Showing posts with label குறும் கதை. Show all posts
Showing posts with label குறும் கதை. Show all posts

Monday, 14 April 2025

வாசனைத்திரவியம் - குறுங்கதை

 


நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு குடியிருக்கும் எலிகள், புதிதாக வந்திருந்த எம்மை வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

Friday, 8 July 2022

கொரோனா தான் காரணம்

 

வைத்தியசாலை ஒரே கலவரமாக இருந்தது. கொரோனா நோயாளிகள் முட்டி வழிந்து கொண்டிருந்தார்கள்.

வழமையாக, `அங்கே பிடிக்குது… இங்கே பிடிக்குது’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களும், சில்லறை வியாதிகளுக்கெல்லாம் சத்திரசிகிச்சை செய்யுங்கள் என்றும் வரும் நோயாளிகள் இப்போது வருவதில்லை. இருகோடுகள் தத்துவத்தில் கொரோனா பெரிய கோடாகிவிட்டது.

Monday, 1 June 2020

அதுவும் இதுவும்


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

அம்மா எவ்வளவோ சொல்லியும் வசந்தன் கேட்கவில்லை. தான் விரும்பியபடி ஒரு பெண்ணைக் கூட்டி வந்தான்.

“அம்மா…. நான் இவளைத்தான் திருமணம் செய்யப் போறன்.”

“சரி. செய்!”

நாட்கள் நகர்ந்தன. வசந்தன் வேலையில்லாமல் அலைந்து திரிந்தான்.
இப்போது மூன்று பிள்ளைகள்.

“அம்மா…. என்ரை கடைக்குட்டிக்கு பிறந்தநாள் வருது. பேர்த்டே செய்யக் காசு வேணும்.”

”பிள்ளையைப் பெறுறது நீ, பேர்த்டே செய்யுறது நானா? அதுக்கு நீ, இதுக்கு நானா?” என்றார் அம்மா.



Saturday, 16 May 2020

தொண்டு


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

வத்சலா கோயிலுக்குப் புறப்படும்போது, வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி வந்தாள்.

“வீட்டை மொப் பண்ணிப்போட்டு, பத்றூம் ரொயிலற்றைக் கிளீன் பண்ணிவிடு. மகளிட்டை 50 டொலர் குடுத்திருக்கிறேன். மறக்காமல்  வாங்கிக் கொண்டு போ.”
வேலைக்காரி ஆமாப் போட்டாள்.

வத்சலாவின் கோவில் தரிசனம் முடிந்தது.

“ஐயா… இண்டைக்கு நான் என்ன செய்யவேணும்?” ஐயரிடம் கேட்டாள் வத்சலா.

”எல்லாத்தையும் மொப் பண்ணிப்போட்டு, கோயில் ரொயிலற்றையும் ஒருக்கா சுத்தம் செய்து விடுங்கோ” ஐயர் சொன்னார்.

Friday, 15 May 2020

புரியாத உறவு


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

நானும் ஃபாமும் நூஜ்ஜினும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம்.

ஃபாம் விவாகரத்துப் பெற்றவன். அவனது மனைவி, நூஜ்ஜினின் தங்கை.

அறிந்ததும் அதிசயித்தேன். ஏனென்றால் ஃபாமும் நூஜ்ஜினும் அந்த அளவிற்கு ஒட்டாக இருந்தார்கள். விசாரித்ததில், எந்த உறவும் தங்களுக்குள் இல்லை என்றார்கள்.

ஃபாமிற்கு சத்திரசிகிச்சை நடந்தது. பார்ப்பதற்காக அவனது வீட்டுக்குச் சென்றேன். அங்கே நூஜ்ஜின் உதவிக் கொண்டிருந்தான்.

“தங்கையை வெறுத்தாலும், ஃபாம் எனக்கு உறவுதான்” திரும்புகையில் வாசல்வரை வந்த நூஜ்ஜின் சொன்னான்.

Sunday, 10 May 2020

‘பிக்பொக்கற்’


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பொதுவாக பேருந்தில் பயணிகள் பின்னாலே ஏறுவார்கள், முன்னாலே இறங்குவார்கள். 

அன்று திட்டமிட்டு - சிலர் முன்புறமாக ஏறி வரிசையைக் குழப்ப, பின்னாலே நின்ற ஒருவன், என் ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்த காசை அடித்துவிட்டான்.

அடுத்த தடவை, ஒரு பேப்பரை எட்டாக மடித்து பொக்கற்றினுள் வைத்துக் கொண்டேன். தரிப்பிடத்தில் நின்று அடிக்கடி அதைத் தடவிப் பார்த்தேன்.

