Tuesday, 15 January 2019

யாரோ ஒளிந்திருக்கின்றார்கள் - சிறுகதை


(ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன்செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2018 இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)

”சேர்! எங்கே என் மனைவி உமா? வழமையாக எட்டு மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவாரே…” காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வந்த களைப்பில், மனைவியைக் காணாத அதிர்ச்சியுடன் கேட்டான் சிறீபாலன்.

“பயப்படாதீர்கள்! இன்னும் அரைமணி நேரத்திற்குள் இங்கு வந்துவிடுவார். இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நீங்கள் வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள். அங்கே நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அல்லது ரெலிவிஷன் பார்க்கலாம்” சொல்லியபடியே அந்த ஆண் தாதி சிறீபாலனை நிமிர்ந்து பார்த்தார். பார்த்த மாத்திரத்தில், சிறீபாலனுக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது எனக் கவலை கொண்டார். அவருக்கு அருகே இருந்த பெண் தாதி மேசையில் குனிந்தபடி அவசர அவசரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

சிறீபாலன் கோர்ட் சூட் ரை அணிந்த நிலையில் வேலைக்குப் போவதற்கு முன்பாக அங்கு வந்திருந்தான். கம்பீரமான தோற்றம், நறுக்கு மீசை, வயது நாற்பதுக்குள் இருக்கும்.

அந்தப்பெரிய அறைக்குள் ஏழெட்டு நோயாளர்கள் வரையில் இருந்தார்கள். ஆனால் நாற்பது பேரின் இரைச்சல் அங்கே நிலவியது. இரண்டு தாதிமார்கள் அவர்களைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் போதாமல் இருந்தது.

’பயப்படாதீர்கள்’ என்ற அந்தத் தாதியின் சொல் சிறீபாலனைச் சற்றுச் சிந்திக்க வைத்தது. ஏதோ நடந்திருக்க வேண்டும். வாசலில் நின்றபடியே உமாவை அங்கும் இங்கும் தேடினான். அறைக்குள் அவனது மனைவியைத் தவிர மற்றைய எல்லோரும் இருப்பதாகவே அவனுக்குப்பட்டது.

மருந்திற்குக் கட்டுப்படாவிடில் ‘ஷொக் றீற்மன்ற்’ கொடுக்கவேண்டி வரும் என மனோதத்துவ நிபுணர் கடந்தமுறை சந்தித்தபோது சிறீபாலனிடம் கூறியிருந்தார். அப்போது சிறீபாலனின் மனைவி உமா, “எனக்கொன்றும் இல்லை. அப்படியிருக்க ஏன் எனக்கு மருந்து தருகின்றீர்கள். சும்மா மருந்தைக் குடிப்பது உடம்பிற்கு கேடு தரும் அல்லவா?” என டாக்டரைக் கேட்டிருந்தாள்.

’என்னுடைய அறைக்குள் டைனோசர் ஏலியன் கரடி சிங்கம் எல்லாம் ஒளித்திருக்கின்றன. சிலவேளைகளில் அவை என்னைக் கொல்லப் பார்க்கின்றன’ என்று ஒருநாள் ஆர்ப்பாட்டமிட்டு, கையிலே கத்தி ஒன்றை எடுத்து வெறி பிடித்தவள் போல உமா நடந்துகொண்டதை நினைத்து வைத்தியர் தனக்குள் புன்முறுவல் கொண்டார்.

“மருந்தை உடனடியாக நிறுத்தமுடியாது. மெது மெதுவாகக் குறைத்து, வருத்தம் முற்றாகக் குணமாகியதும் நீங்கள் வீட்டிற்குப் போகலாம்” என உமாவிடம் ஆறுதல் சொல்லியிருந்தார் டாக்டர்.

