இந்த வருடம் (2019) `எதிர்’ வெளியீடாக வந்திருக்கும், கோமகனின்
‘முரண்’ சிறுகதைத்தொகுதியை ஆர்வமாக வாசித்தேன். சில கதைகள் புதிய அனுபவத்தைத்
தந்தன. சில கதைகள் பழகிய தடத்திலே ஓடிச் சென்றன. சுற்றுப்புறச் சூழல் மாசடைதல்,
சமுதாயச் சீர்கேடு, ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவுகள், அகதி வாழ்வு எனப் பல
வகைப்பாடுகளில் கதைகள் அமைந்திருந்தன. மனிதர்களுடன் அஃறிணைகளும் கதைகள் பேசின.
முதலாவது கதை ‘அகதி’
ஒரு புறாக்கதை எனப்பிடிபட சற்று நேரமாகிவிட்டது. ‘நான் எனது மனைவி மற்றும்
எமக்குப் பிறந்த 10 மக்களும்…’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், ‘ஒருநாள்
பல்கனியில் எனது சகதர்மினி முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து
கொண்டிருந்தாள்’ என்ற பத்தி வந்தபோதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. புறா ஒரு நேரத்தில்
ஆகக்கூடியது எத்தனை முட்டைகள் இடும்?
கதையில் நான்கு முட்டைகள்
எனக்குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆமை புகுந்த வீடு (கல்லாமை, பொறாமை, இயலாமை,
முடியாமை) உருப்படாது என்று சொல்வார்கள். இந்தக்கதையில் புறாக்கள். கதையில்
‘ஒர்லியன்’ என்ற பிரான்ஸ் தேசத்து நகரம் பற்றியதொரு குறிப்பு வருகின்றது.
‘வன்னிப்பெருநிலம் எப்படி சரத் பொன்சேகாவின் தலைமையிலான படையணிகளால்
மீட்கப்பட்டதோ, அவ்வாறே இந்த ஒர்லியன் நகரை நாஸிகளின் பிடியில் இருந்து
மீட்டெடுத்த பெருமை ஜெனரல் பத்தோன் தலைமையிலான படையணியையே சார்ந்ததாக
வரலாற்றுக்குறிப்பேடுகள் சொல்கின்றன’. இந்த ஒப்பீட்டை – கதையாசிரியர் கொஞ்சம்
கவனித்துப் பார்க்க வேண்டும். இந்த ஒப்பீடு கண்டனத்துக்குரியது என்பது எனது
கருத்தாகும். மற்றும் இந்தக்கதைக்கான
தலைப்பு ‘அகதி’ என்பது அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை. நகரமயமாக்கலினால் –
விலங்குகள், பறவைகள் தமது வாழ்விடங்களை விட்டு அல்லல்பட்டு அகதிகளாக்கப்படுவதை
அறிவோம். சொல்லவந்த விடயம் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.
கதைக்குள் முரண்கள் இருக்கலாம். கதையே முரணாக
இருக்கலாமோ? `முரண்’ கதை அதைத்தான்
சொல்கின்றது. ஒருபால் உறவு கொண்டதால்தான் அவருக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பது
ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று. ஒருபால் உறவும் சுயமைதுனம் செய்வதும் மலட்டுத்தன்மையை
ஏற்படுத்தாது என வைத்தியர்கள் சொல்கின்றார்கள். மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
அவற்றுள் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம்.
‘தகனம்’ –
இது ஒரு சுடலை சொல்லும் கதை. காலாதிகாலமாக நடைபெறும் சுடலை விவகாரம். பிறப்புமுதல்
இறப்புவரை, வழிபாட்டிடங்கள் ஈறாகத் தொடரும் அவலம். எள்ளல் நடையுடன் கூடிய கதை.
நல்லதொரு முடிவு.
`டிலிப் டிடியே’ -
அழகாக தெளிந்த நீரோடை போன்று ஓடிசென்ற கதை, திடீரென்று என்ன நடந்ததோ வழிமாறி சுருண்டு
படுத்துவிட்டது. பின்பகுதி தேவையிலாத கற்பனை. ஒரு அருமையான படைப்பாக வந்திருக்க
வேண்டியது, குறைப் பிரசவமாகிவிட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் `ஏறுதழுவுதல்’ மிகவும் சர்ச்சையாகிப்
போனது. அந்த நேரத்தில் எழுதப்பட்ட கதையாக இது இருக்கலாம். மாடுகளுக்கு நேரும்
அவலங்களை சொல்லிச் செல்லும் சுவையான கதை, விலங்கினங்களுக்கான அவலங்களை `எள்ளல்’
நடையுடன் நகர்த்திச் செல்கின்றார் ஆசிரியர். மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும்
அவலங்களை ஒவ்வொன்றாக மாடுகள் அடுக்குகின்றன. இந்தக் கதையில் முரணின் உச்சத்தை நாம்
பார்க்கலாம். ‘ஒரு புறத்தில் எம்மை வணங்கியவாறே எம்மை சித்திரவதை செய்கின்றார்கள்
மனிதர்கள்’ என அவை ஓலம் எழுப்புகின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போல, இது ஒரு
கட்டுரையாகிப் போய்விடுமோ என நினைத்தேன். நல்லவேளை சுவையான கதையாக்கிவிட்டார்.
