யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
2.
புதிய காவியம்
1977 தேர்தலை
அடுத்து யூனியன் கல்லூரியை மேனிலைப் படுத்த விரும்பிய சிலர், அதன்
முகாமைத்துவ-நிர்வாகச் சுமையை எனது தலையில் சுமத்திவிடுவதில்
சுறுசுறுப்பாகவிருந்தனர். அவ்வாறானவர்கள் பாடசாலைக் குள்ளும் இருந்தனர்,
வெளியிலும் இருந்தனர். பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த அவசரம் அது. சிலர் அதனையே
விதியின் திருவிளையாடல் என்றும் சொல்வார்கள். அப்படி இல்லை என்று சொல்பவர்களும்
உண்டு. நான் எந்தப் பக்கம் சாயலாம் என்று யோசிப்பவன்.
1978 ஆரம்பத்தில் பிரதி அதிபர்
திரு.ஜே.ரி.தம்பிரத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து நான் அப்பதவிக்கு
நியமிக்கப்பட்டேன். நானே அக்காலத்தில் யூனியன் கல்லூரியில் சேவையாற்றிய பட்டதாரி ஆசிரியர்களில், சேவை மூப்புடைய
ஆசிரியராக இருந்தேன். ஆசிரியராக 1950 தொடக்கம் பணியாற்றி இருந்தேன். அத்தோடு
1975இல் முதன் முதலாக நடந்த கல்வி நிர்வாக சேவை (SLEAS) எழுத்துப்
பரீட்சைக்குத் தோன்றி, அதில் சித்தி யடைந்து நேர்முகத் தேர்வுக்கும் போயிருந்தேன்.
காங்கேசன்துறைத் தொகுதியில் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்
பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நான் ஒருவன் மட்டுமே. காலம் கடந்து
இரண்டாவது முறை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டேன். பதவி பெற்றால் மாற்றம்
கிடைக்கும், ‘ரியூசனால்’ கிடைக்கும் வருமானத்தை இழக்க வேண்டிவரும் என்பதனால்
நேர்முகப் பரீட்சைக்குப் போகவில்லை. ஆரம்பத்திலிருந்து அரசினர் பாடசாலையில்
பணிபுரிந்ததோடு, பிரதி அதிபராக இருந்த அனுபவமும் எனக்கு இருந்தது. அத்தோடு
ஏறக்குறைய யூனியன் கல்லூரியில் உதவி ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் கடமையாற்றி
யிருந்தேன். என்;னிலும் தகுதி குறைந்தவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி,
அப்பதவியைப் பெற முயன்றனர். யார் பிரதி அதிபராக வரமுடியும் என்பதற்கு எதுவித
ஒழுங்கு முறையோ சட்டதிட்டமோ இறுக்கமாகக்
கிடையாது. அதனால் என்னைச் சார்ந்தவர்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எனது
உரிமையைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனக்கிருந்த ஆர்வத்திலும் பார்க்க, வேறு
சிலர் என்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தினர். இறுதியில், பதவிக்கு விண்ணப்பிக்காத
திரு.அல்பேட் இராசையா அவர்களும் நானும் இணைப் பிரதி அதிபர்களாக நியமிக்கப்பட்டோம்.
திரு.இரைசையா அவர்கள் பதவியை ஏற்க விரும்பவி;லை. அவர், அதன் முன்னர் கோப்பாய்
கிறிஸ்தவ கல்லூரியில் பிரதி அதிபர் பதவி வழங்கப்பட்போதும், அப்பதவி தனக்குத் தொழில் ஆத்மதிருப்தி (job satisfaction) தராது என்பதற்காக அதனை ஏற்கவில்லை. அதன் காரணமாக நான் மட்டுமே
பிரதியதிபராகினேன்.
பிரதி அதிபர் பதவி ஏற்ற தினம், அதிபர் திரு.
த.நடராசா அவர்கள், மாணவர்களது காலைக் கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்தார்.
அவரிடம் அற்புதமான புன்னகை உள்ளது. கண்கள்கூடச் சிரிக்கும். சுமாரன உயரம். கனவான்
போலவே நடந்து கொள்வார். நல்லூர் முருகன்; உதயகால மணியோசை கேட்டுத் துயில்
எழும்பியதாலோ என்னவோ, அவர் ஒரு தூய உள்ளத்தின் சொந்தக்காரர். அவர் எனக்கு அந்த
மேடையில் பேசுவதற்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்தார். அந்தப்
பேச்சு எப்படியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுக்குப் பின்புலத்தில் கல்லூரி
நலன்விருப்பிகள் அக்கறையாக இருந்தனர். அந்தப் பேச்சினால் பாடசாலையில் நிகழ்ந்த
திடீர் மாற்றங்கள்தான் ஞாபகம். உதாரணத்துக்கு ஒரு பதம் மட்டும்.
