Monday 28 May 2018

மூடியிருக்கும் கதவுக்குப் பின்னால்…….


சிசு.நாகேந்திரன்      

     அறைக்கதவு மூடியிருக்கிறது.  அறைக்குள் யார் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியும்.  ஆனால் என்ன செய்கிறார்களென்று அறியமுடியவில்லை.  கதவில் தட்டி அதைத் திறக்கச் சொல்ல எனக்கு உரிமையில்லை.  உள்ளே நடப்பதை நான் அறிய வேணுமென்ற ஆவல் என்னுள்ளே நின்று உழத்துகிறது.  ஆனால் அறியவேணுமென்ற அவசியமில்லை. தேவையுமில்லை. பின் எதற்காக ஆத்திரப்படுகிறாய் என்று கேட்காதீர்கள்.

     அறைக்குள் ஒரு குரல் அனுங்குமாப்போல் கேட்கிறது.  இன்னொரு குரல் ஏதோ சமாதானப் படுத்துமாப் போலும் கேட்கிறது.  

மனிதாபிமானமுள்ள ஒருவன் இதை எப்படி தாங்கிக்கொண்டிருப்பான்! 

     நானோ ஆண்பிள்ளை.  இந்த வீட்டில் வாடைக்கு இருப்பவன்.  அறையினுள் இருப்பது பெண்.  அங்கு நடப்பதை அறியாமல் மனம் இருப்புக் கொள்ளவில்லை.  அங்கலாய்க்கிறது.  என்ன செய்யலாம்?  எப்படி அறிவது?  நடப்பது நடக்கட்டுமே, நீ ஏன் அறியவேணும்?  என்று நீங்கள் கேட்பீர்கள்.  எனக்கு மனமென்று ஒன்று இருக்கிறதல்லவா!  அதுதான் ஆவற் படுகிறது.

     எத்தனையோ ஆண்டுகளாக ஒரே வீட்டிலிருந்து சகோதரிமாதிரிப் புழங்கிய பெண் அழுகிறாள், முனகிறாளென்றால் எனக்கு மனம் பதறாதா?  நான் அங்குமிங்கும் நடக்கிறேன்.  அறியவேணுமென்ற ஆவல். உள்ளுக்கு என்னதான் நடக்கிறது? கதவு திறக்கப்படாதா?
                        --- --- --- --- ---

     என் மனச்சஞ்சலத்தைக் குலைக்க தொலைபேசி மணி அடிக்கிறது.  அது வீட்டுக்காரரின் தொலைபேசி.  நான் அதில் பேச எனக்கு உரிமை தரப்படவில்லை. வேறொருவரும் வெளியில் இல்லாதபடியால் நான் துணிந்து போய் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தேன். யாரது? சுப்பையாவா? ஏன் வேறொருவருமில்லையா? உங்கு என்ன புதினம்?  கல்யாணியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்களா? …….ஏன் பேசாமாலிருக்கிறாய், சொல்லேன்” என்று அங்கலாய்த்தது அந்தக் குரல்.  குரல் வேறொருவருடையதுமல்ல. வீட்டுக்காரரின் குரல்தான்.  கல்யாணியின் கணவன்.  ஆவலோடு அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியது எனது கடமை.  ஆனால் எப்படி நான் பதில் சொல்வது?  நடக்கிறதொன்றும் தெரியாமல் என்னத்தை நான் அவருக்குச் சொல்வது?  தொலைபேசியைக் கையிற்பிடித்தபடியே பதிலொன்றும் சொல்லாமல் ம்…ம்…ம்…என்று இழுத்தேன்.  அவருக்கு ஆத்திரம் வந்திருக்கவேணும். உடனே நான் என்ன கேக்கிறென், நீ ஊமைப்பாi~ பேசுறாய்?  எவ்வளவு முக்கியமான விசயமிது?  வீட்டிலை வேறொருவருமில்லையா?  எல்லாரும் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டார்களா?  சொல்லேனப்பா!  என்று சத்தமாகக் கேட்டார்.  அதற்குமேல் நான் மௌனம் சாதிக்க விரும்பவில்லை.

