Friday 27 August 2021

எனக்கு வயது பதின்மூன்று - எனக்குப் பிடித்த கதை

 

..அப்துல் ஸமது

எனக்கு வயது பதின்மூன்று ஆகிறது. நான் சிக்கந்தர் போடியாரின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இதுவரை நான் அறிந்த உலகம் இந்தப் போடியாரின் வீடுதான்.

'என்னைப் பெத்தவ' என்று சொல்லிக்கொண்டு என் உம்மா மாதம் ஒருக்கா போடியார் ஊட்டுக்கு வருவா, போடியார் எனக்குரிய சம்பளம் பதினைந்து ரூபாவையும் அவவிடம் கொடுப்பார். அதுவும் சும்மா இல்லை. என் உம்மா வரும் நாள் பார்த்து, போடியார் ஊட்டில் ஏதாவது வேலை காத்திருக்கும். 'ஆசியா இந்தக் கொள்ளியைக் கொத்திவிடு, இந்தத் தேங்காய் பதினைந்தையும் உரித்துத் தந்திடு, நெல் மூண்டு மரைக்கால் கெடக்கு. அவிச்சுக் காயவையேன்' இப்படி ஏதாவது வேலை வாங்கிவிடுவா போடியார் பெண்சாதி. இப்படியெல்லாம் செய்தும் மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னம் கையில காசக் கொடுத்து என் தாயை அனுப்பிவிடுவாள் அந்தச் சீமாட்டி.

'நான் வாறன் மகள்!' என்று கூறிக்கொண்டு உம்மா போய்விடுவா. உம்மா இப்படி ஒரு வார்த்தை சொல்வதில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. அவ சொல்லாமல் போய்விட்டாற்கூட எனக்கு எவ்வித கவலையும் இல்லை. சிலவேளை இவதான் என்னைப் பெத்தவவா? ஒரு தாய் ஒரு மகள் மீது செலுத்தும் பாசம் இவ்வளவுதானா? என்ற வினாக்கள்கூட என் மனத்தில் எழும்.

Tuesday 24 August 2021

வாமனம் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மாத்தளை சோமு

ந்த ரெஸ்டாரென்டை விட்டு வெளியே வந்த வனிதா கொஞ்சம் வேகமாக நடை போட்டு பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாட்ப்புக்கு வந்தபோது, அங்கு எதுவுமே இல்லாததால் கடைசி பஸ் போய்விட்டது என்பது உறுதியாகியது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். மணி பதினொன்றரை. கடைசி பஸ் போய்த் தான் விட்டது. வக்கமாக அந்த பஸ்சில் போகும் சீனக் கிழவனையும் காணவில்லை. இனி என்ன செய்வது என்று யோசித்தாள். அப்பாவைக் காரோடு வரச் சொல்லலாமா என்று எண்ணியபோது, அவர் காரில் புறப்பட்டு இங்கே வரவே ஒரு மணியாகிவிடும் என்று தனக்குள் ஒரு கணக்கிட்டுப் பார்த்துவிட்டு வேறு முடிவு எடுக்க முயன்றாள். இனி ஒரே வழி பக்கத்தில் இருக்கின்ற ரயில்வே ஸ்டேசனுக்கு நடப்பத்துதான். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வீதியோரமாக நடந்தாள்.

Monday 2 August 2021

தமிழ் இலக்கியவானில் மிளிரும் நட்சத்திரம்

 வளர் காதல் இன்பம் - குறுநாவலுக்கான அணிந்துரை

குரு அரவிந்தன்

இலங்கையில் 1983 ஆண்டு நடந்த இனக்கலவரத்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த போரினாலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் தங்கள் சொந்த மண்ணிலேயே இடம் பெயர்ந்தார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் கலை, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட எங்களில் சிலர் மேற்கு நோக்கிக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தோம், அதேசமயம் சிலர் கிழக்குநோக்கி அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில், தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட நண்பர் கே.எஸ்.சுதாகரும் ஒருவராவார். புலம்பெயர் தமிழர்களின் இலக்கிய வளர்ச்சியில், தமிழ் இலக்கியவானில் கிழக்கில் இருந்து ஒளிதரும் நட்சத்திரமாக அவர் இன்று மிளிர்வது ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது.