மெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன
முதியவர்---நோயாளி---வார்டின் முன்புறமாக அங்குமிங்குமாக நடக்கின்றார். நடப்பதும்,
பின்னர் தனது படுக்கையில் ஏறி இருந்து பெருமூச்சு விடுவதுமாக இருக்கின்றார்.
கடந்த நான்கு நாட்களாக அவர் மனம் பரிதவித்தபடி
இருக்கின்றது. கடைசிக்காலம். மனம் ஏதோ சொல்ல விழைகின்றது.
பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போல தோற்றம். இன்னமும்
கம்பீரம் குலையவில்லை. நிமிர்ந்த நடை. கண் பார்வைக்குக் குறைவில்லை. தினமும்
அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு பட்டாளமே வந்து பார்த்துவிட்டுச்
செல்கின்றார்கள். கலகலப்பான மகிழ்ச்சி ததும்பும் குடும்பம்.
திடீரென்று தனக்குப் பக்கத்தில் இருந்த ’தாதியரைக்
கூப்பிடும் பட்டனை’ அழுத்தினார். அமைதியாக இருந்த ஏழாம் உவார்ட்டை அந்தச் சத்தம்
அல்லோலகல்லோலப் படுத்தியது. ஒரு பெண் தாதி ஓடி வந்தாள்.
“பெரிய டாக்டரை நான் பார்க்க வேண்டும்.”
“ஏன் எங்களைப் பற்றி முறையிடவா?”
“இல்லை. என்னைப் பற்றி முறையிட வேண்டும்.”
தாதி அவரை உற்றுப் பார்த்தாள். ஏதேனும் நட்டுக் கழன்றுவிட்டதோ?
தனக்குள் எண்ணமிட்டாள். அவள் அவரைப் பொருட்படுத்தாது போகவே, அவர் அந்த பட்டனை
விடாது தொடர்ந்து அழுத்தினார். அவரின் தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே கடமையில்
இருந்த பெரிய டாக்டரை அழைத்து வரச் சென்றாள் தாதி.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் தாதி. டாக்டர்
குலேந்திரன் தனக்கு எதிராக மேசையில் இருந்த புகைப்படத்தை உற்று நோக்கியபடி
அரைத்தூக்கத்தில் இருந்தார். புகைப்படத்தில் அவரது மகன் சிரித்தபடி இருந்தான். வயது
ஒரு இருபத்தைந்திற்குள் தான் இருக்கும். அவரது மகன் 2009 ஆம் ஆண்டு இலங்கையில்
நடந்த இறுதியுத்தத்தில் காணாமல் போய் விட்டான்.
இதையெல்லாம் அந்தத் தாதி ஏற்கனவே அறிந்திருந்தாள்.
டாக்டரிடம் விஷயத்தைச் சொல்லி அவரை அழைத்து வந்தபோது,
அந்த மனிதர் கோபத்தின் உச்சி எல்லைக்குச் சென்று நிலத்திலே சளுக்கப்பணியக் குந்தி
இருப்பதைக் கண்டார்கள்.
“டாக்டர்… இன்னும் எத்தனை நாள் நான் உயிர் வாழ்வேன்?”
“மிஸ்டர் கிங்ஸ்லி…. உங்களுக்கென்ன பைத்தியமா
பிடிச்சிருக்கு? ஒரு டொக்ரரிடம் இப்பிடியா நடந்து கொள்வது?” அவரைத் தடவியபடி
மருத்துவர் சொன்னார்.
“இல்லை டொக்ரர்… எனக்குத் தெரிய வேண்டும்.”
“என்னால் சரியாகச் சொல்ல முடியாது. நான் கடவுள் அல்ல.”
”நோயாளியிடமிருந்து எப்போதும் உண்மையை எதிர்பார்க்கும்
நீங்கள், ஒரு நோயாளியைப் பற்றிய உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள்?”
“சரி… சொல்கின்றேன். மருத்துவ அறிக்கையின்படி இன்னும்
நான்கு நாட்கள். ஆனால் எதுவும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நான்கு மாதங்கள் கூட
ஆகலாம்.”
“அப்படியானால் நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்.
எனக்கொரு சட்டத்தரணியை ஹொஸ்பிற்றல் நிர்வாகத்தின் பொறுப்பில் அமர்த்தித்
தரவேண்டும்.”
டாக்டர் குலேந்திரன் இரண்டு அடிகள் பின் வாங்கினார்.
அவருக்கு கிங்ஸ்லியின் வேண்டுதல் திகைப்பாக இருந்தது.
“ஏன் நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டு
அதைச் செய்யலாமே!”
“அவர்களுக்கும் தெரியாத ஒரு உண்மையை நான் இவர்களிடம்
சொல்லப் போகின்றேன்” சொல்லியபடியே தாதியை நிமிர்ந்து பார்த்தார் கிங்ஸ்லி.
