ஈழத்
தமிழர் வாழ்க்கையில்
1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு
வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா?
இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்?
எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த
மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும்,
ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின்
நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன்
சமாதானம் கொள்ள. அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர்
கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.
ஒரு தலைமுறைக்காலம்
சிலருக்கு பிறந்த மண்ணுடன் உறவுகளை அவ்வப் போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ளது. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல
மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை
ஈழ மண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது அந்த வரலாறு. ஈழத் தமிழரை
உலகெங்கும் வீசியெறிந்துள்ளது இரண்டு தலைமுறை வரலாறு.
துன்பத்தினிடையே
தான் புதிய, நினைத்துப்
பார்க்காத மலர்ச்சிகளையும் மனிதரின் வாழவேண்டும் என்ற துடிப்பும். பச்சையே பார்க்கமுடியாத அடிவானம் வரை நீளும் பாலையில் கூட அபூர்வ மிக அழகான
வித விதமான கத்தாழைகள் பூக்கும் மலர்கள் பார்க்க வினோதமானவை. உயிர்ப்பு இத்தகைய ஆச்சரியங்களைக் கொண்டது. எங்கு எது
மலரும், எது எத்தகைய பயனுமற்ற விளைச்சல்களைப் பரப்பும் என்று
யார் சொல்ல முடியும்? அமைதியான காலங்களில் வெற்றுப் பிரசாரங்களையும்
கோஷங்களையும் தந்த ஒரு இனம், அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ உயிர்த்தரிப்புக்கு
வீசப்படும்போது அதன் ஜீவத்துடிப்பின் அடியோட்ட உணர்வுகளை மீட்டெடுக்கிறது. எதிர் நிற்கும் வாழ்வை அதன் குணத்தில் எதிர் கொள்கிறது. அதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அரசியல், சித்தாந்த, ஜாதீய கோஷங்களை ஒதுக்கி. அதன் வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தங்களையும் மீட்டெடுக்கிறது.
இதையெல்லாம்
வெற்று அரசியல் வாய்ப்பாடுகளில் அடைத்துவிட முடியாது. மனித ஜீவனின் அர்த்தங்கள் இப்படியெல்லாம்
சுலபத்தில் சுலப, தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் சித்தாந்த வாய்ப்பாடுகளில்
சிக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆளுமையையும் பொருத்தது இது.
எந்த ஆளுமை எப்படி எதிர்வினையாக்கும் என்பதும் எந்த அரசியல் சமூகவியல்
வாய்ப்பாடுகளிலும் அடங்கிவிடுவதில்லை. ஒரு வாய்ப்பாடு உருவாக்கப்பட்டதுமே,
அதை மீறும் ஒரு ஜீவன் உடன் தோன்றிவிடுகிறது.
எங்கெங்கோ
அலையாடப்பட்ட வாழ்க்கையில் உயிர்தரிப்பதே முழுமையும் முக்கியமானதுமாகிப் போய்விடும்
நிர்ப்பந்தங்களில், அன்னிய மண்ணில் இரவு பூராவும் யந்திரங்களோடு யந்திரமாக இயங்கிவிட்டு,
காலையில் தினசரி செய்தித்தாட்களை வீடு வீடாக வினியோகித்துவிட்டு வீடு
திரும்பினால் பசிக்கு உண்டு படுக்கையில் விழச் சொல்லுமா, இல்லை
கவிதை எழுதச் சொல்லுமா? இந்நிலைகளில், கவிதை
எழுதும் ஜீவனை எப்படிப் புரிந்து கொள்வது? அல்லல் பட்ட ஜீவன்
வாழும் இந்த மனிதக் கூட்டம் தான் தன் மொழியைப் பற்றிக் கவலைப் படுகிறது. உலகப் பரப்பு முழுதும் வீசி எறியப்பட்ட தமிழரோடு தமிழில் உறவு கொள்ள விழைகிறது.
அதற்கு ஏற்ப புதிதாகத் தோன்றிய இணையத்தை தன் வசப் படுத்துகிறது.
ஆச்சரியம் தான். இதில் முதல் காலடி வைப்பு புலம்
பெயர்ந்த தமிழர்கள் தான். தமிழுக்கு அதை வளைத்துக் கொண்டு வந்ததும்
புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்கு அந்தத் தேவை இருந்தது,
செய்தார்கள் என்பது வேறு விஷயம்.
புலம்
பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் என்று ஒருவர் சொன்னதாகப் படித்தேன். இதைவிட சின்னத் தனம் வேறு இருக்க
முடியாது. சின்னத் தனமோ அல்லது தமிழருக்கே பழக்கமாகிப் போன வார்த்தை
அலங்கார மோகமோ, எது காரணம் என்பது தேடுவது இது கொண்டுள்ள சின்னத்தனத்தை
மறைப்பது தான்.
உலகப்
பரப்பு முழுதையும் தமிழ் இலக்கியத்தின் கதைக் களமாக்கியது புலம் பெயர்ந்தோரின் காரியம்
தான். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி,
ப. சிங்காரம், ஜெயந்தி சங்கர்,
என, இப்படி ஒரு நீண்ட அணிவகுப்பே முன் நிற்கிறது.
இன்றைய தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள்
இவர்கள். பல வண்ணங்களும் வளமும் பரப்பும் சேர்த்தவர்கள் இவர்கள்.
சமீபத்தில்
வல்லமை என்னும் ஒரு இணைய இதழ் ஒரு வருட காலத்திற்கு சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் எனக்குத் தெரிய வந்த சிறப்பான
சிருஷ்டித் திறன்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களது தான். அமெரிக்காவிலிருந்து, மிச்சிகனா? பழமை பேசி, பெல்ஜியத்தில்
வாழும் மாதவன் இளங்கோ, ஆஸ்திரேலியாவில் வாழும் சுதாகர்,
இவர்களில் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் தந்தவர்கள் பழமை பேசி,
மாதவன் இளங்கோ பின் இப்போது நாம் அதிகம் பேசப் போகும் சுதாகர்.
இவர்கள் அனைவரும் தாம் வாழும் வாழ்க்கையை எழுதுபவர்கள். தாம் சந்திக்கும்
மனிதர்களைப் பற்றி எழுதுகிறார்கள். எல்லோரும் எனக்குத் தெரிந்த
வரையில் இணைய இதழ்களிலிருந்தே, எழுத வந்தவரகள். புதிய திறன்கள். புதிய உலகங்களை, புதிய மனிதர்களை, புதிய உறவுகளை, புதிய வாழ்க்கைச் சிக்கல்களை, புதிய தார்மீக இடற்பாடுகளைப்
பற்றி எழுதுபவர்கள். பிறந்த மண்ணின், விட்டு
விட்டு வந்த மண்ணின் நினைவுகளும் மனிதர்களும் இன்னம் மறக்கவில்லை தான். எதையும் முழுதாக அழித்துத் துடைத்துவிட முடியுமா என்ன?
சுதாகர்
ஈழமண்ணிலிருந்து 1995-ல் வெளியேறியவர். இப்போது வாழ்வது
ஆஸ்திரேலியாவில். தான் எழுதியவற்றிலிருந்து பன்னிரெண்டு கதைகளை
ஒரு தொகுப்பிற்காக முன் வைத்துள்ளார்.