Tuesday 29 June 2021

இது எங்கே இருக்கு? - கங்காருப் பாய்ச்சல்கள் (38)

 

சில மாதங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இருக்கும் ஒரு பிளாஸ்ரிக் தொழிற்சாலைக்கு, QA (பொருட்களின் தரத்தை சரி பார்த்தல்) ஆக நானும், இயந்திரத்தை இயக்குவதற்காக ஒரு வெள்ளையினத்தவரும் புதிதாகச் சேர்ந்தோம். அங்கே  போனபின்னர் தான் ஒன்றை அவதானித்தோம். அது சீனர்களுக்குச் சொந்தமானது. ஏறத்தாழ 30 இயந்திரங்கள் இருந்தன. அவற்றில் 20 இற்கும் மேற்பட்டவை சீனாவில் இருந்து வந்தவை. மருந்துக்கும் அதில் ஆங்கில எழுத்துகள் இல்லை. பொறியியலாளர்களும், இயந்திரங்களை இயக்குபவர்களும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் சீனர்களாக இருக்க, தொழிலாளர்கள் வட இந்தியர்களாக இருந்தார்கள். பூமிப்படத்தில் மாத்திரமல்ல, இங்கேயும் அதே நிலைதான். சீனர்கள் மேலே இருந்தார்கள். ஒரு வெள்ளைக்காரனும் நானும் தான் பிறநாட்டைச் சார்ந்தவர்கள். 

Monday 21 June 2021

காட்டிடைவெளிப் பூந்தோட்டம் (Forest Glade Gardens) - தேசம்

விக்டோரியாவில் இருந்து வடமேற்குப் புறமாக 65 கி மீட்டர்கள் தூரத்தில் Mount Macedon இருக்கின்றது. இங்கேயிருக்கும் 14 ஏக்கர் நிலப்பரப்பில், நூறு வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு காட்டிடைவெளிப் பூந்தோட்டம் அமைந்திருக்கின்றது.

1941 இல் நியூட்டன் குடும்பத்தினருக்குச் சொந்தமாக இருந்த இந்நிலப்பரப்பு பின்னர் 1971 இல் சிறில் ஸ்ரோக்ஸ் என்பவருக்குக் கைமாறியது. அவரால் வளப்படுத்தப்பட பூந்தோட்டத்தைத்தான் இப்போது எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. 1983 இல் ஒருதடவை இது தீக்கிரையானதாக அறியக்கிடக்கின்றது. தற்போது Stokes Collection Limited என்னும் charity அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.


மேடு பள்ளங்கள், ஏற்ற இறக்கங்கள் கொண்ட - ஆங்கில, இத்தாலிய பாரம்பரியங்களைக் கொண்ட அற்புதமான பூந்தோட்டம். இடையிடையே நெடிய மரங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. பொன்சாய் மரங்கள் கொண்ட ஜப்பானியத்தோட்டம் ஒன்றையும் காணக்கூடியதாக உள்ளது.


மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும், கிரேக்கத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹிப்போகிரட்டீஸ்(கி.மு 460 – கி.மு 377) சிலை என்னை மிகவும் கவர்ந்தது.

நான்குவகைப் பருவகாலங்களிலும் பார்த்து மகிழக்கூடிய இந்த இடத்தின் பிரதான குறைபாடு, காரை நிறுத்துவதற்கு வசதியான தரிப்பிடம் இல்லாமை. வீதியோரத்தில் சரிவான நிலப்பரப்பையொட்டி நிறுத்தவேண்டியுள்ளது.




Monday 14 June 2021

சொல்லேர் உழவின் அறுவடை


அண்டனூர் சுரா அவர்களின் `சொல்லேர்’ என்ற சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சமீபத்தில் பாரதி புத்தகாலயம் பிரசுரித்திருக்கின்றது.

தமிழ் இலக்கியங்களின் மீதான ஆராய்ச்சிகள் பலதரப்பட்டவை. காலங்காலமாக நடந்து வருபவை. இங்கே சொற்கள் மீதான ஆராய்ச்சி நடக்கின்றது. அது நம்மை பலவகைப்பட்ட தேடலுக்கு உள்ளாக்குகின்றது.

சிறுகதை நாவல் கட்டுரை எனப் படைப்புகளைத் தந்துகொண்டிருந்த சுரா, இப்போது இன்னொரு தடத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றார். இதற்காக அவர் பலவகைப்பட்ட படைப்புகளினூடு உழவு நடத்தியிருக்கின்றார். ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கின்றன. அவை நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் புழங்கும் விதத்தில் வேறுபட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ஐம்பது சொற்களில் பாதிக்கும் மேற்பட்டவை எனக்குப் புதியனவாக இருந்தன. துவரி, ஆவரஞ்சி, ஒள்ளி, அந்தியோதயா, பொங்கோதம், பொருநன், படிறு, இப்படிப் பல. தெரிந்த சொற்கள் கூட, அவரின் தேடலினால் எனக்கு வியப்புக்காட்டி நிற்கின்றன. அவரின் `சொற்றுணை’ என்ற `என்னுரையில்’ தோழர் அ.குமரேசனுக்கு நன்றி தெரிவிக்கும் இடத்தில், `இளங்கன்று பயம் அறியாது, செம்மாந்துடன் சம்மதித்துவிட்டேன்’ என்கின்றார். அது என்ன செம்மாந்து? என்னுள் புதியதொரு தேடல் தொடங்குகின்றது.

`சொல் காலத்துடன் நேர்விகிதம் கொண்டது. சொல்லாய்வு என்பது சொல்லுடன் காலத்தையும் ஆய்தல்’ என்கின்றார் அண்டனூர் சுரா.

புத்தகம் முழுவதும் நிறையத் தகவல்கள். புதையலைக் கண்டு வியந்து போகின்றேன். அவரின் ஒவ்வொரு சொல்லின் தேடலின் போதும் பல விடயங்கள் எம்மை வந்தடைகின்றன. இதற்கான அவரது கடின உழைப்பை மெச்சுகின்றேன். சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது `சொல்லேர்’. புத்தகம் பற்றிய எனது கருத்தையும் அவரே தேடித் தந்துவிடுகின்றார். நறுந்தொகைப் பாடலான `தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை – தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே – ஆயினும்....

°