`சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ - கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 வருட நிறைவை முன்னிட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு. இனிய நந்தவனம் பதிப்பகத்தினால் இவ்வருடம்(2020) இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தன் இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கின்றார். இவர் ஏற்கனவே மகாஜனக்கல்லூரி 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றை வெற்றிமணி இதழ் மூலம் நடத்தியிருந்தார். கனடாவில் சிறுகதைப் போட்டி மூலம் தமிழ் பெண்கள் எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர். இணையத்தின் செயலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை மூலம் பல சிறுகதைப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றார். இவர்களது அனுபவங்கள் தான் இந்தத் தொகுப்பு வெளிவருவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.
மொத்தம் 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பின் முதல் பரிசு பெற்ற கதை ‘தாள் திறவாய்’. கதாசிரியர் எஸ்.நந்தகுமார் (நந்து சுந்து), சென்னை. நல்லதொரு சிறுகதைக்குரிய பல அம்சங்கள் கொண்டது இக் கதை.
வாசகரை உள்ளே இழுத்துப் பிடித்து நகரவிடாமல் செய்கின்ற நடை. ரஞ்சனி நீதி நேர்மை நியாயம் கொண்டவள். மற்றவர்களிடமும் அவற்றை எதிர்பார்ப்பவள். தனது கணவன் பிள்ளையுடன் மதுரைக்குப் புறப்படுவதற்காக பஸ் ஸ்ராண்டில் நிற்கின்றாள். கணவன் கிருபாகரன் பயந்த சுபாவம் கொண்டவன். அவர்களது இரண்டுமாதக் குழந்தைக்குப் பசி வந்துவிட்டது. தாய்ப்பால் குடுக்க வேண்டும். புட்டிப்பாலும் எப்போதாவது குடுப்பாள். மறைவான இடம் தேடி அலையும்போது `தாய்மார்கள் பாலூட்டும் அறை’ தென்படுகின்றது. ஆனால் அது பூட்டிக்கிடக்கின்றது. அதைத் திறந்துவிடும்படி பொறுப்பானவர்களிடம் கேட்கின்றாள் ரஞ்சனி. அவர்களிடம் திறப்பு இல்லை. தட்டிக் கழிக்கின்றார்கள். குழந்தை வீரிட்டு அழுகின்றது. கணவனிடம் குழந்தைக்கு புட்டிப்பாலைக் குடுக்கும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் போராடுகின்றாள். அப்போது மதுரைக்குப் புறப்படும் பஸ் புறப்படவே கணவன் அவளை வந்து ஏறும்படி சொல்கின்றான். ரஞ்சனி பஸ்சிற்கு முன்பாகக் குந்தியிருந்து போராட்டம் நடத்துகின்றாள். விறுவிறுப்பாக நகரும் கதை அவளது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், எல்லாத் தாய்மார்களுக்குமான முடிவு ஒன்றைக் காண்பதுடன் நிறைவுக்கு வருகின்றது. சமுதாயத்துக்கு நல்லதொரு கருத்தைச் சொல்லிச் செல்லும் சிறப்பான கதை இது. ஆனால் கதையின் இறுதிப்பகுதியில் கிருபாகரன் என்ற கணவன் பாத்திரத்தை மறந்துவிடுகின்றார் கதாசிரியர். அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விடுகின்றார்.
இலங்கையில் நாட்டுப் பிரச்சினைகள் உக்கிரமடைந்திருந்த காலம். மலருக்கும்(வயது 18) ரஞ்சித்திற்கும் (22) திருமணம் நடக்கின்றது. மூன்று வருடங்களாக அவர்களுக்குக் குழந்தைப் பாய்க்கியம் இல்லை. பின்னர் அவள் கருவுற்றபோது, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக கோயிலுக்குப் போகின்றான் ரஞ்சித். போனவன் போனதுதான். அப்புறம் வரவேயில்லை. இப்போது மலரின் மகளுக்கு 13 வயது ஆகின்றது. மலர் வேலைக்குப் போய் மகளை நல்ல நிலையில் வைத்துப் பார்க்கின்றாள். ஆனால் ஊர் மக்கள் அவளைப் பற்றி வேறுவிதமாகக் கதைக்கின்றார்கள். இதைப் பொறுக்கமுடியாத அவளின் நண்பி ராணி, மகளின் நன்மை கருதி மலரை மறுமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றாள். அதற்கு மலர் தரும் விளக்கம் தான் கதையின் உச்சம். காணாமல் போனவர்கள் பற்றிய தொடரும் கதைகளில் இதுவும் ஒன்று. டலின் இராசசிங்கம் இந்தக் கதையை எழுதியிருக்கின்றார். நல்ல தெளிவான நடை. ஆவலைத் தூண்டும் கதை.
