இதழில் மொத்தம் 5 சிறுகதைகள் இடம்பெறுகின்றன.
வசந்தி தயாபரன் அவர்கள் எழுதிய `ஆழிசூழ் உலகு’,
வி.ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய `மரணப் படுக்கை’
முருகபூபதி அவர்கள் எழுதிய `எங்க ஊர் கோவூர்’
சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் எழுதிய `பொலிஸ் வருது’
மூதூர் முகைதீன் அவர்கள் எழுதிய `எதிர்பார்ப்பு’
இவற்றுள் ஆழிசூழ் உலகு, மரணப்படுக்கை, எதிர்பார்ப்பு என்ற 3 கதைகளும் நனவோடை உத்தியில் எழுதப்பட்டிருக்கின்றன. எங்க ஊர் கோவூர், பொலிஸ் வருது இரண்டும் நேரடியாக எழுதப்பட்டுள்ளன.
சிறுகதை என்பது வீட்டுக்குள்ளிருந்து ஒரு ஜன்னலுக்குள்ளால்
பார்க்கும்போது தெரியும் காட்சியைப் போன்றது என்று சொல்லுவார்கள். ஒரு எழுத்தாளரைப்
பொறுத்தவரையில், ஒரு சிறுகதையானது கரு, களம், பாத்திர வார்ப்பு, சொல்லும் முறைமை, வளர்ந்து
செல்லும் விதம், முடிவு, சமுதாயத்துக்கு சொல்லும் செய்தி எனப் பலவற்றைக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒரு சாதாரண வாசகனைப் பொறுத்தவரையில் சிறுகதையானது, ஒரே மூச்சில் அங்கு இங்கு
என வாசிப்பவரை அசையவிடாது, ஒருநிலைப்படுத்தி, கடைசியில் ஏதோவொரு சிந்தனையை அவருக்குள்
விதைக்குமாயின் - அதுவொரு நல்ல சிறுகதைக்கு அடையாளம்.
ஞானம் 254ஆவது இதழில் வந்த சிறுகதைகளை நீங்கள் எல்லோரும்
படித்திருப்பீர்கள். நான் விலாவாரியாக எந்தக்கதையையுமே இங்கு சொல்லப் போவதில்லை. எல்லாச்
சிறுகதைகளுமே, சிறுகதை என்ற கட்டுக்கோப்புக்குள் அமைந்திருக்கின்றன. அழகாக எழுதப்பட்டிருக்கின்றன.
அடுத்த சிறுகதை வி.ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய `மரணப் படுக்கை’.
இந்தச் சிறுகதையின் வடிவம், ஞானம் 245 ஆவது இதழில் வந்த, ஈழநல்லூர் கண்ணதாசன் அவர்கள்
எழுதிய `காவியத் தலைவன்’ சிறுகதையை ஒத்தது. அங்கே இராமாயணம், இங்கே ம்காபாரதம். ஒரு
சிறுகதைக்குள் இன்னொரு சிறுகதை. மகாபாரதத்தின் சில காட்சிகளை ஒப்பீடு செய்வது. மகாபாரதத்தில்
பீஷ்மர் ஒரு பெருவிருட்சம். மகாபாரதத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை பயணிக்கும் ஒரு
பாத்திரம். ஒரு இமயத்தை `இத்தினூண்டு’ சேர்மனுடன்---அதுவும் ஒரு வைப்பாட்டியை வைத்திருக்கும்
ஒருவருடன்---ஒப்பிடுவது மனதிற்கு சங்கடமாக இருக்கின்றது. ஒப்பீடு சில இடங்களில் சரிவர
அமையவில்லை என்பது எனது கருத்தாகும். மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் சிலருக்கு உடன்பாடானதாகவும்,
சிலருக்கு எதிர்மறையாகவும் இருக்கலாம். ஆனால் அது விதிக்கப்பட்டது என்று வியாசரே சொல்லிவிடுகின்றார்.
ஆசிரியர் குறிப்பிடுவது போல பீஷ்மர் கலங்கினாரா என்பது கேள்விக்குறி. இருப்பினும் வி.ஜீவகுமாரன்
அவர்களின் மறுவாசிப்பும், வித்தியாசமான அணுகுமுறையும் இந்தக்கதையில் சிறப்பாக வந்துள்ளது.
