வாழ்க்கை
பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்டது.
1988 /89 காலப்பகுதி - அப்பொழுது ‘லங்கா சீமென்ற்’ தொழிற்சாலையில் வேலைசெய்து கொண்டிருந்தேன்.
மதிய வேளைகளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம். சைக்கிள்தான்
எனது வாகனம். அப்பொழுது ‘பிள்ளைபிடிகாரர்’ நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்த காலம்.
வீதிகள் எங்குமே எப்பொழுதுமே வெறிச்சோடிக் கிடந்தன.
சிலவேளைகளில் நண்பர் ஜனாவுடன்
கூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கம். அவர் எனக்கு சீனியராக வேலை
செய்துகொண்டிருந்தார். தோற்றத்திலும் சீனியர். அன்று அவரின் தெல்லிப்பழை
வீட்டிற்குச் சென்று, எனது சைக்கிளை அங்கு வைத்துவிட்டு அவருடன் செல்வதாக ஏற்பாடு.
மோட்டார் சைக்கிள் கே.கே.எஸ் வீதியால் விரைந்து கொண்டிருந்தது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு சற்று முன்பாக வீதியோரத்தில் ஒரு வாகனம்
நிறுத்தியிருந்ததைக் கண்டோம். மூடி அடைக்கப்பட்ட வாகனம். மோட்டார் சைக்கிள் அதனை
அண்மித்தவுடன், எதுவித அசுமாத்தமும் இல்லாமல் இருந்த அந்த வாகனத்தில் இருந்து
இருவர் குதித்தார்கள்.
“அண்ணை... அண்ணை... நிறுத்துங்கோ... இப்பிடி ஓரங்கட்டுங்கோ!”
லங்கா
சீமென்ற் ஐடியைக் காட்டினோம். அதிலே எழுதியிருந்த ஒரு எழவையும் அவர்களால் வாசிக்க
முடியவில்லை. ஜனாவை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கக்கூடும். மேலும் அவர்
பலவருடங்களாக சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். நான்
சமீபத்தில்தான் அங்கு போய்ச் சேர்ந்தேன். நான் ஒரு சைக்கிளோடி, ஜனா மோட்டர்
சைக்கிளை முறுக்கித்தள்ளியபடி உலகம் எல்லாம் சுற்றி வருபவர். இன்னுமொரு விஷயம்
அவரை ஏற்றினால் மோட்டர் சைக்கிளையும் சேர்த்து ஏற்ற வேண்டும்.
“அண்ணை
நீங்கள் போங்கோ. நீர் ஏறும்” என்றார்கள். இனி என்னத்தைச் சொல்லியும் எடுபடாது
என்று தெரிந்த பின்னர் வாகனத்தில் தாவி ஏறினேன்.
“நான் போய் மனேஜ்மன்றோடை கதைக்கிறன். நீ பயப்பிடாமல் போ” என்றார் ஜனா. ‘என்னத்தைப்
பயப்பிடாதை. நான் தானே
குரங்கின் கை பூமாலை ஆகிவிட்டேனே!’ மனதில் நினைத்துக்
கொண்டேன்.
வாகனம் ஓடுது ஓடுது ஓடிக்கொண்டே இருந்தது.
‘நாசமறுவாருக்கு எவரைப் பிடிக்கவேணும், எவரைப் பிடிக்கக்கூடாது
எண்டு ஒரு இழவும் தெரியாது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது’
உள்ளே
ஏழு எட்டுப் பேர் வரையில் நின்றார்கள். நிமிந்து பார்க்கவில்லை. றைவர்
எங்களுக்கும் வாகனத்துக்கும் வெட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு
வெட்டிற்கும் மூடப்பட்ட வாகனத்தின் சுவருடன் மோதி விழுந்தோம். மூடி அடைக்கப்பட்ட
வாகனம் என்றபடியால் எங்கை போகுது திரும்புது என்று ஒன்றுமாகத் தெரியவில்லை. ஒரே
இட்த்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடி திருக்கீசு காட்டுறாங்களோ?
