Saturday, 15 August 2026

ஊர் திரும்புதல் - சிறுகதை

    

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன.

"தம்பி குகன்... வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்" மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா… திருவள்ளுவர் தாடி; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன்.

நேரம் : காலை 9.20, திகதி : 25.05.2011

நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும் நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம் இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..." வீடியோக்கமராவை ஆட்டிக் கொண்டே குகன் பாடத் தொடங்கினான்.

Friday, 17 July 2026

“எனக்கு உன்னைத் தெரியாது” – சிறுகதை

 

இரவு  மணி பத்தாகிவிட்டது. இன்னமும் மோகன் வீடு வந்து சேரவில்லை. வேலை அலுவலாகச் சற்றுப் பிந்தும் என்று சொல்லியிருந்தான், என்றாலும் இதற்குள் வந்திருக்க வேண்டும். நளாயினி போன் செய்தபோது மோகனின் மொபைல்போன் சுவிச் ஓஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு துடித்துப் போனாள். எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் மோகன் வேலை முடிந்து பிந்தி வருவதுண்டு. அந்த வேளைகளில் அவன் கொஞ்சம் மதுவும் அருந்தியிருப்பான்.

என்ன செய்வது? குழந்தையின் தேகம் அனலாகக் கொதித்தது.

நளாயினி தன் குழந்தையை மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு, பின்புறமிருந்த வீட்டிற்குச் சென்று கண்ணீர் விட்டாள். மோகன் எங்கே போயிருக்கின்றான் என்று சரியாகத் தெரியாதபடியால் அவர்களால் நளாயினிக்கு உதவ முடியவில்லை.

வீட்டிற்குத் திரும்பிய நளாயினி இரவு முழுவதும் விழித்திருந்து, ஒரு மூலையில் குழந்தையுடன் ஒடுங்கிப் போயிருந்தாள்.

அன்று இரவு முழுவதும் மெல்பேர்ண் சிற்றியில் அலைந்து திரிந்துவிட்டு விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு ரக்‌ஷியில் வந்து இறங்கினான் மோகன்.

“இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீர்கள்?” அழத் தொடங்கிவிட்டாள் நளாயினி.

“குழந்தாய்…. நான் சுவாமி தரிசனம் முடித்து வந்திருக்கின்றேன்” பக்தியின் குரலை முன் வைத்தான் மோகன்.

Wednesday, 8 July 2026

யெளவனம் – சிறுகதை

               

கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக் கொண்டான்.  'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம் இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். அவள் அருகே பையன் ஒருவனைத் தூக்கி வைத்திருந்தபடி சேலை அணிந்த இன்னொரு வயது முதிர்ந்த பெண்.

அந்த இளம் பெண் ஒரு கலைப்படைப்பு. அப்படித்தான் இருக்க வேண்டும். அடிக்கடி சட்டையை மேலும், பாவாடையைக் கீழும் இழுத்து விட்டுக் கொண்டாள். இரட்டைப் பின்னலைத் தூக்கிப் பின்னாலே எறிந்து கொண்டாள். இரட்டைப்பின்னலுக்கு தப்பிய முடி, புகையிர நிலையத்தின் செயற்கை ஒளியில் பொன்னிறமாகத் தகதகத்து காற்றினில் துடித்துக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த 'லிப்ஸ்டிக்'கை எடுத்து உதட்டருகே கோடிழுத்துக் கொண்டாள். உதடுகளை மேலும் கீழும் அசைத்து சப்புக் கொட்டி அழகு காட்டினாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருபது, இருபத்திரண்டு வயது இருக்கலாம்.

இவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். புகையிரதம் புறப்படுவதற்கு இன்னமும் இரண்டோ மூன்று நிமிடங்கள்தானிருந்தன. புகையிரதம் கொஞ்சம் தாமதித்துப் புறப்பட்டால் நல்லது போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனம் பரபரப்படையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் மறைந்து விடுவாள்.

