கோர்க்கப்படும் அச்சுக்களைக் பார்க்கும்போது, சில
இடங்களில் சொற்களின் நடுவே ஃபிளாங்கான (ஒரு எழுத்தும் இல்லாத) அச்சுக்களைக் காணக்கூடியதாக
இருக்கும். எழுத்துக்கூட்டி வாசித்து அந்த எழுத்துக்கள் எவை எனக் கண்டுபிடிப்பது
ஒரு விளையாட்டாக இருக்கும். அந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
“அத்தான்… இது ஏன் எழுத்து இல்லாமல் ஃபிளாங்காக
இருக்கு?”
“எழுத்துக்கள் பற்றாக்குறை தான் காரணம். இண்டைக்கு
சிலதுகள் அடித்து முடித்துவிடுவேன். பிறகு அதிலிருந்து எழுத்துக்களைக் கழட்டி
இதற்குப் போடுவேன்” என்றார் அத்தான். அத்தான் என்று இங்கே நான் குறிப்பிடுவது
பொன்.இராசரத்தினம் அவர்களை.
இப்பொழுது உள்ள நடைமுறை போன்று ஒரேயடியாக அப்பொழுதெல்லாம்
அச்சடித்துவிட முடியாது. அப்போதுள்ள தொழில்நுட்பம் அப்படி. எழுத்துக்கள்
போதுமானவையாக இருக்கமாட்டா. அங்கையிருந்து எடுத்து இஞ்சை எண்டு போடுற நிலைமைதான்.
எது முதல் தேவை என்பதைப் பொறுத்து வேலை நடக்கும். அதுவும் ஒரு கலை. Time
Management, சிக்கனம் முக்கியமானது.
இப்போதும் எனக்கு ஞாபகம் வருவது பெரியதொரு சில்லுப்
பூட்டின மெஷின் தான். ஒரு பக்கத்தில் அந்தச்சில்லு பூட்டியிருக்கும். கால் வைத்து
இயக்குவதற்கு இயந்திரத்தின் அடியில் ஒரு தட்டும் இருக்கும்.
`புளொக்’ என்று சொல்லப்படும் அச்சுக்கலையின்
நுணுக்கங்கள் பல. ஒரு கலர், இரண்டு கலர், மூன்று என்று வகைப்பாடுகள். “உங்களுக்கு
எத்தனை கலரில் வேணும்?” என்றதைப் பொறுத்துத்தான் விலை விபரங்கள். இப்போது உள்ளவை
போல மில்லியன் கலர் எல்லாம் அப்போது கிடையாது. அப்போது வெளிவந்த புத்தகங்களின்
அட்டைப்படங்களைப் பாருங்கள். சிலவேளைகளில் ’ஆறுமுகசாமி’ போல படங்கள் சற்றே நடனமாடுவதைக்
கண்டிருப்பீர்கள். எல்லாம் இந்த வர்ணங்களின் விபரீதம் தான்.
15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹென்னஸ் குட்டென்பேர்க் அச்சுக்கலையில் ஒரு புரட்சியை
ஏற்படுத்தினார். ஈயம் சார்ந்த அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பின் பின்னர், பல
வளர்ச்சி நிலையடைந்து அடுத்த வளர்ச்சியடைய பல காலம் சென்றது. தொழில்நுட்ப
வளர்ச்சியின் வேகத்தால் கணினி உருவானது. இன்று கணினியின் உதவியுடன் அச்சுக்கலை
கோலோச்சுகின்றது.
இலங்கையில் வெளிவந்த
முதலாவது சிறுவர் மாத இதழான `வெற்றிமணி’ அங்குதான் அச்சிடப்பட்டது.
`வெற்றிமணி டாண் டாண் எனவே
விண்முட்ட ஒலித்திடுவாய்
நற்றமிழாம் எங்கள் மொழி நலமுற ஒலித்திடுவாய்’ - என்ற
வாழ்த்து ஒலியுடன் வெளிவந்தது.
