Saturday, 20 April 2019

`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை


 
கடந்த இருபது வருடங்களாக ‘ஞானம்’ சஞ்சிகை இலங்கையிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் ஏற்கனவே `புதிய சுவடுகள்’, `குருதிமலை’, `லயத்துச் சிறைகள்’ போன்ற நாவல்களைத் தந்தவர். `எரிமலை’ நாவல் ஞானம் பதிப்பகத்தின் 53வது வெளியீடாக வருகின்றது.

ஈழ போராட்டம் எழுச்சி கொண்டு, பின்னடைவாகிப் போய்விட்ட தற்போதைய நிலையில், நடந்து முடிந்துவிட்ட சரித்திர நிகழ்வுகளின் ஒரு காலகட்டத்தை இந்த நாவல் பேசுகின்றது.

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை அனேகமாக இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையிலும், இதற்கு முன்னர் பல படைப்புகள் வந்துவிட்ட நிலையிலும் இந்த ‘எரிமலை’ நாவல் புதிதாக என்ன சொல்லிவிடப் போகின்றது என நினைத்துக்கொண்டு – நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘ஈழப்பிரச்சினை’ எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் உட் சூக்குமம் பொதுவாக பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதையே இந்த நாவல் பேசுகின்றது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டுதான் தமிழர்க்கான பிரச்சினைகளின் தொடங்குபுள்ளியும் ஆகும். போத்துக்கிசரின் வருகையிலிருந்து 1984 ஆம் ஆண்டுவரைக்குமான கால இடைவெளியில் உறைந்து கிடக்கும் உண்மைகளை நாவல் ஆராய்கின்றது.

முதலில் எங்கே சறுக்கல் ஆரம்பித்தது? அதன் பின்னர் நாம் விட்ட பிழைகள் என்ன என்பவை பற்றி தெரிந்துகொண்டு அதிலிருந்து புதிதாக என்ன செய்யலாம் என்பது பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றது. ஒரு எழுத்தாளர் எந்த ஒரு கட்சியின் சார்பற்றும் இருக்கும்போது, அவரது படைப்புகளில் ஒழிப்பு மறைப்புகள் இருக்காது நடுநிலை பேணும் தன்மை காணப்படும். அதுவும் இந்த நாவலில் ஒரு சிறப்பு எனலாம்.

84 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் 35 வருடங்கள் கழித்து தற்போது (2018) வெளிவருவதாக நாவலாசிரியர் தனதுரையில் குறிப்பிடுகின்றார். காலம் தாழ்த்தி வந்தாலும் இனப்பிரச்சினையை சரியானதொரு கூர்ந்த அணுகுமுறையில் சொல்லிச் செல்கின்றது நாவல். தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் உரையாடலை நகர்த்திச் செல்ல கை கொடுக்கின்றது. அத்துடன் நாவலின் களம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு - ஒரு இளைஞன் தன் காலில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காயத்திற்கு சிகிச்சைபெற, தன் இரு கூட்டாளிகளுடன் டொக்டர் மகேசனின் வீட்டிற்கு வருவதில் இருந்து கதை ஆரம்பிகின்றது. டொக்டர் மகேசனும் அவரது மனைவி டொக்டர் மாலாவும் தனியார் மருத்துவமனை ஒன்றை நிர்வகித்து வருகின்றார்கள். தனியார் மருத்துவமனை அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கின்றது. சம்பவம் நடந்த மறுநாள் மகேசனின் தம்பி சந்திரனும், அவனது சிங்கள நண்பர்கள் விமல்சிறி (பிஸ்னஸ் மனேஜ்மண்ட் கொன்சல்டன்), அவரது மனைவி (சமூகவியல்துறைப் பேராசிரியர், எழுத்தாளர்), மனைவியின் தங்கை அனுலா (ஸ்டெனோ) ஆகியோர் வர இருக்கின்றார்கள். இப்படியான இக்கட்டான சந்தர்ப்பத்தில், துப்பாக்கிமுனையின் நெருக்குதலில் கதை விறுவிறுப்பாகத் தொடங்குகின்றது.

ஆரம்பத்திலேயே சந்திரனுக்கும் அனுலாவிற்கும் காதல் இருப்பதை அனுமானிக்க முடிகின்றது.

ஒருபுறம் காயப்பட்டவன், மறுபுறம் விருந்தாளிகள். இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றார்கள் மகேசனும் மனைவியும்.

