Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, 15 September 2026

நாய்ப்பிழைப்பு - குறுங்கதை

 

றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான்.

கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் 'ஷொப்பிங் பாக்'கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில வேளைகளில் மூச்சு இரைத்தபடி நாய் அவனை முந்திச் செல்வதையும் காணலாம்.

"என்ன நாயொண்டு வாங்கியிருக்கிறாய் போல?" வேலை செய்யுமிடத்தில் றோமனைக் கேட்டேன்.

அது தன்னுடைய பெண் சினேகிதி றெக்ஷ்சினுடைய நாய் 'ஷீலா' என்றான். விவாகரத்துப் பெற்று இருபது இருபத்தைந்து வருடங்களின் பின்பு ஒரு சினேகிதி கிடைத்திருந்தும், அவளது நாயைத்தான் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று கவலைப்பட்டான். உடற்பயிற்சியும் அளவான சாப்பாடும் உடலுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை றோமனைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

இன்று எனக்கு ஒரு வினோத அனுபவம் கிட்டியது. நாய் பற்றிய அறிவு எனக்கு 'கம்மி'தான் என்றாலும், அவற்றின் நிறங்களை வேறுபடுத்தும் திறனில் குறைவில்லை. முதல் இரண்டு ரவுண்டில் வெள்ளை நிறத்தில் ஓடிய ஷீலா, அடுத்த இரண்டு ரவுண்டிலும் கறுப்பு நிறத்தில் ஓடியது. ஐந்தாவது ரவுண்டில் றோமனை மடக்கிப் பிடித்து விஷயமறிய வாசலுக்கு விரைந்தேன்.

அதிர்ச்சி காத்திருந்தது ஐந்தாவது ரவுண்டில். ஷீலா தன் வெள்ளை நிறத்திற்கு கறுப்புப்பொட்டுகள் போட்டுக் கொண்டு ஓடியது. எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகத்தை றோமனிடம் கேட்டேன். முதலில் அவன் மூச்சிரைக்க சிரித்தான். பின்னர் விலாவாரியாக விளக்கம் தந்தான்.

"முதலில் ஓடியது ஷீலா. அது லப்பிறடொர் (Labrador) இனம்.

அடுத்து போனது மாலா. அது பிற்புல் (Pitbull) இனம்.

இது ஷரன். டல்மேஷன் (Dalmatian) இனம்."

"அப்ப உனக்கு இப்பொழுது மூன்று கேர்ள் ஃபிரண்டா? என்ற எனது நியாயமான கேள்வியை அவன் முன் வைத்தேன்.

சிரித்து விட்டு, "இல்லை... இல்லை. றெக்ஷ் எனக்கு இன்னும் இரண்டு கஸ்டமர்ஷை பிடித்துத் தந்திருக்கின்றாள்" என்றான் றோமன்.

"வாடிக்கையாளர்களா?"

"ஆமாம். ஒவ்வொரு நாயிற்கும் இருபது நிமிடங்கள் ஓட்டிச் செல்வதற்கு பத்து டொலர்கள் வீதம் வாங்குகின்றேன். நாய்ப்பிழைப்பு அப்பிடியொன்றும் இலகுவான காரியமல்ல. சிலவேளைகளில் ஓட வரமாட்டேன் என்று அடம் பிடிக்குங்கள். சிலசமயங்களில் துணை ஒன்றைக் கண்டுவிட்டால் ஓடுவதைக் குழப்பிவிட்டு குறுக்காலை போய் விடுங்கள். பொறுத்த இடத்திலை சூவும் அடிச்சிடுங்கள்" விளக்கம் தந்தான் றோமன்.

"ஒருமுறை எனது பெண் தோழியின் நாய், ஷீலா, எனது படுக்கை அறைக்குள் புகுந்து கொண்டது. போகமாட்டேன் என அடம் பிடித்து அங்கேயே படுத்தும் விட்டது. விட்டேன் ஒரு உதை. எனக்கு நாய்கள் என்றால் பிடிப்பதே இல்லை. விசர்தான் வரும்."

"அப்படியென்றால் உங்களுடைய கேர்ள் ஃபிரண்டிடம் இருந்தும் பணம் வாங்குகின்றீர்களா?" என்ற எனது வியப்பிற்கு

"ஆமாம் நட்பு வேறு. வியாபாரம் வேறு. Friendship is different from business" என்றான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அவனுடைய மனைவி ஏன் றோமனை விட்டுப் பிரிந்தாள் என்பது இப்போது புரிந்தது. இப்போதெல்லாம் அவனைப் பார்க்கும் போதும் நாய்தான் நினைவுக்கு வருகின்றது. என்ன ஒரு வித்தியாசம். நாக்கு தொங்குவதில்லை.

