Monday, 15 October 2018

’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)

இது ஒரு சோசலிச இலக்கியம். கதை கிர்கீஸிய (Kyrgyzstan) என்னும் இடத்தில் நடைபெறுகின்றது. இதன் அயல் நாடுகளாக கஸ்கஸ்தான், சீனா இருக்கின்றன. இந்தக்கதையின் கதைசொல்லி---கிச்சினே பாலா---தன் பதின்ம வயதில் நடந்தவற்றைச் சொல்கின்றான். அப்போது அவனுக்கு வயது 15. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம். அவனது சொந்தபந்தங்கள் கூர்ஸ்க்கிலும் ஒர்யோலிலும் உள்ள போர்முனைகளில். பெண்களும் போர்முனைக்குச் செல்ல இயலாதவர்களும் சிறுவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள். வயலில் வேலை செய்வதும் தானியத்தை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்வதும் அவன் வேலை. அவனது இரண்டு சகோதர்களும் போர்முனையில். தாயாரும் தங்கையும் வீட்டில். முதிய தகப்பனார் தனது தச்சுக்கூடத்தில் வேலை செய்கின்றார்.

அவனது பக்கத்து வீட்டு (சிறியவீடு என்று அழைப்பார்கள்) நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட, அவரது விதவையை அவனின் தகப்பனார் மணந்து கொள்கின்றார். விதவையின் இரண்டு மகன்கள்கூடப் போர்முனையில். மூத்தவன் ஸாதிக் மணம் முடித்து சிறிது காலத்திற்குள்ளாகவே போர்முனைக்குச் சென்றுவிட்டான். ஸாதிக்கின் மனைவிதான் ஜமீலா. அவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள்.

ஜமீலா அழகும் துடிப்பும் மிக்கவள். கிச்சினே பாலாவிற்கு அவள் என்றால் போதும். இருவருக்கும் வயதுகளில் குறைந்த வித்தியாசமே இருந்தது. ஸ்தெப்பி வெளி எங்கும் விளையாடுகின்றார்கள். அவ்வப்போது ஜமீலாவைப் படமும் வரைகின்றான். காமுகர்களிடமிருந்தும் காப்பாற்றுகின்றான். ‘நான் ஜமீலாவை அன்போடு நேசித்தேன். அவளும் என்னை விரும்பினாள். நாங்கள் அரிய நண்பர்களாக இருந்தோம்.’ என கதைசொல்லி சொல்கின்றார்.

சோவியத் சோசலிச ஒன்றியத்தில் இருந்த கிர்கீஷிய நாட்டு விவசாய மக்களின் வாழ்க்கை, ஸ்தெப்பி விளைச்சல் நிலம், மலை, அருவி, கூட்டுப்பண்ணை என விரிகின்றது. ஒருநாள் காயமடைந்த போர்வீரன் ஒருவன் – தானியார் – கிராமத்திற்கு வருகின்றான். ஜமீலா, கிச்சினே பாலா, தானியார் – மூவரும் தனித்தனியே இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டில்களில் புகையிரத நிலையத்திற்கு தானியம் ஏற்றிச் செல்கின்றார்கள். நொண்டி நடக்கும் தானியாரைச் சீண்டுவதும் நகைப்பதுமாக ஜமீலாவிற்கும் கிச்சினே பாலாவிற்கும் பொழுது போகின்றது.

பல சம்பவங்களின் பின்னர் ஜமீலாவிற்கு தானியார் மீது காதல் வந்துவிடுகின்றது. கணவனின் முகம் புகையில் தெரிகின்றது. புகை கலைந்ததும் தானியார் அங்கே. இறுதியில் இருவரும் ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமலே ஊரைவிட்டு ஓடிவிடுகின்றார்கள். இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருக்கும் கிச்சினே பாலா அவர்கள் பின்னாலே துரத்திச் செல்கின்றான். அவன் கூப்பிடுவதையும் பொருட்படுத்தாது ஜமீலா போய் விடுகின்றாள். கிச்சினே பாலா கீழே விழுந்து விழுந்துவிடுகின்றான். அப்பொழுது ஒரு உண்மையைப் புரிந்துகொள்கின்றான். ‘நான் ஜமீலாவைக் காதலித்தேன். ஆம், ஜமீலா மீது நான் கொண்ட காதல்தான் என் முதல் காதல். குழந்தைப் பருவத்துக் காதல்’ என்கின்றான் அவன்.

ஆரவாரமில்லாத மொழி நடை. மெது மெதுவாக நம்மைக் கதைக்குள் இழுத்துச் செல்கின்றது. காட்சிகள் நம் மனக்கண் முன் விரிகின்றன. ஜமீலா, கிச்சினே, தானியார் – இவர்களுக்கிடையேயான உள்ளக்குறல்கள் அற்புதமாக்ச் சித்தரிக்கப்படுகின்றன. சிறிய புத்தகம். ஆனால் அத்தனை கனம். 

No comments:

Post a Comment