Friday 28 August 2020

சொந்த மண் - எனக்குப் பிடித்த கதை

 

சு.இராஜநாயகன்

 “கந்த  ஆஆஅஅ.....”

முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, அந்தப் பாரிய வேப்பமரத்தின்கீழ், பாத்தியிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும் சற்றுக் கலைந்தது.

முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஒரு திசை நோக்கிக் கைகூப்பி மீண்டும் "கந்தா, கந்தா ஆஅ” என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலு முழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத்துண்டை உதறித் தோளிற் போட்டார். குனிந்து சிறு துணிப்பை ஒன்றை எடுத்தார். புறப்பட்டுவிட்டார்.

தூரத்தில் சேவல் ஒன்றின் கொக்கரக்கோ’ கேட்டது. நேரம் அதிகாலை நாலரை மணியாக இருக்கும். இயல்புநிலை குலையாமல் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோயிலின் ஆயத்தமணி நாதம் முருகேசரின் கோண்டாவில் விவசாயிகளைத் துயிலெழுப்பி அவரவர் தோட்ட நிலங்களுக்கு அனுப்பியிருக்கும். அவர்களுடன் முருகேசரும் நார்க் கடகத்தில் இலைச் சருகுகளைத் தலையில் தாங்கி, மண்வெட்டியுடன் தன் நிலத்தை நோக்கிச் சென்றிருப்பார்.

இன்று..?

Sunday 23 August 2020

அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

தி.ஞானசேகரன்

   

மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து “ஸேர் யாரோ ஒருவர் வந்திருக்கிறார், உங்களைப் பார்க்கவேண்டுமாம். உங்களது நண்பர் என்று கூறுகிறார்” என்றாள் தயக்கத்துடன்.

‘வார்ட் ரவுண்ட்’ செய்யும்போது என்னை யாரும் குழப்புவதை நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். சினத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ? ” வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டியபடி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.

“ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிறைஸ்!” என்றேன். என்னால் நம்பவே முடியவில்லை. லண்டனில் இருப்பவன் இப்படித் திடுதிப்பென என் முன்னால் வந்து நின்றால் ... ஆச்சரியத்தில் ஒரு கணம் தடுமாறினேன்.

“யூ பகர், யூ நெவர் றைற் ரு மீ” - நீ எனக்குக் கடிதம் எழுதுவதில்லை எனச் செல்லமாகக் கோபித்து என் தோள்களில் இடித்தான்.

பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே தோற்றம், அதே கலகலப்பு. அநாயாசமான பேச்சு, நெஞ்சைத்தொடும் இறுக்கம்... அவன் கொஞ்சங்கூட மாறவில்லை.

Wednesday 19 August 2020

நிலவோ நெருப்போ? - எனக்குப் பிடித்த சிறுகதை

 

நா.சோமகாந்தன்

புகையிலைக் கன்றுகள் கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத்தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம். நெல்லியடிச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் றோட் டில் அரைக் கட்டை தூரத்தில் தெருவோரமாக கிளை பரப்பில் சடைத்து வளர்ந்திருக்கிறது, ஒரு சொத்திப் பூவரச மரம். அதனடியில் மாலை தோறும் குழைக்கடை கூடுவது வழக்கம். புகையிலை பயிராகும் போகத்தில் இந்தக் குழைக் கடையில் வடமராட்சித் தமிழ் வழக்கு பிறந்த மேனியாகக் காட்சி தரும்! சனசந்தடியும், சரளமான விரசப் பேச்சும் இரைச்சலும் சேர்ந்து நெல்லியடிக் கறிக்கடையை ஞாபக மூட்டும்! மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு மூன்று கட்டை தூரத்துக்கப்பாலிருந்தே குடியானவப் பெண்கள் பாவட்டங் குழையையும், குயிலங் குழையையும் கட்டுகளாகக் கட்டித் தலையிற் சுமந்து கொண்டு வந்து குழைக்கடையில் பரப்புவார்கள். வளர்ந்து வரும் புகையிலைக் கன்றுகளுக்கு 'அட்டம்" தாழ்க்க பாவட்டங் குழையும் குயிலங் குழை யும் வாங்குவதற்காக ஊர்க் கமக்காரர்கள் அங்கு வந்து கூடுவார்கள்.

Friday 14 August 2020

விசா - எனக்குப் பிடித்த சிறுகதை

அ.முத்துலிங்கம்

இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை அவர் எவ்வளவோ கவனமாகத்தான் விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்தார். சுயசரிதை எழுதுவதுபோல நீண்ட பதில்களைக் கொடுத்திருந்தார். இருந்தும் இப்படி நடந்துவிட்டதே!

முதன்முறை அவர் விண்ணப்பம் அனுப்பியபோது மிகவும் யோக்கியமாகத்தான் நடந்துகொண்டார். அப்போதெல்லாம் இப்படியான கெடுபிடிகள் இல்லை. விண்ணப்பத்தை நீட்டியவுடன் அமெரிக்க விசாவை தட்டிலே வைத்து தந்து விடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்.

ஆனால் நடந்தது வேறு. எதற்காகப் பயணம் என்ற கேள்விக்கு ‘வண்ணப்பூச்சிகளைப் பார்க்க’ என்று யாராவது எழுதுவார்களா? அங்கேதான் வந்தது வினை. இவருடைய பதிலைப் படித்த அதிகாரிகள் முதலில் திடுக்கிட்டார்கள். பிறகு ஆசை தீர சிரித்துவிட்டு அனுமதி மறுத்துவிட்டார்கள்.