முன்னரெல்லாம் பாடசாலைக்கு வரும் மாணவர்கள்
விரும்பிய நேரம் வகுப்பைவிட்டு நழுவிக்கொள்வார்கள். துவிச்சக்கர வண்டியைக்கூட
வளாகத்தில் அமைந்த நெடிய வீதியில் சர்வசாதாரணமாகத் தள்ளிக் கொண்டு போவார்கள்.
பாடநேரத்தில் மேய்ச்சல் தரவை ஆடுகளாக, வகுப்பிற்கு வெளியிலே வளாகம் முழுவதும்
மாணவர்கள் நடமாடுவார்கள், விளையாடுவார்கள், ‘கன்ரீனில்’ ஆற அமரவிருந்து தேநீர்
அருந்துவார்கள். வளாகத்தில் எந்த நேரமும் கூச்சலின் இரைச்சல் கேட்கும்.
ஆசிரியர்களும் போட்டியாக விரும்பிய சமயம் வெளியே போவார்கள் வருவார்கள். அக்
கூட்டத்தில் பேசும் பொழுது சொல்லியிருந்தேன் “பாடசாலைக்கு வந்தால் இடை நேரத்தில்
எந்த மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறுவதானால் எனது
அனுமதியுடன் தான் வெளியேற வேண்டும்” என்று. அத்தோடு “பாடசாலை நேரத்தில் எந்த
மாணவனும் வகுப்பறைக்கு வெளியே காணப்படக்கூடாது. அப்படி வெளியே வருபவர் வகுப்பு
ஆசிரியரின் துண்டுடன்தான் வரவேண்டும்” என்று. அது ஆசிரியர்களுக்கும் மறைமுக
எச்சரிக்கையாக இருந்தது. எனது கட்டளைகள் அப்படியே அச்சொட்டாக அன்றே நடை முறையாகின.
ஏன்? அதற்குள் என்ன மந்திரம்? நீங்கள் அப்படி யோசிக்கலாம். என்னை உயர்தர கனிட்ட
வகுப்பு மாணவர்கள் புரிந்தவர்களாக இருந்தனர். நான் எனது கடமையை வார்த்தையை
முன்னெடுப்பை உதாசீனம் செய்ய மாட்டேன் என்பது அவர்களுக்கு விளங்கும். மேலும்,
துணிந்து எதிர்நீர்ச்சலடிப்பேன் என்பது
அவர்கள் அளந்து வைத்திருந்த கருத்து. பெரிய மாணவர்களைப் பார்த்து ஆரம்ப வகுப்பு
மாணவர்களும் அப்படியே அடங்கிப் போனார்கள். எவ்வேளையும் கூச்சலும் இரைச்சலும் கேட்ட
வளாகத்தில், முதல் நாளே பாட நேரம் மயான அமைதி குடிகொண்டது. பாட நேரத்தில் எந்தத்
தலையும் வகுப்பிற்கு வெளியே தெரியவில்லை. அதுதான் ஒரு நீண்ட வெற்றிப் பாதையின்
முதலடியாக இருந்தது. அதற்கு வாய்ப்பாக எனது அகச்சூலும் புறச்சூழலும்
அமைந்திருந்தன.
அகச் சூழ்நிலை
அகச் சூழ்நிலை
என்பது யூனியன் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணியாற்றிய ஐந்து வருட ஓட்டத்தில்
(1972-1977) யான் முகங்கொடுத்த சம்வங்கள், பெற்ற அனுபவங்கள், தேட்டம் செய்த
கையிருப்புக்கள் சார்ந்தவை. பிரதி அதிபர் பணியைப் பொறுப்பேற்ற வேளை, கனிட்ட
வகுப்பு மாணவர்கள், கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்கள் யாவரும் ஏதோ
ஒருவிதத்தில் எனது ஆளுமைக்கு உட்பட்டவர்களாக –- எனது குணநலன்களைப் புரிந்தவர்களாக
- எனக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள். கலைப் பட்டதாரியாக இருந்த போதும்
உயர்தர விஞ்ஞான மாணவர்களது தொடர்பும் வலிதாக இருந்தது. அக்கால கட்டத்தில்
கலைகலாச்சாரம் சார்ந்த பொதறிவுப் பாடம் - விஞ்ஞானம், கலை என்ற இருபிரிவு உயர்தர
மாணவருக்கும் - கட்டாய பாடமாக இருந்தது. வர்த்தகப் பிரிவு அப்போது இல்லை.
அப்பாடத்தை விஞ்ஞான கலை மாணவர்கள் இரு பிரிவினருக்கும் கற்பிக்கும் சந்தர்ப்பம்
கிடைத்தது. அவ்வேளை சிறுகதை ஆக்கம் பற்றி நான் கற்பித்ததால் ஆர்வம் அடைந்த திரு.
