Thursday 30 April 2020

சரிவராது



(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

சின்னத்துரை தனது பொறியியலாளர் மகனுக்கு இணுவிலில் பெண் பார்க்கச் சென்றார்.

பெண் வகுப்பு பன்னிரண்டு சித்தியடையவில்லை. தகப்பன் கோடீஸ்வரன். பெரிய பிஷ்னஸ் முதலாழி.

“நேற்றடிச்ச சூறாவளியிலை வாழையள் முறிஞ்சு போய்க் கிடக்கு. இரண்டு குலையள் வெட்டி வைத்துவிட்டு... ”  உரையாடல் நடுவில் எழுந்து கொண்டார் பெண்ணின் தந்தை. தோட்டத்தில் வேலை முடித்து திரும்பி வந்தபோது, சின்னத்துரை அங்கிருக்கவில்லை.

நடத்தை, கல்வி அதன் பின்னரே பணம் அவருக்கு.


Tuesday 28 April 2020

அப்புறம்?


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

முகநூலை மேய்ந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தில் எனக்கு அடுத்த வகுப்பில் படித்த சிவராசனின் பதிவு ஒன்றை, என் நண்பன் பகிர்ந்திருந்தான். பேராசிரியர் ஒருவரால் சிவராசனுக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் அது. ஒரு நாசா விஞ்ஞானியைப் புகழ்வதுபோல். சிவராசன் பல்கலைக்கழகத்தில் கொடி கட்டிப் பறந்தவன்.

“சிவராசன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றான்?” நண்பனிடம் விசாரித்தேன்.

“மச்சான்…. சிவராசன் கனடாவுக்குப் போனவன். அங்கை அவனுக்கு வாய்ப்புக்கள் சரிவர அமையவில்லை. இப்ப மெண்டலாகிப் போனான்.”


Friday 24 April 2020

அம்பு எய்தவர் மீதே அது பாயும் - கங்காருப் பாய்ச்சல்கள் (32)



ஒருவர் –

தான் உண்டு, தன் பாடு உண்டு என்பவரைப் பார்த்து -


ஏன் எனக்கு வரும் சோதனைகள், துன்பங்கள் இவருக்கு வரவில்லை, ஏன் என்னைப் பற்றி அவதூறுகள் சொல்பவர்கள் இவரைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை என்று பொறாமை கொள்கின்றார். வேண்டும் என்றே அவரைப் பற்றியும் கதைகள் பல சொல்லி அவரையும் தன்கூட்டத்துக்குள் சேர்த்து கும்மாளமிட நினைக்கின்றார்.

மனிதர்கள் அந்த நல்லவரைப் பற்றி அறிந்திருந்தாலும், மனதில் சஞ்சலம் கொள்ளுமளவிற்கு அந்த ஒருவரின் பரப்புரைகள் இருப்பதால், ஒருவேளை அவர் சொல்வது சரியாக இருக்குமோ என ஐயம் கொள்கின்றார்கள்.

`நான் நானாக இருக்கவே ஆசைப்படுகின்றேன். அவர்கள் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டுமே!’ என விட்டுவிடலாமா? ஒன்றும் சொல்லாது மெளனமாக இருந்தால் சம்மதம் என்றாகிவிடும் அல்லவா. இவர்களை எதிர்த்து நிலைகொள்வதற்கு நாளும் பொழுதும் சக்தியை வீண் விரயம் செய்யவேண்டி உள்ளது. எவ்வளவோ செய்வதற்கு இருக்கும்போது நேரத்தை வீணாக இவர்கள்மீது செலவிடவேண்டி உள்ளது.

புரிந்து கொள்ளுங்கள்.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில்லை. சிலர் நமக்கேன் வம்பு என்று தாமாகவே ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் வரிஞ்சு கட்டி சண்டைக்கு இழுத்து, நடுச்சந்தியில் வேட்டியை உரிந்து நாற வைத்து வெளியே அனுப்புவார்கள்.

உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்பதை அறியவரும்போது எய்தவர் மீதே அம்பு பாய்கின்றது. அப்பொழுது சுடச்சுட அவர்களுக்குக் பலாபலன்களும் கிடைத்துவிடுகின்றது.

