Monday 28 December 2020

தேவ கிருபையை முன்னிட்டு வாழும்.... - எனக்குப் பிடித்த சிறுகதை

 


காவலூர் ராசதுரை

கிழவி செத்தது விசேஷமில்லை; சாகு முன்னர் நடந்த சிறு சம்பவம்தான் விசேஷம்.

செத்த வீட்டுக்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றியே பேசுகிறார்கள்.

சவத்துக்குத் தலைமாட்டில், கால் நீட்டியிருந்து, சிற்றுரலில் வெற்றிலை துவைத்து வாய்க்குள் அடக்கிக் கொண்டு, மாணிக்கம் பாட்டி, அப்பொழுதுதான் வந்த செல்லம்மாவுக்கு, அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லுகிறாள்.

கிழவியின் தூரத்துப் பேர்த்தி புஷ்பம். அந்தச் சம்பவத்தை நினைக்க நினைக்க அவளுக்கு மனசு ஆறவில்லை. பந்தலுக்குள் உட்கார்ந்திருக்கும் செல்லம்மாவின் புருஷனும் அந்தக் கதையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

“எப்பவும் இப்படித்தான், ஆரு செத்தாலும் சாகு முந்தி விசேஷமான காரியம் ஏதும் நடக்கும்.”

சட்டம்பியார் தத்துவம் பேசுகிறார்,

°

கரம்பன் செவத்தியார் கோயிலடி வாசிகளுக்கு அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம் - கோயில், சிற்றமார், மடம், கூப்பன் கடை மாதிரி.

ஏரம்பு பரம்பரை, யார் கூட்டம் ? ஞானப்பிரகாசம் வீட்டுக்காரர் எந்தப் பகுதி?

Thursday 24 December 2020

அவர் கண்ட முடிவு! - எனக்குப் பிடித்த சிறுகதை

 


மு.பொன்னம்பலம் 

சிவத்தம்பி தமக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அதுவெறும் சிரிப்பல்ல, வெற்றிப்புன்னகை. வெற்றியென்றால் ஏதோ அபாரமான நற்செயலையோ அல்லது சதித்திட்டத்தையோ அமுல் நடத்தி வெற்றி பெற்று விட்டார் என்பதல்ல அர்த்தம். நினைவில் முளைத்ததை இப்போதான் செயலில் நடத்த அவர் திடங்கொண்டுள்ளார். அதாவது தாம் நினைத்ததைச் செய்வதற்கு உள்ளத்தைத் தயார்படுத்தி வெற்றி கொண்டுவிட்டார். அதனால் தான் அவர் முகத்திலே சிந்தனைக் கிறுக்கல்கள் மறைந்து, மகிழ்ச்சியின் முறுவல் மலர்ந்தது. இத்தனைக்கும் அவர் எண்ணத்திலே எழுந்த திட்டம்தான் என்னவோ?

Friday 18 December 2020

நந்தாவதி – எனக்குப் பிடித்த சிறுகதை

 
நவம் (சீனித்தம்பி ஆறுமுகம்) 

இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்'தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி.

வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான்.

புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு கடந்து சென்றது வண்டி.

கோட்டையிலிருந்து மருதானே வரையும், கழுத்தை வெளியே நீட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வந்த நான் இப்பொழுது தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு என் இருப்பிடத்துக்குத் திரும்பினேன்.

இந்த வண்டியில், இரண்டாம் வகுப்பு `சிலீப்பிங் காரி’ல் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.

எனது `படுக்கை’ எண் பதினான்கு. எனது `படுக்கை’க்குச் சரிநேராக மேலே இருந்தது பதின்மூன்றாம் இலக்கப் `படுக்கை’. அது வெறுமையாகவே இருந்தது. இரண்டே இரண்டு `படுக்கை’களே உள்ள அந்தத் தனிப் பெட்டியில், ஏகாங்கியாக நான் மட்டும் பிரயாணம் செய்வது என்னவோ போலத்தான் இருந்தது.

`தடதட’வென்று யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் திறந்தேன்.

Thursday 10 December 2020

இப்படியும் ஒருவன் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மா.பாலசிங்கம்

`ம்பா... ம்பா... ம்பா..’

செங்காரிப் பசு கத்தும் ஓசை கமலத்தின் காதைத் துளைக்கின்றது.

பசுவின் கதறலுக்குக் காதைக் கொடுத்துக் கொண்டிருந்த கமலத்திற்கு அடுப்பின் நிலைமை மறை பொருளாகி விட்டது. பரபரப்போடு அடுப்பைப் பார்க்கின்றாள். பனஞ் சொக்கறை புகட்டிற்கு வெளியே விளாசி எரிந்து கொண்டிருக்கின்றது. கைச் சுறுக்கோடு சொக்கறையை அடுப்பிற்குள் தள்ளுகிறாள்.

`ம்பா... ம்பா... ம்பா..’

செங்காரிப் பசுவின் கதறல் தணிந்துவிடவில்லை.

Thursday 3 December 2020

பூ - எனக்குப் பிடித்த சிறுகதை

 

இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான்


பூத்துச் சொரிகையிலே 

பூக்கருகிப் போனதுவோ?
மாதா செய் தீவினையோ
மலரமுன்னே போனாயோ...?

நீ படுத்துக் கிடந்த அறைப் பக்கமிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கின்றது. அது உன் அம்மாவின் குரல். துக்கத்திற் கனத்துக் கதறுகின்றது. எது உன் முடிவாக இருக்கக் கூடாது என்று இவ்வளவு நேரமும் பிராத்தித்துக் கொண்டிருந்தேனோ, அதுதான் உன் முடிவா? என் கல்யாணி!

"ஏய் கெழவி. இதுங் ஹோஸ்பிட்டல்
தெரியுங்தானே! சத்தங் போட வேணாங்."

கிழவியை 'நேர்ஸ்' அறைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். புழுவாகத் துடித்து, சுவருடன் தலையை மோதிக் கொண்டே குரல் எழுப்பி அழுகின்றாள். 'மேளே, கல்யாணி நீ போய் விட்டியாடி?' என்று நெஞ்சு வெடிக்கப் புலம்புகிறாள். ஒவ்வொரு வார்த்தையும் என் என்பின் குழலட்டையையுஞ் சுண்டுகின்றது.