வெளியே இருந்த தொலைக்காட்சியில் மிருகங்கள் பறவைகள் பற்றியதொரு விபரணம் போய்க் கொண்டிருந்தது. அன்னப்பட்சிகள் மனிதர்களைப் போலவே பெரும்பாலும் ஒரு துணையுடனே தமது வாழ்நாள் முழுவதும் இருப்பதாகவும், ஒருபாலின சேர்க்கையும் அவற்றுள் அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்னப்பட்சிகள் பாலில் கலந்திருக்கும் நீரை விட்டு பாலை மாத்திரம் அருந்தும் என சிறீபாலன் சிறுவயதில் கேள்விப்பட்டிருந்தான். மனிதர்களும் ஏன் அன்னப்பட்சிகள் போல தீயனவற்றை விடுத்து நல்லனவற்றை எடுத்து வாழப் பழகக்கூடாது? கண்கள் அந்த விவரணத்தில் லயித்திருந்தாலும் சிறீபாலனின் மனம் எதையோ அசை போட்டது.

தெளிந்த நீரோடை போல ஓடிச்செல்லும் மனிதர்களின் வாழ்க்கை, இப்படித்தான் சிலவேளைகளில் திடீர் திடீரென மாறிவிடுகின்றது.

உமா மனோவியாதிக்குச் சிகிச்சை பெற, இங்கே வந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

குடும்பத்தின் முழுப்பொறுப்பும் அவன் தலையில் வந்துவிட்டதன் பின்னர் கொஞ்சம் தளர்ந்து போனான் சிறீபாலன். அதிகாலையில் சமையல் செய்து, தன் இரண்டு ஆண் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு, உமாவைப் பார்க்க இங்கே வந்துவிடுவான். உமாவுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு பின்னர் வேலைக்குப் புறப்பட்டுவிடுவான். பள்ளியில் வகுப்புகளுக்கு முன்னரும் பின்பும் பிள்ளைகளைப் பராமரிக்கும் வசதி இருப்பது சிறிது ஆறுதல் அவனுக்கு. பின்னர் மீண்டும் வேலை முடித்து, மனைவியைப் பார்த்துச் செல்வான்.

தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்ட நிலையில், அதனால் இப்படியான அபத்தங்களும் உலகில் மலிந்துவிட்டன. உலகின் மிகக் குறுகிய எண்ணிக்கையினரான இந்த இழிசெயலைச் செய்பவர்கள் – மானிடத்தின் கேடுகெட்ட ஈனப்பிறப்புகள். பொறாமை, எரிச்சல், இயலாத்தன்மை கொண்ட இவர்களால் சில மனிதர்களின் வாழ்க்கை அல்லாடுகின்றது. இந்தச் செயல்களை செய்பவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினம், அதே போல இதனால் பாதிப்படைபவர்களையும் அடையாளம் காண்பது கடினம். உமா கூட இப்படியான சுழிக்குள் அகப்பட்டிருந்தும் அவளைக் கண்டுபிடிப்பதற்கு தாமதமாகிவிட்டதே என வருந்தினான் சிறீபாலன்.

”என்ரை கொம்பியூட்டர், ஸ்மாற்போன், மின்னஞ்சல், இணையம், முகநூல் எல்லாத்துக்குள்ளும்---யாரோ ஒரு சிலர் ஒளிந்திருக்கின்றார்கள்” என்று உமா முதன்முதல் சொன்னபோது சிறீபாலனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“ஒளிச்சிருந்து…?” சிறிபாலன் தனது கேள்வியைக் கேட்டு முடிப்பதற்கு முன்னரே,

”அவர்கள் எப்போதோ அங்கே ஒளிந்திருக்க வேண்டும். இந்த மரமண்டைக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த விடயமே தெரிய வந்தது. அவர்கள் அங்கே ஒளிந்துகொண்டு எனக்கெதிராக பல சதித்திட்ட வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்” கவலையுடன் சொன்னாள் உமா.

”அது சரி… அப்படியெல்லாம் அவர்கள் செய்வதற்கு, நீர் என்ன பெரிய முக்கியமான ஆளா? அரசியல்வாதிகள், பெரிய பிஸ்னஸ் பீப்பிள்ஸ், சினிமாக்காரர் எண்டு சொன்னால் நான் ஒத்துக்கொள்ளுவன்.”