     நிதானத்தை வரவழைத்துக்கொண்டு தொலைபேசியைக் கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சொன்னேன், என்னை நீங்கள் கேக்கிறியள், நான் என்ன பதிலைச் சொல்லிறது?  உங்கள் அப்பா இங்கையில்லை, கடைக்கு அவசரமாய்ப் போனவர் இன்னும் திரும்பிவரேல்லை. கல்யாணி வயித்தைப் பிடிச்சுக்கொண்டு தாங்கமுடியாமல் கத்தினா. எனக்கென்ன செய்யிறதென்டு தெரியேல்லை.  இந்த நாட்டுப்புறத்திலை என்ன கார் வசதி இருக்குதா நினைச்சவுடனை ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு? ஆபத்துக்குக் கூப்பிட டாக்ஸிகூட இல்லையே! கதவு சாத்தினபடிதானிருக்குது..  கல்யாணி அவஸ்தைப்பட்டு அழுகிறதைக் கேட்க எனக்குத் தாங்க முடியேல்லை. உடனே சைக்கிளிலைபோய் அடுத்த கிராமத்திலையுள்ள மருத்துவிச்சியை ஏற்றிக்கொண்டுவந்து விட்டிருக்கிறென். தேவையான சாமான்களை நீங்கள் ஏற்கனவே வாங்கிவைச்சது வாய்ச்சுப்போச்சுது.  ஏதோ உள்ளுக்கு நடக்குது, என்னவெண்டு அறியமுடியாலிருக்குது.  நீங்களும் இந்தநேரம் பாத்து வேலையலுவலாய் வெளியிலை போயிருக்கிறியள். ஏன்?  பெண்சாதி பெறுமாதம், நான் வீட்டிலை கட்டாயம் நிற்கவேணும் எண்டு சொன்னால் அவங்கள் உங்களை வேலையாலை நிப்பாட்டிப் போடுவாங்களா?  நிறை கர்ப்பிணியைத் தனிய வீட்டிலை விட்டுப்போட்டு, மற்றொழுங்குகள் ஏதாவது செய்யாமல் போனால், அது எவ்வளவு பேய்த்தனம்! எனக்கு முடிஞ்சதை நான் செய்தென். அவ்வளவுதான்.  அங்கை கதவு சாத்திக்கிடக்குது. என்ன நடக்குதெண்டு அறியவழியுமில்லை.  அப்பாவுமில்லை. நான் வெளியிலை நிண்டு துடிக்கிறென். வேறை என்ன செய்யமுடியும் என்னாலை?

எண்டு தொலைபேசியில் பொரிஞ்சு தள்ளிக் கொண்டிருக்கையில் கதவு திறக்கப்பட்டது.  மருத்துவிச்சி எட்டிப் பார்த்தாள்.  ஏன், வேறொருவரும் இல்லையோ? என்றாள்.  இந்தா, அவருக்கு மறுமொழியை நீயே சொல்லு என்று சொல்லிக்கொண்டு அவளிடம் தொலைபேசியைக் கொடுத்தேன்.  ஐயா!  வாழ்த்துக்கள்!  பொம்புளைப்புள்ளை ஐயா! சர்க்கரை வாங்கிக்கொண்டு வாங்கோ.  சுகப்பிரசவம்தான். உரிச்சுச் படைச்சு உங்களைப் போலவே பிறந்திருக்குது பிள்ளை. நீங்கள் எப்ப வாறியள். வந்து நீங்கள்தான் உங்கடை மனுசிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவேணும். இல்லாட்டில் கவலைப்படுவா. அதுவரையும் நான் பாத்துக் கொள்ளுறென்.  தேவையானதுகளை உங்கடை அப்பாவிட்டைச் சொன்னால் அவர் வாங்கித்தருவார்தானே. நீங்கள் இந்தக் கிழமை முடிவிலை வாறதாய்ச் சொல்லீனம். பதகளிப்படாமல் வாருங்கோ. நாங்கள் எல்லாத்தையும் பாத்துக்கொள்ளிறம். சுகப்பிரசவம்தானே ஐயா!  எல்லாம் நல்லபடியாய் நடக்கும். ……….இந்தாருங்கோ தம்பி. உங்களோடை பேசப்போறாராம் என்று என்னிடம் தொலைபேசியைத் தந்தாள்.

     இனிமேலும் நான் அறைக்குள்ளை போகவேண்டிய அவசியமில்லை.  பிள்ளையை வெளியிலை கொண்டுவரக்கே பார்க்கலாம்தானே!  அப்பா!  கொஞ்சநேரம் மனம் என்ன அமர்க்களப்பட்டுது!  மருத்துவிச்சி உள்ளுக்குப் போனதும் கதவு மீண்டும் சாத்திக் கொண்டது. அழுகை திரும்பவும் கேட்குது, அது,  பிறந்த குழந்தையின் அழுகை.


No comments:

Post a Comment