Thursday, 20 May 2021

அர்ப்பணம், சமர்ப்பணம். – சிறுகதை

 

மேகலா, சிந்துவின் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் இன்று எதற்காக வந்திருக்கின்றாள் என்பது சிந்துவிற்குத் தெரியும். சமையலறை சென்று தனக்கும் மேகலாவிற்குமாக தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு, ஹோலிற்குள் நுழைந்தாள் சிந்து.

 “எங்கே முகிலன்?” சுற்றுமுற்றும் பார்த்தபடி மேகலா கேட்டாள்.

 “பின் வீட்டில் விளையாடப் போய்விட்டான்.”

 “மகன் ஐந்தாம் வகுப்புத்தானே படிக்கின்றான்!” மனதிற்குள் எதையோ கணக்கிட்டவாறு மேகலா கேட்டபோது, ‘ஆம்’ என்று தலையாட்டினாள் சிந்து.

சிந்துவும் மேகலாவும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஒன்றாகப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் நண்பர்கள். ஒரே மாதிரி உடுப்புப் போடுவதும், அலங்கரிப்பதும், ஒன்றாகவே பேரூந்தில் பயணிப்பதும், பட்டாம்பூச்சிகள் போல பறந்து திரிவதுமான வாழ்க்கை அப்போது.

“எடியேய் சிந்து, எத்தினை தரமடி நீ அப்ப கேசவனுக்குத் துப்பி இருப்பாய்… எல்லாத்தையும் சகித்துக் கொண்டு, துஷ்யந்த மகாராஜா சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு ஓடினமாதிரி, கடைசியில் கேசவன் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான் தானே!”

சிந்து மெளனமானாள். அவள் வாழ்வில் என்றுமே அகலாத காட்சி அது. சிந்துவுக்கு அன்று  கடைசி வருட இறுதிப் பரீட்சை. அவள் மனதில் பதட்டம். பரீட்சை எழுதுவதில் அவளுக்கு என்றுமே பதட்டம் இருந்ததில்லை. அன்று அவளது வாழ்க்கைக்கும் ஒரு பரீட்சை.

சிந்துவின் அப்பா அம்மா அண்ணா என்று ஒரு பட்டாளமே அன்று அவளுடன் தொழில்நுட்பக்கல்லூரிக்கு வந்திருந்தது. அன்று ஏதாவது நடக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். அவர்கள் எல்லோரினது கண்களும் கல்லூரிக்கு வருவோர் போவோர் மீது பார்வையை எறிந்தபடி இருந்தன. கல்லூரிக்கு நடுவிலே ஒரு சிறு கேற் இருப்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அந்த சிறு கேற்றின் வழியே – மேகலா தனது சட்டையின் மேல் இருக்கும் தொப்பியினால் தனது முகத்தை மூடியபடியே உள் நுழைந்தாள். அவளுக்கு அன்று பரீட்சை இருக்கவில்லை.

சிந்து வினாத்தாளை அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டாள். கண்ணாடி ஜன்னலிற்குள்ளால் வெளியே நோட்டமிட்டாள். அவளையே பார்த்தபடி, ஒரு மரத்தின் கீழே தனது முகத்தை மூடியபடி நின்றாள் மேகலா. நடக்கப்போவதை நினைக்க அவள் மனம் கலவரமடைந்தது. எப்படி இதற்கு நான் உடன் பட்டேன்? இதன் பின்விளைவுகள் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

மேற்பார்வையாளர் அவளிடமிருந்த விடைத்தாள்களை வாங்கிக் கொண்டார். அவள் விறுவிறெண்டு பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேற, வாசலில் அவளை மடக்கிப் பிடித்தாள் மேகலா.

“எங்கே கேசவன்?” சிந்து மேகலாவிடம் கேட்டாள்.

“காரிற்குள் இருக்கின்றான். சீக்கிரம் போயாக வேண்டும்.” மேகலா பதில் தந்தாள்.

கார் ஒரு மரநிழலின் கீழ் பதுங்கி நின்றது. தன் மீசையை வருடியபடி புன்முறுவல் பூத்து நின்றான் கேசவன். ஓடிச் சென்ற சிந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

“தாமதிக்கக் கூடாது. றியிஸ்ரர் ஒஃபிஷில் நண்பர்கள் காத்துக்கொண்டு நிற்கின்றார்கள்” மேகலா சொல்ல இருவரும் பாய்ந்து காரின் பின் ஆசனங்களில் ஏறிக்கொண்டார்கள். மேகலா காரை வேகமாக ஓட்டத் தொடங்கினாள்.

