குருவின்
சதி
தாழையடி
சபாரத்தினம்
அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன்.
அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும்
வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும்
வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன்.
திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும்
முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல; அழகன் என்பதையும் பறை சாற்றிக் கொண்டிருந்தன.
அவன் வேறு யாருமல்ல; பாண்டவர்களிலே வீமனுக்கு இளையவனான அர்ச்சுனன் தான்.
காட்டினூடே அவன் கண்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்தன.
வேட்டையாடுவதில் அவ்வளவு அக்கறை அவனுக்கு. வேங்கையைக் கூட விரட்டியடிக்கும்
நாயொன்று எஜமானுக்கு உதவியாக அங்குமிங்கும் ஓடி ஓடி மோப்பம் பிடித்துத் தகவல்
தெரிவித்துக் கொண்டிருந்தது.