருக்கிறன்.
அதுக்குப் பிறகு றென்றுக்கு விடு ஒண்டு பாக்கலாமெண்டிருக்கிறன். தூரமா எடுத்தா
உமக்கு நல்லாய் இருக்கும்” சொல்லியபடி ஸ்ரியரிங் வீலில் இருந்த தனது இடது கையை
எடுத்து அவளின் வலதுபுற மணிக்கட்டில் வைத்து அழுத்தினான். சிவானி அதற்கு ஒன்றும்
சொல்லாமல் ஜனகனை நிமிர்ந்து பார்த்தாள். கார் ஒரு தடவை ஆட்டம் கண்டு பின்னர்
நெடுஞ்சாலையில் வேகமெடுத்து ஓடியது. ஹோட்டல் போய்ச் சேரும் வரைக்கும் அவர்கள்
இருவரும் அதன்பின்னர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.
ஹோட்டலின் கீழ் உணவருந்திவிட்டு, திறப்பை எடுத்துக்
கொண்டு அறைக்குப் போனார்கள்.
அதன் பின்னர் இருவரும் சொப்பிங் சென்ரர் சென்று, சிவானிக்குத்
தேவையான உடுப்பு முதல் சகலதும் வாங்கிக் கொண்டார்கள்.
மீண்டும் ஹோட்டல் சென்று சிவானியை இறக்கிவிட்டு ஜனகன்
புறப்படும்போது,
:அப்ப நீங்கள் இங்கே தங்கமாட்டீர்களா?” என்று ஏக்கமாகக்
கேட்டாள் சிவானி.
“பாதுகாப்புத் தர முடியுமா என்றுதானே கேட்டீர்கள்.
தந்துவிட்டேன். அவுஸ்திரேலியாவில் சகல மனிதரும் பாதுகாப்பாக வாழ முடியும்.
அடிக்கடி உங்களை வந்து பார்க்கின்றேன்.
நீங்கள் சிறிது காலம் மறைந்து வாழ்ந்தால் நல்லது என
நினைக்கின்றேன்.
நீங்கள் முதலில் உங்கள் உறவினருக்கு ஒரு கடிதம் எழுதித்
தாருங்கள். நான் போகும்போது போஸ்ற் பண்ணி விடுகின்றேன்.”
சிவானி பேனைய எடுத்ததும் அவள் கைகள் நடுங்கின. அந்த
நடுக்கத்தில் எழுத்துகள் கோணல் மாணலாக கடிதத்தில் விழுந்தன.
”நீங்கள் இதுவரை எனக்குச் செலவழித்த பணம் அத்தனையையும்
கூடிய விரைவில் தந்துவிடுவேன். என்னை இங்கு அவுஸ்திரேலியாவிற்குக் கூப்பிட்டு
விட்டதற்கு மிகமிக நன்றி. என்னைத் தேட வேண்டாம். நான் எனக்குரிய வழியில்
செல்கின்றேன்.” கடிதத்தைப் புரிந்துகொள்ள ஜனகன் திண்டாடினான்.
ஜனகன் போகும்போது புதிதாக வாங்கிய ஒரு ’சம்சுங்’ போனை சிவானியின்
கைகளிற்குள் பொத்தித் திணித்தான்.
“ஏதாவது தேவை என்றால் இந்த நம்பருக்கு அடியுங்கோ” தனது
நம்பர் எழுதிய துண்டொன்றையும் சிவானியிடம் கொடுத்தான்.
சிவானி அந்தத் துண்டை வாங்கும்போது,
“நான் உங்களை விரும்புகின்றேன்” என்றாள்.
“நான் ஏற்கனவே திருமணம் செய்தவன். எனக்கு மனைவியும்
இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றார்கள்” என்றான் ஜனகன்.
“என்ன இது புதுக்கதை விடுகின்றீர்கள்?” என்றாள் சிவானி.
.
No comments:
Post a Comment