Friday, 8 March 2024

கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் வளவளா - கங்காருப்பாய்ச்சல்கள் (41)

 

இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த சம்பவங்களைப்பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்று சில எழுத்தாளர்களிடம் கேட்கும்போது, அவர்கள் அந்தக்காலங்களில் தாங்கள் இலங்கையில் இருக்கவில்லை என்று உதாசீனமாக அந்தக் கேள்வியைத் தட்டிக் கழிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களைப் பற்றியெல்லாம் எழுதுகின்றார்கள், தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சங்ககால இலக்கியங்களிலெல்லாம் மேற்கோள் காட்டுகின்றார்கள். சங்ககாலப் பாத்திரங்களை மீளவும் கொண்டுவந்து படைப்புகளில் முன் வைக்கின்றார்கள். தாங்கள் காணாத சந்தித்திராத, புத்தகங்களில் மட்டும் படித்து அறிந்த அவற்றைப் பற்றியெல்லாம் எழுத முடிகின்றது என்றால், நம் கண்முன்னே நாளாந்தம் நடக்கும் இவற்றைப்பற்றி எழுத முடியாதா என்ன?



பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள் பணத்திற்குள் முடங்கிக் கிடத்தல் நல்லதல்ல.

பத்திரிகையை விடுங்கள். இலக்கியத்தை வளர்த்தெடுக்கப் புறப்பட்ட சஞ்சிகைகளிற்கு இவை ஆரோகியமானதல்ல. சஞ்சிகையின் வளர்ச்சிக்கு என்று பணத்தைக் கொடுத்துவிட்டு, தன்னுடைய படைப்புகளையே போடுங்கள் என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை அனுப்புதல் எழுத்தாளருக்கு அழகல்ல. அதைவிடுத்து ஒரு சிலரின் படைப்புகளைப் போட வேண்டாம் என்று சொல்பவர்களும் உண்டு.

எந்தப் பெரிய கொம்பனாகவிருந்தாலும் சரி, அவரின் படைப்புகளையே தொடர்ந்து பிரசுரிக்கும் இதழாசிரியருக்கும் அது அழகல்ல. இவை ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் சஞ்சிகை படுத்துவிடும்.



பத்திரிகைத்துறையில் இருந்து வந்து எழுதுபவர்களின் எழுத்து நடைக்கும், ஏனைய எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கின்றேன். எழுத்தை தமது தேவைக்காகப் பாவிப்பதற்கும், மக்களின் நல்வாழ்க்கைககாக எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? ஒன்று எழுத்தை விற்பது, மற்றயது எழுத்தை வளர்ப்பது.

இயல்பாக ஆர்வத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கும், ஒரு கொள்கைக்காக தாம் சார்ந்த அமைப்புக்காக எழுதியே ஆகவேண்டும் என வலிந்து எழுதப்படும் படைப்புகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. முதல்வகைப் படைப்புகள் இலக்கியப்படைப்புகள், இரண்டாமவை இளக்காரமானவை.

Tuesday, 5 March 2024

அவசர உலகம், அவசர இலக்கியம் - கங்காருப்பாய்ச்சல்கள் (40)

 

இந்த அவசர உலகில் கதையோ நாவலோ வேகமாக நகருவதையே எல்லோரும் விரும்புகின்றார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் நாவலோ சிறுகதையோ அதன் போக்கில் விறுவிறுப்புக் காணப்பட வேண்டும். கதைப் போக்கில் இறுக்கம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். வளவளா வாய்க்கியங்கள் வெட்டி எறியப்படல் வேண்டும்.

நாவலோ சிறுகதையோ பக்க எண்ணிக்கையால் தீர்மானம் செய்யப்படுவதில்லை. ஒரு நாவலை எழுதுபவர், எங்கே இதை யாரேனும் ஒருவர் குறுநாவல் என்று கூறிவிடுவாரோ எனப் பயந்து, தேவையில்லாமல் பக்க எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக எப்போதோ யாரோ எழுதிய கவிதைகள், சில ஆவணங்களை இட்டு நிரப்புவது சரியாகப்படவில்லை.