தொகுப்பின் மூன்றாவது கதை இங்கிலாந்தைச் சேர்ந்த விமலாதேவி பரமநாதனால் எழுதப்பட்ட `உறவின் தேடல்’. பெற்றோர்கள் உறவினர்களின் சம்மதமின்றி மணம் புரிந்த தேவன், மைதிலி தம்பதியினருக்கு நீண்டகாலம் பிள்ளை இல்லாததால் காப்பகத்திலிருக்கும் 5 வயது சிறுவன் கண்ணனைத் தத்தெடுத்து வளர்க்கின்றார்கள். 13 வருடங்கள் கழிந்த நிலையில் தேவன், மைதிலி இருவரும் விபத்தொன்றில் இறந்துவிடுகின்றார்கள். தன்னுடைய சொந்தப் பெற்றோர்கள் யார் என்று தெரியாமல், வளர்த்தவர்களுமின்றி வாடுகின்றான் கண்ணன். வளர்ப்புப் பெற்றோர்களின் உறவுகளைத் தேடிப்பார்க்க விரும்பும் கண்ணன், முதலில். அப்பா வழி உறவான அக்காவை சந்திக்கின்றான். அவனை சந்திக்க விருப்பமில்லால் ஏசிக் கலைக்கின்றனர் அவர்கள். பின்னர் அம்மா வழி உறவுகளைத் தேடுகின்றான். அம்மாவின், அண்ணாவும் அம்மம்மாவும் இருப்பது தெரிய வருகின்றது. அம்மாவின் அண்ணா புலம்பெயர்ந்து போகும்போது அம்மம்மாவைக் கூட்டிச் செல்ல முடியாத நிலையில் ஒரு முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்றுவிடுகின்றார்கள். கண்ணன் தன்னுடன் அம்மம்மாவைக் கூட்டிச் செல்வதுதான் கதை. கதை ஆரம்பம் முதல் இறுதி வரை உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக இருக்கின்றது. ஒரு குறுநாவலுக்கான கதைக்கரு இங்கே சிறுகதையாகியிருக்கின்றது.
தமிழ்நாடு ஸ்ரீராம் விக்னேஷ் எழுதிய `ஒரு முழு நாவல்’ விறுவிறுப்பான ஒரு சிறுகதை. கதைக்குள் ஒரு நாவல். ஒரு எழுத்தாளருக்கு பத்திரிகையாசிரியனுக்கு வாசகர் கடிதங்களே ஊட்டச்சத்து. மெய்க்கீர்த்தி என்ற புனைபெயரில் எழுதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கும், விமர்சகரும் வாசகருமான கங்காதரன் என்பவருக்கும் இடையேயான ஊடாட்டம் தான் இந்தக் கதை. ஆசிரியர் வாசகர் என்ற தொடர்பையும் தாண்டி `மனிதம்’ என்ற சொல்லிற்கு அர்த்தம் காண்கின்றது இந்தச் சிறுகதை.
முதல் மூன்று இடங்களையும் வென்ற 4 சிறுகதைகளை இதுவரை பார்த்தோம். இவற்றின் கரு, நடை, உத்தி, கதை நகர்வு, மொழிநடை என்பவை மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அடுத்து பாராட்டுப்பெறும் 7 சிறுகதைகளைப் பார்ப்போம்.