”எறும்புக்கும் அதனளவில் எது நடந்தாலும் அது அதற்குப் பெரிதுதான்” என்று உமா சொன்னபோது சிறீபாலன் மெளனம் காத்தான்.

உமா இலங்கையில் பன்னிரண்டாம்வகுப்பு வரையும் தான் படித்திருந்தாள். புலம்பெயர்ந்து வந்ததன் பிற்பாடு அவளின் முன்னேற்றம் வியக்கத்தக்கதாக இருந்தது. பல்கலைக்கழகம் சென்று கணக்கியல் பட்டதாரியாகி, இன்று ஒரு தொழிற்சாலையின் நிர்வாகக்கட்டமைப்புக்குத் தலைமை தாங்குகின்றாள். அவளுடன் பள்ளியில் படித்தவர்கள் எல்லாம் எங்கோ தங்கிவிட அவள் கிடுகிடுவென்று முன்னேறிவிட்டாள்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் உமாவின் பாடசாலை நண்பி – மனோகரி - தன் குடும்பம் சகிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாள். குழந்தைகளின் குதூகலத்தில் வீடு மகிழ்ச்சி கொண்டது. மனோகரி, உமாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்மாற்போன் பரிசாக வாங்கி வந்திருந்தாள். ஸ்மாற்போன் வாங்கவேண்டும் என்ற உமாவின் நீண்டநாள் ஆசை நண்பியின் வரவால் தீர்ந்தது. மனோகரி தானே அதனை ‘செற் அப்’ செய்து கொடுத்தாள். அவள் அமெரிக்காவில் கொம்பியூட்டர் சயன்ஸ் படித்திருந்தாள்.

பாடசாலையில் படிக்கும் காலங்களில் மனோகரி முதல் மூன்று மாணாக்கருள் ஒன்றாக வந்துவிடுவாள். உமா பதினைந்திற்குள் வருவாள். எப்படி அமெரிக்காவிற்கு ஏனைய நாடுகள் முதன்மையான இடத்தில் இருப்பது பிடிக்காதோ…. அப்படியே மனோகரிக்கும். வந்த அன்றிரவே கேள்விகளைத் தொடங்கிவிட்டாள்.

“எங்கை உம்முடைய கொன்வகேசன் சேர்டிபிக்கற் படங்கள் எல்லாத்தையும் காட்டும் பாப்பம்?”

அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மனோகரியின் முகம் மழை முகிலாகிவிட்டது. கறுத்துப் போன முகத்தில் கண்கள் சூரியன் போல் தகதகவென மின்னியது. முகத்தை சிலநிமிடங்கள் வேறு திசையில் வைத்திருந்தாள் அவள்.

மனோகரி அமெரிக்கா போய்விட்டதன் பின்னர், ஒருநாள் நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டிருக்கலாம். உமா படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருப்பதை சிறீபாலன் கண்டுகொண்டான்.

“என்ன பேஸ்புக் பார்க்கின்றீரா?”

“இல்லை… இங்கே பாருங்கள்!”

அவள் காட்டிய திக்கில், அவளது ஸ்மாற்போன் தன்னுடைய பாட்டில் ஒளிர்வதையும் பின்னர் சில விநாடிகளில் மறைவதையும் கண்டான். அப்படியாக இரண்டு மூன்று தடவைகள் நடந்தன. அவர்களின் படுக்கை அறைக்குள் இருளுடன் கலந்த அந்த வர்ணஞாலம் பயத்தைக் கொடுத்தது. சிறீபாலனுக்கு அந்தக்காட்சி திகைப்பாக இருந்தாலும் உமாவின் மன ஆறுதலுக்காக, “ஸ்மாற்போன் தன்னுடைய பாட்டில் அப்டேற் செய்கின்றது” என்று சொல்லி வைத்தான்.

”உங்கடை ஸ்மாற்போன் இப்படி அப்டேற் செய்வதில்லையே?” உமாவிற்கு சிறீபாலனின் பதிலில் திருப்தி இருக்கவில்லை.