Friday, 17 July 2026

“எனக்கு உன்னைத் தெரியாது” – சிறுகதை

 

இரவு  மணி பத்தாகிவிட்டது. இன்னமும் மோகன் வீடு வந்து சேரவில்லை. வேலை அலுவலாகச் சற்றுப் பிந்தும் என்று சொல்லியிருந்தான், என்றாலும் இதற்குள் வந்திருக்க வேண்டும். நளாயினி போன் செய்தபோது மோகனின் மொபைல்போன் சுவிச் ஓஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு துடித்துப் போனாள். எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் மோகன் வேலை முடிந்து பிந்தி வருவதுண்டு. அந்த வேளைகளில் அவன் கொஞ்சம் மதுவும் அருந்தியிருப்பான்.

என்ன செய்வது? குழந்தையின் தேகம் அனலாகக் கொதித்தது.

நளாயினி தன் குழந்தையை மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு, பின்புறமிருந்த வீட்டிற்குச் சென்று கண்ணீர் விட்டாள். மோகன் எங்கே போயிருக்கின்றான் என்று சரியாகத் தெரியாதபடியால் அவர்களால் நளாயினிக்கு உதவ முடியவில்லை.

வீட்டிற்குத் திரும்பிய நளாயினி இரவு முழுவதும் விழித்திருந்து, ஒரு மூலையில் குழந்தையுடன் ஒடுங்கிப் போயிருந்தாள்.

அன்று இரவு முழுவதும் மெல்பேர்ண் சிற்றியில் அலைந்து திரிந்துவிட்டு விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு ரக்‌ஷியில் வந்து இறங்கினான் மோகன்.

“இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீர்கள்?” அழத் தொடங்கிவிட்டாள் நளாயினி.

“குழந்தாய்…. நான் சுவாமி தரிசனம் முடித்து வந்திருக்கின்றேன்” பக்தியின் குரலை முன் வைத்தான் மோகன்.

Wednesday, 8 July 2026

யெளவனம் – சிறுகதை

               

கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக் கொண்டான்.  'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம் இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். அவள் அருகே பையன் ஒருவனைத் தூக்கி வைத்திருந்தபடி சேலை அணிந்த இன்னொரு வயது முதிர்ந்த பெண்.

அந்த இளம் பெண் ஒரு கலைப்படைப்பு. அப்படித்தான் இருக்க வேண்டும். அடிக்கடி சட்டையை மேலும், பாவாடையைக் கீழும் இழுத்து விட்டுக் கொண்டாள். இரட்டைப் பின்னலைத் தூக்கிப் பின்னாலே எறிந்து கொண்டாள். இரட்டைப்பின்னலுக்கு தப்பிய முடி, புகையிர நிலையத்தின் செயற்கை ஒளியில் பொன்னிறமாகத் தகதகத்து காற்றினில் துடித்துக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த 'லிப்ஸ்டிக்'கை எடுத்து உதட்டருகே கோடிழுத்துக் கொண்டாள். உதடுகளை மேலும் கீழும் அசைத்து சப்புக் கொட்டி அழகு காட்டினாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருபது, இருபத்திரண்டு வயது இருக்கலாம்.

இவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். புகையிரதம் புறப்படுவதற்கு இன்னமும் இரண்டோ மூன்று நிமிடங்கள்தானிருந்தன. புகையிரதம் கொஞ்சம் தாமதித்துப் புறப்பட்டால் நல்லது போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனம் பரபரப்படையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் மறைந்து விடுவாள்.

புகையிரதம் புறப்படுவதற்காகக் கூவியது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

Friday, 8 May 2026

மவுஸ் – சிறுகதை

காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.


செய்தி இதுதான்.

|
காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|

•

எத்தகைய இருட்டடிப்பு இது!

இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

•
ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.

இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.

அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன். முதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.

Friday, 1 May 2026

"ததிங்கிணதோம்" - சிறுகதை

 


சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

"தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

Tuesday, 14 April 2026

எதிர்பாராதது! - சிறுகதை


நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.

Friday, 20 March 2026

மாதுளை மரம் - எனக்குப் பிடித்த கதை

 

T . தம்பிமுத்து
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T . தம்பிமுத்து எழுதி 'நியூ யோர்க்கர்' சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை :The pomegranate tree.

தமிழில்: எழுத்துக்கினியவன்

சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான்.

விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கருப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!”

ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை.

மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம்.

ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதட்டமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் - எங்கள் மைத்துனன் - ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார்.

ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத 'நிலாவரை' கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார்.

Friday, 13 March 2026

வேடம் தாங்கல் - சிறுகதை


அசோகன் புரண்டு புரண்டு படுத்தான். உறக்கத்திற்கும் விழிப்புக்குமிடையே மனம் பெண்டூலமாக ஆடிக்கொண்டிருந்தது. அலாரம் வைத்துவிட்டுப் படுத்தும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அலாரம் என்பது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மாத்திரம் தான்.

