(திருக்கோவில் கவியுவனின் சிறுகதைத்தொகுப்பு தொடர்பான ஒரு அலசல்)
- இராசையா யுவேந்திரா அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் என்ற இடத்தில் பிறந்தவர். திருக்கோவில் கவியுவன் இவரது புனைபெயர். இவரது `வாழ்தல் என்பது’ என்ற இந்தத் தொகுப்பு வரும்போது இவருக்கு வயது 26. அப்பொழுது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாக இவர் பயின்று கொண்டிருந்தார்.
1996 இல் வெளிவந்த இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் எட்டு
சரிநிகர் சஞ்சிகையிலும், இரண்டு வீரகேசரியிலும் பிரசுரமாகி உள்ளன.
1995 களின் பிற்பாடு நான் நியூசிலாந்தில் இருந்த வேளையில்
இவரது படைப்புகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். நண்பரும் எழுத்தாளருமான ஆ.தேவராஜன்
இவர் பற்றிச் சொல்லியிருந்தார். ஆனால் அப்பொழுது இவரின் படைப்புகளை தேடிப் படிக்கமுடியாத
சூழ்நிலை. இணையமும் மொபைல்போனும் இருக்கவில்லை. பத்திரிகைகள் சஞ்சிகைகள் அப்போது அங்கே
வருவதில்லை. அதன் பிற்பாடு இவரும் தொடர்ந்து எழுதவில்லை.
ஆயினும் முப்பது வருடங்கள் கழித்து இவரது எழுத்துகளை வாசிக்கும்
சந்தர்ப்பம் இன்று கிட்டியிருக்கின்றது. அதுவும் நந்தினி சேவியர் என்ற எழுத்தாளரின்
`பிடித்த சிறுகதை’ (முகநூலில்
பிடித்த ஈழத்துச் சிறுகதைகளைப் பற்றிய குறிப்புகள்) முதலாம் தொகுதி வந்ததன் பிற்பாடுதான்.
நந்தினி சேவியர் போன்ற எழுத்தாளர்கள் யாராவது தற்போது வாழ்ந்து வருகின்றார்களா? தானும்
`நல்லபடியாக’ எழுதிக்கொண்டு,
மற்றவர்களையும் தூக்கிவிட்டு, அவ்வப்போது இலக்கியம் சமைக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு
புரளி கிழப்பி தாளமிடும் பொட்டுக்கேடுகளை புட்டுப்புட்டு வைத்த அருமையான மனிதர் அவர்.
அவரது அந்தத்தொகுப்பில் 144வது எழுத்தாளர் திருக்கோவில் கவியுவன். இவர் பற்றிய நந்தினி
சேவியரின் குறிப்பை வாசித்ததும் நான் திகைத்துப் போனேன். அதே சூதனர்கள் இன்றும் நம்மத்தியில்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். காலமும் அதன் சுவடுகளும் அவ்வப்போது அவர்களைக்
காட்டித் தந்துவிடுகின்றது. அவரின் அப்பத்தியை அப்படியே தருகின்றேன். |யாரும் இவரைக்
கண்டுகொள்ளவில்லை என்று சொல்லமுடியாது. கண்டும் காணாது சென்றவர்களின் தொகை அதிகம்.
இவரது சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதியவர் பேரா.சிவத்தம்பி அவர்கள். சூதனர்களின்
குறுக்கீட்டால் பிரசுரமானது அவர் எழுதிய பிறிதொரு முன்னுரை.|
இனி இவர் எழுதிய சிறுகதைத்தொகுதிக்கு வருகின்றேன்.
`மரணத்தின் தூது’ தொகுப்பின்
முதல் கதை. கவித்துவமான நடையில், நடக்கப்போகும் சங்கதிகளுக்கெல்லாம் கட்டியம் கூறுவதுபோல்
ஒரு கனவு நிலையில் நின்று எழுதப்பட்டுள்ளது இந்தச் சிறுகதை.
