Sunday 24 September 2023

Sunday 10 September 2023

யாழ் பறவை (LYRE BIRD) – சிறுகதை

 


நாளைக்குக் காலமை சவரின் ஹில் பாக்கப் போகிறோம். நீங்களும் வெளிக்கிட்டு நில்லுங்கோ. போற வழியிலை உங்களையும் கூட்டிக்கொண்டு போறோம்,” மகள் தன் பெற்றோருக்கு, முதல்நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு விட்டிருந்தாள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திரமோகனும் பராசக்தியும் தாமதித்தே உறக்கம் கலைவார்கள். அன்று நேரத்திற்கு எழுந்து தயாராகிவிட்டார்கள். மெல்பேர்ணில், பலரட் என்ற இடத்தில் உள்ள சவரின் ஹில்லை---தங்கச்சுரங்கத்தை---அவர்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் பார்த்துவிட்டார்கள். இருப்பினும் மகள், மருமகன், பேர்த்தியுடன் பார்க்கப் போவது இதுதான் முதல் தடவை. ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளில் பலரட் என்னுமிடத்தில் தங்கம் அகழ்ந்தெடுத்ததை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த `சவரிங் ஹில்’.

சந்திரமோகனும் மனைவியும் வெளிக்கிட்டு, நேரத்திற்குப் போய்விடவேண்டும் என்பதால் வீட்டிற்கு முன்னால் காத்து நின்றார்கள். எதிரே பரந்து விரிந்திருந்த, சந்திரமோகனின் விவசாய நிலப்பரப்பில் சிலர் வேலை செய்து கொண்டு நின்றார்கள். சந்திரமோகன் வீதியைக் குறுக்காகக் கடந்து – அப்பிள், பீச்சஸ், நெக்டரின் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்தவர்களுடன் கதைத்துவிட்டு அங்கிருந்தபடியே மனைவியைப் பார்த்தார். இன்னமும் மகள் வரவில்லை.

 பராசக்தி தன் தோள்பட்டையில் தொங்கிக் கொண்டிருந்த பையை சரி பார்த்துக் கொண்டார். தின்பட்டங்கள் உள்ளே ஒளித்திருக்க, தண்ணீர்ப்போத்தல்கள் வெளியே நீண்டிருந்தன. மகள் குடும்பம், கரோலைன் ஸ்பிறிங்ஸ் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, இவர்கள் இருக்கும் பக்குஸ்மாஸ் வந்தடைந்தார்கள். மகளின் காரைக் கண்டதும், சந்திரமோகன் நடையைத் துரிதமாக்கி விரைந்து வந்தார்.  தாமதிக்காமல் இருவரும் மகளின் காரினுள் ஏறிக்கொண்டார்கள்.

சந்திரமோகன் தம்பதியினருக்கு நடுவே பேர்த்தி நிலா இருந்தாள். பேர்த்திக்கு எட்டு வயதாகின்றது. இடுப்பிலிருந்து குடை போல விரிந்த ஆடையுடன், கையிலே ஒரு ஸ்ரைலான `ஹாண்ட் பாக்வைத்திருந்தாள் அவள். தலையில் குடை போல ஒரு தொப்பி `பிங்நிறத்தில் விரிந்திருந்தது. லிப் ஸ்ரிக் கூடப் பூசியிருந்தாள். அவளைக் கடைக்கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்துகொண்டார் சந்திரமோகன். பேர்த்தி நன்றாகத் தமிழ் கதைப்பாள். பக்குஸ்மாஸ் என்ற இடத்தில், தனது வாயைத் திறந்த பேர்த்தி, பலரட் வரும்வரையும் மூடவேயில்லை. அளப்பதும் அரைப்பதுமாக இருந்தாள்.

தாத்தா... உங்களுக்கு லயர்பேர்ட் தெரியுமா?”

நான் கூட லயர்பேர்ட் தான்.”