Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Friday, 16 January 2026

சொல்லில் வருவது பாதி - பாகம் 2 - அத்தியாயம் 26

மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது.

பாகம் 1 – ஸ்ரீதர்

பாகம் 2 – ஆராதனா

பாகம் 3 – திருமணம்

சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,

பாகம் ஒன்றிலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.

ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில் – சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில் பெற்றிக் கொள்ளலாம்.


Thursday, 15 January 2026

சொல்லில் வருவது பாதி - பாகம் 1 - அத்தியாயம் 1

 

மொத்தம் 44 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது.

பாகம் 1 – ஸ்ரீதர்

பாகம் 2 – ஆராதனா

பாகம் 3 – திருமணம்

சொல்லில் வருவது பாதி – நாவல் தற்போது விற்பனையில் இருப்பதால்,

பாகம் ஒன்றிலிருந்து முதலாவது அத்தியாயத்தையும், பாகம் இரண்டிலிருந்து இருபத்தியாறாவது அத்தியாயத்தையும் இங்கே தருகின்றேன்.

ஆர்வம் உள்ளவர்கள் தற்போதையை சென்னை புத்தகக் கண்காட்சியில் – சுவாசம் பதிப்பகத்தில் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் வெண்பா புத்தகசாலையில் பெற்றிக் கொள்ளலாம்.


Friday, 9 January 2026

சொல்லில் வருவது பாதி (நாவல் ) – பாகம் 2 (ஆராதனா)

 

இந்தக் கதையானது 1970-களில் தொடங்கி ஈழப் போர்ச் சூழலில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் வாழ்வியல் மாற்றங்களை விவரிக்கிறது. குமரேசன், சிவகாமி ஆகியோரின் மகளான ஆராதனா பிறந்தது முதல் அவளது பூப்புனித நீராட்டு விழா வரையிலான நிகழ்வுகளையும், சிவகாமி தனது உறவினர்களிடம் காட்டும் அன்பும் அவர்களால் வஞ்சிக்கப்படுவதையும் இது சித்திரிக்கிறது. போர் தீவிரமடையும் போது, மகன் அகிலன் இயக்கத்தில் இணைவதும், இந்திய அமைதிப்படையின் வருகையால் குடும்பம் சிதறுவதும் விரிவாகக் கூறப்படுகிறது. உறவுகளுக்கு இடையிலான பொறாமை, நிறவெறி மற்றும் சொத்துத் தகராறுகள் ஒருபுறமும், போர் தரும் இடப்பெயர்வும் உயிரிழப்புகளும் மறுபுறமுமாக இக்கதை நகர்கிறது. இறுதியில், ஊரை விட்டு வெளியேறும்போது முதியவரான சண்முகசுந்தரத்தை விட்டுச் செல்வதும், அவரைத் தேடிச் சென்ற மகன் இளங்கோ காணாமல் போவதும் போரின் கொடூரத்தை உணர்த்துகின்றன. இத்தொகுப்பு ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் சிதைவையும், ஈழ மண்ணின் வரலாற்றுத் துயரத்தையும் ஆராதனாவின் வாழ்வின் ஊடாகப் பதிவு செய்கிறது.

Monday, 23 January 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (1 / 14)

 


மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 1 : புறப்பாடு

 மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.

 ’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’

 திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.

Friday, 22 December 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 19-  கலாச்சாரம்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன.

சுப்பர்மாக்கற்றிற்குச் சென்ற புங், நீண்ட நாட்களின் பின்னர் ஆலினையும் அவளது பெற்றோரையும் சந்த்தித்தாள். ஆலின் ஒருதடவை தொழிற்சாலையில் உள்ள எல்லாரையும் பார்க்க விரும்புவதாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் சொல்லியிருந்தாள்.

ஆலினை தாயாருடன் காசு எடுப்பதற்காக வங்கிக்கு அனுப்பிவிட்டு, அவளின் தகப்பனார் புங்கிடம் இரகசியம் பேசினார்.