கந்தவனம் செல்லத்துரை சுதாகர் சிறுகதை எழுத்தாளராக இருக்கிறார். ஒஸ்ரேலியாவில்
மெல்பணில் வசிக்கும் அவர் ‘ஸ்ருதி’ என்ற புனை பெயரிலும் எழுதுகிறார். வேறும்,
குறிப்பாகப் பரிசளிப்பு விழாவின் பொழுது நான் அரங்கேற்றிய நாடகங்களில் உயர்தர
விஞ்ஞான வகுப்பு மாணவர்களே கூடுதலாகப் பங்கு கொண்டார்கள். யூனியன் கல்லூரி, கனடாக்
கிளைப் பழைய மாணவர் சங்கத் தலைவர் பதுளையைச் சேர்ந்த திரு. செல்லையா கலைச்செல்வன்,
செயற்குழு உறுப்பினர் சண்முகராஜா பாலசந்திரன், மற்றும் பிரானிசில் குடியேறியுள்ள
மாவிட்டபுரம் கந்தசாமி, ஒஸ்ரேலியாவில் வசிக்கும் செல்லத்துரை நரேந்திரன், அம்பிகா
முருகையா, கனடாவில் குடியேறியுள்ள சரோ வேலுப்பிள்ளை, சிவமகேஸ்லீலா சதாசிவம்,
ஸ்ரீமலர் பிள்ளையினார், தெல்லிப்பழை ஸ்ரீலதா, ஆகியோர் எனது ‘விஞ்ஞானி என்ன
கடவுளா?’ நாடகத்தில் நடித்திருந்தனர். 1974 பரிசளிப்பு விழாவன்று மேடையேற்றிய
‘சாம்பல்மேடு’ நாடகத்தில் கலிபோனியாவில் வாழும் பிரபல குடிவரவு சட்டத்தரணி
மார்க்கண்டு ச.விக்கினேஸ்வரன் அவர்கள் ஹிட்லர் பாத்திரத்திலும், திரு. சச்சி
அவர்கள் ஏபிரகாம் பாத்திரத்திலும்
நடித்திருந்தனர். ஏனையவர்கள் பெயர்கள் ஞாபகத்தில் எட்ட மறுக்கின்றன. அதே
‘சாம்பல்மேடு’ நாடகம் பின்னர் காங்கேசன்துறை வட்டாரப் போட்டியில் முதலாவதாகத்
தெரிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நடந்த மாவட்டப் போட்டியிலும் பங்குகொண்டு
மூன்றாம் இடத்தைப் பெற்றது. அந்தப் போட்டி நாடகத்தில் ஆர்.விமலகாந்தன், சுரேஸ்,
கனடா சங்கர் அன் கோ உரிமையாளர் சிறீதரன், தர்மபாலன் ஆகியோர் நடித்தனர். நாடகப்
பயிற்சிகளின் பொழுது முழுவகுப்பும் கலந்து கொள்ளும். இவர்கள் எல்லாம் நான் பிரதி அதிபராக
வந்த பொழுது வெளியேறியிருந்தாலும், விஞ்ஞான மாணவர் தொடர்பு அப்படியே
யிருந்தது.
உயர்தர கலைப்
பிரிவில் கற்பித்த திருமதி நடனசபை வெளிநாடு செல்ல, திரு.சி.எஸ்.கணபதிப்பிள்ளை
வட்டாரக் கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றுச் சென்றார். அதனால் முன்னர் அபகரித்த
புவியியல் வரலாறு பாடங்களை, உயர் வகுப்புக்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன்.
ஆரம்ப பாடசாலைப் பிரிவு தவிர்ந்த, மாணவர்கள் யாவரும் அறிந்த தெரிந்த புரிந்த
முகங்களாக இந்தனர். அந்த அகச் சூழல் பிரதி அதிபர் பதவி பெற்ற கையோடு, மேற்கொண்ட
அதிரடி நடவடிக்கைகளிற்குச் சாதகமாகவும் உந்து சக்தியாகவும் உறுதுணை யாகவும்
அமைந்திருந்தன.
இன்னும்,
கல்லூரியின் குறைபாடுகளை ஐந்து வருடங்களாக அவதானித்து வந்த அனுபவம், எங்கே அவசர
சிகிச்சை தேவை என்பதை எனக்கு எடுத்தியம்பியது. அவற்றுக்கு என்ன மருந்து
பொருத்தமானது என்பதையும் தெரிந்தவனாக இருந்தேன்.
