கதைகளில் உத்திகளைக் கொண்ட சிறுகதைத்தொகுப்புகள் என்று
பார்க்கும்போது, எஸ்.பொ இன் `வீ’ தொகுப்பும், கதிர்.பாலசுந்தரத்தின் `அந்நிய
விருந்தாளி’ தொகுப்பும் நினைவுக்கு வருகின்றன. மேலும் பல தொகுப்புகள் இருக்கலாம். இத்தொகுப்புகளில்
உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உத்திகளைக் கொண்டு எழுதப்பட்டவை.
இந்தப் பதிவு கதிர்.பாலசுந்தரம் எழுதிய `அந்நிய
விருந்தாளி’ பற்றியது. இத்தொகுப்பில் 1970களில் எழுதிய 8 கதைகளும், 1980களில்
எழுதிய 2 கதைகளும் அடங்கியுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிரித்திரன், றோசாப்பூ
போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தவை. இதில் வரும் பத்துக் கதைகளும் பத்துவிதமான
உத்திகளில் அமைந்திருப்பதைக் காணலாம்.
`யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக’ 1986 இல் வெளிவந்த இத்தொகுப்பின்
மூன்றாம் பதிப்பு (2018) சமீபத்தில் என் பார்வைக்குக் கிட்டியது. பேராசிரியர்
சு.வித்தியானந்தன் அன்று இதற்கு முன்னுரையுடன், ஆரம்பத்தில் இருந்த நூலாசிரியர்
உரை விரிவுபடுத்தப்பட்டு, சிறுகதை எழுதுபவர்களுக்கு பல தகவல்களைத் தருவதாக,
திருப்பி எழுதப்பட்டுள்ளது. இரசிய எழுத்தாளரான அண்டன் சேகொவ், பிரான்சிய எழுத்தாளரான
மாப்பசான் போன்றோரின் படைப்புகளை முன்னுதாரணமாக்கி, தனது படைப்புகளுடன் ஒப்பீடு
செய்திருக்கின்றார் ஆசிரியர். அத்துடன் சிறுகதை எழுதுபவர்களுக்கு உதவியாக, சிறுகதை
பற்றிய – கரு, களம், கட்டமைப்பு, வடிவம், ஆரம்பம், கதை நகர்வு, பாத்திரங்கள்,
மொழிநடை போன்றவற்றையும் தெளிவு படுத்தியிருக்கின்றார்.
வாசகனை சிந்திக்கத் தூண்டும் கதைகளின் கரு, கண்முன்னே
விரியும் கிராமத்துக் காட்சிகள், பாத்திரவார்ப்பு--– கதாபாத்திரங்களின் அடைமொழிப்
பெயர்கள், அங்க இலட்சணம், நடை உடை பாவனைகள்--- என்பவை தொகுப்பின் சிறப்புகள்.
பாத்திரவார்ப்பு சற்றுத் தூக்கலாக இருப்பதாக எனக்குப் படுகின்றது.
உத்திகள் என்பது ஒரு எழுத்தாளரது கற்பனையின் சிகரம்.
அவற்றை இன்னொருவருக்குச் சொல்லித் தர முடியாது. வாசித்து அனுபவிக்கத்தான்
முடியும். சிறுகதைகளின் தலைப்புகள், கதை கூறும் முறை, கதை சொல்லும் உபாயங்கள்,
நீட்டி முழக்காமல் சுருக்கமாச் சொல்லிச் செல்லும் சொறொடர் அமைப்பு, கண்முன்னே
நிழலாட வைக்கும் கதைமாந்தர்கள், வார்த்தைப் பிரயோகங்கள் இவைகளே உத்திகள். அந்த முறைமை
இந்நூலில் நிரம்பவே இருக்கின்றது. எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக – தரப்படுத்தலை
மையமாகக் கொண்ட `முட்டைப் பொரியலும் முழங்கையும்’, `உயர உயரும் அன்ரனாக்கள்’,
`மனித தெய்வம்’, `அந்நிய விருந்தாளீ’, `மூன்று பரப்பும் முக்கால் குளியும்’
என்பவற்றைச் சொல்லுவேன்.
இத்தொகுப்பின் முதற்பதிப்பு நூலகம் (http://www.noolaham.org ) திட்டத்தில்
இருக்கின்றது. வாசகர்கள் படித்து இன்புறலாம்.
`ஒரு எழுத்தாளனை மதிப்பிடும் பொழுது அவனது சிறந்த
படைப்பை வைத்தே விமர்சனம் செய்யவேண்டும். அவனது மோசமான படைப்பைக் கருத்தில்
எடுக்கப்படாது’ என்பதே இலக்கிய மேதைகளின் பாரம்பரியப் பழமொழி என்கின்றார்
ஆசிரியர். முன்னுரையில் தனது சிறுகதைகளில் உள்ள பலவீனங்களையும் சுட்டிக்
காட்டுகின்றார் ஆசிரியர். அந்தப் பலவீனங்களையும் மீறி, இந்தத் தொகுப்பில் வருகின்ற
அனைத்துச் சிறுகதைகளுமே சுட்டிக் காட்டும் தகமை பெற்றுவிடுகின்றது எனலாம்.
தினக்குரல் (25.08.2019)
அருமையான கண்ணோட்டம்
ReplyDeleteபடிக்க மறக்காதீர்கள்
ReplyDeleteநீங்களும் திருக்குறள் எழுதலாம்!
http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html