புகையிரதம் புறப்படுவதற்காகக் கூவியது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

Friday, 19 June 2026

ஒரு கை பார்க்கலாம் - கங்காருப் பாய்ச்சல்கள் (51)

 
பண்டைய இராசாக்கள் காலங்களில் அரசவையில் தான் எல்லாமே நிகழ்ந்தேறும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். அரசவையில் இருக்கும் பல அறிஞர்கள், புலவர்கள் – அதில் ஆயிரம் குறைகள் சொல்வார்கள். அவை எல்லாம் சரி செய்யப்பட்ட பின்னரே ஓலைச்சுவடிகளில் எழுதப்படும். அதன் பின்னரே மக்களை அவை சென்றடையும்.

இந்நாளில் புத்தகங்கள் வெளியாகி மக்களைச் சென்றடைந்த பின்னரே அறிஞர்களை வந்தடைகின்றது. அவர்கள் அதன் குறை நிறைகளைச் சொன்னாலும் திருத்த முடியாது.

ஊடகங்களில் வரும் படைப்புகளை (சஞ்சிகை, பத்திரிகை, இணையம்) சிலர் வாசித்துவிட்டு தவறுகளைச் சுற்றிக்காட்டாமல் அப்படியே கடந்து போய்விடுகின்றார்கள். இன்னும் சிலரோ `புத்தகமாக வரட்டும்…. ஆளை ஒரு கை பார்க்கலாம் என்று காத்திருக்கின்றார்கள். 

Monday, 1 June 2026

தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

 தமிழ்ச் சிறுவர் பாடல்களை உருவாக்கல்

பயிலரங்கு

குரு அரவிந்தன்.

15 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பங்கு பற்றலாம்.

10 வயதிற்கு உட்பட்ட பல தரப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ் பாடலாக இருக்க வேண்டும்.  பாடல்கள் தமிழ் சிறுவர்கள் மனனம் செய்யக் கூடியதாகவோ மனதில் பதியக் கூடியதாகவோ சிறிய பாடலாக அமையவேண்டும். பாடல்கள்:

1)         குழந்தை பற்றிய பாடல்

2)         குழந்தைகளுக்கான பாடல்

3)         தாலாட்டுப் பாடல் - இதில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து, அதற்கு ஏற்ப எழுதி அனுப்பவும்.

பாடல்கள் இலகுவான சிறிய சொற்களைக் கொண்ட பந்திகளில்

மொத்தம் 12 வரிகளில் அல்லது ஆகக்கூடியது 16 வரிகளில் இருக்க வேண்டும்.

இது சிறுவர்களுக்கான பாடல் என்பதால் அதற்கு மேல் வரிகள் உள்ள பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது பெரியவர்களுக்கான பாடல்கள் அல்ல, சிறுவர்கள் புரிந்து இலகுவில் பாடமாக்கக் கூடியதாக, மனதில் பதிக்கக் கூடியதாக அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.

பாடல்கள் மழலைகளுக்கு ஏற்றதாக, அவர்கள் பதிய சிறிய சொற்களை உள்வாங்கக் கூடியதாக ஒலி நயத்தோடு, இயற்கை சார்ந்ததாக அமைவது நல்லது. குறிப்பாக நிலம், நீர், வானம், மரம், செடி, நிறம், மிருகம், பறவை, எண், எழுத்து, கிழமை, மாதம், பருவகாலம், நட்பு, ஒற்றுமை, விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் அன்றாட செயற்பாடு போன்ற குழந்தைகளின் மனதில் பதியக்கூடிய இலகுவான அர்தமுள்ள பாடல்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பாலருக்கான இந்தப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். எனவே இந்தப் பாடல் பயனுள்ளதாக இருந்தால்தான் அது மீண்டும் மீண்டும் அவர்களால் இசைக்கப்படும்.

