அதிகாரம் 14 – அவளின் விலை
ஒரு காலத்தில் பெரிய ‘ஹீரோயினாக’ தொழிற்சாலையை வலம் வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும் பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் எல்லாவற்றையும் தவிர்த்தே இருந்திருப்பாள். அவள் யார் மனதையும் புண்படுத்தியதாக இதுவரை காலமும் தொழிற்சாலையில் ஒருவரும் சொல்லவில்லை. இத்தனை காலமும் நந்தனுக்கு அவள் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக வாய் மூடி மெளனமாக இருந்தான் அவன்.
“எனக்கு ஸ்ரோரில் வேலை கிடைத்திருக்கின்றது. பகல் வேலை. நிறைய ஓவர்டைம் இருக்கும். குடும்பத்தையும் பார்க்கலாம்” மகிழ்வுடன் எல்லாருக்கும் சொல்லித் திரிந்தாள்.
உண்மையில் இதுதான் நடந்தது. ஜோசுவாவை வேலை நீக்கம் செய்தபின்னர், புங்கை காரின் உதிரிப்பாகங்கள் வைத்திருக்கும் தொழிற்சாலயின் ஸ்ரோர் பகுதிக்கு இடம் மாற்றிவிட்டார்கள்.



















