ஞானம் சஞ்சிகை - அட்டைப்பட அதிதி
பெண் எழுத்தாளர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய
இரண்டுமொழிகளிலும் எழுதுபவர்கள் மிகக் குறைவு. அத்தகைய பாண்டித்தியம் பெற்றவர் தேவகி
கருணாகரன். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். சுண்டிக்குழி மகளிர்
கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வி பயின்றவர். தந்தையாரின் தொழில் நிமித்தம்
இலங்கையின் பல்வேறு பாகங்களில் வாழ்ந்திருக்கின்றார். அதனால் சிங்களமொழியிலும்
ஓரளவிற்குப் பரிச்சயமானவர். தற்போது அவுஸ்திரேலியா - சிட்னியில் வாழ்ந்து
வருகின்றார்.
இவரது கணவர் டாக்டர் கருணாகரனின் பணி நிமிர்த்தம்
முதலில் நைஜீரியாவிற்கு 1981 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். அங்கே இவர் ஆங்கில
ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்போது 35
வருடங்கள் ஆகிவிட்டன. இவரது கணவர் அவுஸ்திரேலியாவில் Oral & Maxillo Facial
Surgery என்கின்ற பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காலங்களில், இவர் அவுஸ்திரேலியாவில்
பாதுகாப்பு இலாகாவில் பணிபுரிந்தார். 15 வருடங்கள் உழைப்பின் பின்னர் தற்போது
ஓய்வு நிலையில் இருக்கின்றார்.
இளமைக்காலத்தில் கலை இலக்கியங்களில் ஆர்வம் இருந்தாலும்,
அப்போதைய சூழ்நிலை அவருக்கு பெரிதும் இடம் கொடுக்கவில்லை. தன் பதின்ம வயதுகளில்
நாடகங்களை எழுதி இயக்கி தனது உற்றம் சுற்றத்தாருக்கு நடித்தும்
காண்பித்திருக்கின்றார். பின்னர் இவரது `இசையும் கதையும்’ படைப்புகள் பல இலங்கை
வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. இவை `வளரும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதற்கான
கட்டியங்கள் ஆகும். இருப்பினும்
பணி ஓய்வின் பின்னர்தான் இவரால் புனைகதைத்துறையில்
அடியெடுத்து வைக்கக்கூடியதாக இருந்தது.
`ஈழத்து எழுத்தாளர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு’ என
எஸ்.பொ அவர்களால் விதந்துரைக்கப்பட்டவர். இவரது படைப்புகளில் - இலங்கையில் தமிழ்
மக்களுக்கு நேர்ந்த அவலங்கள் / அதனால் எழுந்த துயரங்கள் வலிகள், மனிதநேயம்,
பண்பாடு, புலம்பெயர் வாழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் / பிரச்சினைகள்
என்பவற்றைக் காணலாம். இவரது ’அன்பின் ஆழம்’ என்ற சிறுகதைத்தொகுதியில் 12
சிறுகதைகள் உள்ளன. ‘மித்ர’ வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பில் உள்ள கதைகள்
உள்நாட்டுப் போரினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பேசுகின்றன.
இவரது சிறுகதைகளில் – கதைகள் கொண்டிருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளையும்--- கரு,
மொழிநடை, பாத்திர வார்ப்பு, வர்ணனை, கதையின் ஓட்டம், உண்மைத்தன்மை---காணலாம்.
அவரின் ஆழம் நிறைந்த படைப்புக்களை `அன்பின் ஆழம்’ தொகுப்பில் தரிசிக்கலாம். `தீவிரமான சோதனை
முயற்சிகளுக்கு முனையாமல், மொழியைக் கொண்டு பயம் காட்டாமல், படம் காட்டாமல்,
தெளிந்த ஒழுங்காகச் சொல்லப்பட்டிருக்கும் கதைகள்’ என இத்தொகுப்பிற்கு அணிந்துரை
எழுதிய நாஞ்சில்நாடன் கூறுகின்றார். `இவரது அன்பின் ஆழம் தொகுப்பு வெளிவந்தபோது –
அதன் அட்டை தொடக்கம், ஒவ்வொரு ஒற்றை வரை தனது எதிர்பார்ப்பு முழுமை அடைய வேண்டும்
என்பதிலே பிடிவாதம் காட்டினார். அவருடைய ஆர்வத்தின் இன்னொரு ஸ்திதியே அது என நான்
சமாதானம் அடைந்தேன்’ என்கின்றார் தொகுப்பிற்கு முன்னீடு எழுதிய எஸ்.பொ. இவரது
அத்தொகுப்பிற்கு சமீபத்தில் மறைந்த `யுகமாயினி’ சித்தன் ஓவியம்
வரைந்திருக்கின்றார்.
தொடர்ச்சியாக எழுதி வரும் இவரின் படைப்புகள் வீரகேசரி,
தினக்குரல் பத்திரிகைகளிலும் ஞானம், ஜீவநதி, கலைமகள், கணையாழி சஞ்சிகைகளிலும்
வெளிவந்தவண்ணம் உள்ளன. இவரது ஆரம்பகால படைப்புகள் அவுஸ்திரேலியா பட்டதாரிகள்
சங்கத்தினால் வெளியிடப்பட்ட `கலப்பை’ சஞ்சிகையில் வந்தன. இவரது ஆங்கிலச்
சிறுகதைகளை Canadian Tamil mirror, http://www.indianlink.com.au/, https://www.smashwords.com, என்பவை
வெளியிட்டுள்ளன. மற்றும் பிரதிலிபி போன்ற இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார்.
இவரது சிறுகதைகள் பல பரிசுகளை வென்றிருக்கின்றன. 100
சொற்கள் கொண்ட ஆங்கிலச்சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் தெரிவு
செய்யப்பட்டுள்ளன.
இவர் தற்போது சிட்னி – தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தில்
முக்கிய உறுப்பினராக இருக்கின்றார். அங்கே இவர் பல நாடகங்களை எழுதி இயக்கியும் இருக்கின்றார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் SBS (Special Broadcasting Serrvice)
தமிழ்ப்பிரிவிலும், ATBC வானொலியிலும் இவரது பல சிறுகதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
எழுதுவதற்கான பல பயிற்சிப்பட்டறைகளில்
பங்குபற்றியிருக்கும் இவரது படைப்புகள் ‘செய் நேர்த்தி’ கொண்டவை. நிறைவு தரும்
படைப்புகள். கச்சிதமான படைப்புக்களை (perfection) தரவேண்டும் என்பதில் அக்கறை
கொண்டவர்.
`எழுத்து வாசகர்களின் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மனித
வாழ்வைச் செழுமைப்படுத்தும் நோக்கையும் கொண்டதாக அமைய வேண்டும்’ என்கின்றார் இவர்.
நன்றி : ஞானம் சஞ்சிகை (ஆவணி 2019)
No comments:
Post a Comment