`உடைத்துப் போட்ட தெருவிளக்கு’ ஒரு
காலத்தின் மாறுதலைச் பிரதிபலிக்கும் சிறுகதை. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே இந்த மாறுதல்
தொடங்கிவிட்டது. கட்சிகள், உட்கட்சிப் பூசல்கள், மின்கம்பத் தண்டனைகள் எல்லாம் அப்போதே
ஆரம்பமாகிவிட்டன.
ஒரு இனத்துக்கும் பாலுக்குமிடையேயான கருத்துப் பரிவர்த்தனைகள்
`மதிப்பீடு’ கதையாகிறது.
`செவ்வந்தி’ வட்டாரவழக்கில்
(பேச்சுவழக்கு) எழுதப்பட்ட நெடுங்கதை. கடற்தொழிலாளர்கள் பற்றியும், மீன் றால் நண்டு
பிடிக்கும் லாவகங்களும் இழையோட – சிறிசுகள் ஆணும் பெண்ணுமாக அடிக்கும் லூட்டிகளுடன்
கதை நகர்ந்து செல்கின்றது. பல புதிய தகவல்களைச் சொல்லிச் செல்லும் கதை, செவ்வந்தி பெரியவள்
ஆனதுடன் சூடு பிடிக்கின்றது. கதையில் வரும் செவ்வந்திக்கும் சேந்தனுக்கும் என்னவாயிற்று
என்பதை அடுத்து வரும் `இனியும் ஒரு சாவு’ சிறுகதை
சொல்கின்றது.
`வாழ்தல் என்பது…’ ஒரு
தம்பியின் பார்வையில் அண்ணாவின் கதை. பூடகமாகவே கதை முழுவதையும் நகர்த்துகின்றார் ஆசிரியர்.
இத்தொகுப்பைப் படிக்கும்போது மனதை ஒன்றுசேர்த்து ஒரு கட்டுக்குள்
கொண்டுவந்து வாசிக்க முடியவில்லை. நானும் எனது காலங்களுக்கு அவ்வப்போது தாவிப் போவதும்
பின்னர் மீண்டு வருவதுமாகவே இருந்தேன். அனேகமான கதைகளில் ஆக்கள் காணாமல் போவதும், இறப்பும்,
கூடவே கவிதைகளும் வருகின்றன. சில கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன.
தொகுப்பின் முதல் ஒன்பது கதைகளும் `தன்மை ஒருமை’ யில்
எழுதப்பட்டுள்ளன. கடைசிக் கதையான `காற்று கனக்கும்
தீவு’ படர்க்கையில் எழுதப்பட்ட, நாட்டின் சீர்கேடுகளையும் நடப்புகளையும் பிரதிபலிக்கும்
உருவகக் கதை எனக் கொள்ளலாம்.
ஒவ்வொருவருடைய எழுத்தும் நடையும் ஒவ்வொரு ரகம். நமக்குப்
பிடித்திருக்கின்றதா என்றுதான் பார்க்க வேண்டும். அந்த வகையில் திருக்கோவில் கவியுவனின்
எழுத்துகள் கொண்டாடப்பட வேண்டியவை. ஒரு காலத்தில் கிழக்கில் நடந்த அவலங்களுக்கான ஆவணம்
இது. தொகுப்பில் `உடைத்துப் போட்ட தெருவிளக்கு’, `மதிப்பீடு’,
`நனைதலும் காய்தலும்’, `செவ்வந்தி, `வாழ்தல் என்பது’ எனக்கு
மிகவும் பிடித்த கதைகள். இவர் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.
கவித்துவமான நடையிலும் அலாதியான வர்ணனைகளுடன் எழுதப்பட்டுள்ள, இவரது இந்தச் சிறுகதைத்தொகுப்பை நூலகம் இணையத்தளத்திற்குச் சென்று படிக்கலாம்.
Thank you so much for your views
ReplyDelete