Saturday, 24 May 2014

வீமன்காமம் சி டி



தர்மலிங்கம் அடிக்கடி 'லெட்டர் பொக்ஸ்' பார்த்து வந்தார். இன்றைக்கு குறைந்தது ஆறேழு தடவைகளாவது தனக்கு கடிதம் வந்திருக்கின்றதா என்று பார்த்துவிட்டார். அவரைப் பார்க்க மருமகள் வாணிக்கு சிரிப்பு வந்தது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருமுறையாவது தனது கிராமத்தையும் வீட்டையும் போய்ப் பார்த்துவிடத் துடியாய்த் துடித்தார். அவரது 21 வருடக் கனவிற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லைஊரில் உள்ள அவரின் தம்பி முறையான பாலனுக்குக் காசை அனுப்பி, தனது கிராமத்தையும் வீட்டையும் வீடியோ எடுத்துப் பார்ப்பது என்று திட்டம் ஒன்றை வகுத்தார். பாலனுக்கு காசு அனுப்பி மூன்று கிழமைகள் ஆகிவிட்டன. தினமும் கடிதத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்.

'220 கல்லு மணல் லொறி - 550 பாக் சீமெந்து - 2250 ஓடுகள்' போட்டுக் கட்டிய வீடு என்று புலம்பாத நாளில்லை.

மாலை மூன்று மணியிருக்கும். உடுப்புகளை மாட்டிக் கொண்டு முகமலர்ச்சியுடன் நின்றார்.
"ரூபன் இண்டைக்கு எத்தினை மணிக்கு வேலையாலை வருவான்?" என்று மருமகளிடம் மகனைப் பற்றி விசாரித்தார்.
"இரவு செல்லும் மாமா" என்றாள் வாணி.
"உதிலை பிள்ளை ... கடையடிக்குப் போட்டு வாறன்" மருமகளிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.

மாலை ஆறுமணியளவில் ரூபன் வேலை முடித்து வீடு வந்து கொண்டிருந்தான். வரும்போது 'அவன் -இவன்' சி.டி இருந்தால் 'கே.எஸ்' ஸ்ரோஷில் வாங்கி வரும்படி சொல்லியிருந்தாள் வாணி. சிட்னியில் செவின் ஹில்சில் உள்ள 'கே.எஸ்' ஸ்ரோஷில் எல்லாப் புதுப்படங்களும் உடனுக்குடன் வந்துவிடும். சினிமாப் படங்கள் கொட்டிவிடப்பட்டிருந்தன. அதற்குள் 'அவனையும் இவனையும்' எப்படித் தேடுவது என்று மலைத்துப் போயிருந்த வேளையில், "தம்பி! வீமன்காமம் சீ டி இருக்கு வேணுமா?" என்றார் கடைக்காரர்.
கோரிப்பாளையம், பாஞ்சாலங்குறிச்சி, பம்பாய், கோவா என்று எத்தனையோ படங்கள் வந்திருக்கும் வேளையில் வீமன்காமமும் ஒரு சினிமாப் படமென நினைத்தான் ரூபன்.
"விஜய், சூர்யா படங்கள் இருந்தாத் தாங்கோ. புதுசுகள் நிறையக் கிழம்பியிருக்குதுகள். அதுகளின்ரை படம் எண்டா எனக்கு வேண்டாம்."
கடைக்காரர் சிரித்தார்.
"தம்பி... நீங்கள் ஊரிலை எந்தப்பக்கம்?"
ரூபனுக்கு அவுஸ்திரேலியா வந்த நாள் தொடக்கம் வீமன்'காமம்' எண்டு சொல்ல வெட்கம்.
"தெல்லிப்பழை அண்ணை!"
"உங்கடை ஊருக்குப் பக்கத்து ஊர்தான். வீமன்காமம் மீளக்குடியேற விட்டாப்போல எடுத்த வீடியோ. நாலு டொலர்தான். சும்மா சொல்லப்படாது... பேராண்மை பார்த்த மாதிரி இருக்குமாம். புதுப்புது மிருகங்கள் எல்லாம் ஊருக்குள்ளை ஓடுதெண்டும் சொல்லுறான்கள்."
ரூபனுக்கு மச்சாள்மாரின்ரை நினைவு வெகுண்டெழுந்துவர 5 கொப்பியள் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.

வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. ஒரு ஊரே திரண்டிருந்து ஹோலிற்குள் இருந்த 'சிமாற் ரி.வி'யில் 'வீமன்காமம்' சி.டி பார்த்துக் கொண்டிருந்தது. அப்பாவைக் காணவில்லை. குசினிக்குள் இருந்து நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
"அப்பா! கே.எஸ். ஸ்ரோசிலைதானே உந்த சி.டி வாங்கினனியள்?
"என்னடா கதைக்கிறாய் நீ?"
"இல்லை அப்பா... நானும் 5 சி.டியள் மச்சாள்மாருக்குக் குடுக்கலாமெண்டு வாங்கி வந்தனான். நாலு டொலர்ப்படி போட்டுத் தந்தவன்."
தர்மலிங்கத்தாருக்கு கோபம் வந்துவிட்டது. "உது 2000 அனுப்பி பாலனைக் கொண்டு படம்பிடிச்சு நான் எடுப்பிச்ச வீடியோக் கொப்பி.
பின்நேரம் கே.எஸ். இலை குடுத்து 4 கொப்பியள் அடிப்பிச்சனான். நோர்வேக்கு ஒண்டு, கனடாவுக்கு ஒண்டு, மற்ற இரண்டும் மெல்பேர்ண் பேர்த்துக்கு அனுப்ப வேணும். ஒவ்வொன்றுக்கும் 5 டொலர்ப்படி இருபது டொலர் என்னட்டை வாங்கிட்டான். இப்ப என்னண்டா உனக்கும் நாலைச் சுத்தித் தந்திட்டான்.

நான் கொப்பி அடிக்கக் குடுத்த சி.டி யிலையிருந்து எனக்கும் தெரியா கொப்பியடிச்சு எங்கடை சீரழிவுகளை 'மெகா சேல்' போட்டு சம்பாதிக்கிறான் போல கிடக்கு உவன்."

ரூபன் வாயடைத்து நின்றான். நாயொன்று ஊளையிடும் சத்தம் ஹோலிற்குள் இருந்த ரி.வியில் இருந்து வந்தது. இருவரும் குசினிக்குள்ளிருந்து ஹோலை நோக்கி நடந்தார்கள். இவர்கள் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி இருக்கும் நவமணி மூக்கைச் சிந்தியபடி தனது வீட்டிற்குப் போவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
"என்ன நவமணி வீடியோ கண்ணீரை வரவழைச்சிட்டுது போல" தர்மலிங்கம் கதை கொடுத்தார்.
"என்ரை வீடு கிடக்கிற கிடையைப் பாத்தனியள்தானே!" நவமணிக்கு கண்ணீர் வந்துவிட்டது..
"முந்தி அந்த வீட்டை உடுவிலிலை இருக்கிற உம்முடைய தம்பிக்குக் குடுக்கப் போறதாச் சொன்னீர்? இப்ப கதை மாறுது!!"
"அப்ப உயர் பாதுகாப்பு வலயத்துக்கை வீடு இருக்கேக்கை சொன்னனான் தான். ஆர் கண்டது பிரச்சினை உப்பிடிச் சட்டுப்புட்டெண்டு உந்தமாதிரி முடிவுக்கு வருமெண்டு. இப்ப மீள் குடியேற்றமல்லே நடக்குது. இனியும் தம்பியை நினைச்சுக் கொண்டிருந்தா?"



No comments:

Post a Comment