கடைசியில்
காட்டுப்பகுதி போன்ற இடத்தில் வந்து சேர்ந்தோம். பாழடைந்த ஒரு வீட்டின் முன்புறத்தை
மருவியபடி வாகனம் நின்றது. றைவர் வாகனத்தை ஸ்ராட்டில் வைத்திருக்க மற்றவன் உள்ளே
ஓடிப்போய் ஏதோ கதைத்துவிட்டு மூச்சிரைக்க வந்தான். எங்களை இறக்கிவிட்டு மீண்டும்
தொழிலுக்குக் கிழம்பியது வாகனம்.
உள்ளே
சனங்களால் வீடு நிரம்பி இருந்தது. விமானம் ஒன்று தாழப்பறந்து போனது. அதன் பாரிய
இறக்கைகள் இரண்டும் ‘போய் வாருங்கள் நண்பர்களே’ என்று பயமூட்டிச்
சென்றன.
நாங்கள் நின்றிருந்த இடம் பலாலி விமானத்தளத்திற்கு அண்மையாக இருக்கவேண்டும்.
உள்ளும்
புறமும் ஒரே மூத்திர நாத்தம். நா வரண்டு தாகம் எடுத்தது. உள்ளே இரண்டுபிரிவாக
ஆக்கள் குந்தி இருந்தார்கள். புதிதாக வந்த எங்களை ஒருவரும் கவனிக்கவில்லை.
அதற்கப்புறம் ஒரு பையன் ---இருபது வயதிற்குள்
மதிப்பிடலாம் வந்தான். தனது வலது கையைக் கோணி, வாயிற்குக் கிட்டக் கொண்டுபோய்
எங்களுக்கெல்லாம் சங்கு ஊதுபவன்போல,
|ஓ
லெவல் (ordinary level
exam) படிச்சவை எல்லாரும்
வந்து இஞ்சாலை இருங்கோ... ஏ லெவல் (Advanced level ) படிச்சவை எல்லாம் அங்காலை போய் இருங்கோ| என்று கத்தினான். நான்
அவனுக்குக் கிட்டப் போய் “நான் யூனிவர்சிட்டி” என்றேன்.
“அண்ணை... உங்களுக்கு நான் சொன்னது விளங்கேல்லையோ? இனி
உங்களுக்கு நான் பிறிம்பா சொல்லவேணுமோ” என்று என்னை முழுசிப் பார்த்தான்.
திரும்பவும் வாயிற்குக் கிட்ட கையைக் கொண்டுபோய் சங்கு ஊதினான். தெரியாத்தனமா
இவனிட்டை வாயைக் குடுத்திட்டேனோ?
அவனுக்கு நான் சொன்னது விளங்கவில்லை என்று புரிந்து கொண்டேன்.
தமிழில் ”பல்கலைக்கழகம்!” என்றேன். பாம்பை
மிதித்தவன்போல இரண்டு அடி பின்னே எடுத்துவைத்து “கழகமோ பேரவையோ எங்களுக்குத்
தெரியாது அண்ணை? எங்களுக்குத் தந்த வேலை ஓ லெவலா ஏ லெவலா என்று இரண்டாப்
பிரிக்கிறதுதான்” என்றான். அதன்பிறகு
நான் போய் ஏ லெவல் குறூப்பிலை குந்தி இருந்தேன்.
கைக்கடிகாரம் நாலைக் காட்டும்போது ஒரு வாளி தண்ணீரும் ஒரு
கப்பும் கொண்டு வந்து வைத்தார்கள். சமபந்தி பானம் பருகினோம். இங்கேயே
மூன்றுநாட்கள் வைத்திருப்பான்கள் என்று சிலர் கதைத்தார்கள். இன்னும் சிலர் இன்று
இரவுக்குள்ளே ரெயினிங் நடக்கிற இடத்துக்கு மாற்றி விடுவார்கள் என்றார்கள்.