சிறீபாலனின் சமாதானம் உமாவிற்கு மட்டுமேயானது. அவனுடைய மனதிலும் பதில் காணமுடியாத கேள்விகள் எழுந்தன. இவை எல்லாம் தகவல் தொழில்நுட்பத்தின் மறுபக்கங்கள் என்றாலும் இதைச் செய்பவர்கள் யார்? ஏன் செய்கின்றார்கள்?

அதன் பின்னர் முகநூலில் போடும் பதிவுகள் எல்லாம் தனக்காகவே போடப்படுகின்றன எனப் பயந்தாள் உமா. கொம்பியூட்டரின் முன்னால் பல மணி நேரம் சுய நினைவற்றவர்கள் போல் இருந்தாள். நள்ளிரவில் திடீர் திடீரென விழிப்படைந்து, முகநூலைத் தட்டிப் பார்ப்பதும், பேயறைந்தவள் போல் இருப்பதுமாக இருந்தாள்.

“என்ன உமா? ஏன் இப்படி இருக்கின்றீர்?”
“எனக்கு ஒன்றுமில்லை!”

சிலநாட்களாக தனது முகநூலை செயற்றுச் செய்வதும், பின்னர் திரும்ப செயல்படவைத்து இடையில் ஏதாவது நடந்திருக்கின்றதா எனப் பார்ப்பதுமாக இருந்தாள்.

தனது முகநூலில் போடப்பட்ட புகைப்படங்கள் பிரதி செய்யப்பட்டுள்ளதாகவும், தான் வேலை செய்வது சார்ந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சொன்னாள்.

“உமா! அப்படியென்றால் முகநூலை மூடிவிடு!”
அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. சாப்பிடாமல் இருந்தாலும் இருக்கமுடியுமே தவிர முகநூலை மூடிவிடமுடியாது என்றாள் உமா.

மனோகரி குடுத்துச் சென்ற ஸ்மாற்போனின் பாவனையின் பின்னர்தான் இத்தகைய விசித்திரங்கள் ஆரம்பமாகின.

இப்படியான பதகளிப்பில் உமா இருக்கும்போது, ஒருநாள் அமெரிக்காவில் இருந்து மனோகரி தொலைபேசி எடுத்தாள்.

“உமா! இப்போது நீர் எங்கு வேலை செய்கின்றீர்?”

மனோகரி அவுஸ்திரேலியா வந்து போனதன் பின்னர், உமா இன்னொரு புதிய இடத்திற்கு வேலை மாறியிருந்தாள். அதை எப்படியோ மோப்பம் பிடித்திருந்தாள் மனோகரி.

“அவுஸ்திரேலியா நீர் வந்தபோதுதானே எல்லாம் சொல்லிவிட்டேன்.”

“பரவாயில்லை. இன்னுமொருக்கா சொல்லுமன். நீர் வேலை செய்யுமிடத்தில் ஸ்ரீலங்கன்ஸ் இண்டியன்ஸ் வேலை செய்கின்றார்களா?”

“மனோகரி… வெளிநாட்டுக்கு வந்ததன் பிற்பாடும் இதுகளை நோண்டிக் கொண்டிருக்கக்கூடாது.”

“சரி…சரி… அப்ப வைப்பம்.”

கதைக்கும்போது கூட யார் மனதையும் நோகடிக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருப்பவள் உமா. நம்மை நாமாக வாழவிடுகின்றார்கள் இல்லையே எனக் கவலை கொண்டாள் அவள்.

தொலைபேசி உரையாடல் முடிந்து அரைமணி நேரம் இருக்கலாம். உமா புதிதாக வேலை செய்யும் நிறுவனத்திற்கு உலகின் பல பாகங்களிலும் கிளைகள் இருந்தன. அந்தக் கம்பெனியின் அமெரிக்கக்கிளையின் புகைப்படத்தை மனோகரி தனது முகநூலில் பதிவிட்டிருந்தாள்.

இதை கணவனுக்குச் சொன்னால் விபரீதம் ஆகிவிடும் என்பதால் மூடிமறைத்தாள் உமா. ஆனால் மனதில் பல ஆயிரம் கேள்விகள் உருவாகிப் பயமுறுத்தின.

