Thursday, 11 September 2014

காப்பு – குறுங்கதை




 மூன்று கிழமைகள் விடுமுறையைக் கழிப்பதற்காக, ஜனவரி மாதம் மலேசியா சென்றோம். விமானத்திலுருந்து இறங்கியதும் கோலாலம்பூரில் தங்கவேண்டிய ஹோட்டலிற்குச் சென்றோம். அங்கு குளித்துவிட்டு, முதலில் பத்துமலைக் கோவிலுக்குப் புறப்பட்டோம்.

மலேசியாவிலும் பிக்பொக்கற்காரர்கள் முடிச்சுமாறிகள் இருக்கின்றார்கள் என்றும் கவனமாக இருக்கும்படியும் ஏற்கனவே நண்பர்கள் சொல்லியிருந்ததால், எங்கு சென்றாலும் ஆடம்பரங்களைத் தவிர்த்து சிம்பிளாக உடையணிந்து நகைகள் அணியாமல் செல்வது என்று தீர்மானித்திருந்தோம்.

பத்துமலைக் கோவில் கோலாலம்பூரிலிருந்து 13கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. கோவில் அமைந்திருக்கும் இந்தச் சுண்ணாம்புக்குகை 40கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

 140 அடி முருகன் தங்கவிக்கிரகமாக ஜொலித்தார். வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும் தைப்பூசத்திருவிழாவிற்கு இன்னும் இரண்டுகிழமைகள்தான் இருந்தன. மாக்காங் குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. மனைவியின் கையில் இருந்த பூமாலையைப் பறிப்பதற்கு எத்தனித்தது. முயற்சியில் தோல்வி கண்ட குரங்கு, மனைவியின் சுரிதாரின் சோலைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. இவற்றையெல்லாம் தாண்டி 272 படிகள் ஏறிமுடியக் களைத்துவிட்டோம்.

இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. ஒன்று மிக ஆழமாகச் செல்கின்றது. மற்றக்குகையில்தான் முருகன் எழுந்தருளியுள்ளார். இந்தக்குகைகளில் தெமுவான் என்ற மலேசியப்பழங்குடிகள் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களும் இந்த மலையை புனிதமாகப் பாவித்ததாகவும் சொல்கின்றார்கள். இந்தக்குகைகளில் காணப்படும் சிலந்திகளும் வெளவால்களும்கூட மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன. மலேசியாவில் வேறு எங்கும் இலாத சில அரிதான விலங்குகளும் இங்குள்ளன.

ஒருமுறை நக்கீரரை பூதம் ஒன்று பிடித்து, ஏற்கனவே 999 பேர் அடைபட்டிருந்த குகை ஒன்றிற்குள் போட்டுவிட்டது. நபர்களின் எண்ணிக்கை ஆயிரமானபின்னர் பூதம் அவர்களைச் சாப்பிட திட்டமிட்டிருந்தது. அந்தக்குகை இந்தப்பத்துமலைக் குகையாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள்

குகையின் மேலே தெரிந்த துவாரத்தினூடாக சூரியன் எட்டிப் பார்த்தான். கூடவே மலைமுகட்டில் ஒடுங்கிய நீர்த்துளிகள் கீழே விழுந்தவண்ணம் இருந்தன. நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து உட்புறமாக மேலும் சிலபடிகள் மேலே சென்றன. அந்தப்படிகள் மீது ஏறி மேலே சென்றோம். உள்ளே பல அடியவர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். ஐயர் பூசை முடித்து விபூதி சந்தணம் கொடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் குகையின் உட்புறமாக வரைந்திருந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் இரசித்துப் பார்த்தபடி நின்றோம். எங்களைச் சுற்றி பலரும் வியப்புடன் அவற்றைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அப்போது என்னருகே நின்ற ஒருவர் என்முதுகைத் தட்டி ஐயர் என்னைக் கூப்பிடுவதாகச் சொன்னார். நான் ஐயர் நிற்கும் திசை நோக்கினேன். அவர் என்னை அங்கே வரும்படி சைகை செய்தார். இத்தனை மனிதர்களின் முன்னே, மிகவும் தூரத்திலிருந்தபடியே அவர் என்னைக் கூப்பிட்டார். ஒருவேளை என்னைத் தெரிந்தவராக இருக்கலாமோ என நினைத்து நான் அவரை நோக்கி விரைந்தேன். தூரத்தே குரங்குகளுடன் சேஷ்டை புரிந்து கொண்டிருந்த மகனையும் கூட்டிக்கொண்டு பின்னாலே மனைவி வந்து கொண்டிருந்தார்.

