காலை
பத்து மணி இருக்கும். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்து, அம்பாள் கோவிலைவிட்டு அவர்கள்
புறப்பட்ட சற்று நேரத்தில் சாரதா விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்கு வந்தாள். அம்பாளை
நோக்கியபடி கைகளைக் கூப்பியவாறே மண்டபத்திற்குள் இருந்து கொண்டாள். சற்றுத்தூரத்தில்
நாக்கைத் தொங்கப்போட்டபடி, மணலிற்குள் குந்தி இருந்து சாரதாவைப் பார்த்துக்கொண்டிருந்தது
அவர்கள் வீட்டு நாய்.
சாரதாவினால்
பிரச்சினை வரலாம் என நினைத்து, தந்தையார் சுந்தரம் அவளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்தார்.
அம்மா எப்போதோ இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கோவிலில்
திருமண வைபவம் எல்லாம் முடிந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்ட சுந்தரம் கதவைத் திறக்க,
உள்ளேயிருந்து பாய்ந்து வெளியே வந்த சாரதா, அவரைத் தள்ளி விழுத்திவிட்டு ஓடிக் கோவிலுக்கு
வந்திருந்தாள்.
கோவிலில்
ஒருவருடனும் கதைக்கவில்லை. எவரது கேள்விக்கும் பதில் பேசவில்லை. மனதை ஒருமுகப்படுத்தி
அம்பாள் மீது குவிய வைத்தாள்.
சாரதா
சந்திரமோகனுக்குச் சாபம் போடுகின்றாள் என்று பலரும் நினைத்தனர். சாரதா கோவிலில் இருக்கின்றாள்
எனக் கேள்விப்பட்டு, மதியம் அவளைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார் சுந்தரம். அவள் அவரின்
பேச்சை செவிமடுக்கவில்லை.
இப்படியே போனால் சாரதாவுக்கு விசராக்கிவிடும் என்று பலரும் சுந்தரத்திற்கு அறிவுரை சொன்னார்கள். எப்படியாவது சாரதாவிற்கு ஒரு திருமணத்தைச் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஊரில் அலைந்து திரிந்தார் சுந்தரம்.