6.
உண்மையைச் சொல்லப் போனால் தாஜ்மகாலைப் பார்த்தவுடன் என் மனதில் ஒரு சிறு ஏமாற்றம். இதுநாள் வரையிலும் நான் தாஜ்மகாலை சினிமாவிலும் புகைப்படமாகவும் தான் பார்த்திருந்தேன். நேரில் பார்க்கும்போது அதன் அழகில் சற்று மாறுதல் இருந்ததுதான் அதற்குக் காரணம். தாஜ்மகாலைச் சென்றடைந்தபோது நேரம் 3 மணியாகிவிட்டது. மாலை 5 இற்குள் திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அன்று ஏனோ தாஜ்மகால் மக்கள் கூட்டத்தினரால் நிரம்பி வழிந்தது. பல புகைப்பட விற்பன்னர்கள் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தார்கள். எமக்கென ஒதுக்கப்பட்டிருந்தவர் மூலம் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
ஏற்கனவே பஸ்சில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போதே ஒன்லைனில் ரிக்கெற் எடுத்திருந்தோம். வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கென இரண்டு நிரல்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஒப்பிடும்போது எமது நிரலில் குறைவான பயணிகளே நின்றதால் இலகுவாக உள்ளே செல்ல முடிந்தது.
இந்தக் கட்டிடம் கட்டிமுடிப்பதற்கு இருபது ஆண்டுகள் (1631 முதல் 1654 வரை) எடுத்ததெனவும், 22,000 ஆயிரம் பணியாட்கள் வேலை செய்ததாகவும் அறிந்தோம். மும்தாஜ் 1631 ஆம் ஆண்டு தனது 14வது குழந்தை குகாரா பேகம் பிறந்தபோது இறந்தார். அவரின் நினைவாக, முழுக்கமுழக்க வெள்ளை பளிங்குக்கற்களால் இது கட்டப்பட்டது. முன்பு இரண்டாவது தளத்தையும், நிலக்கிழ் அறையையும் பார்வையிட அனுமதித்திருந்ததாகவும், தற்போது பார்வையிட முடியாதெனவும் சொன்னார்கள். நிலக்கீழ் அறையினுள் தான் மும்தாஜ், சாஜஹான் இருவரினதும் கல்லறைகள் இருக்கின்றன.
தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீற்றர் உயரத்திற்கு நிற்கும் 4 தூண்களைக் (மினார்) காணலாம். அவை ஏதாவது காரணங்களால் இடிந்து விழ நேர்ந்தால், தாஜ்மகால் மீது பட்டுவிடக்ககூடாது என்ற காரணத்தால் சிறிது வெளிப்புறம் சாய்த்துக் கட்டப்பட்டுள்ளன.
தாஜ்மஹாலின் ஒருபக்க அருகாக ஜமுனா நதி ஓடுவதைக் கண்டு இரசித்தேன்
தாஜ்மகாலைப் பார்வையிட்ட பின்னர் எமக்கான பஸ் நிற்குமிடம் நோக்கிச் சென்றோம். அங்கே தாஜ்மகாலைப் பார்க்க முடியாமல் போனதால் இரண்டு மூன்று குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தார்கள். சனக்கூட்டம் நிரம்பியதால் குறிப்பிட்ட நேர்த்திற்குள் திரும்பி வரமுடியாமல் போய்விடும் என்பதால் அவர்கள் தாஜ்மகாலைப் பார்க்காமலே திரும்பிவிட்டனர்.
தாஜ்மகாலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டோம். மீண்டும் மகிழ்ச்சி. தாஜ்மகாலின் அழகு புகைப்படத்தில் கொட்டிக் கிடந்தது.
தாஜ்மகாலைப் பார்வையிடச் சென்றவர்கள் வருவதற்கு 6 மணியாகிவிட்டது. இதனால் நாம் திட்டமிட்டபடி அடுத்துப் பார்க்கவேண்டிய மதுரா போவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. அங்கிருந்து 60 கி.மீ தூரத்தில் இருக்கும் கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவைச் சென்றடைந்தபோது மிகவும் இருட்டிவிட்டது. எமது சுற்றுலா வழிகாட்டி, பஸ் மதுராவை அண்மித்தபோது கிருஷ்ணரின் பாடல் ஒன்றை மிகவும் உருக்கமாகப் பாடத் தொடங்கிவிட்டார். அவருள் இத்தனை இனிமையான குரலா என வியந்து போனோம்.
மதுராவிற்குள் ரெலிபோன், கமரா முதற்கொண்டு எதுவித இலற்றோனிக் கருவிகளும் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணர் பிறந்த சிறையின் பாதாள அறையை கிருஷ்ண ஜென்மபூமியில் பார்த்தோம். அதுவே கோவிலின் கர்ப்பக்கிரகமாக அமைந்திருக்கின்றது. அருகே அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவிலையும் தரிசித்தோம். இவற்றின் பின்புலத்தில் ஜமுனா நதி ஓடுகின்றது.
மதுராவில் இருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கும் எமது இருப்பிடத்திற்குப் போய்ச் சேர இரவு 11 மணியாகிவிட்டது.
பயணம் தொடரும்…….
No comments:
Post a Comment