“ஆலினின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்கள்தான் அவள் உயிருடன் இருப்பாள்என்றார் அவர்.

Friday, 15 December 2017

கார் காலம் - நாவல்

அதிகாரம் 18 - பெரிய விருந்து
தொழிற்சாலையை மூடுவதென்று தீர்மானம் செய்த பின்னர் முன்னைவிட அதன்  உற்பத்தியில், தரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பில் பலமடங்கு கவனம் எடுத்தார்கள். பாதுகாப்பு (safety), செலவு (cost reduction), தரம் (quality) என்பவற்றிற்காக பல இலட்சம் பணம் ஒதுக்கினார்கள். தொழிற்சாலையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலை நடந்த காலத்தில் இருந்த அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறை காட்டினார்கள். எல்லாவற்றிலும் ‘தடிஓட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

இந்தத் தொழிற்சாலை அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மூடப்படுகின்றது. உலகம் பூராவும் இதே போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இப்பொழுதும் கார் உற்பத்தியில் முதலாவது இடம்---நம்பர் வண்---என்று பெயர் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமது ‘பெயரைக்காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

Friday, 1 December 2017

கார் காலம் - நாவல்

 அதிகாரம் 17 - மூடுவிழா

கார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.

ஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நாட்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். ஹெவினுக்கு நான்கு இலட்சங்கள் வழங்கிய நிர்வாகம் ஆலினுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஒழுங்காக வேலைக்கு வராமை, தொழிற்சாலை லீஸ் காரை பலமுறை விபத்துக்குள்ளாக்கியமை போன்ற பல்வேறு காரணங்களை இதற்கு முன்வைத்திருந்தது நிர்வாகம்.

Wednesday, 22 November 2017

கார் காலம் - நாவல்



அதிகாரம் 16 - களை எடுத்தல்

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள் பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும் வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும் சுத்தமாக அழகாக இருந்தது.

2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை கட்டாய பணி நீக்கம்  செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது.  யார் தலை எப்போது உருளும் என்று எல்லோரும் பயந்தபடி இருந்தார்கள். தினமும் வேலை செய்யுமிடத்தில் இதைப்பற்றிய பேச்சுத்தான் முக்கிய இடம் பிடித்தது. ஸ்மோக்கோ நேரத்திலும் (smoko Time – தேநீர், புகை பிடிக்கும் இடைவேளை) இதைப்பற்றித்தான் கதையாக இருந்தது.

Friday, 10 November 2017

கார் காலம் - நாவல்



அதிகாரம் 15 - காசிருந்தால் வாங்கலாம்

2009 ஆம் ஆண்டு இலங்கையில் – முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மிகவும் மனம் உடைந்து போனான் நந்தன். ஒரு வாரமாக அவன் வேலைக்கு வரவில்லை. அதன் பின்னரும் சிலமாதங்கள் அவனால் வேலையில் ஒன்றிக் கவனம் செலுத்த முடியவில்லை. மெல்பேர்ண், சிட்னி, கன்பராவில் நடந்த ஊர்வலங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களில் எல்லாம் அவனும் முன்னர் பங்குபற்றியிருந்தான்.

பாம் விவாகரத்துச் செய்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் வந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் வியட்நாம் சென்றிருந்த பாம், திரும்பி வரும்போது தன்னில் பாதி வயது கொண்ட அழகிய யுவதி ஒருத்தியை மணம் முடித்துவிட்டு வந்தான்.

வெளிநாட்டு மாப்பிள்ளை. அவளும் ஓமென்று உடன்பட்டுவிட்டாள்.

Wednesday, 1 November 2017

கார் காலம் - நாவல்


14. அவனேதான் இவனே! இவனேதான் அவனே!!

ஆலின் இப்போது தினமும் மனவள நிலையத்திற்கு சிகிச்சைக்காகப் போய் வருகின்றாள். அதன் பிற்பாடு அவளது நடவடிக்கைகளில் சிறிது மாறுதல்கள் தென்பட்டன. உடல் சோர்வு, பலகீனம், டிப்ரஷன் என்பவற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாள்.

