Friday, 27 May 2022

சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’

 

இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (maruyuham@gmail.com) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது.

ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’.

எல்லாளன் ராஜசிங்கம்.(ரஞ்சித்), மக்கள்நல மருத்துவ சங்கத்தலைவர் இசிதோர் பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) ஆகிய இருவரும் நூலுக்கு முன்னரை எழுதியிருக்கின்றார்கள்.

1984 இல், இந்தியாவில், ரெலோவில் (TELO)---தமிழ் ஈழ விடுதலை இயக்கம்--- ஏற்பட்ட உட்கட்சிப்பிளவு காரணமாக 13 ஆண்களும் 30 பெண்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்கள். அந்த நேரத்தில் எல்லாளன் ராஜசிங்கம், சிவகாமியைச் சந்திக்கின்றார். அது முதல் கொண்டு, சிவகாமியைப் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்கின்றார் அவர். தோழர் தோழிகளுக்கிடையேயான தொடர்புகள் தடைப்பட்டமையும், 2016 ஆம் ஆண்டில் எல்லாளன் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்’ புத்தகம் வெளிவந்த பின்னர் மீண்டும் தொடர்புகள் துளிர்விட்டதையும் எல்லாளன் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார்.

சிவகாமி இயக்கத்திலிருந்து விடுபட்டதன் பிற்பாடு, அவரை இசிதோர் பெர்னாண்டோ அறிந்து கொள்கின்றார். 1983 இனக்கலவரத்தின் பிற்பாடு, மருந்து உட்பட அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது - இசிதோர் பெர்னாண்டோவும் வேறு சிலருமாகச் சேர்ந்து மருந்தகம் (பார்மஷி) ஒன்றைத் திறக்கின்றார்கள். இந்த மருந்தகத்தை நிர்வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர் தான் சிவகாமி என்கின்றார் இசிதோர் பெர்னாண்டோ.

Sunday, 1 May 2022

`நோ போல்’ சிறுகதைத்தொகுதியை முன்வைத்து

 

ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.

கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகள் அளவில் சிறியவை. ஆனால் உள்ளடக்கத்தில் பல அம்சங்களைத் தொட்டு நிற்பவை. அசத்துபவை. `மகிழ்’ வெளியீடாக, இந்த வருடம் (2022) வந்திருக்கும் `நோ போல்’ சிறுகதைத்தொகுதியில் மொத்தம் எட்டுக்கதைகள் இருக்கின்றன. கடந்த பதினாறு வருடங்களில் எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி, வாசிப்பதும் சினிமா பார்ப்பதும் தனக்கு மிகவும் பிடித்தமானது எனக் குறிப்பிடுகின்றார்.

கிருஷ்ணமூர்த்தியின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் இருந்த விடயதானம் தற்போதைய கதைகளில் காணக் கிடைக்கவில்லை. வேல் அன்பன், ஒரு வீடு – இருவேறு உலகம், பசி, சாப்பாடு சிறப்பாக வந்திருக்கின்றன. உயிர் சிறுகதை எழுதப்பட்டுள்ள உத்தி ஏனைய கதைகளில் இருந்து வேறுபடுகின்றது.