இன்னுமொரு தடவை அவர்கள் ஒரு செத்தவீட்டிற்குப் போகும்போது வழியில் ஒரே மஞ்சள் பூக்கள் பூத்த வயற்காட்டைக் கடந்து சென்றார்கள். அது ஏதோ தானியப் பயிராக இருக்க வேண்டும். அதன் அருகில் நின்று ஒரு புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட விரும்பினாள் உமா. அது ஒரு ஹைவே என்பதால் காரை நிறுத்த முடியாமல் போய் விட்டது. படம் எடுக்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்து சில மணி நேரம் இருக்கும். உமா பேஸ்புக்கைத் திறந்த போது, அதே மஞ்சள் வயற்காட்டு வெளியில் அவளது தோழி சிவானி படம் எடுத்துப் போட்டிருந்தாள். ஆச்சரியம் என்னவென்றால் சிவானி இருப்பது இருபது மணி நேரம் கார் ஓடும் தூரமான பிறிஸ்பேர்ணில். முடிச்சுக்கள் அவிழ்வது போலவும், ஒரு திகில் படத்தைப் பார்ப்பது போன்றும் இருந்தது உமாவிற்கு. மனோகரியும் சிவானியும் முகநூல் நண்பர்களாக இருப்பதைக் கண்டுபிடித்தாள். எப்படி அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்? உமாவின் மனம் சஞ்சலப்படுகின்றது. அவளா? இவளா? மனசு தராசு முள்ளாக ஆடுகின்றது.

அந்தப்படத்தை சிறீபாலனும் தன் இரண்டு கண்களாலும் பார்த்திருந்தான்.

மனோகரியின் வருகைக்கு முன்னர் கூத்தும் கும்மாளமுமாக மகிழ்ச்சியாக இருந்த குடும்பம். இன்று மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போலாகிவிட்டது. வாழ்க்கை யானை புகுந்த வயல்காடாகிவிட்டது.

உமா விதம்விதமான கற்பனைகளை தன் மன அடுக்குகளில் உருவாக்கிக் கொண்டாள். தன்னுடைய ஸ்மாற்போனிற்குள் ஒரு செயலி இருந்துகொண்டு இங்கு அவுஸ்திரேலியாவில் தன்னைச்சுற்றி நடப்பவற்றை, அமெரிக்காவில் மனோகரிக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றது என நினைத்தாள். முகநூலில் தன்னைப் பலர் உசுப்பேத்துவது போலவும், முகநூலில் உள்ள ஓட்டை உடைசலுக்குள்ளால் யாரோ புகுந்து தனக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டுவதாகவும் விரக்தி கொண்டாள். சிறீபாலனுக்குச் சொன்னவற்றை விடவும், இன்னும் நிறையனவற்றை தன்னுள் அடக்கி வைத்திருந்தாள்.
w

சிறீபாலனுக்குப் பக்கத்தில் ஒரு வெள்ளையினத்தவர் வந்து அமர்ந்தார். அவர் தன்னை டேவிட் என அறிமுகம் செய்துகொண்டார். வயது ஐம்பதிற்கு மேல் இருக்கலாம். மொட்டை விழுந்திருந்தது. மொட்டந்தலையில் சில வியர்வைத்துளிகள் கோர்த்திருந்தன. கதைக்கும்போது இடையிடையே நோய்களின் மருத்துவப் பெயர்களையெல்லாம் எடுத்துவிட்டார். நிரம்பப் படித்த அவரது இடது கையில் ஏதோ ஒன்று பூட்டியிருந்தது. வேண்டும்போது அதனால் அவரது வலது கையையும் சேர்த்துப் பூட்டிக்கொள்ளக்கூடிய கருவி அது. திடீரென்று எழுந்து தொலைக்காட்சிப்பெட்டிக்குப் பின்னால் இருந்த செக்கியூரிட்டிக்கமராவின் அருகில் சென்று வினோதமாக அதனைப் பார்த்தார்.