அவுஸ்திரேலிய வெள்ளையினத் தம்பதிகளால் எடுத்து வளர்க்கப்படும் நேத்தன் என்பவன் தனது பூர்வீகத்தைத் தேடும் கதை `நான் யார்?’. கதையில் சிறீலங்கா இரணுவத்தினரின் அட்டூழியங்கள், வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. பாத்திர வார்ப்பு, களம் என்பவை சிறப்புற வந்திருக்கும் இந்தக்கதையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தேவகி கருணாகரன் எழுதியிருக்கின்றார்.
`கமழி’ – தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவிந்தராயு அருண்பாண்டியன் எழுதிய கதை. 65 வயது நிரம்பிய ஆனந்தனின் மனைவி கமழி மரணப்படுக்கையில் இருக்கின்றார். ஆனந்தனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, 20 வயது நிரம்பிய கமழியைச் சந்திக்கின்றார். காதல் சுவை சொட்டும் வர்ணனைகள் நம்மைக் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. இனிமையான ஒரு சங்கீதம் போல சென்றுகொண்டிருந்த கதையின் இடையில் ஒரு திருப்பம். கமழி ஒரு திருநங்கை என்கின்றார் ஆசிரியர். கமழியை எப்படித் திருமணம் செய்கின்றார் என்பதைக் காதல் சுவை சொட்டச் சொல்லும், சற்றே நீண்ட கதை இது.
சமீபத்தில் வந்து போன `காஜா’ புயலை நினைவூட்டும் கதை `இடுக்கண் களைவதாம்’. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுமதி பாலையா எழுதியது. அமெரிக்காவில் இருந்து கீரைமங்கலம் குலதெய்வத்தைத் தரிசிக்க வரும் சிங்காரம், தன் பால்ய நண்பனான நடேசனைச் சந்திக்கின்றார். அவர்கள் வந்த அன்று புயல் எல்லாவற்றையும் கவிழ்த்துப் போடுகின்றது. கால்நடைகள், தோட்டம் துரவு எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்றான் நடேசன். சிங்காரத்தின் மகன் பாரதி புயலின் கோரத்தைப் படம் பிடிக்கின்றான். பாரதியின் கல்யாண வரவேற்புக் காரணமாக மறுநாளே அமெரிக்கா கிழம்பிவிடுகின்றனர் சிங்காரம் குடும்பத்தினர். நிலைமையைப் புரிந்துகொண்டு வழியனுப்பி வைக்கின்றார் நடேசன். கவலையுடன் புறப்படுகின்றார் சிங்காரம். பாரதி புயலின் கோரத்தை ஏன் படம் பிடித்தான் என்பதுதான் கதையின் கிளைமாக்ஸ்.
காணாமல் போனவர்கள் பற்றிய இன்னொரு கதை `காணாமலே’. ஹரன்யா பிரசாந்த் எழுதிய இக்கதை மட்டக்களப்பு பிரதேச வழக்கைக் கொண்டது. குடும்பத்தில் ஒருவர் காணாமல் போகும்போது அவர்களின் வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது. பிள்ளைகளின் கல்வி தடைபட்டுப் போகின்றது. 27 வயது நிரம்பிய சாந்தியின் வாழ்க்கை இத்தகையது. 10 வயது நிரம்பிய மகனைப் பள்ளிக்கும் அனுப்பாமல் தத்தளிக்கின்றாள் அவள். ஆதரவாக இருக்கவேண்டிய மாமியாரே அவளுக்குக் கொடுமை செய்கின்றாள். கணவன் காணாமல் போனதால் கண்ட கண்ட நாய்களும் வாலாட்டுகின்றன. மகனைப் பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் மகிழ்ச்சி கொள்ளும்போது, அவளது வாழ்க்கையை நாசமாக்குகின்றான் ஒருவன். அவளது கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போகின்றன.
