Sunday 24 December 2017

பன்முகம் - நூல் வெளியீட்டு விழா

  
     காலம் :  07 - 01 - 2018 ஞாயிற்றுக்கிழமை 
       நேரம்  :  பிற்பகல் 3 மணி - பிற்பகல் 5 மணி
       இடம்   :  பீக்கொக் மண்டபம் [ ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம் ]
                      Peacock Room, Sri Shiva Vishnu Temple 
                      52 Boundary Road, Carrum Downs, VIC 3201


      ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்களது தலைமையில்
நடைபெறும் " பன்முகம் " நூல் வெளியீட்டு விழாவில் உங்கள்
        அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் 
                     அன்புடன் அழைக்கின்றோம். 


       " அழகு தமிழ் பேசி ஆனந்தம் அடைந்திடுவோம் "

            வாழ்க தமிழ் மொழி ! வாழ்க வளமுடன் !



                                தொடர்புகளுக்கு :  0431 200 870 

Friday 22 December 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 19-  கலாச்சாரம்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன.

சுப்பர்மாக்கற்றிற்குச் சென்ற புங், நீண்ட நாட்களின் பின்னர் ஆலினையும் அவளது பெற்றோரையும் சந்த்தித்தாள். ஆலின் ஒருதடவை தொழிற்சாலையில் உள்ள எல்லாரையும் பார்க்க விரும்புவதாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் சொல்லியிருந்தாள்.

ஆலினை தாயாருடன் காசு எடுப்பதற்காக வங்கிக்கு அனுப்பிவிட்டு, அவளின் தகப்பனார் புங்கிடம் இரகசியம் பேசினார்.

“ஆலினின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்கள்தான் அவள் உயிருடன் இருப்பாள்என்றார் அவர்.

Friday 15 December 2017

கார் காலம் - நாவல்

அதிகாரம் 18 - பெரிய விருந்து
தொழிற்சாலையை மூடுவதென்று தீர்மானம் செய்த பின்னர் முன்னைவிட அதன்  உற்பத்தியில், தரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பில் பலமடங்கு கவனம் எடுத்தார்கள். பாதுகாப்பு (safety), செலவு (cost reduction), தரம் (quality) என்பவற்றிற்காக பல இலட்சம் பணம் ஒதுக்கினார்கள். தொழிற்சாலையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலை நடந்த காலத்தில் இருந்த அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறை காட்டினார்கள். எல்லாவற்றிலும் ‘தடிஓட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

இந்தத் தொழிற்சாலை அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மூடப்படுகின்றது. உலகம் பூராவும் இதே போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இப்பொழுதும் கார் உற்பத்தியில் முதலாவது இடம்---நம்பர் வண்---என்று பெயர் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமது ‘பெயரைக்காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

Friday 8 December 2017

'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்


ஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர்  வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.

நாசூக்கான கேள்விகள், அச்சொட்டான பதில்கள்.

அதைத்தான் கருணாகரனின் இந்த ‘புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது’ நேர்காணல் புத்தகமும் செய்திருக்கின்றது. தொகுப்பில் வரும் புகைப்படக்காரர் மட்டுமல்ல அனைவருமே பொய் சொல்லவில்லை.

Friday 1 December 2017

கார் காலம் - நாவல்

 அதிகாரம் 17 - மூடுவிழா

கார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.

ஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நாட்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். ஹெவினுக்கு நான்கு இலட்சங்கள் வழங்கிய நிர்வாகம் ஆலினுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஒழுங்காக வேலைக்கு வராமை, தொழிற்சாலை லீஸ் காரை பலமுறை விபத்துக்குள்ளாக்கியமை போன்ற பல்வேறு காரணங்களை இதற்கு முன்வைத்திருந்தது நிர்வாகம்.