Friday 26 April 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (2)




வண்டிச்சவாரி

அ.செ.முருகானந்தன்

இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது. 

Saturday 20 April 2019

`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை


 
கடந்த இருபது வருடங்களாக ‘ஞானம்’ சஞ்சிகை இலங்கையிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் ஏற்கனவே `புதிய சுவடுகள்’, `குருதிமலை’, `லயத்துச் சிறைகள்’ போன்ற நாவல்களைத் தந்தவர். `எரிமலை’ நாவல் ஞானம் பதிப்பகத்தின் 53வது வெளியீடாக வருகின்றது.

ஈழ போராட்டம் எழுச்சி கொண்டு, பின்னடைவாகிப் போய்விட்ட தற்போதைய நிலையில், நடந்து முடிந்துவிட்ட சரித்திர நிகழ்வுகளின் ஒரு காலகட்டத்தை இந்த நாவல் பேசுகின்றது.

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை அனேகமாக இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையிலும், இதற்கு முன்னர் பல படைப்புகள் வந்துவிட்ட நிலையிலும் இந்த ‘எரிமலை’ நாவல் புதிதாக என்ன சொல்லிவிடப் போகின்றது என நினைத்துக்கொண்டு – நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

Saturday 13 April 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (1)


வெள்ளிப்பாதசரம்

- இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்)

தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி... ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ' என்று கெஞ்சினாள்.

அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான். அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப் போறது' என்று சொல்லிக் கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தன் தோளில் கிடந்தசால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல் என்னோட வா' என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.கோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின் மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கின. வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டே சென்றாள். ஐந்து வயதுச் சிறுமியைப் போல, முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்' போட வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது... செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில் மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க் கொண்டிருந்தான்.

Sunday 7 April 2019

கடவுச்சொல் – குறும்கதை



சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன் தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ - போன் வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான். அவனது தாயார் அதற்கெனவே சிறுகச் சிறுகப் பணம் சேமித்திருந்தார். அவனது பிறந்தநாள் அன்று, சுரேந்தர் ஆச்சரியப்படும் விதத்தில் அவனது பரிசுப்பொருள், ஐ - போன் கிடைத்தது. அது முதல் கொண்டு, உறங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் எல்லாம் அவனது கைகளில் ஐ-போன் தவழ்ந்து விளையாடியது.

நேற்று, சனிக்கிழமை அவனது பள்ளி நண்பன் சுதேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனது வீட்டிற்குச் சென்றிருந்தான். சுதேஷ் பிஜி தேசத்தைச் சேர்ந்தவன். அவனின் வீட்டிற்கு, முன்பும் பல தடவைகள் சென்றிருக்கின்றான். பிறந்தநாள் கொண்டாட்டம் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக அவனது வயதையொத்த நண்பர்கள் கூச்சலும் கும்மாளமுமிட்டவாறே இருந்தார்கள். கேக் வெட்டியாயிற்று.

அதன்பின்னர் டிஸ்க்கோ நடனம் ஆடுவதற்காக கராஜ் சென்றார்கள். வெளியே இருட்டு மெல்ல ஆக்கிரமித்திருந்தது.  சுதேஷ் கராஜ் கதவை றிமோற் கொன்ரோலரினால் திறந்து வைத்தான். கீச்சாமாச்சா என்று சத்தமிட்டவாறே நண்பர்கள் உள்ளே சென்றார்கள். அங்கே டிஸ்க்கோ ஆட்டத்திற்கான மின்விளக்குகள் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல வர்ணங்கள் கொண்ட – அதற்கென வடிவமைக்கப்பட்ட, வட்ட வடிவமான பெரிய மின்குமிழ்கள் கூரையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தன. பட்டை தீட்டப்பட்ட இரத்தினக்கற்கள் போல ஒளிர்வதற்காக அவை காத்திருந்தன. அவற்றை ஒளிரவிடுவதற்காக ஏற்கனவே ஒளிர்ந்துகொண்டிருந்த மின்விளக்கை அணைத்தான் சுதேஷ். ‘டிஸ்க்கோ லைற்’றின் ஆளியை அழுத்துவதற்குள் இடைப்பட்ட நொடி நேரத்தில், ஏழெட்டு அந்நிய இளைஞர்கள் சரசரவென உள்ளே நுழைந்தார்கள்.

Monday 1 April 2019

மணல் சிற்பம் (Sand Sculpting)





 

ஊர்சுற்றிப் புராணம்

கல், மரம் போன்றவற்றில் சிற்பங்கள் உருவாக்குவது போல மணலிலும் சிற்பங்களை உருவாக்கலாம். சரியான விகிதத்தில் மணலையும் நீரையும் கலந்து, கைதேர்ந்த சிற்பிகள் இவற்றை உருவாக்குகின்றார்கள்.

அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் Frankston என்னுமிடத்தில் நடைபெற்றுவந்த இந்த நிகழ்வு, 2018 ஆம் ஆண்டிலிருந்து Mornington Peninsula இல் அமைந்துள்ள `Boneo Maze’ என்று குறிப்பிடப்படும் (695 Limestone Road Fingal) என்ற இடத்தில் நடைபெற்று வருகின்றது. மெல்பேர்ணில் இருந்து ஒரு மணி நேரம் கார் ஓடும் தூரத்தில், அமைந்துள்ள இப்பகுதியில் மார்கழியில் இருந்து சித்திரை வரை இந்த மணல் சிற்பங்களைப் பார்வையிடலாம். இந்த வருடம் புரட்டாதி மாதம் வரை நடைபெறும் என்று ஒரு செய்தியையும் அறிந்தேன். இந்த மணல் சிற்பங்களின் கருப்பொருள் (Theme) காலத்துக்குக் காலம் மாறுபடும். இந்தத் தடவை (2019) `Peter Pan’. இதற்காக 3500 தொன் மணல் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மணலில் இருந்து இந்தச் சிற்பங்களை எப்படி வெட்டி எடுக்கின்றார்கள் என்ற பயிற்சி வகுப்புகளும் இங்கே நடைபெறுகின்றன. தவிர பூந்தோட்டம், புதிர்பாதை (maze), இராட்சத விளையாட்டுகள்(giant game), படகுப்பயணம் (boardwalks) என்பனவும் இங்கே உண்டு.