வாசிப்பு
வாசிப்பில் பலவிதமான சுவைகள் இருக்கின்றன.
சில புத்தகங்களை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு அப்பால் நகர்த்தவே
முடியாமல் இருக்கும்.
சில புத்தகங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் நேரத்துடன்
ஒப்பிடும்போது, இப்போது இந்தப் புத்தகங்களின் தேவை என்ன? ஆறுதலாக வாசிக்கலாம்தானே என்ற
நோக்கில் மனம் வைத்துவிடும். பின்னர் நேரம் இருந்தால், புத்தகத்திற்கு யோகம் இருந்தால்
மீளவும் வாசிக்கப்படும்.
இன்னும் சில புத்தகங்கள் – விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும்.
வாசிக்கத் தூண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி இழுத்துப் பிடித்து வைத்திருக்கும்.
வாசித்து முடித்துவிட்டு, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்து ஜோசித்தால்
மனதில் ஒன்றும் இருக்காது. அதன்பின்னர் மறுபடியும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்
என்ற எண்ணமும் வராது.
இவையெல்லாவற்றையும் தாண்டி, விறுவிறுப்பாக எம்மை எங்கோ அழைத்துச்
சென்று, வாசித்து முடித்தபின்னரும் மனதில் சலனத்தை ஏற்படுத்தி நீங்காத தடயமாக மனதில்
வீற்றிருக்கும் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வேண்டும்,
இன்னமும் அதன் தேவை இருக்கின்றது என்ற நினைப்பில் பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றும்.
சில புத்தகங்களை எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல்
இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின்
– புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை. சமீபத்தில்
ஒரு புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்தபோது – புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியிருந்த
ஒரேயொரு பொன் வாய்க்கியத்திற்காக அந்தப் புத்தகத்தைத் திறக்காமல் இருந்தேன். அந்த வாய்க்கியம்
அவருக்கே அச்சொட்டாகப் பொருந்தியிருந்ததுதான் அதற்குக் காரணம். தான் ஏதோ பெரிய கனவான்
போலவும், மற்றவர்களை அவதூறு செய்வது போலவும் அந்த வாய்க்கிய அமைப்பு இருந்தது.
புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர், அதிலிருந்து புதிதாக
பலவற்றை அறிந்துகொள்ள முடியுமென்றால் அதுவே சிறப்பு.
No comments:
Post a Comment