அகதியாக இந்த நாட்டுக்கு வந்த கேசவன், இன்று பல ஹோட்டல்களுக்குச் சொந்தக்காரன். பகுதி நேரமாக ’ஹோட்டல் மனேஜ்மண்ட்’ படிக்கப் போன போதுதான் சிந்துவைக் கண்டுபிடித்தான். எப்படியோ அவர்கள் இருவருக்குனிடையேயான தொடர்பை சிந்துவின் பெற்றோர்கள் அறிந்து கொண்டார்கள். போயும் போயும் ஒரு ஹோட்டல்காரனையா காதலிக்கின்றாய்? வீட்டினில் பலத்த சண்டை. தாதியாகப் போகும் சிந்துவிற்கு கேசவன் பொருத்தமற்றவன் என்பது அவர்களின் விவாதம்.

“என்ன ஹனிமூன் காலத்துக்குப் போயிட்டியா?” மேகலா சிந்துவின் முதுகில் தொட்டு உலுப்பினாள்.

“எல்லாத்துக்கும் நீ தானே காரணமாக இருந்தாய்!”

“நீ விரும்பியிருக்காவிட்டால் இது எல்லாம் நடந்திருக்குமா?”

மேகலாவின் கேள்விக்கு பதில் தராமல் மீண்டும் மெளனம் காத்தாள் சிந்து. சிந்துவுக்கும் கேசவனுக்குமான வாழ்க்கை, சட்ட ரீதியாக, எண்ணி ஒன்பது வருடங்கள் தான் நீடித்தது. அந்த ஒன்பது வருடங்கள் கூட, தினமும் இருவருக்கும் நரக வேதனைதான்.

விவாகரத்தின் பின்னர் சிந்து தனது பெற்றோர்களுடன் இருக்கின்றாள். அவர்களுக்கு சிந்து கேசவனை விட்டுப் பிரிந்ததில் மகிழ்ச்சியே தவிர துக்கமில்லை. முகிலன் கிழமைகளில் ஐந்து நாட்கள் சிந்துவுடனும், வார இறுதிகளில் கேசவனுடனும் இருப்பான். பிள்ளையைக் குடுக்கமாட்டேன் எனப் பிடிவாதம் கொண்டிருந்தாள் சிந்து. எத்தனையோ போராட்டங்களின் பின்னர் தான் கேசவனிற்கும் பிள்ளையுடன் இருக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.

இருப்பினும் கடந்த ஆறு மாதங்களாகக் கேசவனைக் காணவில்லை.

ஒரு கலியாணம் நடக்கும்போது இருக்கும் ஆரவாரங்களில் ஒரு துளி கூட பிரியும்போது இருப்பதில்லை. அக்னி சாட்சியாக எத்தனையோ மனிதர்களின் முன்னால் நடக்கும் திருமணம், விவாகரத்து என்று வரும்போது தேவைப்படுவதில்லை.

கேசவனுக்கும் சிந்துவுக்கும் திருமணம் முடிந்த கையுடன் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. கேசவனுக்கு நண்பர்கள் முக்கியம். அவர்களுடன் தான் தனது நேரத்தைக் கூடுதலாகச் செலவிடுவான். குடிப்பதும் கும்மாளமிடுவதும் அவனுக்குப் பிடித்தவை.

சிந்து தன் ஆடம்பரத்துக்காக அதீத செலவு செய்கின்றாள் என்பது கேசவனின் பிரச்சினை.

இரண்டு பேருக்குமே பெரிய பெரிய கனவுகள். அதை விரைவிலேயே எட்டிப்பிடித்து விடவேண்டும் என்ற துடிப்பு.

முகிலன் பிறந்தவுடன் அவனை யார் பார்ப்பது என்பதில் கருத்து வேறுபாடு. தன் மனைவி ஒரு நேர்ஸ் என்று சொல்லிப் பெருமைப்படும் கேசவன், சிந்துவை வேலையை விட்டுவிடு என்பான். எக்காரணத்தைக் கொண்டும் வேலையை விடமாட்டேன் என்பாள் சிந்து.

ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக்கொண்டு விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் மனசு ஒன்றி ஒரு ஈடுபாட்டுடன் அதைச் செய்யமாட்டார்கள். அன்பைப் பொழிவதில் இருக்கும் இன்பம் விட்டுக்கொடுப்பதில் இருப்பதில்லை. கோபம் என்று வந்துவிட்டால் கணவன் மனைவி என்பதை மறந்து உச்சத்துக்குச் சென்றுவிடுவார்கள். சுடு வார்த்தைகள் தொண்டை நரம்பு பீறிடக் கிழம்பும்.

முகிலன் இவற்றைப் பார்த்துப் பயந்து நடுங்குவான். இருவருக்கும் நடுவில் அவன் மனமும் உடலும் நசுங்கிப் போய்விடும்.

வாய்த்தர்க்கம் முற்றி, எல்லை மீறும்போது கைக்குக் கிடைக்கும் பொருட்களால் ஆளை ஆள் அடிப்பார்கள். இயலாமையின் உச்சத்தில் சிந்து மீது கை வைப்பான் கேசவன். அதுவே பொலிஸ் வருவதற்குக் காரணமாக அமையும். அவர்கள் கேசவனைப் பிடித்துச் செல்வார்கள். இரவு முழுவதும் ஜட்டியுடன் பொலிஸ் ஸ்ரேசனில் இருக்க விடுவார்கள். `இனி ஒன்றும் செய்ய மாட்டேன்’ என ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு மறுநாள் விட்டுவிடுவார்கள்.

அதன் பின்னர் சிந்துவும் முகிலனும் ஒரு அறைக்குள் இருப்பார்கள். கேசவன் மறு அறைக்குள். சில நாட்கள் செல்ல ஒன்றுமே நடவாதது போல மீண்டும் குதூகலமாக வாழ்க்கை தொடங்கும்.

ஒருமுறை அவுஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்க நியூசிலாந்தில் இருந்து கேசவனின் நண்பி, கணவன், இரண்டு பிள்ளைகள் வந்திருந்தார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இரண்டு வாரங்கள் அவுஸ்திரேலியாவைச் சுற்றினார்கள். அவர்கள் போன மறுநாள் பூகம்பம் வெடித்தது.

“என்னை இவ்வளவு நாளும் ஒரு இடமும் சுற்றிக் காட்டவில்லை. நண்பி வந்ததும்….” சிந்து சொல்லிமுடிப்பதற்குள் இடைமறித்தான் கேசவன்.

“அவள் என் நண்பி அல்ல. முன்னாள் காதலி.”

அந்தச் சம்பவம் தான் அவர்களின் விவாகரத்துக்குக் காரணமாகியது.

”உனக்குத் தெரியுமா சிந்து! நேற்று நான் கேசவனைக் கண்டேன். தனது வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தான். வீட்டு சுவர் முழுவதும் உன்னுடையதும் முகிலன்ரையும் படங்கள். அதைப் பாத்தப்போ எனக்கு அழுகையா வந்துது.

என்னத்தைக் கதைச்சாலும் உன்னையும் அதுக்குள்ளை சேர்க்காமல் விடமாட்டான். சிந்துவோடை படம் பார்க்கப் போகேக்கையா…. சிந்துவோடை ரூர் போகேக்கையா….

சிந்து…… சிந்து…. சிந்து. எதுக்கெடுத்தாலும் சிந்து.

யோசிச்சுப் பார். நீங்கள் இரண்டு பேரும் பிரிஞ்சு இரண்டு வருஷமாப் போச்சு. ஆராவது மறுமணம் செய்து கொள்ளுறதைப் பற்றி யோசிச்சிருக்கிறியளா?”

“முகிலன் பாவம் எண்டுதான் எல்லாத்தையும் சகிச்சுக்கொண்டு வீட்டுக்குள்ளை அடைஞ்சு கிடந்தன். பிரியிறதை விட விலகி இருப்போம் எண்டுதான் வீட்டுக்குள்ளையே செப்பறேற்றா இருந்தன். ஆனா எத்தினை வருஷங்களுக்கு?

உனக்குத் தெரியும் தானே நாங்கள் ஏன் விவாகரத்து செய்து கொண்டோம் எண்டு!” முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு சொன்னாள் சிந்து. முகம் திரும்பிய பக்கம் போய் நின்றாள் மேகலா.