"நான் ஓவர் டைம் செய்து விட்டு, லேட்டாக வீட்டுக்குப் போனால் பாட்னருக்கு கோபம் வருகிறது. என்னையே நெடுகலும் பார்த்துக் கொண்டு இருக்க வேணும் போல கிடக்கு என்கின்றார். இப்படியும் ஆக்கள் இருக்கின்றார்களா?" ஒருநாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென நந்தனிடம் இப்படிக் கேட்டாள் ஆலின்.

"யார் இந்தப் பாட்னர்? உவள் புதுக்கவொரு பாட்னரைப் பிடிச்சிட்டாள் போல" ஆச்சரியப்பட்டான் நந்தன்.

Thursday, 26 October 2017

கார் காலம் - நாவல்

கார் காலம் - தொடர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.


இது பற்றிய திரு குரு அரவிந்தன் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றேன்.



இது 29.09.2017 கனடா உதயன் பத்திரிகையில் வெளியானது.

உங்கள் கருத்துகளையும் அறியத்தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.



கார்காலம் தொடர்கதை பற்றிய கண்ணோட்டம்

(குரு அரவிந்தன்)

கே.எஸ்.சுதாகரின் கார்காலம் என்ற தொடர்கதை உதயன் பத்திரிகையில் வெளிவந்த போது பலராலும் பாராட்டப்பட்ட தொடராக இருந்தது. இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, இந்தத் தொடரைப்பற்றி வாசகர்களின் கருத்து என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள சிலருடன் உரையாட நேர்ந்தது. ‘உதயன் பத்திரிகை வாசிப்பீர்களா?’ என்று நூல் வெளியீட்டுக்கு வந்த மொன்றியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘என்ன பயணக்கட்டுரை பற்றியா கேட்கிறீர்கள்?’ என்றார். ‘இல்லை கார்காலம் பற்றி’ என்றேன். ‘நல்லகதை, கெதியாக முடித்துவிட்டார்கள்’ என்றார். ‘தொடர்ந்து வாசிக்க முடியவில்லை, ஆனாலும் வாசித்த பகுதிகள் சிறப்பாக வாசகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது’ என்று நண்பர் அகணி அவர்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார். நண்பர் அகணியும் ஏற்கனவே தொடர் நாவல் ஒன்று எழுதியிருந்தார். ‘பத்தொன்பது வாரங்களாக இரசித்து வாசித்தேன், அவுஸ்ரேலிய வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது’ என்றார் பீல் பிரதேசத்தில் வசிக்கும் மங்கை என்ற இலக்கிய ஆர்வலர். ‘ஏன் இவ்வளவு விரைவாகக் கதையை முடித்து விட்டார்’ என்று இன்னுமொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கதாசிரியரிடம் பதிலை எதிர்பார்க்காவிட்டாலும், எனது அனுபவம் என்வென்றால், ‘எந்தத் தொடரை அலுப்பில்லாமல் வாசிக்கிறோமோ அது விரைவாக முடிந்து விட்டது போலத்தான் தெரியும். நல்ல திரைப்படங்களும் அப்படித்தான்.’

Wednesday, 18 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 13 - மாயா

ஆலின் தினமும் எழுதும் கொப்பியை டைரியை – யாரோ திருடி விட்டார்கள். ஹெவினும் அவளுமாக தொழிற்சாலைக் குப்பைக் கூடைகளைக் கிழறினார்கள். அவளது மூன்று வருடத் தேட்டம் தொலைந்து போயிற்று. அதை எடுத்த கடன்காரனை தனக்குத் தெரியுமென்று அன்று முழுவதும் திட்டியபடி இருந்தாள்.