இரசனையுள்ள ஒருவரால் ஒன்றோ இரண்டோ நல்ல சிறுகதைகளை/நாவல்களைப் படைத்துவிட முடியும். ஆனால் தொடர்ந்தும் அவரால் எழுத முடியாது. அதற்கு வாசிப்பும் பயிற்சியும் வேண்டும்.

 

Friday, 1 March 2024

வாசிப்பு - - கங்காருப் பாய்ச்சல்கள் (39)

 

வாசிப்பில் பலவிதமான சுவைகள் இருக்கின்றன.

சில புத்தகங்களை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு அப்பால் நகர்த்தவே முடியாமல் இருக்கும்.

சில புத்தகங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் நேரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது இந்தப் புத்தகங்களின் தேவை என்ன? ஆறுதலாக வாசிக்கலாம்தானே என்ற நோக்கில் மனம் வைத்துவிடும். பின்னர் நேரம் இருந்தால், புத்தகத்திற்கு யோகம் இருந்தால் மீளவும் வாசிக்கப்படும்.

இன்னும் சில புத்தகங்கள் – விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும். வாசிக்கத் தூண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி இழுத்துப் பிடித்து வைத்திருக்கும். வாசித்து முடித்துவிட்டு, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்து ஜோசித்தால் மனதில் ஒன்றும் இருக்காது. அதன்பின்னர் மறுபடியும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் வராது.

இவையெல்லாவற்றையும் தாண்டி, விறுவிறுப்பாக எம்மை எங்கோ அழைத்துச் சென்று, வாசித்து முடித்தபின்னரும் மனதில் சலனத்தை ஏற்படுத்தி நீங்காத தடயமாக மனதில் வீற்றிருக்கும் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வேண்டும், இன்னமும் அதன் தேவை இருக்கின்றது என்ற நினைப்பில் பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றும்.

சில புத்தகங்களை, எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை. சமீபத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்தபோது – புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியிருந்த ஒரேயொரு பொன் வாய்க்கியத்திற்காக அந்தப் புத்தகத்தைத் திறக்காமல் இருந்தேன். அந்த வாய்க்கியம் அவருக்கே அச்சொட்டாகப் பொருந்தியிருந்ததுதான் அதற்குக் காரணம். தான் ஏதோ பெரிய கனவான் போலவும், மற்றவர்களை அவதூறு செய்வது போலவும் அந்த வாய்க்கிய அமைப்பு இருந்தது.

புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர், அதிலிருந்து புதிதாக பலவற்றை அறிந்துகொள்ள முடியுமென்றால் அதுவே சிறப்பு.

 

Saturday, 24 February 2024

பதுங்கு குழி - எனக்குப் பிடித்த கதை



நந்தி (செ.சிவஞானசுந்தரம்)

ஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான்.

'ஒடி வாருங்கோ, தூரத்திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது.'

சில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள் - உயரத்திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்பறரும் வட்டமிட்டன. இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங்கிக் கொண்டனர். காலை 6-45 போல சூரியன் பௌர்ணமி ஒளியில் பொம்மர்கள் குறிபார்த்துச் சுடுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோருடைய நெஞ்சையும் நெருக்கியது. அதற்கு முன் குண்டு வீச்சு இரு தடவையும் இதே நேரத்தில்தான் நல்லூரில் நடந்தது.

வரதனின் வளவில் வேலி ஓரமாக வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழியில் அவன், அவனின் தாய் செல்லமணி, தங்கை வரதா, அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவிகள்.

'பாட்டா, எங்களுக்கும் ஒரு பதுங்குகுழி வெட்ட வேண்டும்' ;எங்கள் வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் வெட்டியாச்சு', 'பதுங்கு குழி உயிருக்குப் பாதுகாப்பாம்'- இவ்வாறு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வரதன் தன் தாயின் தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வரும்போது சில நாட்களாகக் கூறி வந்தான். செல்லத்துரைக் கிழவன் நேற்று முன்தினம் வரை இதை எல்லாம் கேட்டுச் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு நாட்கள் குண்டுகள் மாடி வீடுகளில் விழுந்தது உண்மைதான். மாடிவீடுகள் போராளிகளின் காம்ப் என்ற எண்ணம் இராணுவத்திற்கு உண்டு. மாடி வீட்டு மச்சில் இருந்து 50 கலிபர் துவக்குப் பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடியுமாம். ஆனால் செல்லத்துரையின் வீடு மாடி அல்ல, அது ஒரு பழைய நாற்சார் வீடுதான். அத்துடன் பதுங்கு குழி வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூபா வேண்டுமே! மூன்று பொம்மர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டின் மேலும் அவர்களால் குண்டுகள் போட முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 'ஷெல்' அடிக்கிறார்கள். அதற்குப் பதுங்கு குழிகளால் பிரயோசனம் இல்லை' இப்படியாக, இலங்கை இராணுவத்தின் பரிமாணத்தை அறிந்த ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.