Sunday 19 April 2020

தொழில்நுட்பம் கடத்தப்போகும் புரட்டுக்கள் - கங்காருப் பாய்ச்சல்கள் (31)


முந்தைய காலங்களில் எழுதப்பட்ட (சங்ககாலம் உட்பட) படைப்புகளில் `சிலவற்றை’ கறையான்கள் செல்லரித்தும், கவனிப்பாரற்றுத் தொலைந்தும் போய்விட்டதாக அறிகின்றோம் அல்லவா? உண்மையில் அவை தொலைந்துதான் போயினவா? வேண்டுமென்றே திட்டமிட்டு அழித்தும் தீயிலிட்டுக் கொழுத்தியும் இருக்கலாம் அல்லவா?

ஏனென்றால்

இக்காலத்திலும் பொய்யும் புரட்டும் புரளியும் இட்டுக்கட்டியும் படைப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமது அமைப்புக்குச் சார்பாகவும், மற்றவர்களை மறுத்து ஒதுக்கியும் எழுதுகின்றார்கள். எழுதியவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சிலர் அவற்றை ஓகோவென்று புகழ்ந்தவண்ணமும் உள்ளனர். துர் அதிஸ்டவசமாக தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் அவை காலம் கடந்தும் நிற்கப் போகின்றன. ஒரு நீண்ட காலத்தின் பின்னர், வரும் சந்ததியினர், எது சரி பிழை எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கப் போகின்றார்கள்.

சிலர் புனைவுகள் என்றவுடன் எதையும் எப்படியும் எழுதிவிடலாம் என நினைக்கின்றார்கள். தகவல் பிழைகள், தவறான செய்திகள், தொழில்நுட்ப பிழைகள் தலைகாட்டுகின்றன. புனைவிற்கும் ஒரு வரையறை உண்டு. புனைவுகளில் வரும் தரவுகள் சரியாக இருக்கவேண்டும்.
இப்போது சொல்லுங்கள் – நான் மேற்சொன்ன `சிலவற்றை’ என்பது அக்காலத்தில் வந்த பொய்யும் புரளியும் தகவல் பிழை சார்ந்த படைப்புகளுமாக இருந்திருக்கலாம் அல்லவா? அப்போது அவற்றைக் கூட்டித்தள்ளி எரித்திருக்கலாம் அல்லவா?


Friday 10 April 2020

வாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்


`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ - கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.


கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தன் இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கின்றார். இவர் ஏற்கனவே மகாஜனக்கல்லூரி 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றை வெற்றிமணி இதழ் மூலம் நடத்தியிருந்தார். கனடாவில் சிறுகதைப் போட்டி மூலம் தமிழ் பெண்கள் எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை மூலம் பல சிறுகதைப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றார். இவர்களது அனுபவங்கள் தான் இந்தத் தொகுப்பு வெளிவருவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.


மொத்தம் 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பின் முதல் பரிசு பெற்ற கதை ‘தாள் திறவாய்’. கதாசிரியர் எஸ்.நந்தகுமார் (நந்து சுந்து), சென்னை. நல்லதொரு சிறுகதைக்குரிய பல அம்சங்கள் கொண்டது இக் கதை. 

Monday 6 April 2020

தக்கன பிழைக்கும் - கங்காருப் பாய்ச்சல்கள் (30)



எப்போதோ நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளில் ஐந்து சிறுகதைகள் எனக்கு இப்போது பிடித்திருக்கின்றது எனச் சொல்வதும், அதையே இன்னொரு எழுத்தாளர் – எனக்கோ அவர் எழுதியவற்றுள் இரண்டு கதைகள் தான் பிடித்திருக்கின்றது என்று சொல்வதும் எத்துனை அபத்தம். குறைந்தது அந்த எழுத்தாளரை இத்தனை வருடங்கள் கழித்தும் கொண்டாடுகின்றோமே என்பதையிட்டு பெருமைப்படுங்கள். ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில் எனக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்வதைப் போல் இருக்கின்றதல்லவா இது! அந்த எழுத்தாளர் எப்போது இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறையை அவதானிக்க வேண்டும். அந்தக் காலத்தில் எத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் சிறப்புற்று இருந்ததானால் தான், அவரும் தொடர்ந்து எழுதியிருப்பார் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை?

