Wednesday, 22 August 2018

மெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்


அதிகாரம் 7 - பின் தொடருதல்

தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபதுநாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.

இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.

இப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள்தாம் கதைப்பார்கள்.

“நண்பா! இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?”

காது கேட்டுக் கேட்டு புளித்துவிடும்.

”இப்போது இரண்டாவது ஆட்டம் நடக்கும்” பன்னிரண்டு மணியளவில் ரான் சொல்லுவான். அவன் இதுகளுக்கென்று சில குறியீட்டுப் பாஷைகள், சங்கேத பாஷைகள் வைத்திருக்கின்றான்.

இப்படி புங்கும் ஜோசுவாவும் காணாமல் போன சந்தர்ப்பங்கள் பல உண்டு.

நல்லதொரு பெண் ஒழுக்கம் தவறி நாசமாகப் போகப்போகின்றாளே எனப் பலரும் கவலை கொண்டனர். ஆனாலும் ஒருவரும் அவளுக்கு அறிவுரை சொல்லவில்லை. அவள் என்ன விரல் சூப்பும் சுட்டிப் பெண்ணா? வாழ்க்கையில் வழுக்கி விழுவதென்பது வேறு, தானே தோலைக் கீழே போட்டு சறுக்கி விழுவதென்பது வேறு. புங் வழுக்கி விழுந்தாளா சறுக்கி விழுந்தாளா?

புங்கின் கணவனின் நண்பர்கள்---ஏன் அவளின் நண்பர்களும்கூட---புங்கைப் பரீட்சித்து உண்மை நிலையை அறிய விரும்பினார்கள்.

பலரும் புங்கைப் பின் தொடர்ந்தார்கள்.

அவள் வேலை செய்து வீடு திரும்பும்போது அவளின் பின்னால் போனார்கள். அவள் இவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு வெவ்வேறு பாதைகளில் வீடு செல்லத் தொடங்கினாள். அப்படியில்லாமல் அவளைப் பின் தொடர்ந்தால், இடையில் எங்காவது பெற்றோல் ஸ்ரேசனிற்குள் காரை விட்டுவிடுவாள். இவர்கள் திகைப்படைந்து தம்மைத் தயார் படுத்துவதற்குள் இவர்களது கார் பெற்றோல் ஸ்ரேசனைக் கடந்துவிடும்.

எப்படிப் பார்த்தாலும் அவள் வீடு செல்ல குறந்தது இருபது நிமிடங்கள் போதுமானது. அவளின் வீடு நெடுஞ்சாலை ஒன்றின் ஒருவழிப்பாதையில் அமைந்திருந்தது. எப்படியாயினும் அவள் தன் வீட்டிற்கு வலம் அல்லது இடம் என்ற வழியாகத்தான் கடைசியில் சேர வேண்டும். நண்பர்கள் பின் தொடருவதை நிறுத்தி, வேலை முடிந்தவுடன் வேகமாக விரைந்து அவளின் வீட்டிற்கு இருமருங்கிலும், வீட்டிற்குச் சற்றுத் தள்ளி ஒளித்திருந்தார்கள்.

சந்தேகப்படும் நாட்களில் அவள் பலவேளைகளில் சரியாக இருபது நிமிடத்திற்குள் வந்துவிட்டாள். சில நாட்களில் அரைமணி நேரத்திலும், சிலநாட்களில் ஒருமணி நேரத்திலும் வந்தாள். இரண்டுநாட்கள் அவள் வீடு சேர்ந்து சில நிமிடங்களில் ஜோசுவாவின் காரும் அந்த வழியாகப் போனது. அவன் இருக்கும் இடத்திற்கும் அந்த வழிக்கும் சம்பந்தமேயில்லை என்பதால் ‘கள்ள நட்பு’ உறுதியானது.

விஷயம் அம்பலமானது. வெளிச்சமானது.

கூத்து கணவனுக்கு நாசூக்காகத் தெரிவிக்கப்பட்டது. அவன் கள்ளனைப் பிடிக்கப் போட்ட செக்கியூரிட்டிக் கமராமல் தன் மனைவியை நோட்டம் விடத் தொடங்கினான்.

பகலில் கணவனும் இரவில் மனைவியும் வேலை செய்வதால், தமக்குள் தொந்தரவு இருக்காமல் இருக்க தனித்தனியே இரண்டு அறைகளில் இருந்தது பெரும் பிழையாகிவிட்டதை கணவன் உணர்ந்தான். அவர்கள் இருவரும் வாரத்தில் ஐந்துநாட்கள் தனித் தனியாகவும், வார இறுதியில் ஒன்றாகவும் வசித்தது பெரும்பிழையாகி விட்டது.

பலநாள் திருடி ஒருநாள் அகப்பட்டாள். ஒருநாள் குசினிக்குள் தேநீர் போட்டுக் குடிப்பது போல பாசாங்குடன் இருந்த கணவனிடம் அவள் பிடிபட்டுக் கொண்டாள்.

“எத்தனை மணிக்கு வேலை முடிந்தது?”

அவனின் அந்தத் திடீர்க் கேள்வியினால் அவள் தடுமாறத் தொடங்கினாள். தன்னை விழிப்படையச் செய்தாள்.

புங் பொய் சொல்கின்றாள் என்பதை நினைக்க அவனுக்கு வேதனையாக இருந்தது. அன்று முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை.

அவன் புங்கை முதன்முதலாகச் சந்தித்தது ஒரு திருமணவிழாவின் போது. அவள் அந்தத் திருமணத்திற்காக வியட்நாமில் இருந்து தன் பெற்றோருடன் அவுஸ்திரேலியா வந்திருந்தாள். அவன் அப்போது விக்டோரியா யூனியில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தான்.

ஒரு மான் குட்டியைப் போல துள்ளித் திரிந்த புங், அவன் கண்மீது பட்டுக் கொண்டாள். அவன் அந்தக் கலியாணவீட்டில் நடப்பவற்றை விடுத்து அவளையே நோட்டமிட்டபடி இருந்தான். அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் கதைக்காமல் ஒரு நொடி இருந்ததை அவனால் காண முடியவில்லை. ஒருவேளை பேச்சை நிறுத்தினால், மூச்சை விட்டு விடுவாளோ?

அவள் மணப்பெண்ணின் நெருங்கிய உறவினள் என அங்குள்ளவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் மாப்பிள்ளையின் உறவினன். மணப்பெண்ணின் உறவினரை மாப்பிள்ளையின் உறவினர் திருமணம் செய்து கொள்வது இலகுவானதல்லவா? அவன் அதற்கான முயற்சிகளில் களம் இறங்கினான்.

அவளின் அந்தத் துடியாட்டமும் சுறுசுறுப்பும் இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு விளையாட்டில் முடியும் என அவன் அப்போது நினைத்திருக்கவில்லை.

புங் இப்போது கட்டுக்கடங்காத மான் போல அவனுக்குத் தென்பட்டாள்.

…. இன்னமும் வரும் …

No comments:

Post a Comment