சிறிது நேரத்தில் உடைந்த மேசை கதிரையொன்றைப் போட்டுக் கொண்டு
வாடட்சாட்டமான ஒருவன் குந்தினான். மேசையில் ஒரு துப்பாக்கி பயம் காட்டியது. அவன்
ஒவ்வொருவரினதும் பெயர் முகவரி வயது என்பவற்றைக் கேட்டு பதிவு
செய்துகொண்டிருந்தான். எனது முறை வருவதற்கு நெடுநேரம் எடுக்கும்போல் இருந்தது.
அவனிற்கு அண்மையாக நின்று என் கைக்கடிகாரத்தைப் பாத்தேன். மணி நான்கு பதினைந்து.
“அண்ணை உதைக் கழட்டி இதிலை வைச்சிட்டுப் போங்கோ” என்
கைக்கடிகாரத்திற்கும் ஆப்பு வைத்தான். கழட்டி மேசையில் வைக்கும்போது,
“நான் பொறியியலாளராக லங்கா சீமென்றில் வேலை செய்கின்றேன்” என்றேன்.
“அதுக்கு? முதலிலை போய் உங்கடை இடத்திலை குந்தி இருங்கோ.
எங்களுக்கு என்ன செய்யிறது எண்டு தெரியும்” பல்லை நெறுமினான் அவன்.
நேரம் ஐந்து இருக்கலாம். வானம் செக்கச் செவேல் என்று
சிவத்திருந்தது. பறவைகள் இருப்பிடம் தேடி பறந்து சென்றன. மரணபயம் ஆட்கொண்டது.
இரண்டு வாகனங்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு விரைந்து வந்தன.
“இண்டைக்குத் தப்பினியள் நாசமறுவாரே!” கத்தியபடி ஒருவன்
வாகனத்தின் கதவைத் திறந்தான். வாகனத்தின் உள்ளே ஒருவரும் இருக்கவில்லை. தொங்கல்
பாய்ச்சலில் உள்ளே சென்று மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தவனிடம்
வாக்குவாதப்பட்டான். அவன் எழுந்து வளவின்
ஒதுக்குப்புறம் சென்றான். யாருடனோ ‘வாக்கி ரோக்கியில்’ கதைத்தான்.
கதைத்துவிட்டு உள்ளே வந்து தான் பதிவு செய்த ஏட்டைப் பார்த்தான். பின்னர் என்னைக்
கடைக்கண்ணால் பார்த்தான். ஒன்றும் தெரியாதவன் போல, ‘நீ வா.... நீ வா...” என்று சிலரைக்
கூப்பிட்டான். அவர்களை அழைத்துக் கொண்டுபோய் ஒரு வாகனத்தில் ஏற்றினான். வாகனம்
பறந்து போனது. பின்னர் நாங்கள் இருந்த இடம் வந்தான். “போய் வாகனத்திலை ஏறுங்கோ நாயளே” கோபமாகக் கத்தினான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. தயங்கியபடியே வாகனத்தினுள்
ஏறிக் கொண்டோம். எங்கு வைத்து ஏற்றினார்களோ அங்கு கொண்டுவந்து இறக்கிவிட்டார்கள்.
அவ்வளவு தூரமும் நடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது அங்கே செத்தவீடு கொண்டாடி
முடித்திருந்தார்கள்.
மாலை
ஆறு முப்பதுபோல ஜனா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மாவிட்டபுரத்தில் என்னைவிட்டுப்
பிரிந்து போனபின்னர், தொழிற்சாலை சென்று நிர்வாகத்திடன் நடந்ததைச்
சொன்னார். அவர்கள் கொழும்பிலுள்ள தலமைப்பீடத்துடனும், காங்கேசந்துறை ‘ஹார்பர் வியூ’ ஹோட்டலில் தங்கியிருந்த இந்திய அமைதி காக்கும்
படையினருக்கும் தெரிவித்திருந்தாகள். இந்திய ராணுவத்தினருக்கு யார் இதைச் செய்திருப்பார்கள் எனத்
தெரிந்தே இருந்தது.
●
No comments:
Post a Comment