Friday 8 December 2017

'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்


ஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர்  வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.

நாசூக்கான கேள்விகள், அச்சொட்டான பதில்கள்.

அதைத்தான் கருணாகரனின் இந்த ‘புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது’ நேர்காணல் புத்தகமும் செய்திருக்கின்றது. தொகுப்பில் வரும் புகைப்படக்காரர் மட்டுமல்ல அனைவருமே பொய் சொல்லவில்லை.

இந்த நேர்காணல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. வெவ்வேறு தொழில்நிலை சார்ந்தவர்களின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தருபவை. அதனால் வாசிப்பதற்கு சலிப்பற்று ஒரு விறுவிறுப்பான தன்மையுடன் நகருகின்றன.

சங்கர் கம்பர் கதிர்வேலு (புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது) அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் படப்பிடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவருடைய அனுபவங்கள் ஏராளம். 76 வயது கடந்தும் சைக்கிளில் தனது வேலையைத் தொடர்கின்றார். 1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தின் போது, இவரது கமராவைப் பறிப்பதற்கு இராணுவம் முயற்சிக்கையில் நடந்த இழுபறியில் இவரது கண்விழி பிதுங்கி ஒருகண்ணின் பார்வையை இழந்துவிட்டார். 1974 இல் நடந்த தமிழாராய்ச்சி மாநாடு, 1958 / 2008 சூறாவளி அழிவுகள், 1990 முஸ்லிம் மக்களின் வெளியேற்றம், 1995 இடப்பெயர்வு என இவரது பதிவுகள் விரிகின்றன.

வேர்களை இழப்பதற்கு எந்த மரமும் விரும்பாது என்கின்றார், அடையாளச் சிதைப்புகளுக்கு எதிரான குரல் கொடுக்கும் தொல்பொருள் சேகரிப்பாளர் குணரத்தினம்.

மீளிணக்கம் என்பது எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையினதாக அமைய வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார் உளநல மருத்துவம் மற்றும் கவிதை ஒளிப்படம் போன்றவற்றில் பணியாற்றும் எஸ்.சிவதாஸ்.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அறிவிப்பையடுத்து வடபகுதியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் சாட்சியாக ஸகசதுல்ல ஜதூரோசின் நேர்காணல் அமைகின்றது. அவரது நான்கு பிள்ளைகளில் மூன்றுபேர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள். வடபகுதியை விட்டு வெளியேறியபின்னர் அவரது வாழ்க்கை புத்தளத்தில் அமைந்துவிடுகின்றது. விடுதலைப்புலிகளைக் குற்றம் சாட்டிக்கொண்டிருந்த அரசும் தங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்கின்றார் இவர். அவரது நான்கு பரம்பரையினர் வடபகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும் அவருக்கும் மனைவிக்கும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வாழ ஆசை. வயதான காலத்தில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ ஆசைப்பட்டாலும் முடியாத நிலை. காரணம் பிள்ளைகள் புத்தளத்திலேயே வாழ ஆசைப்படுகின்றார்கள். ‘கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை’ என நம்பிக்கை கொள்கின்றார் ஸகசதுல்ல.

இலங்கையில் பொதுவாக நச்சுச் சூழலையே பலரும் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும், அதற்கே எல்லோரும் பலியாகிக் கொண்டு இருக்கின்றார்கள் எனவும் சொல்கின்றார் இதில் வரும் இன்னொரு நேர்காணல் காணப்படுபவரான சண்முகநாதன் சுப்பிரமணியம். இவர் ஈழப்போரின் இறுதிநாட்கள் வரையிலும் முள்ளிவாய்க்கால் வரை நின்றவர்.

சங்கரன் கவி அவர்களின் நாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோமா? தோற்கடிக்கப் பட்டிருக்கிறோமா?  நேர்காணல் படித்தபோது நெஞ்சம் பாறாங் கல்லாய் கனத்தது. அவருடன் கூடவே நாங்களும் அழுகின்றோம். இந்த நேர்காணல் ஒரு முற்றுப் பெறாத நேர்காணல். புத்தகத்தில் இருக்கின்ற அத்தனை நேர்காணல்களிலும் மிகவும் முக்கியமானது.

மனித உரிமைகள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்த சி.சிவகுமார், ‘யுத்தத்திற்குப் பிறகு இலங்கையின் நிலவரம் எப்படியிருக்கு?’ என்ற கேள்விக்கு ‘யுத்தகாலத்தைப் போன்றே இருக்கு’ என்று பதில் தருகின்றார்.

கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடும் சி.சித்திரவேல், தனது நேர்காணலில் ‘பசு – கன்றுக்குட்டி’ விளையாட்டு சரிவராது என முன்கூட்டியே சொல்லிவிடுகின்றார். தனது தொழில் விதிமுறைகளின்படி ஒரு எல்லைக்குள்லேயே தன்னால் நிற்க முடியும் என்று கூறுகின்றார். மீள்குடியேற்றத்தின் அடித்தளமாக விளங்கும் தனது வேலை ஒரு சேவை என்கின்றார் அவர். மேலும் இந்த நேர்காணலை கருணாகரன் இரண்டாக வகுத்துள்ளார். முதல்பாதி சித்திரவேலுடன் இருக்க, இரண்டாம்பகுதி கண்ணிவெடி அகற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருடன் அமைகின்றது.

