Thursday 1 March 2018

மணவினைகள் யாருடனோ - மாயவனின் விதி வகைகள்


மூன்று முடிச்சு

கமல் + ஸ்ரீதேவி + ரஜனி

அப்போது (1976) நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்ணாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம் பார்க்கப் போய் விடுவேன். ஆனால் மூன்று முடிச்சு படத்தை அண்ணாவுடன் பஸ்சில் சென்று யாழ்ப்பாணத்தில் பார்த்தேன். தியேட்டரின் பெயரை இப்போது மறந்துவிட்டேன்.

இப்போது நினைவு மீட்டிப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயது என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. வயதுக்கு மீறிய தோரணையில் (18 வயதுப் பெண்ணாக) அவர் அந்தப் படத்தில் நடித்திருப்பார். கமல் ரஜனியுடன் போட்டி போட்டுக் கொண்டு, உண்மையில் சொல்லப் போனால் நடிப்பில் எல்லோரையும் விஞ்சி நிற்பார் ஸ்ரீதேவி.

கே.பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்.வி கூட்டுச் சேர்ந்தால் சொல்லத் தேவையில்லை. அதேபோல் கமல் ஸ்ரீதேவி ரஜனி. பொதுவாக பாலசந்தர் இரண்டு மூன்று கதைகளை வைத்துக் கொண்டுதான் எல்லாப் படங்களிலும் சிலம்பம் ஆடுவார். அவற்றைத்தான் சுற்றிச் சுழட்டி மாற்றி மாற்றித் தருவார். அதில் அவர் கை தேர்ந்தவர். கதை வசனகர்த்தாவான அனந்து அவரின் வலது கரம்.

கமல் ஸ்ரீதேவி ரஜனி கூட்டுச் சேர்ந்த இன்னொரு படம் பாரதிராஜாவின் 16 வயதினிலே. அதில் ரஜனிக்கு சிறிய வேடம் என்றால் மூன்று முடிச்சில் கமலுக்கு கெளரவ வேடம். துணைவன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ரீதேவியை கதாநாயகியாக மூன்று முடிச்சில் அறிமுகம் செய்தார் பாலச்சந்தர்.

படத்தின் தொடக்கமாக படத்துக்குள் படமாக அரங்கேற்றம் வரும். படத்தில் இடம்பெறும் ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்தகால நதிகளிலே என்ற பாடல்கள் அந்தாதி வகையைச் சார்ந்தவை.

ரஜனிகாந் அப்போதுதான் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகியிருந்தார். அபூர்வராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அடையாளம் காணமுடியவில்லை. தியேட்டரில் ஒரே சனத்திரளாக இருந்தது. சத்தம் சந்தடி இல்லாமல் எல்லாரும் படத்தில் மூழ்கியபடி இருந்தார்கள்.



வசந்தகால நதிகளிலே பாடல். படகில் கமல் ஸ்ரீதேவி ரஜனி. கமல் ஆற்றினுள் தவறி விழுந்துவிடுவார். ரஜனி நீச்சல் தெரிந்திருந்தும் கமலைக் காப்பாற்ற மாட்டார். அந்த நேரத்தில் ரஜனிக்காக எம்.எஸ்.வி குரல் குடுத்திருப்பார்.
‘மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதிவகையை முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்’.

நான் பயந்தே போய்விட்டேன். இனி என்ன? கமல் இறந்துவிட்டார். படம் முடிந்துவிட்டது என எண்ணியபடி எழுந்துவிட்டேன். அண்ணா கையைப் பிடித்து இருத்தினார். இனித்தான் படம் என்றார்.

துபாயில் திருமண நிகழ்வுக்காகச் சென்றிருந்த வேளையில் ஸ்ரீதேவி காலமாகிவிட்டார். ஜெயலலிதாவின் மரணம் போலவே இவரது மரணத்திலும் குழ்ப்பம். மர்மம்.

சாருக்கான் இயக்கிய சீரோ (Zero) படம் ஸ்ரீதேவியின் கடைசிப் படம் எனத் தெரிய வருகின்றது.

ஸ்ரீதேவியின் மரணத்தை நினைக்கும்போது மூன்றுமுடிச்சு படத்தில் வரும்

மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்

என்பதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.






4 comments:

  1. இந்தப்படம் வின்ஸர் தியேட்டரில் ஓடியது. அப்போதெல்லாம் சினிமா என்றாலே வீட்டில் உதை விழும். எனக்கு அவ்வளவு அக்கறையும் இல்லை.தினசரிகளில் சினிமா விளம்பரம் பார்ப்பதில்தான் அக்கறை. பக்கத்துவீட்டு மூத்தவர்கள் பேசும்போது கேட்பேன். வீட்டில் ரேடியோ இருக்கவில்லை. பக்கத்து வீட்டில் சுருட்டுத்தொழில் நடப்பதால் தொழிலாளிகள் கேட்க ரேடியோ சத்தம் அதிகமாய் வைப்பார்கள். அப்போது திரைவிருந்து காதில் விழும். இதைத்தவிர சினிமா என்றால் பக்திப்படங்கள் மட்டுமே!
    முன்றுமுடிச்சு படத்தின் “சிறப்புகளை’ பின்நாளில் கேட்டு இரண்டாவது தடவையாக யாழ் சாந்தி தியேட்டரில் 80 களில் பார்த்தேன்.

    நீரலையில் முடிந்ததெல்லாம் நெஞ்சில் வந்த நினைவலைகள்
    நினைவலைகள் முடிந்த இடம் தாய் மகனாம் சூழ்நிலைகள்

    ReplyDelete
  2. சிறிதேவியின் உண்மையான வயது யாருக்காவது தெரியுமா ?
    54 தவறு என்று நம்புகின்றேன்

    ReplyDelete
  3. படம் வெளிவந்தது 1977 ஆம் ஆண்டு டிசம்பரில். யாழ் வின்னர் திரையில் வெளியானது.

    ReplyDelete
  4. நிச்சயம் 1963 இல் பிறந்திருக்க முடியாது.
    மூன்று முடிச்சு படத்தில் நடிக்கம்போது 13 வயதுதானா ?
    16 வயதினிலே படத்தில் நடிக்கும்போது 14 வயதுதானா ?

    ReplyDelete