ஐயரை அண்மித்ததும் அவர் எனக்கு பிரசாதம் தந்து என் கையிலே நூல் ஒன்றைக் கட்டினார். மனைவியும் மகனும் தங்கள் கைகளையும் நீட்டினார்கள். மனைவியின் கைகளிற்குள் அவர் சில நூல்களைக் கொடுத்துவிட்டு மகனிற்கும் நூலைக் கட்டிவிட்டார்.

கவனமாக இருக்கும்படி கடவுளே சொல்லிவிட்டார்அங்கிருந்து விடைபெறும் போது மனைவி சொல்லிக் கொண்டார். அதன் பின்னர் எங்கு சென்றாலும், மனைவியை நடுவிலே விட்டு நானும் மகனும் அவருக்கு துவாரபாலகர்கள் ஆனோம்.

ஹோட்டலுக்குச் சென்று சற்று நேரத்தில் எல்லாம் மகனின் கையிலிருந்த நூல் கழன்று விழுந்துவிட்டது. மஞ்சள்கலர் நூலைக் கட்ட மனைவிக்குப் பிரியமில்லை.

கோலாலம்பூர், பெனாங், லங்காவி ஐலண்ட், கமரூன் கைலாண்ட்ஸ் என்று சுற்றித் திரிந்தோம். இனிதே விடுமுறை கழிந்த்து. சரவணபவானை விட செட்டிநாட்டுச் சாப்பாட்டுக்கடையே எங்களைக் கவர்ந்தது. தினம் தினம் அசைவச் சாப்பாட்டைச் சாப்பிட்டு கொலஸ்ரோலை ஏற்றினோம். அங்கிருந்த நாட்களில் எதுவித பிரச்சினைகளும் நமக்கு ஏற்படவில்லை.

அவுஸ்திரேலியா திரும்பினோம். மலேசியா பற்றிய கதைகளை தினமும் கதைத்தோம். பங்குனி மாதம் ஒரு சனிக்கிழமை பகல் தூக்கத்தின் பின்னர் விழித்தெழுந்தபோது என் இடதுகண்ணில் பார்வை இருக்கவில்லை. நிறங்களைப் பிரித்தறியாதபடி கறுப்பு வெள்ளையில் எல்லாமே மங்கலாகத் தெரிந்தன. கண் வைத்தியரிடம் சென்றபோது, உடனே ஸ்பெஷலிஸ்ரை சந்திக்கும்படி சொன்னார். என் கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு வெடித்துவிட்டதாக அவர் சொன்னார். அதற்கு எந்தவித ஒப்பரேஷனுமே பலனளிக்காது என்றும் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் தன்னை வந்து சந்திக்கும்படியும் சொன்னார். கூடவே ஆறுமாதங்கள் கார் ஓடக்கூடாது என்று ஒரு மிரட்டல் கடிதமும் தந்தார்.

அவரது மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. கவுண்டமணி குத்துமதிப்பில் கார் ஓடியது போல வேலைக்கு மாத்திரம் போய் வந்தேன். சிக்னலில் நிறவிளக்குகள் நிறம் மாறுவது தெரியவில்லை. சிக்னல் லைற்றில் எனக்கு  முன்னால் யாராவது நின்றுவிட்டால், அன்று எனக்கு அதிஷ்டம்தான். உடனே இரட்டைப்புலவர்கள் ஞாபகத்திற்கு வந்துவிடுவார்கள்.

சரியாக மூன்றுநாட்களின் பின்னர் மீண்டும் நிறத்தைப் பார்க்கும் வரம் பெற்றேன். அப்போது என் கண்கள் மணிக்கட்டை சுற்றியிருந்த அந்த மஞ்சள்நூலையே முதலில் பார்த்தது.

மனைவி கட்ட விரும்பாததும், மகனின் கையிலிருந்து மூன்று மணி நேரத்தில் தானாகக் கழன்று விழுந்ததுமான அந்த மஞ்சள்நூல் என்கையிலே மூன்று வருடங்களிற்கும் மேலாக நிலைத்திருந்தது.

ஒருநாள் அது தானாகக் கழன்று விழுந்தபோது என் கண் பார்வையில் தொண்ணூறுசதவிகிதம் மீட்சி பெற்றிருந்தேன்.



.




No comments:

Post a Comment