Tuesday, 4 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (13/14)

 
அதிகாரம் 13 – பெண் சிலந்தி (peacock spider)

அந்தச் சம்பவத்தை அறிந்த வான் மான் நூஜ்ஜின், ஒருநாள் நந்தனை இரகசியமாக் கூப்பிட்டான். வான் மான் நூஜ்ஜின் இப்போது போனும் கையுமாகத் திரிகின்றான். வேலை செய்யும்போதும் ஒரு கையில் போன். சாப்பிடும்போதும் போன். சிறுநீர் கழிக்கும்போதும் ஒரு கையில் போன். அவனது போனில் ஆங்கில வார்த்தைகள் கிடையாது. தாய்மொழிக்கே முதலிடம். வியட்நாம் பாஷையில் ஃபேஸ்புக் துள்ளித் திரிந்தது. அவன் தனது போனைத் திறந்து ஒரு வீடியோக்கிளிப்பை நந்தனுக்குக் காண்பித்தான். அதில் புங் – நடப்பது, இருப்பது, ஓடுவது, சிரிப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு கிளிப் ஆக இருந்தது. எப்பவோ களவாக அவளைப் பின் தொடர்ந்து எடுத்திருக்கின்றான் நூஜ்ஜின்.

“ஐ லைக் புங்” என்றான் நூஜ்ஜின்.

“ஏற்கனவே நீ இரண்டு பெண்டாட்டிக்காரன். மூண்டாவதும் கேட்குதோ? உதை மூடி வை. வீட்டை போகப் போறாய்” நந்தன் தனது மூக்கை சப்பையாக நசித்துக் காண்பித்தான்.

ஓட்டமெடுத்தான் நூஜ்ஜின்.

ஜோசுவாவின் மனைவி டிவோர்ஸ் கேட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்தாள். அவுஸ்திரேலியாவில் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் விவாகரத்து கேட்கும் விகிதம் அதிகரிக்க இந்தக் கூத்துகள் தான் காரணம்.

ஜோசுவாவை வேலையைவிட்டு நீக்கியதற்காக புங் கவலை கொள்வது போல வெளியே காட்டிக் கொள்வதில்லை. உள் மனதில் இருக்கலாம். தன் மனதில் இப்படியான சலனத்தை விதைத்து, தன்னை இந்த ’மங்கி பிஸ்னஸ்’ இல் ஈடுபட வைத்தது ஆச்சிமாவின் லீலைகள் தான் என சொல்லித் திரிந்தாள் புங்.

அதன்பின்னர் சில நாட்களுக்கு அவளின் மகிழ்ச்சி செயற்கைத் தனமானது போல தோன்றினாலும், போகப் போக அவள் பழைய நிலைக்கு மாறிவிட்டாள். துள்ளித் திரியத் தொடங்கிவிட்டாள்.

“அவள் என்ன செய்தாலும், ஏது செய்தாலும் ஏன் அவளை எல்லோருக்கும் பிடிக்கின்றது?”

“இந்தப்பெண் ஏன் இத்தனை வருடங்கள் கழிந்தும், இவ்வளவு நடந்தும் என்னைத் தன்னிடம் ஈர்க்க முடிகின்றது?” நந்தனின் மனம் அவனைக் குடைந்தது.

புங்கிற்கு மனம் சார்ந்த பிரச்சினைகள் வந்தபோது, அவளது மனம் பார்த்துக் கொண்டது. ஆனால் உடல் சார்ந்த பிரச்சினை வந்தபோது, அவளது மனம் எதையும் பார்க்கத் தவறிவிட்டது. நினைத்துப் பார்த்தால் இப்பவும் ஆச்சரியமாக இருந்தது நந்தனுக்கு.


காமம் கடந்த காதலையும், காமம் கடந்த நட்பையும் இந்த உலகில் காண முடியாதா?

“நீ எதையாவது அந்தப் பெண்ணிடம் சொல்ல விரும்புகின்றாயா?” திடீரென்று நந்தனின் மனம் கேட்டது.

“உனக்கு முதன் முதலாக ஜோசுவாவைச் சந்தித்தது ஞாபகம் இருக்கின்றதா?” கதையை ஆரம்பித்தான் நந்தன்.

“இல்லை! அதன்பிறகு எத்தனையோ நடந்துவிட்டன” என்றாள் புங்.

“நன்றாக ஞாபகப்படுத்திப் பார்!”

“இல்லை! முடியவில்லை…”

“எனக்கு ஞாபகம் இருக்கின்றது.”