நிலைமையைப் புரிந்து கொண்ட டாக்டர் தாதியை சற்று நேரம் வெளியே போய் நிற்கும்படி
சொன்னார். தன் தலையணையின் கீழ் இருந்து ஒரு பத்திரிகை நறுக்கொன்றை எடுத்தார்
கிங்ஸ்லி. அது பொலபொலவென உதிர்ந்துவிடுமாப் போல் இருந்தது. அதை டாக்டரிடம்
நீட்டினார்.
அதை வைத்தியர் வாங்கி விரித்துப் பார்க்கும்போது
‘பத்திரம்… பத்திரம்…’ என்று சத்தமிட்டார்.
அந்தப் பத்திரிகை பெரிய பிரித்தானியாவில் 1963 ஆம் ஆண்டு
அச்சிடப்பட்டிருந்தது. அதில் பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் குதிரைகளின் மேல்
தங்கள் முகங்களை மறைத்தவாறு துப்பாக்கி ஏந்தியபடி இருந்தார்கள்.
டாக்டர் அவரைப் பார்த்துவிட்டு பத்திரிகை நறுக்கைப்
படிக்கத் தொடங்கினார்.
@
இரண்டு நாட்கள் கழித்து வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு
ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்து கொடுத்தது.
சட்டத்தரணி, வைத்தியர், தாதிகள், மற்றும் அவரின் மனைவி குடும்ப
அங்கத்தவர்கள் எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதைக் கேட்க ஆவலாய்
இருந்தனர்.
“பத்திரிகைச் செய்தியைப் படித்தீர்கள் அல்லவா?”
சட்டத்தரணியைப் பார்த்துக் கேட்டார் கிங்ஸ்லி.
அதற்கு சட்டத்தரணி தலையை மேலும் கீழும் ஆட்டினார்.
அவரின் வழுக்கைத்தலையில் இருந்த இரண்டொரு தலைமயிரும் அவருடன் சேர்ந்து ஆமாப்
போட்டன.
“புகைப்படத்தில் வலது கோடியில் நிற்பது நான் தான்.
அப்போது எனக்கு வயது 23. எங்கள் குழுவில் நான் தான் வயதில் சிறியவன். நான் ஒரு
குற்றவாளி.
செய்தியின்படி அந்தக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில்
மூன்றுபேர்கள் ஒருபோதும் பிடிபடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா? அந்த
மூவரில் நானும் ஒருவன்.”
’ஆ’ என்று வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்
அனைவரும்.
“மற்ற இரண்டுபேரும் என்ன ஆனார்கள்?” சட்டத்தரணி
இடைமறித்தார்.
“அவர்கள் ஏற்கனவே இறந்து போய்விட்டனர். இயற்கை மரணம்.”
மனைவி ஏக்கத்துடன் கிங்ஸ்லியைப் பார்த்தார். இதுநாள்
வரையிலும் இது பற்றி தன்னிடம் ஏன் எதுவும் சொல்லவில்லை என்ற ஏக்கப்பார்வை அது.
“உங்கள் முன்னே ஒரு குற்றவாளியாக நான் இப்போது
நிற்கின்றேன். நாங்கள் மூவரும் அன்று முடிவெடுத்துக் கொண்டதன்படி ஒருவரும்
மற்றவரைக் காட்டிக் கொடுப்பதில்லை எனவும், கடைசியாக யார் இறக்கின்றாரோ அவர் இதனை
அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தோம். என் நண்பர்களுக்குக்
கொடுத்த வாக்குறுதியை நான் காப்பாற்றிவிட்டேன்.
அவ்வளவும் தான்.
இனி நீங்கள் எனக்கு என்ன தண்டனை தருகின்றீர்களோ அதை நான்
மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன்” என்றார் கிங்ஸ்லி.
“இத்தனை வருட வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் எங்களுடன்
நல்லபடியாகத்தானே நடந்து கொண்டீர்கள். ஒரு துரும்பிற்கும் நீங்கள் தீங்கு
விளைவித்ததை நான் காணவில்லையே!” மனைவி கண்ணீர் வடித்தாள்.
“உண்மைதான். இது நடந்தபோது நான் வாலிபனாக
துடியாட்டமுடையவனக இருந்துள்ளேன். ஆனாலும் அதுவே எனது முதலும் கடைசியுமான கொள்ளை.”
”தாத்தா…. உங்கள் குடும்பம் பெரிய செல்வந்தக் குடும்பம்
என்றெல்லாம் எங்களுக்குக் கதைகள் சொல்வீர்களே! அவை எல்லாம் பொய்யா?” ஒரு
பேரக்குழந்தை அவரின் கையைப் பற்றியபடி கேட்டாள்.
அவர் அதற்குச் சிரித்துவிட்டு,
“எங்கள் கூட்டத்தில் இருந்தவர்களுக்கெல்லாம்
இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுகள் தான் இருக்கும். ஏன் அவர்கள் கூட
செல்வந்தப் பிள்ளைகள் தான். ஒருவன் டாக்டரின் மகனாகவும், ஏன் இன்னொருவன் வக்கீலின்
மகனாகவும் கூட இருந்துள்ளார்கள்” என்றார் கிங்ஸ்லி.
சட்டத்தரணி அவரை வியப்புடன் பார்த்தார்.