காரியம் கைகூடியது. அன்றும் அதே விளையாட்டு. அந்தப் பேப்பருக்கும் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான் அவன்.

Friday, 1 May 2020

பெண்ணியம்!


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

கனகமணி ஆசிரியர், பெண்ணிய கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.

கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக மலையகத்திலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். கனகமணி இல்லாத சமயங்களில் அவர் அவளுடன் சில்மிஷம் புரிந்தார்.

“அம்மாவிடம் சொல்வேன்” என்பாள் அவள். பின்னர் வேலை பறிபோய்விடும் என்பதால் சொல்லுவதில்லை. எல்லை மீறியபோது ஒருநாள் போட்டுடைத்தாள்.

“இஞ்சை வரும் போது என்னிடம் கேட்டுவிட்டா வந்தாய்? நீயும் அவரும் பட்டது பாடு” என்றாள் கனகமணி.


Thursday, 30 April 2020

சரிவராது



(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

சின்னத்துரை தனது பொறியியலாளர் மகனுக்கு இணுவிலில் பெண் பார்க்கச் சென்றார்.

பெண் வகுப்பு பன்னிரண்டு சித்தியடையவில்லை. தகப்பன் கோடீஸ்வரன். பெரிய பிஷ்னஸ் முதலாழி.

“நேற்றடிச்ச சூறாவளியிலை வாழையள் முறிஞ்சு போய்க் கிடக்கு. இரண்டு குலையள் வெட்டி வைத்துவிட்டு... ”  உரையாடல் நடுவில் எழுந்து கொண்டார் பெண்ணின் தந்தை. தோட்டத்தில் வேலை முடித்து திரும்பி வந்தபோது, சின்னத்துரை அங்கிருக்கவில்லை.

நடத்தை, கல்வி அதன் பின்னரே பணம் அவருக்கு.


Tuesday, 28 April 2020

அப்புறம்?


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

முகநூலை மேய்ந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தில் எனக்கு அடுத்த வகுப்பில் படித்த சிவராசனின் பதிவு ஒன்றை, என் நண்பன் பகிர்ந்திருந்தான். பேராசிரியர் ஒருவரால் சிவராசனுக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் அது. ஒரு நாசா விஞ்ஞானியைப் புகழ்வதுபோல். சிவராசன் பல்கலைக்கழகத்தில் கொடி கட்டிப் பறந்தவன்.

“சிவராசன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றான்?” நண்பனிடம் விசாரித்தேன்.

“மச்சான்…. சிவராசன் கனடாவுக்குப் போனவன். அங்கை அவனுக்கு வாய்ப்புக்கள் சரிவர அமையவில்லை. இப்ப மெண்டலாகிப் போனான்.”


Friday, 15 November 2019

பூசை – சிறுகதை



பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு கரையையும் பாடசாலைக்கு முன்னால் நின்றபடியே பார்க்கக்கூடியதாக இருக்கும். தினமும் அந்த தரிசனத்துடன் தான் எல்லா மாணவர்களும் பள்ளிக்குச் செல்வார்கள்.

கோபாலன் கோவிலுக்கு ஒரு கும்புடு போட்டுவிட்டு பாடசாலைக்குள் செல்கின்றான். நான்காம் வகுப்புப் படிக்கின்றான். நெற்றியிலே திருநீற்றுக் கீற்று, மத்தியிலே சந்தணப்போட்டு. பாடசாலைக்கென்று சீருடை எதுவும் இல்லை. மேலே கோடு போட்ட சட்டையும், அரைக்களிசானுமாக அவனின் கோலம். காலில் செருப்பு இல்லை.

பாடசாலை நேரங்களில் கோவில் மணி, பாடசாலை மணியின் ஓசையிலிருந்து வேறுபட்டுக் கிணுகிணுக்கும். விழாக்காலங்களில் பூசை நேரங்களில் ஏற்படும் ஆரவாரம், சங்கொலி, மணி ஓசை காதுக்கு இதமானவை.

“அடேய் கோபாலா… கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிய வேளையில் பூசை முடிய அன்னதானம் கொடுக்கின்றார்கள்” நாகநாதன் அவன் காதிற்குள் முணுமுணுத்தான்.

Saturday, 2 November 2019

மாலை – குறும்கதை



மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப் புறப்பட்டான்.

ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த திசை நோக்கி ஆனந்தனும் மல்லிகாவும் நடந்தார்கள்

”அம்மா… ஒரு முழம் பூ வாங்கிக்கோம்மா… உங்களுக்கு நல்ல அழகாக இருக்கும்” சொல்லிய திசை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா. பத்து வயது மதிக்கக்கூடிய சிறுபெண்.
அப்படியே உருக்கி வார்த்த அம்மன் விக்கிரகம் போல அழகாக இருந்தாள். மல்லிகாவின் மனம் ஏக்கம் கொண்டது. ஒரு பிள்ளைக்காக எத்தனை வருடங்கள் காத்திருக்கின்றாள். எத்தனை கோவில்கள் ஏறி இறங்கிவிட்டாள். தமக்கான குறையினை அம்மனிடம் முறையிட வந்தவர்களல்லவா அவர்கள்.

Saturday, 9 March 2019

நீ பாதி நான் பாதி கண்ணே!


நான் ஒரு சங்கத்தில் பொருளாளராக இருந்தேன். எமது கலைவிழா நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தமுறை நுழைவுச்சீட்டு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். நாடகம், குறும்திரைப்படம், கவிதை அரங்கு, நாட்டுக்கூத்து, தென்னிந்தியாவிலிருந்து திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் என ஒரு அமர்க்களமாக இருப்பதால் நுழைவுச்சீட்டுகளை தனிநபருக்கு 40 டொலர்கள் எனவும், குடும்பத்திற்கு 80 டொலர்கள் எனவும் போட்டிருந்தோம்.

ரிக்கெற் விற்பனை வேட்டையில் ஒரு மார்க்கமாகச் சுற்றித் திரிந்தேன். என்னைக் கண்டு ஆக்கள் கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினார்கள். என்னுடன் படித்த சக நண்பர்கள் சிலர் இங்கிருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து முதலில் ஆரம்பிப்போம் என்ற நினைப்பில் நண்பன் சிவபாலனைத் தேடி ‘வொடங்கா’ என்னுமிடம் நோக்கிச் சென்றேன். மெல்பேர்ணில் இருந்து மூன்றரை மணி நேரப் பயணம். ரிக்கெற் விற்க வருகின்றேன் என்று சொல்லாமல், ”ஒரு சந்திப்பு மச்சான்! கனநாள் காணேல்லைத்தானே… நீயும் தனிய இருக்கிறாய்…”

Thursday, 8 February 2018

கறுப்புத்தானே இப்ப காப்பாற்றுகின்றது!

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

”கமலா…. சரியான கறுப்பு.”
சந்திரனின் காதலை, அக்கா சுகந்தி தீவிரமாக எதிர்த்தாள்,.

சந்திரனின் தாயாரின் முயற்சியால் திருமணம் இனிதே நடந்தது.

எல்லாரும் அகதியாக அவுஸ்திரேலியா குடியேறுகின்றனர்.
அம்மாவைக் கூப்பிட்டது மகன். அம்மாவுக்கு சென்ரர்லிங் காசு வருவதால், அம்மாவை வைத்திருப்பது மகள்.

அம்மா இப்போது மூப்படைந்து விட்டாள். நோயினால் மலசலம் எல்லாம் படுக்கையுடன்.

”வீடு மணக்கின்றது. போய் மகனுடன் இருங்கள்” கலைத்துவிட்டாள் சுகந்தி.


மாமியாரை எந்தக் குறையுமின்றிப் பார்க்கின்றாள் மருமகள்.

Thursday, 18 January 2018

உதவிக்கு ஒருவன், உளறுவதற்குப் பலர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

இரவு வேலைக்கு வரும்போது நண்பன் ராமின் கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. மனைவி தனது காரில் அவனை வேலை செய்யுமிடத்திற்குக் கூட்டி வந்திருந்தாள்..

அவனது நாட்டவர்கள் சூழ்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
வேலை தொடங்கிவிட்டமையால் விபரம் அறிய முடியவில்லை. அவனும் எனக்கொன்றும் சொல்லவில்லை.
ஓய்வு கிடைத்தபோது என்னிடம் வந்தான்.

“ஒருகிழமைக்கு வேலை முடிய என்னை வீட்டில் கொண்டுபோய் விடுவாயா நண்பனே? வரும்போது மனைவியுடன் வருவேன். நள்ளிரவில் மனைவியைக் கூப்பிட தயக்கமாக உள்ளது.”



Wednesday, 27 September 2017

பிறந்த நாள் எப்போது? - கதை


அவள் பெயர் லோறா. வியட்நாமியப்பெண். பல வருடங்களாக ரூபனுடன் வேலை செய்கின்றாள். ரூபனை தனது ஆத்ம நண்பன் என்று சொல்லிக் கொள்வாள். அடிக்கடி இலங்கைத் தமிழர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வாள். அங்கு வேலை செய்பவர்களில் அவளின் பிறந்த நாள் எப்போது என்பது எவருக்கும் தெரியாது.