இதையும் கடந்து - இப்போது சிலர் தொகுப்புகளை விமர்சிக்கும்போது, இன்னாரது தொகுப்பில் உள்ள ’இந்த ஒரு சிறுகதைக்காகவே’ அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்வது நகைப்புக்கிடமாக உள்ளதல்லவா? ‘ஓ… என்னுடைய கதைகளில் இந்தக் கதையை சிறந்தது எனப் புகழ்ந்துவிட்டாரே’ என எழுதிய எழுத்தாளரும் புளகாங்கிதம் கொள்வதும் வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் அவரது தொகுப்பில் இருக்கும் எஞ்சிய கதைகளை என்னவென்று சொல்வதாம். எழுத்தாளரைக் குளிர்விப்பது ஒருபோதும் அவரது கதைகளை விமர்சனம் செய்வது என்று சொல்லலாகாது. இத்தனை கதைகளில் இது ஒன்றுதான் இப்பொழுது தேறியிருக்கின்றது என்றால், இன்னும் நூற்றாண்டுகள் கழித்து?

வாசகர்களே உங்கள் கருத்து என்ன?


Saturday 4 April 2020

அக்கினிக்குஞ்சிற்கு வாழ்த்துகள்



அவுஸ்திரேலியாவில் இணையத்தளம் ஒன்றின் சாதனை. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.

1991 ஆம் ஆண்டிலிருந்து சஞ்சிகை வடிவில் பல இதழ்களை மணம் பரப்பி, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து இணையத்தளமாக வடிவெடுத்து இன்று ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது அக்கினிக்குஞ்சு.
 

செய்திகள், இலக்கியம், சினிமா, நேர்காணல்கள், ஒளிப்படைப்புகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இந்த இணையத்தளம், பல்லாயிரம் வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை இணையத்தளத்திற்கு வரும் வாசகர் கடிதங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு வருட முடிவிலும் புத்தக வெளியீட்டுவிழா, சிறுகதை – குறுநாவல் போட்டிகள் என அசத்தும் இவ் இணையத்தளம், கடந்த இரண்டு வருடங்களாக இசையருவிப் பாடல் போட்டி, படைப்பாளர்/கலைஞர் கெளரவிப்பு என வருவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி.

முதியவர்களும் வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துக்கள். சுருக்கமாக `முக்கிய செய்திகளை’ச் சுழன்றோடும் ஆரம்ப வடிவமைப்பு. இலங்கை, இந்தியா, உலகச் செய்திகள் எனத் தனித்தனியான வகைப்பாடுகளில் செய்திகள். பலதும் பத்தும், அன்றாட நிகழ்ச்சிகள், கதம்பம் என நாளுக்கு நாள் பதிவேற்றம். உலகத்தின் சகல படைப்பாளர்கள் / கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரே இடம் அக்கினிக்குஞ்சு.

அக்கினிக்குஞ்சினிணையத்தள முகவரி - https://akkinikkunchu.com/


மெல்பேர்ணிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சிற்கும், அதன் ஆசிரியர் யாழ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.



Wednesday 1 April 2020

தொண்ணூற்றி ஒன்பது வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம் நிறைவு பெற்றது.



அஞ்சலிக் குறிப்பு

‘சக்கடத்தார்நாடகம் பார்த்திருக்கின்றீர்களா?

ஒருகாலத்தில் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறிய அந்த நாடகத்தில், அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து கேட்கக்கூடாத பல கேள்விகள் கேட்டபடியே ஒருவர் வருவார். அந்த ஆசிரியர் பாத்திரத்தில் வருபவர்தான் இங்கே கீழுள்ள மூன்று சம்பவங்களிலும் பாத்திரமாகியுள்ளார். அவர் கலைவளன் திரு. சிசு நாகேந்திரன்.

இந்த 'சிசு'வில் ஒரு விஷேசம் இருக்கின்றது. தாய் பெயர் சின்னம்மாள்; தந்தை பெயர் சுந்தரம்பிள்ளை. இருவரினதும் முதலெழுத்துக்கள்தான் சிசு. எம்மத்தியில் வாழ்ந்து வந்த கலை, இலக்கிய 'முதுசொம்' ஆன இவர் 2020 மாசி மாதம் 10 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.

அவர் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்.