“அப்படியென்றால் ஏன் உங்களுக்கு அந்த எண்ணம் வந்தது?”
கிங்ஸ்லி தொடந்தார்.
“நாங்கள் The Great Train Robbery என்ற திரைப்படத்தை
அப்போது பார்த்திருந்தோம். ஏன் நாங்களும் அப்படியொரு திருட்டைச் செய்து
பார்க்கக்கூடாது என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.” கிங்ஸ்லிக்கு அதைச் சொல்லும்
போது முச்சிரைத்தது.
அவரின் பெருமையான பேச்சு மனைவிக்குப் பிடிக்கவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்தாள், பின் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். ஏழு பிள்ளைகள்,
இருபத்தி மூன்று பேரப்பிள்ளைகள் உட்பட எல்லோரையும் அவர் ஏமாற்றிவிட்டதாக
உணர்ந்தார்.
“ஆழம் என்பது பெண்களின் மனதில் மாத்திரம் இருப்பதில்லை.
ஆண்கள் மனதிலும் உண்டு” என்றார் கோபத்துடன் கிங்ஸ்லியின் மனைவி. அவரின் இந்தச்
செயலானது தமக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு அவமானத்தைத் தேடித் தரப் போகின்றது
என்பதை அவர் உணர்ந்து கவலை கொண்டார்.
சட்டத்தரணி, டாக்டர் குலேந்திரனுக்குக் கண்ணைக்
காட்டிவிட்டு எழுந்து விறாந்தைப் பக்கமாகப் போனார். இருவரும் நடந்தபடி என
செய்யலாம் என உரையாடினார்கள். பின்னர் பொலிஸ் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு
விபரங்களைச் சொன்னார் சட்டத்தரணி.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜெயிலில் உள்ள
வைத்தியசாலைக்கு மாற்றுவதுபற்றி உரையாடினார்கள். ஆனால் எந்தவித முடிவும் அன்று
எடுக்கப்படவில்லை. சட்டத்தரணி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
டாக்டர் குலேந்திரன் மீண்டும் ஏழாம் இலக்க உவார்ட்
நோக்கி நடந்தார். கிங்ஸ்லி அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
“எல்லோரும் வீட்டிற்குப் போய்விட்டு நாளை வாருங்கள்”
என்றார் டாக்டர். பேரப்பிள்ளைகள் தாத்தாவைக் கொஞ்சினார்கள். பின்னர் எல்லோரும்
அறையை விட்டு வெளியேறினார்கள்.
“டாக்டர்… என்ன முடிவு எடுத்திருக்கின்றீர்கள்?” என கிங்ஸ்லியின்
மனைவி டாக்டரிடம் கேட்டாள்.
“நாங்கள் அவரை ஜெயிலில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றுவது
பற்றி யோசித்திருக்கின்றோம்” என்றார் வைத்தியர்.
அவளுக்கு அந்த முடிவில் உடன்பாடு இருக்கவில்லை.
“இங்கேயே தொடர்ந்தும் அவரை வைத்திருக்க முடியாதா?”
ஏக்கத்துடன் கேட்டாள் அவள்.
“பார்க்கலாம். நான் கதைத்துப் பேர்க்கின்றேன்” என்றார்
டாக்டர் குலேந்திரன்.
அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் கார் நிற்குமிடம்
சென்றார்கள்.
அவர்கள் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட கிங்ஸ்லி, பொய்த்
தூக்கம் கலைத்து, திடீரென்று எழுந்து கட்டிலில் அமர்ந்தார்.
“டாக்டர்… உங்கள் மகன் இறுதி யுத்தத்தில் காணாமல்
போய்விட்டதாக அறிந்தேன். கவலைப் படாதீர்கள். அவனும் ஒருநாள் என்னைப் போல
வரக்கூடும்.
டாக்டர் நான் ஒரு குற்றவாளி. உங்கள் மகன் அப்படியல்ல.
நம்பிக்கையோடு இருங்கள்.” என்றார் கிங்ஸ்லி.
டாக்டர் அவரது பேச்சுக்கு ஒன்றும் சொல்லவில்லை. தனது
மணிக்கூட்டைப் பார்த்தார். நேரம் இரவு பத்தைத் தாண்டிவிட்டது. பலத்த யோசனையுடன்
தனது அறைக்குச் சென்றார்.
அடுத்தநாள், அதிகாலை ஐந்து மணிவரையில் தாதி அவசரமாக
டாக்டரின் அறையை நோக்கி ஓடிவந்தாள்.
ஜெயிலில் உள்ள வைத்தியசாலைக்கு இடம் மாற்றும் வேலையை அவர்களுக்கு
வைக்காமல் கிங்ஸ்லி இறந்து போனார்.
மரண வாக்குமூலம் பலிக்கவேண்டும் என நினைத்தபடி தாதியின்
பின்னால் நடந்தார் டாக்டர் குலேந்திரன்.
@
நன்றி : தினக்குரல்
சுவர்சியமான கதை. விளக்கப் படங்கள் சுப்பர்
ReplyDelete