கடந்த சில வருடங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த `அந்த’ வீதி புனரமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வர இருந்தது. `அந்த’ வீதியின் பெயரை உச்சரிப்பதற்கே பலருக்கும் தயக்கமாக இருந்தது. வருடத்திற்கு குறைந்தது ஏழெட்டுப் பேரையாவது காவுகொள்ளும் அந்த வீதியின் கூனலைத் தட்டி நிமிர்த்த, அரசு இன்று அனுமதி வழங்கிவிட்டது.

அந்தத் திட்டத்தின் முக்கியமான முதன்மை எதிரி பறவைகள் என்றால் நீங்கள் வியந்து போவீர்கள்! அலாஸ்க்கா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் இருக்கும் சில பறவைகள், அங்கே நிலவும் குளிர் காலநிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இங்குள்ள வெப்பத்தை நாடி வலசை வருகின்றன. ஏறக்குறைய 35 விதமான 2 மில்லியன் நீர்ப்பறவைகள் இப்படி வருடாவருடம் வந்து போகின்றன. அவை அந்த வீதிக்கு அருகாமையில் இருக்கும் காடுகளில் தமது வசந்தகாலத்தைக் குதூகலமாகக் கொண்டாடி ஞாபகச்சின்னமாக இனவிரித்தியும் செய்துகொண்டு, இங்கே குளிர்காலம் ஆரம்பிக்கும்போது மீண்டும் தமது பழைய இடங்களுக்குத் திரும்புகின்றன.

பறவைகளுக்குச் சார்பாக வாதாட `விலங்குகள் – பறவைகள்’ நலன் பேணும் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. எப்பொழுதெல்லாம் விபத்து நடந்து பிரச்சினை வலுக்கின்றதோ, அவர்கள் அவுஸ்திரேலியாவின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் மோப்பம் பிடித்து வரிசைகட்டி வந்துவிடுவார்கள். விபத்து நடக்கும் வீதியின் இருமருங்கிலும் நின்று, பதாகைகளை ஏந்தியவண்ணம் தமது கண்டனங்களைத் தெரிவிப்பார்கள். விபத்து நடக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மரங்களைத் தறிப்பதால் காட்டின் சில பகுதிகள் பறிபோகும், பறவையினங்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், வலசை வரும் பறவைகளின் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் என்பது அவர்களின் விவாதம்.

வசந்த காலத்தில் மட்டும் பறவைகள் வந்து போவதால், வருஷம் பூராவும் மக்கள் இன்னல் கொள்வதா என்பது அரச தரப்பினரின் ஆதங்கம். மேலும் காட்டின் ஒரு சிறு பகுதியை அழிப்பதால், பறவைகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.

•

Wednesday, 17 September 2025

மிஸ்டர் பீன், தேங்காய், கத்தி

தணிகாசலத்திற்கு சார்லி சப்பிளினுக்கு அடுத்ததாக மிஸ்டர் பீனைத்தான் அதிகம் பிடிக்கும். மிஸ்டர் பீனின் நகைச்சுவைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று விழித்துக் கொண்டார். மிஸ்டர் பீன் ஒரு அங்காடிக்குச் செல்கின்றார். திடீரென்று தனது மேலங்கிக்குள் இருந்து ஒரு முழு மீனை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரம் ஒன்றினுள் போட்டு, அப்பிடி ஒரு சுழட்டு இப்பிடி ஒரு சுழட்டு விட்டு, மீனைத் தூக்கித் தூக்கிப் போட்டார். திருப்தி வந்தவுடன் சட்டியை எடுத்துக் கொண்டார். பின்னர் தனது பொக்கற்றுக்குள் இருந்து ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். `பீலர்’ ஒன்றை எடுத்து உருளைக்கிழங்கின் மேல்புறத் தோலை சீவிப்பார்த்து, திருப்தி வந்தவுடன் அதையும் எடுத்துக் கொண்டார்.

அத்துடன் தணிகாசலம் படத்தை இடையில் நிறுத்திக் கொண்டார்.

Monday, 1 September 2025

தூங்கும் பனிநீர்

 


குரல் வடிவம்/ காட்சிப்படிமம் : கெளசி

Tuesday, 8 July 2025

கதை சுப்பர் - குறுங்கதை

 சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார்.

“என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ. வாசிக்கக் குடுப்பம்.”

“அம்மாவுக்கு என்ன வயசாகின்றது?”

“எண்பத்தைஞ்சைத் தாண்டிவிட்டா…”

“நல்லது. இந்த வயசிலையும் நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா. குடுங்கோ வாசிக்கட்டும்.”

சில வாரங்கள் கழிந்திருக்கும். கமலாக்கா எனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென மனைவி தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

“கமலாக்காவின்ரை அம்மா… உங்களோடை கதைக்க வேணுமாம்.”