1950 இல் நாவலப்பிட்டியில் ஆசிரியராகப் பணிபுரிந்த அமரர் மு.க.சுப்பிரமணியம்
அவர்களால் இந்த வெற்றிமணி சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தினகரன், சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில்
வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கு ஒரு உதவி சார்ந்த சஞ்சிகையாக இது வந்தது.
இடையிடையே தனது ஆசிரிய இடமாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வித்துவான் மு.கந்தையா,
எம்.எம்.பாரிஸ், ஏ.கே.சாமி போன்ற பெரியவர்களைக் கொண்டு நடத்தி வந்தார். 1957 ஆம் ஆண்டுவரை நாவலப்பிட்டியிலும், 1958 இல் இருந்து க.வே.மகேந்திரன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பூண்டுலோயாவிலும், பின்னர் 1964
இல் இருந்து திரு. பொ. இராசரத்தினம் அவர்களைப்
பதிப்பாசிரியராகக் கொண்டு முல்லைத்தீவு தண்ணீருற்றிலும் இருந்து வெளிவந்தது
வெற்றிமணி. தொழில் இடமாற்றம், கடதாசி விலை உயர்வு போன்ற பல காரணங்களால்
இடையிடையே வெளிவருவதில் தடையேற்பட்டாலும், முல்லைத்தீவில் இருந்து வெளிவரும்போது அது
தனக்கென ஒரு சொந்த அச்சகமான 'சக்தி
அச்சகத்தை' ஸ்தாபித்திருந்தது.
1968 இல் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் குருப்பசிட்டி பொன்.பரமானந்தர்
வித்தியாலத்தில் அதிபராக பதவி உயர்வு பெற்ற பின்னர், சக்தி
அச்சகம் யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரான்லி றோட்டிற்கு இடம் மாறி வெற்றிமணி அங்கிருந்து
வெளியாகியது. அதன் பின்னர் 1972 இல் இருந்து 1979 வரை சக்தி அச்சகம் சுண்ணாகத்திலிருந்த பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்
மாறியது.
திரு.வை.சி.சிவஞானம், கவிஞர் வி. கந்தவனம், இரசிகமணி. கனக
செந்திநாதன் மற்றும் டாக்டர் நந்தி (சிவஞானசுந்தரம்) அவர்கள் எழுதிய புத்தகங்கள்
வெற்றிமணி வெளியீடுகளாக அன்று வெளிவந்தன.
பண்டிதமணி கணவதிப்பிள்ளை, பண்டிதர் இ.நமசிவாயம், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர்
வி.கந்தவனம், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, கவிஞர் இ.நாகராஜன், காரை சுந்தரம்பிள்ளை, திக்குவல்லை
கமால், க.மொழிவரதன்(மகாலிங்கம்), கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, வேல்
அமுதன், வை.சி.சிவஞானம், நந்தி, பாலமுனை பாறுக், சரணாகையூம்,செளமினி, மூதூர் கலைமேகம், சொக்கன், அரியாலையூர் ஐயாத்துரை, அருட்கவி
சீ.விநாசித்தம்பி, கோப்பாய் சிவம், சு.சிவகுமாரன், பண்டிதர் சோ.இளமுருகனார், நெல்லைதாசன், திமிலைத்துமிலன்
(எஸ்.கிருஷ்ணபிள்ளை), கேணிப்பித்தன் (சி.அருளானந்தம்), வ.ந.கிரிதரன்
போன்றோரும் தமிழகத்திலிருந்து சாலை இளந்திரையன், மதுரை
கா.தமிழ்த்தம்பி போன்றோரும் அன்று வெற்றிமணியில் எழுதிய எழுத்தாளர்களில் ஒரு
சிலராவார்.
உன்னதமான இடத்தை வாசிப்பு பெற்றிருந்த
அவ்வேளையில், அதனை உரிய முறையில் பாவித்து வெற்றி கண்டவர் அமரர்
மு.க.சுப்பிரமணியம் அவர்கள். அன்னார் 1980 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இவ்வுலகை
நீத்தார். அத்துடன் வெற்றிமணியும் அங்கு ஓய்வு கொண்டது.