டொக்டர் குடும்பத்தினருக்கு சமையல், கார் டிரைவர் எனப் பல தொட்டாட்டு வேலைகள் செய்து வருபவர் இந்திய வம்சாவளியான மாரிமுத்து. அவரது உதவியுடன் கராச்சிற்குப் பக்கத்தில் இருக்கும் அறையில் காயப்பட்டவனை இரகசியமாகப் பராமரிக்கின்றார் டொக்டர் மகேசன்.

காயப்பட்டவன்---பாலா---மருத்துவம் படிப்பதற்கு தகுதி இருந்தும், 1971 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தரப்படுத்தல் காரணமாக பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் மாணவர் பேரவையில் சேர்கின்றான். சிறை செல்கின்றான். சித்திரவதைகளுக்கு ஆளாகின்றான். பின்னர் போராடப் புறப்படுகின்றான்.

செல்லையா மாஸ்டர் நாவலில் வரும் இன்னொரு முக்கிய பாத்திரம். அவர் சாத்வீகம் சார்ந்தும், அவரது மகன் தனபாலன் ஆயுதப் போராட்டம் சார்ந்தும் கதைப்பது குடும்பத்திற்குள்ளேயே அரசியல் மாற்றங்கள் நிகழ்வதைக் காட்டுகின்றது.

நீண்டதொரு அரசியல் வரலாற்றில் கட்டம் கட்டமாக நடந்த சம்பவங்கள் (இயக்கர் – நாகர், விஜயனின் வருகை, இந்தியத் தமிழர்களின் வருகை, அவர்களின் வாக்குரிமை ஏன் பறிக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள், இந்து/ புத்த மத ஒற்றுமை, தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், தனிச்சிங்களச் சட்டம், சேகுவேரோ இயக்கம், 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாடு, யாழ்ப்பாண நூலக எரிப்பு) நாவலில் உரையாடல் மூலம் சொல்லப்படுகின்றன. ஒரு காலத்தில் திண்ணை, மரத்தடியில் நாலுபேர்கள் சந்தித்து  கதைத்து விவாதித்தது போக, பின்னர் கதைப்பதற்கே நேரமின்றி ஒடி ஓடி இடம்பெயர்ந்ததும் அல்லல்பட்டதும் நினைவிற்கு வருகின்றன.

நான் இதற்கு முன்னர் வாசித்த பெரும்பான்மையான நாவல்களில் 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் தான் முதன்மை பெற்றிருந்தது. இந்த நாவல் 1983 ஆம் ஆண்டு ஜீலை இனக்கலவரத்தைத் தொடர்ந்த, அடுத்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்ற போதிலும் அவை பற்றிய தகவல்கள் பெரிதும் இல்லை. 1977 இல் நடந்த இனக்கலவரம் பற்றிய தகவல்களே மிகுந்து காணப்படுகின்றன. 1977 இல் டொக்டர் மகேசனும் மனைவியும் அனுராதபுரம் அரசினர் மருத்துவமனையில் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். அந்த இனக்கலவரத்தின் பின்னர் அவர்கள் வேலையை இராஜினாமாச் செய்துவிட்டு யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

`எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவிற்குமிடையேயான யுத்தம் ஒரு இனவாத போராட்டமல்ல’; `ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னரே பிரிவினைகள் தோன்றின’; `சமஷ்டி அரசியலமைப்புத்தான் இலங்கைக்கு சிறந்தது என்ற கோரிக்கையை சிங்களவர்களே முதலில் வைத்தார்கள்’ போன்ற குறிப்புகள் நாவலில் வருகின்றன.

நாவலின் முடிவில் வரும் கிழவி பாத்திரம் மனதில் நின்றுவிடுகின்றாள். அவளே நாவலை சுமுகமாக நிறைவும் செய்கின்றாள்.

புகைந்து கொண்டிருக்கும் எரிமலை - 1958. 1977, 1983 எனப் பல தடவைகள் சீற்றம் கொண்டிருக்கின்றது. கடைசியாக 2009 இல் சீற்றம் கொண்டபோது எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டுவிட்டது.

நாவலை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தால் - சிங்கள மக்களும், புலம்பெயர்ந்தவர்களின் இளம் சந்ததியினரும், பிற இனத்தவரும் வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். மற்றும் 1984 ஆண்டிற்குப் பிற்பட்ட நிகழ்வுகளை நாவலின் இரண்டாம்பாகமாக எழுதி நிறைவு செய்யவேண்டும் என்பது என் பெருவிருப்பாகும். 

1 comment:

  1. அருமையான கண்ணோட்டம்.
    பாராட்டுகள்!

    ReplyDelete