தமிழ்விழியும் அவரது கணவரும் விடுதலைப்புலிப் போராளிகள். அவர்களின் இரண்டாவது பிள்ளையின் சுகவீனம் காரணமாக, அவரைப் பராமரிப்பதற்காக தமிழ்விழி வீட்டிலே தங்கிவிடுகின்றார். இந்த நேர்காணல் இறுதியுத்தம் வரை நடந்த துயரமான சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது. அதன் பின்னர் கணவர் ஓமந்தையில் சரணடைகின்றார். இவர் முகாமிற்குப் போகின்றார். இவர் கணவர் உட்பட, பொதுமக்கள் முன்னிலையில் குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் சரணடைந்தவர்கள் பற்றிய எந்தவித தகவலும் இன்னமும் இல்லை என்கின்றார் இவர்.

சின்னக்கிளி ஒரு படகோட்டி. ஈழவிடுதலைப் போராட்ட காலங்களில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே இவர்களே பாலம். இறுதிக்கட்டப் போர்வரை சென்று, அகதிமுகாம் வாழ்க்கையைச் சந்தித்தவர். புதுவை இரத்தினதுரை எழுதிய ‘ஓட்டிகளே… படகோட்டிகளே’ பாடலை நினைவுகூருகின்றார் இவர். இப்போது நிமிர்ந்து படுக்க மனசும் விடுதில்லை, முள்ளந்தண்டிலை இருக்கிற ரவையும் விடுகுதில்லை என்கின்றார் சின்னக்கிளி.

அரசியல் காரணங்களின் நிமிர்த்தம் காணாமல் போனோர், இன்னமும் இருக்கின்றார்களா இல்லையா எனத் தெரியாமல் தத்தளிக்கும் உறவினர்களின் நிலை கண்ணீருடன் வாழும் வாழ்க்கையாகும். அத்தகைய பலரின் நேர்காணல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அவர்களுள் வன்னியில் வாழும் இன்னொருவர் திருமதி ஆனந்தராணி. இவரின் கணவர் (போராளி அல்ல) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர். நம்பிக்கை தரக்கூடிய தரப்புகள் என்று ஒன்றுமே இல்லை என்றாலும் தொடர்ந்தும் சொந்தங்களை மீட்பதற்காக பலரும் பணத்தை இழந்து சுக்கானை இழந்த கப்பலாக திசை தடுமாறுகின்றார்கள். சண்டை முடிஞ்சுது. சனங்கள் எல்லாம் தங்கடை தங்கடை பாட்டைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் தான் இப்படி இருக்கின்றோம். இதுவும் ஒரு விதிதான் என்கின்றார் இவர்.

கருணாகரனின் இந்த நேர்காணல்கள் மூலமாக பல விடயங்கள் அம்பலத்திற்கு வருகின்றன. ஒவ்வொரு நேர்காணலுக்கும் முன்பதாக கருணாகரனால் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அந்தந்த நேர்காணலுக்கான கட்டியங்கள் ஆகின்றன.
மேலும் எல்லாருக்கும் தெரிந்த ‘பதில்களுக்கான’ கேள்விகள் சிலவற்றையும்  கருணாகரன் அவர்களிடம் கேட்டிருக்கின்றார். அவர்கள் மூலமாகவே அந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விரும்பியிருக்கலாம். நேர்காணல்களில் தெரிந்த பதில்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் தான். ஏனென்றால் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

யுத்தத்தின் பின்னர் மக்கள் படும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், அனுபவங்கள் என்பவற்றை எடுத்துச் சொல்லும் இந்த நேர்காணல்களில் இருந்து ஒரு சிலவற்றை அவதானிக்கக் கூடியவாறு உள்ளது. நேர்காணல்களில் வரும் அத்தனை பேரும் இலங்கையிலேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு அங்கே தற்போது இல்லை. இவர்கள் விடுதலைப்புலிகள் மீது குறைபாடுகள் இருக்கின்றது என்று சொன்னாலும் விசுவாசமாகவே நடந்து கொள்கின்றார்கள். இந்த நேர்காணல்களில் பலரும் தெரிவித்திருக்கும் ஒரு விடயம் நம்பிக்கை. இந்த அவல நிலை என்றுமே நிலைத்திருக்காது என்கின்றார்கள் அவர்கள். நம்பிக்கையே வாழ்க்கை.

நேர்காணல்கள் காணப்படுபவர்களின் புகைப்படங்களை இணைத்திருந்தால் புத்தகம் மேலும் செழுமையுற்றிருக்கும் என்பது எனது கருத்தாகும்.

நன்றி: தினக்குரல்






1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி
    இங்கு கனடாவில் புத்தகம் வாங்க முடியுமோ தெரியவில்லை .கண்டிப்பாக வாசிக்கவேண்டும் .
    நன்றி

    ReplyDelete