ஒரு காலத்தில் நாம் இந்த வாழ்க்கையை
அனுபவித்திருக்கின்றோம். `ஆக்காட்டி’ என்பது
நரகத்தின் முள். ஒரு தலையாட்டிலில் எத்தனை பேரின் வாழ்க்கை கவிழ்ந்து போய்
இருக்கின்றது. அடி அகோரத்தில், ஆக்காட்டிகள் தவறான மனிதர்களையும் தலையாட்டியிருக்கின்றார்கள்.
இயக்கம் அல்லாது, தமக்குப் பிடிக்காத மனிதர்களையும் ஆக்காட்டிகள் தலை
ஆட்டியிருகின்றார்கள்.
`வெடிப்பு’
சிறுகதை சரியாக அமையப் பெறவில்லை.
`மாதுமை’
சிறுகதையில் வரும் சம்பவங்கள் போல, பல நம்மவர்களிடையே புதைந்து உள்ளன. அகதியாக பல
இன்னல்கள் பட்டு வந்து சேரும் ஒவ்வொருவருக்கும் தமது குடும்பத்துடன் இணைந்து
கொள்வதற்கு படும் பாடு சொல்லமுடியாதது. ‘ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான்;
அங்கே யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்’ என்பதைப் போல தயவுதாட்சண்யமின்றி
எவ்வளவோ நடந்திருக்கின்றன. அல்ஜீரியா, இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்வதற்கு முனையும்
ஒரு தாயினதும் மகளினதும் உயிரோட்டமான விறுவிறுப்பான கதை இது.
காலம் மனிதனை எப்படி எல்லாம் கட்டிப் போட்டுவிடும்
என்பதற்கு உதாரணமாக `பருப்பு’ என்ற
கதை. இந்திய அமைதிகாக்கும் படையினரின் அட்டூழியங்கள் எல்லாம் சேர்ந்து `பருப்பை’
விரட்டியடித்து பிரான்ஸ் செல்ல வைக்கின்றன. அங்கும் அவனுக்கு வாழ்க்கை சரியாக
அமையவில்லை என்பதைச் சொல்கின்றது இந்தக்கதை..
`சுந்தரி’ சீட்டை
மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. முடிவு என்னவோ வலிந்த முடிவாகத்
திணிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பில் `மாதுமை’, ‘பருப்பு’, `சுந்தரி’ போன்ற சில
கதைகள் – கதை கொண்டிருக்கும் கருவுக்கு, முடிவுகள் தொடர்பற்று இருக்கின்றன. சரியான
தீர்வுகள் கிட்டவில்லை. சும்மா எழுந்தமான முடிவுகளைத் தந்து விடுகின்றார்.
வித்தியாசமான உத்திகளுடன் எழுதப்பட்டுள்ள கதைகளை வாசித்துக் கொண்டுவந்த எனக்கு,
இந்த மூன்று கதைகளும் ஏமாற்றத்தைக் தந்தன. இந்தக் கதைகளின் ஆரம்பம் ஒரே மாதிரி
அமைந்ததுடன் சொல்லும் முறைமையும் ஒரே மாதிரி அமைந்தது கண்டேன். தலைப்பு முதல்
கொண்டு இவை மூன்றிலும் புதுமையே இல்லை.
வாழ்க்கையின் முரண்களை கருப்பொருளாக வைத்துக்கொண்டு, மேய்க்க
முடியாத சங்கதிகளையெல்லாம் ஒரு நுகத்தடியில் கட்டி, வண்டிலில் போட்டு
மேய்ந்திருக்கின்றார் கோமகன். சொல்வதற்கு தயங்கும்/அச்சப்படும்/ கூசும் விடயங்களை
சாவதானமாக எடுத்துக்கொண்டு ஒரு அலசு அலசியிருக்கின்றார். வித்தியாசமான முயற்சி.
நன்றி: http://malaigal.com/ (166)
நன்றி: http://malaigal.com/ (166)
No comments:
Post a Comment