அந்த டயரி – எத்தனை மனிதர்கள் அவளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள் என்பதைக் கூறும்.
கிழவர் வலது புறமாகவும் ஆலின் இடது புறமாகவும் குப்பையை நோண்டினார்கள். கிழவருக்கு இருபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த விபத்தால் அங்கவீனமானவர். ஆலின் சமீபமாகத்தான் நொண்டுகின்றாள். சிலவேளைகளில் கழுத்து நோவும் அதனுடன் சேர்ந்து விடும். அழுது கொண்டே 'மெடிக்கல் சென்ரர்' போவாள். அங்கு அரை மணித்தியாலம் றிலக்ஸ் பண்ணிவிட்டு வரும் போது சிரித்தபடி வருவாள்.

Friday, 13 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 12 - டயரிக் குறிப்புகள்

ஆலினை இப்பொழுது பலரும் கூறு போடத் தொடங்கிவிட்டார்கள்.

நந்தனுக்கு அவள் மீதிருந்த பிடிமானம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது.

அப்பொழுது ஃபுங் அங்கு வந்து சேர்ந்தாள். ரொப் கோற்றில் பெயின்ற் மணம் தனக்கு ஒத்துவரவில்லை என்பதைக் காரணம் காட்டி ‘எண்ட் ஒஃப் லைனிற்கு மாற்றம் கேட்டு வந்திருந்தாள்.

ஃபுங் தினம் ஒரு பெர்ஃவியூமுடன் வருவாள். தினம் அவள் போடும் ஹெயர் ஸ்ரைல் யாரையும் கவர்ந்திழுக்கும். ஒன்றுக்கு மூன்று வளையங்கள் காதில் தொங்கும்.

தொழிற்சாலை விதிகளின்படி ஓவரோல் ஒருவரின் மணிக்கட்டுவரை நீண்டிருக்க வேண்டும். ஆனால் புங் தன் ஓவரோலை முழங்கை வரையும் மடித்திருப்பாள். அப்படியே பாதங்கள்வரை நீண்டிருக்கவேண்டியதை இரண்டு மடிப்புகள் மடித்திருப்பாள். தொழிற்சாலைத் தொப்பியைக்கூட அணியமாட்டாள். குச்சி, நைக் போன்ற பிறாண்ட்நேம் தொப்பிகளைத்தான் அணிந்து கொள்வாள்.

அவளைப் பார்க்கும் ஒருவருக்கு நிட்சயமாக திரைப்பட நடிகை ‘ஷோபா வந்து போவாள். நந்தனுக்கும் ஷோபா கண்ணுக்குத் தெரிந்தாள்.

Wednesday, 4 October 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 11 -  கிழவன் நடனம்

ஆலினும் நந்தனும் இப்பொழுது எண்ட் ஒஃப் லைன் பகுதியில் வேலை செய்தார்கள்.

ஹெவின் குறூப் லீடர். நந்தனும் பெளசரும் ரீம் லீடர்கள்.

இவர்களுக்குக் கீழே 18 பேர்கள் வேலை செய்தார்கள்.

நந்தன் அங்கு ரீம் லீடராக வந்தபோது, அவனது வருகையைக் கொண்டாடும் முகமாக பாம் ஒரு பாட்டுப் பாடினான். அந்தப்பாடலில் புங்கை நந்தனுடன் இணைத்து தனது வியட்நாம் மொழியில் பாடியிருந்தான். வியட்நாம் மொழி தெரிந்தவர்களுக்குத்தான் அதன் பூரண அர்த்தம் தெரியும். நந்தனுக்கும் ஓரளவு தெரிந்தது. தெரியத்தானே வேண்டும்.

விதி மக்காறியோவின் வடிவில் நந்தனின் திசையை மாற்றியது. அவன் இப்போது புங்கின் பக்கம் சாய்ந்துவிட்டான். புங் இப்பொழுதும் ரொப் கோற்றில் வேலை செய்தாள். அவளின் பிரிவால் நந்தன் தவிப்பதாக அந்தப் பாடல் அமைந்திருந்தது.