”இது எல்லாம் என்னத்துக்குப் பூட்டியிருக்கு என்று உங்களுக்குத் தெரியுமா?” தானாக சிறீபாலனுடன் கதையை ஆரம்பித்தார்.

“இல்லை. சொல்லுங்கள்!”

”இவை எல்லாம் என்னைக் கையும் மெய்யுமாகப் பிடிச்சு சிறைக்குள் போடுவதற்குத்தான். நான் இன்னும் கொஞ்சநாட்களில் சமூகவிரோதிகள் நாலுபேரைக் கொல்லப்போகின்றேன் என்ற திட்டத்தை எப்படியோ இவர்கள் அறிந்துவிட்டார்கள். இங்கே பூட்டியிருக்கின்ற எல்லாக் கமராக்களுக்குள்ளாலும் என்னைக் கண்காணித்தபடி இருக்கின்றார்கள்.”
சிறீபாலன் இருக்கையில் அமர்ந்தபடியே, அவருக்கு எதிராக இரண்டு அடிகள் பின்னோக்கிச் சறுக்கீஸ் விட்டு அமர்ந்தான்.

“உங்களுக்கு இன்னுமொன்று சொல்வேன். என்னுடைய மனைவி கொஞ்சநாட்களுக்கு முன்னர், நடு இரவில் நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது என்னைக் கொல்லப் பார்த்தார். எங்கள் வீட்டில் இருந்த கமராதான் அவளைப் பிடித்துக் கொடுத்தது. இப்போ ஜெயிலுக்குள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார்.”

டேவிட்டின் கதை பேச்சு எல்லாம், அவருக்குச் சம்பந்தமில்லாமல் வினோதமாக இருப்பதை உணர்ந்தான் சிறீபாலன்.

“இன்று காலை இங்கு நடந்த கூத்தைக் கேளுங்கள். ஆசிய நாட்டுப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் நிறம் தான் அவருக்கும். திடீரென்று கூக்குரல் போட்டபடி மைக்கிறோவேவை நிலத்தில் போட்டு உடைத்தார். ரெலிவிஷனை நொருக்கினாளர். அவரைத் தனித்த அறைக்குள் போட்டுவிட்டார்கள். அவர் செய்த காரியம் என்ன தெரியுமோ? தன்னுடைய உடுப்புகளை எல்லாம் கிழிச்சு எறிஞ்சுபோட்டு தன்னைத் திறந்துவிடும்படி சத்தமிட்டார், ஒன்றும் பயனில்லாது போக தனது மலத்தை எடுத்து கமராவிற்கு வீசி எறிந்தார். அறை முழுவதும் துர்நாற்றம் அடிக்கும் வண்ணம் ஜன்னல்கம்பிகள் எல்லாவற்றிலும் பரவிப் பூசினார். எனக்கு ஒரே புளுகம். இஞ்சை இருக்கிற எல்லாக் கராக்களுக்கும் இப்பிடி எறியவேணும்” சொல்லிவிட்டுக் கெக்கட்டம் போட்டுச் சிரித்தார் டேவிட். பின் சிறீபாலனைக் கூர்ந்து பார்த்து, அவர் கோபப்படவில்லை என்பதை ஊகித்துக்கொண்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.

அவரின் சிரிப்புச் சத்தம் கேட்டு உள்ளேயிருந்த பெண் தாதி வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

“டேவிட் எப்பிடி வெளியிலை போனனீங்கள். எங்களுக்குச் சொல்லாமல் வெளியிலை போகக்கூடாது என்று எத்தனை தடவைகள் சொல்லிப்போட்டம். நல்ல காலம். உங்கள் மனைவி இன்னும் வரவில்லை. கெதியில் உள்ளுக்குப் போங்கள்” திட்டியபடி டேவிட்டைக் உள்ளே கலைத்தார் அவர்.

“மனைவி ஜெயிலுக்குள் என்று சொன்னாரே!” தாதியிடம் கேட்டான் சிறீபாலன்.