“தம்பீ… உம்முடைய கதைப்புத்தகம் அற்புதம். முதலாவது கதையை ஏழெட்டுத் தரம் வாசிச்சுப் போட்டன்.”

என் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கதையை ஒரு தடவை வாசிக்கவே பலரும் தயங்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்மணியா?

”ஏன் அம்மா… அவ்வளவு நல்லாவா இருக்கு.”

“அப்பிடியில்லைத் தம்பி… சுருட்டி வைச்ச பாயை விரிக்கிற மாதிரி இப்ப என்ரை நிலைமை இருக்கு…” எனக்கு அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அவரே விளக்கம் தந்தார்.

“இல்லை தம்பி… ஒரு பக்கமாக வாசிச்சுக்கொண்டு போக, மற்றப்பக்கமா மறந்து போகுது… இன்னுமொரு நாலைஞ்சு தரத்திலை முடிச்சுப் போடுவன் தம்பி…”

“அதுதான் நல்லது அம்மா... விடாமல் தொடர்ந்து வாசியுங்கோ” என்று நான் அவரை உற்சாகமூட்டினேன்.

சில பேர் தலையணை சைசில் புத்தகம் போட்டு உறங்கக் கொடுக்கின்றார்கள். நான், ஒருவர் ஆயுள் உள்ளவரை படிப்பதற்கு ஒரு புத்தகம் குடுத்திருக்கின்றேன்.

`நீங்கள் நிறையப் புத்தகங்கள் படிப்பதாக உங்கள் மகள் சொன்னாரே… இப்படித்தான் அந்தப் புத்தகங்களையும் படிக்கின்றீர்களா?’ என்ற கேள்வி, தொலைபேசி என் மனைவியின் கைக்கு மாறியபின்னர் தான் என் மூளைக்குள் வந்தது. அவருக்கு எண்பத்தைஞ்சில் கிடைத்த பாய் விரிக்கும் தொழில், எனக்கு அறுபதில் கிடைத்திருக்கின்றது.

Monday, 9 September 2024

`எனக்கு வேணும்!’

பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.

Sunday, 1 September 2024

ரகசிய பொலிஸ்

 
அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

 காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

 “அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்” என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

 என்னிடம் சினிமாப் பாட்டுக்கள் அடங்கிய சிறுசிறு புத்தகங்கள் இருந்தன. அவற்றை அண்ணா வாங்கிப் படித்துவிட்டு என்னிடம் தருவார். சிலவேளைகளில் அவற்றில் சில காணாமல் போய்விடும். இந்தத்  தடவை ரகசியப் பொலிஸ் 115 காணாமல் போய்விட்டது. அவற்றைத் தேடி அண்ணாவின் பொக்கிஷங்கள் அடங்கிய அறைக்குப் போவேன். அப்போது அங்கே அக்கா எதையோ அங்கு தேடிக் கொண்டிருந்தார். அவரது கையில் வினோத எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த கொப்பி ஒன்று இருந்தது. அக்கா சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்தக் கொப்பியை அங்கே வைத்துவிட்டுப் போனார்.

Thursday, 8 August 2024

காட்டுக்குள்ளே திருவிழா


 வாழ்க்கை பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்டது.

1988 / 89 காலப்பகுதி - அப்பொழுது ‘லங்கா சீமென்ற்’ தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலைசெய்து கொண்டிருந்தேன். மதிய வேளைகளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம். சைக்கிள்தான் எனது வாகனம். அப்பொழுது ‘பிள்ளைபிடிகாரர்’ நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்த காலம். வீதிகள் எங்குமே எப்பொழுதுமே வெறிச்சோடிக் கிடந்தன.

சிலவேளைகளில் நண்பர் ஜனாவுடன் கூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கம். அவர் எனக்கு சீனியராக வேலை செய்துகொண்டிருந்தார். தோற்றத்திலும் சீனியர். அன்று அவரின் தெல்லிப்பழை வீட்டிற்குச் சென்று, எனது சைக்கிளை அங்கு வைத்துவிட்டு அவருடன் செல்வதாக ஏற்பாடு.

மோட்டார் சைக்கிள் கே.கே.எஸ் வீதியால் விரைந்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு சற்று முன்பாக வீதியோரத்தில் ஒரு வாகனம் நிறுத்தியிருந்ததைக் கண்டோம். மூடி அடைக்கப்பட்ட `மூடுமந்திரம்’ அது. மோட்டார் சைக்கிள் அதனை அண்மித்தவுடன், எதுவித அசுமாத்தமும் இல்லாமல் இருந்த அந்த வாகனத்தில் இருந்து முகமூடி அணிந்த இருவர் துள்ளிக் குதித்தார்கள்.

“அண்ணை... அண்ணை... நிறுத்துங்கோ... இப்பிடி ஓரங்கட்டுங்கோ!”