குழந்தைகள் ஒரே நேரத்தில் குறைவான தகவல்களையே உள்வாங்கிக் கொள்வதால், எளிமையான வாக்கியங்களைச் சிறியதாகவும், சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் பாவியுங்கள். ஒரு பல்லவி, ஒரு சரணத்தை உடல் அசைவுக்கேற்ப இணைக்கலாம். சந்தத்திலும் கவனம் செலுத்துங்கள். சந்தம் என்பது சொற்கள் தாளத்துடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் குறிக்கிறது.

உதாரணம்: ‘நாங்கள் பாடுவோம், நாங்கள் ஆடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்.’

குழந்தைகள் திரும்பச் சொல்லும் மற்றும் பெற்றோர்கள் ரசிக்கும், எளிதில் மனதில் பதியும், அன்பான பாடல்களை உருவாக்குங்கள். எளிய மொழி, அசைவுகளுக்கு ஏற்ற தாளங்கள் மற்றும் கற்றலை ஒரு விளையாட்டைப் போல உணரச் செய்யுங்கள். உதாரணமாக இந்த பாரதி பாடலைப் பாருங்கள்: குழந்தைகளைப் பற்றிய பாரதி பாடலில் நான்கு வரிகள்:

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

 குழந்தைகளுக்கான குரு அரவிந்தனின் பாடலில் நான்கு வரிகள்:

எங்க வீட்டுத் தோட்டத்தில்

சின்னச் சின்னச் செடிகளில்

காலை நேரம் மலர்ந்திடும்

வண்ண வண்ணப் பூக்களாம்.

 குழந்தைகளுக்கான கமலவதனா சுந்தாவின் பாடலில் நான்கு வரிகள்:

பனிமழையே பெய்! பெய்! பெய்!

ஒவ்வொரு நாளும் பெய்! பெய்! பெய்!

பூப்பனிபோலப் பனியே பெய்! பெய்! பெய்!

பூம்பாறை செய்யப் பெய்! பெய்! பெய்!

 இதற்கான விதி முறைகள்:

சிறுவர் பாடல்கள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் தெரிவுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நூலில் இடம் பெறும்.

பாடலாசிரியரின் முழுப் பெயர் மட்டும் புத்தகத்தில் பாடலுடன் இடம் பெறும். அதாவது, அவரது பெயரும் குடும்பப்பெயரும் மட்டும் இடம் பெறும். புனைப் பெயரோ அவரது பட்டங்களோ இடம் பெறமாட்டாது. மாணவர்களாயின் கல்வி நிலையத்தின் பெயரும் அவர்கள் விரும்பினால் இடம் பெறும்.

ஒருவர் ஒரு சிறுவர் பாடல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

அச்சுப்பிரதி தேவையானவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

பாஸ்போட் படம் அளவு உங்கள் படம் ஒன்று இணைக்கப்படவேண்டும்.

நூல் தொகுப்பாசிரியராக எழுத்தாளர், ஆசிரியர் குரு அரவிந்தன் பணியாற்றுவார். நூல் வெளியீட்டு உரிமை கிராமத்து வதனம் பெண்கள் அமைப்புக்கு உரியது.

நீங்கள் அனுப்பும் பாடல் உங்கள் சொந்தப் பாடல் என்பதையும், எங்கிருந்தும் பிரதி எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்து சேராத சிறுவர் பாடல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பாடல்கள் எல்லாம் தெரிவு செய்தபின் நூல் வெளியிடும் திகதி பின்னால் அறிவிக்கப்படும்.

பாடல்களில் திருத்தங்கள் செய்யும் உரிமையும், முதலில் வெளியிடும் உரிமையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பிற்கே உரியது.

உலக சாதனை நூலில் உங்கள் பாடலும் இடம்பெற வாழ்த்துகள்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் பாடல்களையும், உறுதி மொழியையும் 2026 யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டிய

மின்னஞ்சல்: vathani.suntha@gmail.com

திருமதி கமலவதனா சுந்தா, நிறுவுனர்.

கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பு – கனடா.

தொடர்புகளுக்கு: 647-765-9761

Monday, 25 May 2026

எனது சிறுகதைகள் பெதும்பை (சொல்வனம்), மவுஸ் (வாசகசாலை) தேர்வாகியுள்ளன

 

2026 ஏப்ரல்: நாம் தவறவிடக் கூடாத சிறந்த சிறுகதைகள்! | தினேஷ் ஜெயபாலன் & மந்திரமூர்த்தி அழகு

Monday, 18 May 2026

பெதும்பை - சிறுகதை

 

அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சுஜித்தா பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அம்மாவிற்கு ஒத்தாசையாக வயல் வேலைகளில் இறங்கிவிடுவாள். பதினொரு வயதுகள் நிரம்பிய அவளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கவில்லை. அழகி என்றாலும் அணிந்துகொள்ள எதுவும் இல்லாதவள். காதின் ஓட்டைகள் தூர்ந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. கழுத்தில் ஒரு வெளிறிப்போன மாலை, கையில் ஒரு கோவில் திருவிழாவின் போது வாங்கிய ரப்பர் வளையல்கள்.

சில நாட்களாக சுருக்கங்கள் விழுந்த அவள் முகம் பூப்போல விரிந்திருந்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக தேங்கிவிட்ட சிறு புன்னகையும், மனம் முழுக்க - மழை பெய்து குளம் நிரம்பி வழிவது போல மகிழ்ச்சியும் தழும்பிக் கிடந்தன.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலாவதாகத் தேறியிருந்ததுதான் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவளுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தப் பரீட்சைக்காக அவள் எந்தவித பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லவில்லை. அந்தப் பரீட்சை குறித்து எதுவித அக்கறையும் அவளுக்கும் தாயாருக்கும் இதுவரை இருந்ததில்லை. வறுமை கோரத்தாண்டவமாடும் வீட்டில், நித்தம் விளக்கு எரிவதே அதிசயம் என்றானபோது அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இன்று… சுஜித்தாவின் வெற்றி குறித்தான மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும் இந்த மகிழ்வில் கலந்துகொண்டு குதூகலிக்க அவள் அப்பா இன்று அவர்களுடன் இல்லை. இப்படித்தான் ஒருநாள் வயல் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீருடை அணிந்த இராணுவத்தினரால் அவள் தந்தை பிடித்துச் செல்லப்பட்டார். இன்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன.

அப்பா ஒரு போர்வீரர் அல்ல. எந்தவித இயக்கங்களிலும் இருந்தவரும் அல்ல. ஆனாலும் தொலைந்து போனார். போர் நடக்கும் இடங்களில் தொலைந்து போவதற்கு காரணங்கள் ஏதும் தேவையில்லை. தொலைந்து போனவர்கள் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவு.

மாலை சரிந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலால் பறவைகள் ஆர்ப்பரித்து, அவள் மகிழ்ச்சிக்கு ஈடாகப் பறந்து தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தே குரல் எழுப்பியபடியே மூச்சிரைக்க ஓடி வருகின்றான் கிச்சா. கிச்சா சுஜித்தாவைவிட இரண்டு வயதுகள் இளமையானவன். தன்னையொத்த வயதுடைய பையன்களுடன் எந்த நேரமும் சதா விளையாடியபடி இருப்பான் கிச்சா. அவனின் பின்னால் காற்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி வளையம் உருட்டிக் கொண்டுவந்த சிறுவர்கள் இருவர், வளையம் வயலிற்குள் போகவே அதன் வழி போய் பொத்துப் பொத்தென வயலிற்குள் விழுந்தனர்.

