தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தேனீ) நடத்திய போடி மாலன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) - முதல் பரிசு பெற்ற கதை.
சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.
’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்?