சோ. இராமேஸ்வரன் எழுதிய `கனடாவின் அம்மா’ - இலங்கையிலிருந்து கனடாவிற்கும், பின்னர் கனடாவிலிருந்து இலங்கைக்கும் மாறி மாறி அலையும் கணவனை இழந்த பெண்ணொருத்தியின் துயரக்கதை. பிள்ளைகள் தங்கள் சுயலாபம் கருதி தாயை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றார்கள். கடைசியாக அதற்கும் ஒரு முடிவு வந்துவிடுகின்றது. இது போல பல கதைகள் வந்திருந்தாலும், சொல்லப்பட்ட முறை, சம்பவங்களால் வித்தியாசப்படுகின்றது இந்தக்கதை.
நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில் பெற்றவர்கள் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி வைக்கும் காலகட்டம். அண்ணன் திருமணம் செய்யப்போகின்ற பெண்ணை---மச்சாள் முறையானவர்---தம்பியுடன் சுவிஸ் அனுப்புகின்றார்கள். கதையின் தலைப்பு `நிர்ப்பந்தம்’, எழுதியவர் இதயராஜா சின்னத்தம்பி. ஒரு தடவை அவர்கள் இருவரும் புறப்பட்டு சிங்கப்பூர் வரை சென்று திரும்புகின்றார்கள். ஊரில், கொழும்பில் ஏற்படாத தொடர்பு சிங்கப்பூரில் அவர்களிடையே ஏற்பட்டுவிடுகின்றது. சீலன் என்ற ஒழுக்கசீலன் தடம் மாறுகின்றான். அண்ணி மனைவியாகின்றாள். யுத்தத்தின் இன்னொரு முகம். நிர்ப்பந்தம். விறுவிறுப்பாக வாசிக்கத் தூண்டுகின்றது.
பாஹ்ரெயினைச் சேர்ந்த அருண்சந்தர் எழுதிய கதை `போ வெளியே’, மூன்று தலைமுறைகள் சங்கமிக்கும் கதை. தாத்தா – மகன் – பேர்த்தி. வயது முதிர்ந்துவிட்டால் சிலருக்கு பெற்றவர்கள் கூட பாரமாகிவிடுகின்றார்கள். இங்கே பேத்தி மாத்திரம் அன்பு காட்டுகின்றாள். வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள்கூட அவரிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு விரட்டிவிட்டன. ஓரளவிற்கு வசதி படைத்த இந்த முதியவருக்கே இந்தக்கதி என்றால் ஒன்றுமில்லாதவர்களின் நிலை என்ன என்று சிந்திக்க வைக்கின்றது.
தொகுப்பில் ஊக்கப் பரிசாக -. `சுய கெளரவம்’ (சுசீலா ராஜ்குமாரன்), `களவும் கற்று மற’ (பரமேஸ்வரி இளங்கோ), `தீக்குருவி (மூதூர் மொகமட்ராபி), `மெல்லத் திறந்தது கதவு’ (ஜெயபால் நவமணிராசைய்யா), `ஐந்தறிவு விதவை’ (அண்ணாதுரை பாலு) என மேலும் 5 சிறுகதைகள் இருக்கின்றன
போட்டி விதிமுறைகள், நடுவர்களின் அளவுகோல்கள் என்பவற்றிக்குக் கட்டுப்பட்டு தேர்வான இக்கதைகள் ஏதோ ஒரு வகையில் எம்மை ஈர்த்து நிற்கின்றன. கதைகள் வெவ்வேறான புலங்கள், பேசுபொருட்களைக் கொண்டிருக்கின்றன. இதில் எழுதிய எழுத்தாளர்களில் சிலர் ஏற்கனவே பரிட்சயமானவர்கள். பலர் புதுமுகங்கள். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பரிசுபெற்றவர்கள் பற்றிய சிறு குறிப்புகளையும் புகைப்படங்களையும் இணைத்திருந்தால், அவர்கள் பற்றி அறிவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
தமிழ்ச்சிறுகதைக்கு நூறாண்டுகள் கழிந்த நிலையில், கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிர்வாக சபையினர் சர்வதேச சிறுகதை வளர்ச்சியில் கொண்ட ஈடுபாடு காரணமாக எடுத்துக் கொண்ட இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது என்றே சொல்வேன்.
No comments:
Post a Comment