“என்ன செய்வது? எல்லாருடைய கதையையும் கேட்கச் சோகமாகத்தான் இருக்கின்றது. டேவிட்டும் மனைவியும் பல வருடங்களுக்கு முன்னரே விவாகரத்துச் செய்தவர்கள். பாவம் அந்தப் பெண்மணி. டேவிட்டிற்கு இப்படியாகப் போனதன் பின்னர் திரும்பவும் அவருடன் வந்து இணைந்திருக்கின்றார். அடிக்கடி இங்கே வந்து டேவிட்டைப் பார்த்துச் செல்வார்.”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, உமா இரண்டு பெண் தாதியர்களின் நடுவே ராணி போல வந்து கொண்டிருந்தாள். அவர்கள் பின்னாலே சற்றுத் தூரத்தில் டாக்டர் தன் ஸ்டெதஸ்கோப்பைச் சுழட்டியவாறே விரைந்து வந்துகொண்டிருந்தார்.

உமா சிறீபாலனைக் கண்டுவிட்டாள். சிறீபாலன் கரையில் ஒதுங்கி நின்று உமாவின் வரவை எதிர்பார்ப்பதை தாதிமார்களும் புரிந்து கொண்டார்கள். அண்மித்ததும்,

“எப்பிடி இருக்கின்றீர்கள்? சுகனும் பரதனும் ஸ்கூலுக்கு ஒழுங்கா போறான்களா? இன்னும் இரண்டு கிழமையிலை வீட்டிற்குப் போய் விடலாம் என்று டொக்ரர் சொன்னவர்” உமா சிறீபாலனைக் கட்டித் தழுவி குதூகலத்துடன் சொன்னாள்.

அவளின் உடல் சுகந்தம் வீசியது. தலைமயிரின் ‘பன்ரீன் புறோபீன்’ வாசம் நறுமணவட்டம் எழுப்பியது. குளித்து முழுகி உடல் எங்கும் ஸ்பிறே சிவிறி ஒரு மகாராணியைப் போல நின்றாள். வீட்டில்கூட இப்படி அவள் இருந்தது கிடையாது.

டாக்கடர் சிறிது நேரத்தில் சிறீபாலனைச் சந்திப்பதாகக் கூறிச் சென்றார்.
“சாப்பாட்டைக் கவனியுங்கோ. வேலைக்கு ஒழுங்காப் போய் வாருங்கோ. என்னைப்பற்றி ஒன்றுக்கும் ஜோசிக்க வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளில் வீட்டிற்கு வந்துவிடுவேன்” விடைபெற்றாள் உமா. சிறீபாலனிற்கு எல்லாமே வியப்பாக இருந்தது.

டேவிட் சொல்லிச் சென்ற ஆசியநாட்டுப் பெண், சிறீபாலனின் மூளைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அவன் சொன்னவற்றுள் எது உண்மை, எது பொய் என்று சிறீபாலனின் மனம் அசை போட்டது.

சிறிது நேரத்தில் வைத்தியரிடமிருந்து சிறீபாலனுக்கு அழைப்பு வந்தது.

“உமாவில் சிறிது சிறிதாக முன்னேற்றங்கள் தெரிகின்றது. இப்போது மருந்துகள் சாப்பிடுகின்றார். ஷொக் றீற்மன்ற் தேவையில்லை என நினைக்கின்றேன்” வைத்தியர் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடைமறித்தான் சிறீபாலன்.

”டொக்ரர் உமாவை முற்று முழுதாகக் குணப்படுத்த முடியாதா?”

சிறீபாலனின் கேள்விக்கு வைத்தியர் புன்முறுவல் செய்தார்.