Tuesday, 9 May 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 10 - வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்

ஆலின் மீண்டும் வேலைக்குத் திரும்பி வந்தாள். ஆலினைப் பற்றிய சங்கதிகள் பெயின்ற் ஷொப் முழுவதும் பரவியிருந்தது. அவளையும் மிக்கெய்லையும் ‘பிறைமரில் இருந்து எண்ட் ஒஃப் லைன் என்ற பகுதிக்கு தந்திரமாக நிர்வாகம் மாற்றியிருந்தது. அவர்களை 'என்ட் ஒஃப் லைனிற்கு மாற்றியதில் மக்காறியோ பெரும்பங்கு வகித்தான். மிக்கெய்ல்தான் அவளுக்கு மத நம்பிக்கையை ஊட்டி விசயத்தை விவகாரமாக்கி இருக்கவேண்டும் என நினைத்து அவனையும் சேர்த்து மாற்றியிருந்தார்கள்.

'அபோர்ஷன்' முடிந்து வந்த ஆலின், வேலைக்கு வந்த முதல்நாளே மக்காறியோவைத் தேடிப் போய்விட்டாள்.

சுகம் தேடி வந்து விட்டாள். அவளால் இப்பொழுது அவனை விட்டு ஒரு கணமேனும் விலகி இருக்க முடியாது என்று சொன்னார்கள்.

Wednesday, 19 April 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 9 - இலையுதிர்காலம்

மரங்கள் எல்லாம் இலையை உதிர்த்துவிட்ட பின்னர் கிராமத்தைப் பார்க்க கவலையாக இருந்தது. எங்குமே சருகுகள் கொட்டி ஒரு பாழடைந்த பூமியாக இருந்தது.

ஆலின் மீண்டும் வேலைக்கு வந்தபோது அவளது வயிறு சிறிது உப்பி இருந்தது. வயிறு வளர, அவளின் தேய் பிறைக்காலம் ஆரம்பமாகியது. முன்பு போல அவளால் பூசி மினுக்கி வெளிக்கிட்டுவர முடிவதில்லை. அணியும் ஆடைகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. நறுமணம் வீசாத உடல், கர்ப்பிணி என்ற முகப்பூச்சுகளற்ற ஒன்றால் மாத்திரமே மினுங்கியது. பிரா கூட அவள் அணிவதில்லை. அது சுயமாக அங்குமிங்கும் ஊஞ்சல் ஆடியது.

Tuesday, 4 April 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 8 -  குண்டுப் பையனும் (Bomb boy), டாக்டர் பாமும்

பாம் போய் (குண்டுப் பையன்) பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பான். கொழுகொழுவென்ற முகமும் வெள்ளை வெளேரென்ற நிறமும் கொண்டவன். என்ன ஒரு குறை. அவனை அறியாமலே வாணம் விட்டுவிடுவான். Skunk  (பூனை போன்ற ஒரு விலங்கு) விட்டுத் தள்ளும் வீரியம் கொண்ட நாற்றம் போன்றது அது. அது அவனைச் சுற்றிப் பரவும்போது, வேலையை நிறுத்திவிட்டு  எல்லோரும் ஓடி விடுவார்கள்.

வேலை கடுமையான இடங்களில், வேலை செய்யப் பிடிக்காத இடங்களில் அவன் இப்படிப்பட்ட குண்டைப் போட்டுவிடுவதாக ஒரு வதந்தி உருவாகியிருந்தது. ஸ்மாட்டாகக் குண்டைப் போட்டு தப்பித்துக் கொள்கின்றான் என்றே எல்லாரும் நம்பினார்கள்.

அவன் அணியும் தொப்பியே வித்தியாசமானது. காது கழுத்து என்பவறையும் மூடிக் கட்டக்கூடியது அது. அவன் பொம் போடும்போது யாராவது சிரித்தார்களோ அல்லது ஏசினார்களோ எதுவுமே அவனுக்குக் கேட்பதில்லை.

