Thursday 25 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (4/6)

 
1983 ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும் மேலும் எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார். யூலையில் பெரும் கலவரமாக வெடித்த அது பல தமிழர்களைக் காவு கொண்டது.

சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் இடையில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைக்க பல மாதங்கள் எடுத்தன. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை, அவர்களைத் தவிர மற்ற எல்லாரும் விரும்பியிருந்தார்கள். இதனால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க பல மாதங்கள் எடுத்தன.

பொத்தி வைக்கப்பட்டிருந்த இரகசியம் மெல்ல கசியத் தொடங்கியது. மலையகத்தில் இவர்களின் பிரிவைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்மினியை அங்கு கூட்டிச் செல்லாததற்கு நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லி வந்தான் சந்திரமோகன். நாட்டுபிரச்சினைகளையும் அதற்குக் காரணமாக இழுத்தான்.

சந்திரமோகனுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து சாரதா பித்துப் பிடித்தவள் போலானாள். எதையும் எவரையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தினமும் கோவிலுக்குச் சென்று சுவாமியை முழுசிப் பார்த்தாள். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்த அன்று காலைகூட கோவிலில் போய் இருந்துவிட்டாள். பின்னர் அவளை பலாத்காரமாகவே கோவிலில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது.

Friday 19 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (3/6)



 








அதிகாரம் 3

கணபதிப்பிள்ளையும் நேசமும் தமது இரண்டு பிள்ளைகளான விமலாவையும் பத்மினியையும் நன்றாகவே வளர்த்திருந்தார்கள். ஒழுக்கமாகவும், கல்வியில் குறை விளங்காமலும், சங்கீதம் வீணை போன்ற இதர துறைகளில் விற்பன்னர்களாகவும் ஆக்கியிருந்தார்கள். பாடசாலை சென்று திரும்பும்போதெல்லாம் குனிந்த தலை நிமிர மாட்டார்கள். எதிரே யார் வந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. வளர்ந்த பின்னர் கூட அவர்களின் நட்பு ஒரு வட்டத்திற்குள்தான் இருந்தது. அப்படி வளர்ந்திருந்த பத்மினிக்கு சந்திரமோகனின் கேள்வி ஆச்சரியத்தைத் தந்தது. கோபம் கொள்ள வைத்தது.

பத்மினி படுக்கையில் இருந்து சீறி எழுந்தாள். பாம்பானாள். ஆடிப் படமெடுத்து எல்லாவற்றையும் தட்டி விழுத்தி நொருக்கினாள். மூச்சு, கொத்தப்போகும் நாகம் போல் சீறிப் பாய்ந்தது. தலையணையால் ஆத்திரம் தீரும் வரைக்கும் சந்திரமோகனை விளாசினாள். தீனமான குரலில் கத்திக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

மாப்பிள்ளை இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பத்மினி எழுந்து போனபின், அடிமேல் அடி வைத்து நடந்து, கதவைச் சாத்திவிட்டு அடங்கி ஒடுங்கி நின்றார். உடல் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இதை அவன் மாத்திரமல்ல, வீட்டில் இருந்த எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

Sunday 14 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (2/6)

 
அதிகாரம் 2

காலை பத்து மணி இருக்கும். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்து, அம்பாள் கோவிலைவிட்டு அவர்கள் புறப்பட்ட சற்று நேரத்தில் சாரதா விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்கு வந்தாள். அம்பாளை நோக்கியபடி கைகளைக் கூப்பியவாறே மண்டபத்திற்குள் இருந்து கொண்டாள். சற்றுத்தூரத்தில் நாக்கைத் தொங்கப்போட்டபடி, மணலிற்குள் குந்தி இருந்து சாரதாவைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர்கள் வீட்டு நாய்.

சாரதாவினால் பிரச்சினை வரலாம் என நினைத்து, தந்தையார் சுந்தரம் அவளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்தார். அம்மா எப்போதோ இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கோவிலில் திருமண வைபவம் எல்லாம் முடிந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்ட சுந்தரம் கதவைத் திறக்க, உள்ளேயிருந்து பாய்ந்து வெளியே வந்த சாரதா, அவரைத் தள்ளி விழுத்திவிட்டு ஓடிக் கோவிலுக்கு வந்திருந்தாள்.

கோவிலில் ஒருவருடனும் கதைக்கவில்லை. எவரது கேள்விக்கும் பதில் பேசவில்லை. மனதை ஒருமுகப்படுத்தி அம்பாள் மீது குவிய வைத்தாள்.

சாரதா சந்திரமோகனுக்குச் சாபம் போடுகின்றாள் என்று பலரும் நினைத்தனர். சாரதா கோவிலில் இருக்கின்றாள் எனக் கேள்விப்பட்டு, மதியம் அவளைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார் சுந்தரம். அவள் அவரின் பேச்சை செவிமடுக்கவில்லை.

இப்படியே போனால் சாரதாவுக்கு விசராக்கிவிடும் என்று பலரும் சுந்தரத்திற்கு அறிவுரை சொன்னார்கள். எப்படியாவது சாரதாவிற்கு ஒரு திருமணத்தைச் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊரில் அலைந்து திரிந்தார் சுந்தரம்.

Monday 8 August 2022

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/6)

 

அதிகாரம் 1

1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. வடபகுதிக் கிராமங்களில் அமைதி நிலவிக்கொண்டிருந்த காலம். இல்லாவிடில் வீட்டு வேலியைப் பிரித்து, வீதியை ஆக்கிரமித்து ஒரு விழா நடத்த முடியுமா?

வீட்டு வளவிற்குள் மேடை போடப்பட்டிருந்தது. வளவிற்கும் வீதிக்கும் இடையே இருந்த கிடுகுவேலி நீக்கபட்டிருந்தது. வீதிக்குக் குறுக்காக வாங்குகள் வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஆண்டாண்டு காலங்களாக வாழையடி வாழையாகப் படிந்திருக்கும் அழுக்கு, வாங்குகளுக்கு அழகு கூட்டியது. வீதியில் எப்போதாவது வாகனங்கள் வருவதுண்டு. அதுவும் யாராவது கனவான்கள் கோவிலுக்கென்று வந்தால்தான். வீதி இவர்கள் குடியிருப்புக்கு அப்பாலும் இருபது இருபத்தைந்து குடிமனைகளைத் தாண்டி அம்பாள் கோவிலில் போய் முடியும்.

வாங்குகளில் இருந்தவர்கள் சுருட்டுப் பிடித்தும், பாக்கு வெற்றிலை போட்டபடியும் கன்னாபின்னாவென்று கதையளந்தபடி இருந்தார்கள். குடித்து முடித்த தேநீர்க்கோப்பைகள் வாங்குகளின் கீழே நடனமாடின. அவற்றின் மீது எறும்புக்கூட்டங்கள் வரிசை கட்டி ஏறின. முன்வரிசையில் சில வாண்டுகள் காலாட்டியபடி ஆவலோடு மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் ரி.எம்.எஸ்ஸின் பாடலை நிறுத்தி, மைக்கைத் தட்டி சரி செய்து கொண்டிருந்தார் ஒருவர்.

சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் காலையில்தான் ஊரில் திருமணம் நடந்திருந்தது.