Tuesday, 23 October 2018

தெரிவு – குறும்கதை


இலக்கியவிழா. திரு. சின்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக ஈழத்திலிருந்து வருகை தந்திருந்தார். சின்ராஜ் பிரதேசச் செயலாளர், எழுத்தாளர், கல்விமான் என்ற மகுடங்கள் கொண்டவர். அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் எங்கோ நிரம்பப் பழகியவர் போன்றிருந்தது.

ஆம்! சின்ராஜ் வேறு யாருமல்ல. என்னுடன் பதினொராம் வகுப்பு வரையும் ஒன்றாக விஞ்ஞானம் படித்த சின்னராசாதான்.

நவீன தமிழ் இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் சின்ராஜ். பேச்சினிடையே என் மனம் பள்ளிக்காலங்களுக்கும் போய் வந்துகொண்டிருந்தது.

பரமேஸ்வரி ரீச்சர்! அப்பொழுது எங்களுக்கு பெளதீகம் படிப்பித்தார். பொல்லாத ரீச்சர். ஆண்டு இறுதிப் பரீட்சைக் கொப்பிகள் திருத்தப்பட்டு மேசையில் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. எழுபத்தைந்திற்கு மேலே எடுத்தவர்களுக்கு ஏச்சுடன் பிழை திருத்தமும் சொல்லி கொப்பியளை கையிலை தருவார் ரீச்சர். ஐம்பதுக்கும் எழுபத்தைந்துக்கும் இடையில் என்றால் 'ம்' என்ற பெருமூச்சுடன் மேசையிலை கொப்பியளைப் போடுவா. நாங்கள் போய் எடுக்க வேண்டும். ஐம்பதுக்கும் குறைய எடுத்தா ரீச்சருக்குக் கிட்டப் போகத் தேவையில்லை. நாங்கள் கொப்பிகளை எடுக்கப்போகும் பாதி வழியிலேயே பறந்து வரும் கொப்பிகள்.

"சின்னராசா 43. ஏன் தான் படிக்க வாறியோ தெரியேல்லை. உங்களுக்கு இந்தப் படிப்பு ஏறாட்டில் வேறை ஏதாவது துறைகளிலை எடுத்துப் படிக்கலாம். வீட்டிலை அம்மா அப்பாவுக்கு உதவியா இருக்கலாம். அப்பாவுக்கு ஒத்தாசையா இருந்து தோட்டம் செய்யலாம், கள்ளுச் சீவலாம், விறகு கொத்தலாம். இப்பென்ன சயன்ஸ் படிச்சு நாஷாவிலை வேலை செய்யப் போறியளே?" இறக்கைகள் அறுந்த கோழி போலப் பறந்து வந்த கொப்பி சின்னராசாவின் முகத்தினைப் பதம் பார்த்தது. அவனின் பொய்மூக்கு உடைந்து இரத்தம் வந்தது.

"ரீச்சர் சின்னராசாவுக்கு மூக்காலை ரத்தம் வருது"

ரீச்சர் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த கொப்பிகள் எல்லாம் நாலாபுறமும் பறந்தன.

"நான் இனிப் பள்ளிக்கூடம் வரமாட்டன்" சொல்லிக் கொண்டே மதியத்துடன் சின்னராசா வீட்டிற்குப் புறப்பட்டான்.

அடுத்தநாள் சின்னராசாவின் அப்பா பள்ளிக்கூடம் வந்து போனார். அதன்பிறகு சின்னராசா சொன்னபடி, அவன் பள்ளிக்கூடம் வரவில்லை.

காலம் விரைகின்றது. எங்களுடைய பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சை முடிவுகள் வந்தன. நாற்பது பேரிலை இரண்டு பேர் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோம். எல்லாரும் பரமேஸ்வரி ரீச்சருடன் எங்களுடைய எதிர்காலம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று சின்னராசா அதிபருடன் தோன்றினான்.

"ரீச்சர், இவன் உங்களிட்டை முந்திப் படிச்ச மாணவனாம். பிறைவேற்றா பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சை எடுத்திருக்கின்றான். பரீட்சையிலை கலைப்பிரிவிலை கம்பசிற்கு எடுபட்டிருக்கிறான். ஒரு 'ஏ'யும் மூண்டு 'பி'யுமாம். உங்களைச் சந்திக்க எண்டு வந்திருக்கிறான்" மகிழ்ச்சி வெள்ளத்தில் அதிபர். அதிபருக்குப் பின்னாலே ஒட்டிக் கொண்டு நின்றான் சின்னராசா. அதிபர் போய் விட்டார். பரமேஸ்வரிச் ரீச்சர் சின்னராசாவைப் பார்த்துவிட்டு மெளனமாக தன் வேலையைத் தொடர்ந்தார்.

"ரீச்சர்! என்னைப் படுமொக்கு எண்டியள். இப்ப என்ன சொல்லுறியள்?" சின்னராசா வீறாப்புடன் ரீச்சரைப் பார்த்துக் கேட்டான். ரீச்சர் தனக்குள் சிரித்தார்.

"இப்பவும் சொல்லுறன். நீ சயன்ஸ்சிலை படுமொக்குத்தான். சின்னராசா நீ இந்த வகுப்பிலை இருக்கேக்கை எத்தினையாம் பிள்ளையாய் வாறனி?"

சின்னராசா தலை குனிந்து கொண்டு நின்றான்.

"சொல்லு சின்னராசா. எத்தினையாம் பிள்ளையாய் வாறனி?"

"இருபது ரீச்சர்"

"இந்த வகுப்பிலை இருக்கிற நாப்பது பேரிலை இரண்டுபேர் தான் யூனிவசிட்டிக்கு எடுபட்டிருக்கினம். இருபதாம் பிள்ளையாய் வாற நீர் எடுபட்டிருக்கிறீர் எண்டால் அதுக்குக் காரணம் நான் பேசின பேச்சுத்தான். உனக்கு ரோசம் வந்துது. வேற துறையை எடுத்துப் படிச்சாய். பாஸ் பண்ணினாய். இஞ்சை இன்னும் முப்பத்தெட்டுப் பேர் சூடு சுரணை இல்லாமல் நாடி நரம்பெல்லாம் செத்துப் போய்...."

ரீச்சர் சொல்லிக் கொண்டே போனார்.

"ரீச்சர் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ" சொல்லிவிட்டு விறுவிறெண்டு போய்விட்டான் சின்னராசா.

அந்தச் சின்னராசா இன்று 'சின்ராஜ்' ஆக மாறி இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

(வெற்றிமணி – ஆடி 2018)

No comments:

Post a Comment