“ஆத்ம நண்பனுக்கும் சொல்லப்படாதா?” ரூபன் கேட்பான்.


“அடுத்த வருடம் சொல்கின்றேன்” சிரித்து மழுப்புவாள்.


பிறந்தநாளைச் சொன்னால் தமது வயதை மட்டுக் கட்டிவிடுவார்கள் என அனேகம் பேர், அதுவும் பெண்கள் பயப்பிடுவதுண்டு.


எல்லாவிதமான கொண்டாட்டங்களிலும், அடுத்தவர்களது பிறந்தநாள் விழாக்களிலும் அவள் கலந்து கொள்கின்றாள். அதில் ஒன்றும் குறைவில்லை.


ரூபன் அந்த வேலையிடத்தை விட்டு விலகும் காலம் வந்தது. அன்றுமுதல் அவளிடம் உனது பிறந்தநாளைச் சொன்னால் ஒவ்வொரு வருடமும் வாழ்த்து அனுப்பி வைப்பேன் என்பான்.
அதற்கு அவள், “நாளைக்குச் சொல்கின்றேனே!” என்பாள். ஆனால் சொல்வதில்லை.


கடைசி நாள் – ரூபன் பிரியும்போது லோறாவைப் பார்த்தான்:

“எனக்கு ஏது பிறந்தநாள். நான் போரின் குழந்தை. நான் என் அப்பாவைக்கூட ஒருநாளும் பார்த்ததில்லை” சொல்லும்போது அவள் கண்கள் பனித்தன.

போர் யாரைத்தான் விட்டு வைத்தது? ரூபன் தனது மக்களை நினைத்துக் கொண்டான். அவனது கண்களிலும் அந்தக் கலக்கம்.



Wednesday, 20 September 2017

அவர் எனது மாமா! – சிறுகதை

 


திருமணம் முடிந்து, வீட்டிற்கு வந்துவிட்ட மணமக்கள் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில் நடுநாயகமாக வீற்றிருந்தார்கள். மீனா ரகுபதியின் ஒரே மகள். அம்மா இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்திருந்தது.

மீனாவும் முரளியும் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. மீனா மொபைல் போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆக்கள் மெல்லக் கலைந்து போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது றூமுக்குள் நுழைந்தாள். முரளி ஆந்தைக்கண் முழியால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச் சாத்தினான்.

சற்று நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மீனா டெக் பக்கம் இருந்த கதவினூடாக வெளியே பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள் எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுபதியும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது. ஒரு காப்பிலி காருக்குள் இருந்து இறங்கி மீனாவின் கையைக் கோர்த்தான். இருவரும் பாய்ந்து காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்கு, இருவரும் கையைக் காட்டியபடியே பறந்தோடினார்கள்.

“என்ன தம்பி... என்ன நடந்தது?மாப்பிள்ளை முரளியைப் பார்த்துக் கேட்டார் ரகுபதி.

“நான் ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டினபடி – கிட்ட வராதை, தொடாதை, குத்துவன் எண்டாள் மீனா. பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்திகைப்பில் இருந்து நீங்காதவனாக முரளி நின்றான்.

ரகுபதி நெஞ்சைப் பொத்தியபடி நிலத்திலே சரிந்தார். ஹார்ட் அற்றாக். அம்புலன்ஸ் வந்தது. வைத்தியசாலைக்கு விரைந்தார்கள்.

வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து ரகுபதி இருந்து சிகிச்சை பெறவேண்டும் என்றார்கள் வைத்தியர்கள். அவருடன் கூடமாட உதவிக்கு நிற்பதற்கு ஒருவர் தேவை என்றார்கள்.

முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.


Friday, 15 September 2017

அவர் எனது மாமா!


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

ரகுபதியின் ஒரே மகள் மீனா. அம்மா இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்தது.

முதலிரவிற்காக ஹோட்டல் போகும் வழியில் மீனா தனது காதலனுடன் கம்பி நீட்டிவிட்டாள்.

செய்வதறியாது திகைத்தான் முரளி.

செய்தி கேட்ட ரகுபதிக்கு ஹார்ட் அற்றாக். வைத்தியசாலைக்கு விரைந்தார்கள். அவருடன் வைத்தியசாலையில் நிற்பதற்கு ஒருவர் தேவை என்றார்கள்.


முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.