அடுத்த சிறுகதை முருகபூபதி அவர்கள் எழுதிய `எங்க ஊர் கோவூர்’.
`மரணப்படுக்கை’ என்ற சிறுகதையில் பீஷ்மர் என்றால், இங்கே கோவூர். ஆனால் கோவூர் என்ற
தோற்ற ஒற்றுமை, மற்றும் அவரைப்பற்றிய சில தகவல்களுடன், கதை அப்பாலே நகர்ந்து விடுகின்றது.
ஒவ்வொரு நிகழ்வையும் அருகேயிருந்து பார்ப்பதுபோல், கதையை ஆசிரியரே கூறும் உத்திமுறை
இது. நடைப்பயிற்சியின்போது சந்திக்கும் டெனி என்னும் முதியவரைப் பற்றியும், அவரின்
செல்லப்பிராணியான எக்ஸெல் என்ற நாயினதும் கதை. புலம்பெயர் நாட்டுக்கேயுரித்தான மணமுறிவு,
தனிமை, முதுமையில் தனிமை, வளர்ப்புப் பிராணி நாய் எனக் கதை நகருகின்றது. டெனியின் இழப்பும்,
நாயின் நன்றியுணர்வும் கண்ணீரை வரவழைக்கும் சிறுகதை இது.
அடுத்த சிறுகதை சீனா உதயகுமார் எழுதிய `பொலிஸ் வருது’. தலைப்பும்
கதையும் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட சிறுகதை இது. பயணத்தடை காலத்தில் சாராயத்தைக் குடிக்காமல்
தவிக்கும் அம்மையா, மலிவு விலையில் சாராயம் வாங்குகின்றார். அவருக்கு சாராயம் குடிக்கவேண்டும்
என்று தோன்றும் போதெல்லாம் இருமல் தொடங்கிவிடும். அவரது சாராயக்குடிப்புக்கு அம்மம்மாவும்
உடந்தை. வெறும் தேயிலைச் சாயத்தைப் போத்தலுக்குள் அடைத்து, சாராயம் என்றுசொல்லி விற்கும்
மலிவுவிலையின் மகத்துவத்தைக் கதை சொல்கிறது. தற்போது நகைச்சுவைக்கதைகள் வருவது வெகுவாகக்
குறைந்துவிட்டது. கதையைப் படித்து சிரித்து
வயிறு புண்ணாகிவிட்டது.
இதழில் வந்த இறுதிக்கதையாக மூதூர் முகைதீன் அவர்கள் எழுதிய
`எதிர்பார்ப்பு’. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கதையும் அதற்கான போராட்டங்கள் பற்றியதுமானது.
கோமளா என்ற பெண்ணின் வாழ்வில் நடந்த துயர சம்பவங்களும், காணாமல் போன கணவனைத் தேடும்
போராட்டமும் பற்றி விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுளது. உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில்
எழுதப்பட்டுள்ள இந்தக் கதை போல, பல சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையில் ஏற்கனவே வந்திருக்கின்றன.
இந்த இதழில் வந்த ஐந்து சிறுகதைகளும், கதை சொல்லும் பாணியிலும்,
கதையின் கருவிலும் வெவ்வேறு விதத்தில் அமைந்திருக்கின்றன. எல்லாக் கதைகளுமே எனக்குப்
பிடித்திருந்தாலும், மிகவும் பிடித்த கதைகளாக `எங்க ஊர் கோவூர்’, `மரணப் படுக்கை’ என்ற
கதைகளைச் சொல்லலாம்.
எல்லாச் சிறுகதைகளுக்கும் அழகாக ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
ஞானம் சஞ்சிகையை தொடர்ச்சியாக வாசித்து வருபவன் என்ற முறையில், ஓவியங்களை வரைந்தவர்
தவம் என்றே நினைக்கின்றேன். ஓவியரின் பெயரை, ஞானம் சஞ்சிகையினர் குறிப்பிட்டிருந்தால்
நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
No comments:
Post a Comment