அதன் பின்னர் - கவிஞர் வி.க.வின் `தமிழ் எங்கள்
உயிருக்கு மேல்’ என்னும் வாசகத்துடனும், `தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி
தானாகவே விலகிச் செல்கிறது’ என்ற அரவிந்தரின் மணிமொழியுடனும் 1994 இல் இருந்து புலம்பெயர்ந்த தேசத்தில் வெளிவருகின்றது வெற்றிமணி. அமரர் மு.க.சுப்பிரமணியம்
அவர்களின் புதல்வர் மு.க.சு.சிவகுமாரனை ஆசிரியராகக் கொண்டு ஜேர்மனியில் இருந்து
வெளிவருகின்ற வெற்றிமணி, ஐரோப்பாவில் வெளிவந்த முதலாவது இலவச வண்ண மாத
இதழாகும். திரு சிவகுமாரன் இலங்கை களனி பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்
பட்டதாரியாவார். அதனால் பத்திரிகை, வர்ணத்தில் அழகாகவும் சிறந்த வடிவமைப்புடனும்
வருகின்றது. கலைகளுள் பழையது ஓவியம். மொழி தோன்றுவதற்கு முன்னரே
ஓவியம் தோன்றிவிட்டது என்பார்கள். எழுத்தும் ஓவியமும் ஒருங்கே சேர்ந்து
அச்சுக்கலையின் வளர்ச்சியில் இன்று வெற்றிநடை போடுகின்றது வெற்றிமணி.
வெற்றிமணியில் வெளிவந்த
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள்,
அறிவியல் விடயங்கள் நூலுருவம் பெறுகின்றன. தாயகத்தில் உள்ள
மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றன. இந்த வகையில் கவிஞர் வி.கந்தவனம், பொ.கனகசபாபதி, மாதவி, சுகந்தினி சுதர்சன், இந்துமகேஷ், கதிர் துரைசிங்கம், மு.க.சு.சிவகுமாரன், வலன்ரீனா
இளங்கோவன் ஆகியோரின் புத்தகங்கள்
நூலுருப்பெற்றுள்ளன.
2005ஆம் ஆண்டிலிருந்து, வெற்றிமணி மீண்டும் மாணவர் இதழாக
காலாண்டிற்கொருமுறை யாழ்ப்பாணத்தில் இலவசமாக வெளிவருகின்றது. இதன் இணை ஆசிரியராக
வலன்ரீனா இளங்கோவன் அவர்களும், கொளரவ ஆலோசகராக மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும்
உள்ளனர். அத்துடன் அறிவியல் ஆன்மீகம் கலந்த சிவத்தமிழ் என்னும் காலாண்டு
சஞ்சிகையையும் 2004 இல் இருந்து வெற்றிமணி வெளியிடுகின்றது.
1994 ஆம் ஆண்டு ஜேர்மனியில் வெளிவரத் தொடங்கிய
வெற்றிமணி, இன்று ஐரோப்பாவிலே வெள்ளிவிழாக் காணும் முதல் சஞ்சிகை என்ற பெருமை
பெறுகின்றது. வெற்றிமணியின் ஸ்தாபர் இன்று நம்மிடம் இல்லை. அதன் வளர்ச்சிக்கு
அயராது உழைத்தவர்கள் பலரும் மறைந்துவிட்டார்கள். வெற்றிமணி வெளிவந்த
அச்சுக்கூடங்களும் இன்று இல்லை. ஆனால் வெற்றிமணி இன்னமும் வந்துகொண்டே
இருக்கின்றது. அது `டாண்… டாண்…’ என்று என்றும் எதிரொலிக்கும்.
நன்றி : ஞானம் (ஆனி, 2019)
நன்றி : ஞானம் (ஆனி, 2019)
No comments:
Post a Comment