”நீங்கள் அறாறட் (Ararat) என்ற இடத்தில் இருக்கும் புத்திசுவாதினமுற்றவர்கள், பைத்தியங்கள் தங்கும் விடுதியைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

மெல்பேர்ணில் இருந்து இருநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில்தான் இந்தக் காப்பகம் இருக்கின்றது. 130 வருடங்களில் 13,000 இறப்புகள் இங்கே நடந்திருக்கின்றது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? நோயாளிகள் மாத்திரமின்றி அவர்களின் உறவினர்கள், காவலாளர்கள், வேலை செய்பவர்கள்கூட அங்கே இறந்திருக்கின்றார்கள். 1998 ஆம் ஆண்டுவரை இந்த விடுதி இயங்கியிருக்கின்றது. முன்பெல்லாம் வைத்தியசாலையில் இவர்களுக்கென்று தனிப்பிரிவு இருந்ததில்லை. எல்லோரும் இந்தக் காப்பகத்துக்குள்தான். இப்போது தொழில்நுட்பமும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. இந்தவகை நோயாளர்களும் அதிகரித்துவிட்டார்கள்.”

வைத்தியர் சிறீபாலனின் கேள்விக்கு பதில் தராமல் சுற்றி வளைத்து எதோ சொல்லிக் கொண்டிருந்தார். சொல்பவற்றில் பதிலைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை சிறீபாலனிடம் விட்டுவிட்டார்.

”இன்று காலை வேலைக்கு வந்து அரைமணி நேரத்திற்குள் ஒருவர் வீட்டிற்குத் திரும்பிவிட்டார். காரணம் முகநூல். முகநூலில் யாரோ அவரைப்பற்றி அவதூறாக எழுதிவிட்டார். அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல், தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் இருந்ததால் லீவைப் போட்டுவிட்டுப் போய்விட்டர். வேலை செய்யுமிடங்களில் இவற்றைப் பாவிக்காதீர்கள் என்று சொன்னாலும் சிலர் கேட்பதாகவில்லை.”

”டொக்ரர்….! முகநூல், ருவிட்டர் மூலம் சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் அகப்பட்டவர்களை மீட்டெடுத்து காப்பாற்ற முடிந்திருக்கின்றதே!” சிறீபாலன் மறுத்தான் போட்டான்.

:உண்மைதான்…. அதனால்தான் - எதையும் தாங்கும் தைரியம் இல்லாதவர்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை பாவிக்காது தவிர்த்துவிடுதல் நல்லது என்று சொல்லி வருகின்றேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ரஷ்சியாவில் உயர் ரகசியங்களைப் பேணும் இடங்களில் எல்லாம் இப்போது இந்தவகை தொழில்நுட்ப சாதனங்களைப் பாவிப்பதில்லை. தட்டச்சு செய்வதற்குக்கூட கொம்பியூட்டர் பாவிப்பதில்லை. பழைய டொக்குடா ரைப்றைட்டர்தான்.”

தொடர்ந்தார் வைத்தியர், “நாங்கள் இங்கே நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மாத்திரம் கொடுப்பதில்லை. நம்பிக்கையூட்டும் விதத்தில் அவர்களுடன் உரையாடுகின்றோம். அதன் தொடர்ச்சியை நீங்களும் செய்தல் வேண்டும். சமூகத்தில் இதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை பரவச் செய்யுங்கள். உமா விரைவில் வீடு வந்துவிடுவார். இனி அவரைப் பின் தொடரும் டாக்டர் நீங்கள் தான்.”

சிறீபாலனுக்கு நம்பிக்கை பிறக்கின்றது.

வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக உமாவின் அந்தப் பிசாசு பிடித்த ஸ்மாற்போனை ஒரு பொலித்தீன் பைக்குள் போட்டு பேப்பரினால் சுற்றி வைத்தான்.

மறுநாள் வேலைக்குச் செல்லும்போது காரை ’யாறா’ ஆற்றுக்கு அண்மையாக நிறுத்தினான். தலையைச் சுற்றி உமாவின் போனை மூன்றுதடவைகள் சுற்றிவிட்டு தண்ணீருக்குள் எறிந்தான். குமுறிக்கொண்டிருந்த ‘யாறா’ நதி, 1400 டொலர்கள் பெறுமதிவாய்ந்த அந்த ஸ்மாற்போனை உள்வாங்கிக் கொண்டது. சிறீபாலன் பொக்கற்றுக்குள்ளிருந்த தனது ஸ்மாற்போனைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.
w
ஞானம் (தை - 2019) 


No comments:

Post a Comment