“அம்மா…. ஸ்கூல் பிரின்சிபல் வீட்டை வந்து நிக்கின்றார். உங்களை ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம்…”

Thursday, 14 May 2026

விசித்திரமான வாழ்க்கை - கங்காருப் பாய்ச்சல்கள் (50)

 


மேலை நாடுகளில் தனித்து வாழ்வதற்கு பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும் இடத்தில், எம் அயலவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பாட்டில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரிவதில்லை, பழகுவதில்லை. ஒரு துன்பம் துயரத்திற்குக்கூட உதவ மாட்டார்கள்.

நாம் நமது நாட்டில் அப்படி வாழப் பழகவில்லை என்பதால் இது விசித்திரமாகத் தெரிகின்றது..



எனக்கொரு விசித்திரமான தமிழ் நண்பன் ஒருவன் இங்கு இருக்கின்றான். நான் ஒருமுறை தொலைபேசியில் எடுத்துக் கதைத்தால், சிலகாலம் கழித்து தானும் ஒருமுறை எடுத்துக் கதைப்பான். பின் எனது முறைதான். நான் எடுக்காவிட்டால் தானும் எடுக்க மாட்டான். அந்த இடைவெளிக்குள் எது நடந்தாலும் அவன் தொலைபேசி எடுக்க மாட்டான். உயிரே போனாலும் எடுக்க மாட்டான். எனக்கும் அவனுக்கும் பொதுவான நண்பர்கள் இருந்து அவர்களுக்கேனும் சுக துக்கங்கள் நடந்தாலும் சொல்ல மாட்டான்.

டைரி வைத்து நான் எப்போது கதைத்தேன், தான் எப்போது கதைத்தேன் என்று எழுதி வைப்பான் போலும்.



கார் பழுதானால் அவன் என்னிடம் அவசர உதவி கேட்கமாட்டான். ஏனென்றால் பிறகு தானும் உதவி செய்யவேண்டி வரும் என்பதால். காசு இருக்கு. ‘ரக்‌ஷி’ இருக்கு. பிறகென்ன? இறக்கும் வரைக்கும் காசைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றான். ஊரில் யார் காணி விற்றாலும் வாங்கி விடுவான். வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி, ஒரு கொண்டாட்டம், ஒரு உல்லாசம்…. சீ. மறுபிறப்பிற்கும் இவற்றைக் கொண்டு செல்லலாம் என்று இற்றை வரையும் நம்புகின்றான்.

இந்த மனிதர்களே பாவம். ஓய்வுபெற்ற பின்னர், அல்லது அறுபதைக் கடந்தவுடன் தான் எல்லாம் என்று, ஏங்கி ஏங்கி தண்னி வென்னி குடிக்காமல் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து விடுகின்றார்கள். இடையில் ஆசையை ஒறுத்து எதுவுமே செய்யாமல் வேலை வேலை என்று காலத்தைக் கடத்துகின்றார்கள். ஒரு சினிமாவுக்குப் போவது என்றாலும் தயக்கம் தான். ஏன் அந்தச் சினிமா இன்னும் பத்து வருஷங்களுக்கு இருக்காதோ? ஒரு புத்தகம் வாங்கக் குடுக்கிற காசை சேமிச்சு வைச்சா சொர்க்கம் போகேக்கை மேலுக்கு அள்ளிக்கொண்டு போகலாம் எண்ட நினைப்பு. நண்பர்களை வீட்டுக்குச் சேர்ப்பதில்லை. ஒரு தேநீர் போடும் வேலை மிச்சம், செலவும் மிச்சம் என்ற கருமிகளும் உண்டு.

Friday, 8 May 2026

மவுஸ் – சிறுகதை

காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும்வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.


செய்தி இதுதான்.

|
காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|



எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம்குவாலிற்றி சேர்க்கிள்என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன். முதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.

Friday, 1 May 2026

"ததிங்கிணதோம்" - சிறுகதை

 


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

Tuesday, 14 April 2026

எதிர்பாராதது! - சிறுகதை


நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.