நந்தன் சொன்னவுடன், புங் அவனை ஒருகணம் வியப்புடன் பார்த்தாள்.

“நீ எனது உண்மையான நண்பன். அதுதான் என்னைப் பற்றி எல்லாம் உனக்குத் தெரிந்திருக்கின்றது.”

நந்தன் குளிர்ந்து போனான். அந்த மகிழ்ச்சியில் அவனது மனம் துள்ளித் திரிந்தது. மறுகணம் மனச்சாட்சி விழித்துக் கொண்டது

“புங் உனது உண்மையான நண்பி என்றால், அவள் ஜோசுவாவுடன் பழகும்போது – அதை நீ தடுத்திருக்க வேண்டும்” நந்தனின் மனம் அவனைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துரத்தியது.

ஒருமுறை குலம் இதுபற்றி நேரடியாகவே புங்கிடம் கேட்டான்.

“உனக்கு எல்லாவிதமான தந்திரங்களும் கை வந்த கலை. அதுதான் விசாரணையில் நீ ஜெயித்திருக்கின்றாய். உண்மையில் உன்னையும் வேலையை விட்டு நீக்கியிருக்க வேண்டும்.”

புங் ஒருகணம் திகைத்து விட்டாள். அவள் முகம் கருகருவென நிறம் மாறியது. அவளுடைய கண்கள் நீரில் பளபளத்தன. அப்படி ஒரு கேள்வி வரும் என அவள் எதிர்பார்க்கவில்லை.

“விதியின்படி வாழ்கை” என்று குலத்திற்கு அவள் பதில் சொன்னாள். குலம் கையினால் ‘இல்லை’ என்று சைகை செய்தபடி போய்விட்டான்.

நாட்கள் விரைவாகக் கடந்தன.

இரு வாரங்கள் கழிந்த நிலையில், புங் மீண்டும் விசாரணைக்கெனக் கூப்பிடப்பட்டாள். ஜோசுவாவின் நண்பர்கள் அந்தப் பிரச்சினையை மீண்டும் கிழறியிருக்க வேண்டும் என நினைத்தாள் புங். விசாரணையின் பின்னர் சோகமே உருவாக வந்து மீண்டும் வேலையை ஆரம்பித்தாள். அவளின் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் இருந்தது. அவளுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியான செய்தியை அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும்.

நந்தனுக்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது.

“என்ன நடந்தது?”

“ஒன்றுமில்லை.”

“பின் ஏன் சோகமா இருக்கின்றாய்?”

“நானே குற்றங்களைச் செய்தேன். இதற்கு வேறு ஒருவரும் பொறுப்பு அல்ல. உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். யாரும் இதில் தலையிடாதீர்கள்.”

நந்தனை ‘யாரும்’ என்று அவள் சொன்னது மேலும் அவனுக்குக் கவலையை ஊட்டியது

கடைசியாக நடந்த விசாரணையின் பின்னர் புங்கின் மன நிலையில் மாற்றம் தெரிந்தது. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கறையைக் கழுவ முடியாது அவள் மனம் துடிக்கின்றது. குற்ற உணர்வு அவளைத் தினம் தினம் வாட்டுகின்றது.

இப்போது புங்கை எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பார்க்கின்றார்கள். அவளுக்கு முகத்துக்கு நேராக கலகலப்பாகக் கதைப்பவர்கள், அவள் அப்பாலே நகர்ந்ததும் சிரிக்கின்றார்கள்.

“புங்கும் ஜோசுவாவும் நிர்வாணமாக இருக்கும் பல போட்டோக்களை இன்று நான் பார்த்தேன்.புங் ஒரு பெண் சிலந்தி” நந்தனின் காதிற்குள் கிசுகிசுத்தான் மாய். அவளிப் பற்றி அறிய வேண்டும் என்பதில் மாய் மிகவும் துடியாட்டமாக இருந்தான். அவன் புங்கின் கணவனின் நண்பனும் கூட. மாய் எல்லா மனிதர்களையும் இலகுவாக நோகடிக்கக் கூடியவன்.

தொடர்ந்து, “இது முடிந்த கதை அல்ல. அப்படியொன்று இந்த உலகத்தில் இல்லை” என மாய்சொல்லிக் கொண்டிருக்கும்போது புங் நந்தனிடம் வந்தாள்.

“நான் தொழிற்சாலையின் ஸ்ரோர் பகுதிக்கு, வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றாள்.

தொடரும்….

No comments:

Post a Comment