புறச் சூழ்நிலை
எனது புறச் சூழ்நிலைகூட கல்லூரி எழுச்சியில்
பெரும் பங்காற்றியது. எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்களது
ஆசியும் ஆதரவும் எனக்கிருந்தது. அவர் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகவும்
இருந்தார். நீண்ட காலமாக என்னை அறிந்தவர். தமிழ் அரசுக் கட்சியின் எழுச்சிக்காக
முக்கிய கட்டத்தில் உழைத்திருந்தேன். அதன் பலனாக விளைந்த சம்பவமாகவே காரண
காரியங்கள் நடந்தேறின. அதுதான் மிகப் பலமான காரணியாக இருந்தது.
நம்பிக்கையின்மை
ஒரு வருடம்
பூர்த்தியாக முன்னரே அதிபர் பதவியில் அமர்த்தப்பட்டேன். அதன் பின்னணியல் யாரோ
இருந்திருக்கிறார்கள். நான் அப்பதவிக்குத் தயாராக இருக்கவில்லை. அப்பதவியால் நான்
பிரத்தியேகமாக ஆங்கிலம் போதித்ததின் மூலம் கிடைத்த வருமானத்தை இழக்க நேரிடும்
என்று தயங்கியதே அதற்குரிய காரணம். ஓரளவுக்குச் சம்பளத்துக்குச் சமமான உழைப்பு.
அதிபராகியதும்
என்னைத் தெரியாதவர்கள், எனது திறமைமீது சந்தேகம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர்
ஆரம்ப பிரிவுத் தலைமை ஆசிரியர் திரு.கு.கதிரையாண்டி அவர்களுடைய சகோதரர்.
சுன்னாகத்தில் பல்வைத்திய நிலையம் வைத்திருந்த டாக்டர் கு.பிச்சாண்டி
அவர்கள். அவரது பிள்ளைகளுக்கு எனது ஊரவர்
அயலவர் ஆவரங்கால் திரு. வைரவநாதர் சின்னத்தம்பி ‘ரியூசன்’ கொடுத்தவர். அப்பொழுது
உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணிபுரிந்தவர். அவரிடம் டாக்டர் பிச்சாண்டி
அவர்கள், நான் அதிபராகியதை அடுத்துத் தெரிவித்த விமர்சனம்.
“உங்கள் ஊரவர்
பாலர் அதிபராக வந்துள்ளார்.”
“ஓம்.
சந்தோசமான விசயம்.”
“உவராலே
முடியுமே? உந்தப் பெரிய பள்ளிக்கூடத்தைக் கட்டி இழுக்க. பாவம்.”
தகுதியோ திறமையோ
இல்லாமல், அரசியல் செல்வாக்கில் பதவி கிடைத்ததாக அவரது அபிப்பிராயம்.
இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணியுள்ளார்.
“பாலசுந்தரண்ணையை
உங்களுக்கு விளங்காது. அவர் பாடசாலையை நிமிர்த்த முடியாது என்றால், வேறு எந்த
விண்ணனாலும் முடியாது. இருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று.”
அயலவரான
திரு.சின்னத்தம்பி அவர்கள் என்னை அப்படி அளந்து வைத்திருந்திருக்கிறார். மற்ற
ஊரவர் எப்படியோ எனக்குச் சரியாகத் தெரியாது. அவர்களும் என்னைப் பற்றித்
தனித்துவமான கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்.
நான் அதிபராகிய பொழுது எனது பாதை
இலகுவானதாக இருக்கவில்லை. கல்லும் முள்ளும் குண்டும் குழியுமாக இருந்தது. ஒழுக்கம்,
வகுப்பறை, தளபாடம், பாதுகாப்பு, நீர்வழங்கல், ஆசிரியர் சார்ந்தவை, நிலம்
சார்ந்தவை, சமயம் சார்ந்தவை, அடிப்படைக் கட்டுமானம் சார்ந்தவை என்று திரும்பிய
பக்கம் எல்லாம் நிறைந்திருந்த சீழ்கட்டிய பிரச்சினைகள் என்னை வரவேற்றன.
பிரச்சினைகளை
அதிரடியாகத் தீர்க்கா விட்டால், அதில் வெற்றிகாண முடியாது என்ற உறுதியான நம்பி;கை
எனக்கிருந்தது. அவற்றை நிச்சயம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை யூனியன்
கல்லூரியின் கேந்திர புவியில் அமைவு எனது இதயத்தில் பதிவு செய்து வைத்திருந்தது.
இயற்கையாக அமைந்த யூனியன் கல்லூரியின் புவியல் அமைவில் எனக்கிருந்த பாரிய
நம்பிக்கையே எனது தளராத முயற்சிகளுக்கு உந்துசக்தியாகவும் உறுதுணை யாகவும்
இருந்தது. ‘கடமையைச் செய். பலனை எதிர் பாராதே’ என்ற கீதையின் உபதேசம் என்னை
வழிநடத்தியது.
(நன்றி: படம் - சிட்னி பழைய மாணவர் சங்கம்)
தொடர்ந்து வரும் ...
No comments:
Post a Comment