“பிறகு அவள் கேசவனின் தங்கை முறையானவள் என்று அறிந்து கொண்டாய் தானே! கேசவன் உன்னைக் கோபப்படுத்துவதற்காக சொன்னான் என்பதைப் புரிந்து கொண்டாய் அல்லவா. இங்கே பார்! இங்கே பிரிந்து வாழ்வதற்குத்தான் சட்டங்கள். சேர்ந்து வாழ்வதற்கல்லவே!” சிந்துவின் முகத்துக்கு நேரே குனிந்து சொன்னாள் மேகலா.

“முகிலனை நல்லாக வளர்க்க வேண்டும். அவனுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும்” சிந்துவின் கண்களில் நீர்த்துளிகள் ஓரம் கட்டின. குனிந்து துடைத்துக் கொண்டபோது அவள் கழுத்திலே தொங்கிய சங்கிலி மேகலாவின் கவனத்தை ஈர்த்தது.

“உன்ரை சங்கிலியிலை இருக்கிற பென்ரன் நல்ல வடிவா இருக்கு. தா ஒருக்கால் பார்ப்போம்.”

சங்கிலியைக் கழற்றி கைகளுக்குள் பொத்தியவாறு, “தரமாட்டேன்” என அடம் பிடித்தாள் சிந்து.

“அன்ரி…. அதுக்குள்ளை அப்பாவின்ரை படம் இருக்கு” சொல்லியவாறே அவர்கள் இருந்த செற்றிக்கும் சுவருக்குமிடையே ஒளித்திருந்த முகிலன் திடீரென்று எழுந்து கொண்டான்.

“நீ விளையாடப் போகவில்லையா?” சிந்து திடுக்கிட்டாள்.

“குறும்புக்காரப் பயலே!” அவனைக் கட்டிப்பிடித்து உச்சியில் ஒரு முத்தம் கொடுத்தாள் மேகலா.

“இவ்வளவும் எனக்குப் போதும். நாளைக்கு எனக்கு போன் பண்ணுகின்றாய். நல்ல முடிவாச் சொல்லுறாய்” மேகலா புறப்பட்டுக் கொண்டாள்.

இருவருமே இன்று தங்கள் பிழைகளை உணர்ந்து கொள்கின்றார்கள். கேசவனை விட இனி ஒரு மாப்பிள்ளை தனக்குத் தோதுப்படும் என சிந்து நினைக்கவில்லை. கேசவனுக்கும் அப்படித்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்பது சிந்துவுக்குத் தெரியவில்லை. வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. தோழியின் வரவு ஒரு புத்துணர்ச்சியை அவளுக்குக் கொடுத்திருந்தது. எழுந்து லைற்றைப் போட்டாள். உடனேயே மேகலாவுக்கு போன் செய்தாள்.

மறுநாள்…

“அப்பா… குனி அப்பா. நாலு காலிலை நட. முழங்கால் நிலத்திலை முட்டட்டும்” கேசவனின் முதுகில் சவாரி செய்தான் முகிலன். கேசவன் அவனைச் சுமந்து கொண்டு வீடு முழுவதும் தவழ்ந்தான். சத்தம் கேட்டு ஹோலை எட்டிப் பார்த்தாள் சிந்து. பார்க்கச் சிரிப்பாக இருந்தது அவளுக்கு. தானும் ஏறிப் பார்ப்போமா? மெதுவாக அடியெடுத்து வைத்து கேசவன் மீது ஏறினாள். கேசவன் ஒன்றும் சொல்லவில்லை. பாரம் அழுத்த மெதுவாகத் தவழ்ந்தான்.

“உம்…. கெதியாக…” சத்தமிட்டான் முகிலன்.

“எங்கே வீடு முழுவதும் என்னுடையதும் முகலனுடையதும் படங்கள் நிறைய ஒட்டி வைச்சிருக்கிறதாக மேகலா சொன்னாளே!”

கேசவன் சிரித்துவிட்டு, “என்ரை மனசு முழுவதும் நீங்கள் நிறைஞ்சு இருக்கேக்கை, வீட்டுச் சுவரிலை ஏன் நான் ஒட்டப் போறன்” என்றான்.

No comments:

Post a Comment