நேற்று முன்தினம், அதிகாலை 3-30. நல்லூரின் மேலே வானம் நொருங்கி ஒவ்வொரு வீட்டின் கூரைகளிலே இடித்துகழ்களாகச் சொரிந்தது போன்ற ஓசை எல்லோரையும் அடித்து எழுப்பியது. காங்கேசன் துறையிலிருந்து போராளிகளின் மோட்டார் வான் ஒன்றைத் துரத்தி வந்த ஒரு ஹெலி அதைக் கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி பிடித்து துயிலிலிருந்த பூமிமேல் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. அயலிலே ஒரு வீட்டில் தூக்கத்திலிருந்த ஒரு வயோதிபரை துப்பாக்கிக் குண்டு துளைத்தது. மற்றவர்கள் வீடுகளிலே எங்கும் துவாரங்கள்: அவர்கள் வளவுகளிலே, வாழைகளிலே, பனைகளிலே, தென்னைகளிலே சன்னங்கள். அன்று நண்பகல் 'சீ பினேன்' ஒன்று வந்து படமெடுத்துச் சென்றது. சீப்பிளேன் வந்து போனால் பொம்மர் வரும் என்பதும் அனுபவம். வரதன் சொன்னான். 'கோள்மூட்டி வந்து போறான், நாளை ஆள்காட்டியைக் கூட்டிக் கொண்டு பொம்மர் வரும்' சீப்பிளேனைக் கோள்மூட்டி என்றும், பொம்மருக்குத் திசையும் குறியும் காட்டும் ஹெலியை, ஆள்காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம் சூட்டிவிட்டார்கள்.

அந்தியில் வரதனின் பாட்டா செல்லத்துரை இருவர் உதவியுடன் 'டானா' வடிவில் ஒரு பகுங்கு குழி வெட்டினார். பக்கத்துப் பிள்ளையார் கோயில் வளவில் சோடை போயிருந்த ஒரு தென்னைமரம் குழிக்கு மேலே அடுக்குவதற்கு வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப்பட்டது. அவற்றின் மேலே மண் மூட்டைகள் வைத்து மண்ணால் மூடப்பட்டது.

கிழவன் உள்ளே போகவில்லை. வெளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல், குழிக்குக் காவலாளிபோல் இருந்தார். வாய்விட்டுக் கூறாவிட்டாலும் அந்தக் குழி அவர் மனத்தில் சவக்குழியை ஞாபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப் பார்த்து 'பாட்டா உள்ளே வாங்கோ' என்று அவசரப்படுத்தினான். 'தேவையானால் வாறன்' என்றார் செல்லத்துரை: சாவகாசமாக வெற்றிலையை மென்று இரத்தச் சிவப்பாகத் துப்பிக் கொண்டிருந்தார்.

மேற்குத் திசையிலே இரு பொம்மர்கள் மாறி மாறிச் சத்தாருக்குக் கீழே இறங்கியபின் மேலே உன்னிப் போகும் போது பேரோசைகள் கேட்டன. 'ஆஸ்பத்திரியைச் சுற்றித் தான் அருச்சுனை நடக்குது' என்று கிழவன் முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் சூடுகள்: அதை எதிர்த்து பையன்களின் 50 கலிபர் வேட்டுக்கள்: கோட்டையிலிருந்து nஷல்லோசைகள். பூமியின் நான்கு திக்கும் அதிர்ந்தன.

'வாங்கோ பாட்டா' மீண்டும் வரதன்.