Tuesday, 28 March 2017

கார்காலம் - நாவல்



அதிகாரம் 07 -  புரியாத புதிர்

ஆலினைப் பற்றிய தகவல்கள் எல்லாம் தொழிற்சாலை முழுவதும் வெளியான பின்னர், மிக்கெய்ல் என்னும் சுவீடன் நாட்டவன் ஒருவன் அவளுடன் மிக நெருக்கமாகப் பழகத்தொடங்கினான். அவனது மனைவி ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி என்பதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை இந்திய நாட்டுக்காரர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களை திருமணம் புரிந்துள்ளார்கள். அதுவும் கூடுதலாக ஆண்கள்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் வியட்நாமியர்களையோ சீனர்களையோ கலப்புத்திருமணம் செய்வது ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே இருக்கிறது.

மிக்கெய்லும் ஆலினும் கதைக்கும் போதும், ஒன்று சேர்ந்து நடக்கும்போதும் வேடிக்கையாக இருக்கும். மிக்கெய்ல் ஆலினைவிட  இரண்டரை மடங்கு உயரமும் பருமனும் கொண்டவன். பொதுவாக அவன் அவளுடன் கதைப்பதெல்லாம் கிறிஸ்தவ மதம் பற்றித்தான். அவளுக்கு அதில் நாட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருதடவை 'ரென் கொமன்மென்ற்ஸ்' என்று எழுதிய பேனை ஒன்றை மிக்கெய்ல் அவளிற்கு பரிசாகக் கொடுத்தான். அவளுக்கு மிக்கெய்லினது செய்கைகளும் மதம் பற்றிய போதனைகளும் சலிப்பைக் கொடுத்தன. இருந்தும் காட்டிக் கொள்ளாதவளாக நடந்து கொண்டாள்.

Tuesday, 21 March 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 6 -  விவாகரத்து

நந்தனின் மகள் அப்பொழுது ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாத கணக்குகளை நந்தன் சிலவேளைகளில் வேலை செய்யுமிடத்தில் வைத்து செய்து பார்ப்பதுண்டு. வேலை செய்யுமிடத்தில் இவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பதால் இரகசியமாகத்தான் செய்வான். சாப்பாட்டு நேரத்தின்போது அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தக் கணக்குகளுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன்.

இங்கே மாணவர்கள் தமது 6ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் கல்வியில் விழிப்பாக இருக்க வேண்டும். ஆரம்ப பாடசாலையில் இருந்து இடைநிலைப் பாடசாலைக்கோ, அல்லது இடைநிலையிலிருந்து உயர்தரத்திற்கோ போகும்போது நல்ல பாடசாலைக்குப் போக வேண்டுமாயின் போட்டிப்பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். போட்டிப் பரீட்சைகள் மிகவும் கடுமையானவை.

Tuesday, 14 March 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 5 -  வேலை

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ‘ரீம் லீடர் பதவிக்கு நேர்முகப்பரீட்சை நடந்திருந்தது. அதில் நந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தான். ஆலின் வந்த நேரம் நந்தனுக்குப் பதவி உயர்வு என ஒகாரா நக்கல் அடித்தான். ‘ரொப் கோற்றிலேயே நந்தன் ரீம் லீடராக இருந்தான்.

நந்தனுடன் படித்தவர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் சென்று, படித்த படிப்பிற்கான வேலையைத் தேடிவிட்டு, பின்னர் அங்கிருந்து கொண்டு நகரங்களை நோக்கி வரத் தொடங்கினார்கள். இவனோ நகரத்திலே இருந்துகொண்டு ஒரு கடைநிலை வேலையில் சேர்ந்துவிட்டு பின்னர் படிப்படியாக வேலையில் முன்னேறினான். குடும்பநிலை, உடல் ஆரோக்கியம், பொருளாதாரத்தைப் பொறுத்தே ஒவ்வொருவருடைய நிலையும் அமைகிறது. வாழ்க்கை சமரசங்களுக்கு உட்பட்டது என்பது நந்தனின் வாதம். வாழ்வதற்காகப் படிப்பா? படிப்பதற்காக வாழ்வா?