அ.ஸ.அப்துல் ஸமது
எனக்கு வயது பதின்மூன்று ஆகிறது. நான் சிக்கந்தர் போடியாரின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இதுவரை நான் அறிந்த உலகம் இந்தப் போடியாரின் வீடுதான்.
'என்னைப் பெத்தவ' என்று சொல்லிக்கொண்டு என் உம்மா மாதம் ஒருக்கா போடியார் ஊட்டுக்கு வருவா, போடியார் எனக்குரிய சம்பளம் பதினைந்து ரூபாவையும் அவவிடம் கொடுப்பார். அதுவும் சும்மா இல்லை. என் உம்மா வரும் நாள் பார்த்து, போடியார் ஊட்டில் ஏதாவது வேலை காத்திருக்கும். 'ஆசியா இந்தக் கொள்ளியைக் கொத்திவிடு, இந்தத் தேங்காய் பதினைந்தையும் உரித்துத் தந்திடு, நெல் மூண்டு மரைக்கால் கெடக்கு. அவிச்சுக் காயவையேன்' இப்படி ஏதாவது வேலை வாங்கிவிடுவா போடியார் பெண்சாதி. இப்படியெல்லாம் செய்தும் மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னம் கையில காசக் கொடுத்து என் தாயை அனுப்பிவிடுவாள் அந்தச் சீமாட்டி.
'நான் வாறன் மகள்!' என்று கூறிக்கொண்டு உம்மா போய்விடுவா. உம்மா இப்படி ஒரு வார்த்தை சொல்வதில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. அவ சொல்லாமல் போய்விட்டாற்கூட எனக்கு எவ்வித கவலையும் இல்லை. சிலவேளை இவதான் என்னைப் பெத்தவவா? ஒரு தாய் ஒரு மகள் மீது செலுத்தும் பாசம் இவ்வளவுதானா? என்ற வினாக்கள்கூட என் மனத்தில் எழும்.
யார் பெத்தா என்ன? யார் வளர்த்தா என்ன? இந்தப் பூமிக்கு நாம வந்திற்றம். கூடவே வயிறென்ற ஒன்றையும், மனம் என்ற இன்னொன்றையும் கொண்டு வந்திற்றம். அதுக்காக ஆடித் தொலைக்க வேண்டியதுதானே. நானும் இந்த பூமியில் பொறந்த ராசி, மறு வருஷமே என் வாப்பா மவத்தாகிப் போக உம்மா கைம்பொண் ஆயிற்றா. உள்ள பிள்ளைகளை வளர்த்துக்க வக்கில்லாமல் அவைகளை இப்படி ஆரார் வீட்டுக்கோ தானம் பண்ணி வயிறு வளர்க்கிறா, மூத்தவ பருவ வயதாயிற்றா, எப்பவோ கலியாணம் ஆகி இருக்க வேணும். என் உம்மா தினசரி நெல் குத்திவிப்பா, மாதம் முடிந்ததும் என் சம்பளம் பதனைந்து ரூபாயும், காக்காட சம்பளம் இருபது ரூபாவும் கைக்கு வரும். இதக் கொண்டு உம்மா எந்தக் குமரை நிறைவேற்றுவா? எல்லாம் சேர்ந்து சோத்துக்கும் உடுப்புக்கும் போதா.'
சிங்கந்தர் போடியாருக்கு என்னைவிட இரு வயது மூத்த பெண்பிள்ளை ஒன்று இருக்கா. ஸரீனா என்று பெயர். உள்ளூர் மகா வித்தியாலயத்தில் பத்தாம் வகுப்புப் படிக்கா. அந்தப் பிள்ளை பாய்களிசானும், கௌனும், தாவணியும் அணிந்து இரட்டைப் பின்னலும் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போவா! அதப் பாக்கவே எனக்கு ஆசை பொங்கும். ராஜகுமாரத்தி மாதிரி எவ்வளவு அழகா இருப்பா, பள்ளி தவிர வேற எங்கேயும் போறதெண்டால் மடிப்புக் குலையாத கட்டைப் பாவாடையும் சேட்டும் போட்டுக்கொள்வா. அது அவவுக்கு இன்னும் அழகு. போன ஹஜ்ஜீப் பெருநாளைக்கு சிவப்பு நிறக் கட்டைப் பாவாடையும் ப்ளௌசும் போட்டிருந்தா. அந்தச் செவ்வரத்தம் பூ சிவப்பு நிறம் இன்னும் என் கண்ணை விட்டு மாறவில்லை. இந்த உடுப்பழகுக்காகவே ஸரீனாவோடு எனக்கு ஒரு பிரியம். ஏன் பொறாமை என்றுகூடக் கூறலாம். இத அறிஞ்சாப் போடியார் பெண்சாதி என்னைத் தொலைச்சிருவா.....
போன ஹஜ்ஜீப் பெருநாளைக்கு கூப்பன் கடையில சீத்தை வாங்கி எனக்கி ஒரு நீட்டுப் பாவாடையும், போளைக் ககைச் சட்டையும் தச்சிக் குடுத்தாங்க, அதப் போட்டுக்கிட்டு கண்ணாடியின் முன் நின்று பார்த்தேனே, என்ர அல்லாவே என்ன அலங்கோலம்! என்ர கண்ணால தண்ணீரே வந்து விடும் போலிருந்தது. அவங்கட புள்ளயப்போல நானும் ஒரு குமர்தான். வரவரத் திறந்த மார்போடு திரிய எனக்கு ஒரு வித வெட்கமாக இருக்குது. ஒரு மேலாக்காவது இருந்தா மார்பை மூடிக்கொண்டு கூச்சம் இல்லாமல் திரிவேன். இதப் போடியார் பெண்சாதியிடம் சொன்னேன். அதற்கு அவ, 'இப்ப பொடவ சீல விக்கிற வெலக்கி, அதெல்லாம் பொறகு பார்த்துக்கலாம்' என்று சொன்னா. மன்னவன் பேச்சுக்கு மறுபேச்சு இருந்தாலும் மகாராணி பேச்சுக்கும் மறுபேச்சு உண்டோ? நான் ஒரு வேலைக்காரி என்பதை என் உடை நடையிலேயே காட்டணும் என்பது அவர்கள் எண்ணம். ஆழகான பாவாடையும், எழிலான தாவணியுமாக நான் திரிந்தா, அவங்க மகளுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாமற் போய்விடும்!.
இன்னும் இரண்டொரு வருடத்தில் நானும் பெரியபுள்ள ஆயிடுவேன். பருவம் ஆயிற்றா முஸ்லிமான நாங்க பிடவைதானே உடுக்கணும். அப்பொழுது போடியார் மகளும் பள்ளியை விட்டுடுவா, அப்புறம் அவவும் பிடவைதான் உடுப்பா. அவ, விதம்விதமான பிடவையெல்லாம் உடுப்பா, எனக்கோ கூப்பன் கடைச் சீத்தையும் மருதமுனைத் தறிப் பிடவையுமாகத்தானே வாங்கித் தருவாங்க. நான் ஏழை வகுத்துல பொறந்தவள். ஸரீனாவின் தகுதிக்கு நான் எப்பிடி ஈடுகொடுக்க முடியும்? ஆண்டவன் தான் எங்கள இப்பிடி வித்தியாசம் வித்தியாசமாகப் படைச்சிற்றானா? அல்ல இப்படியான அந்தஸ்து பாகுபாடுகளை நாங்கள் தான் உண்டாக்கிக்கொண்டோமா? எனக்கு ஒன்றும் விளங்குதில்லை.
ஐந்து வருஷமாக இந்த ஊட்டில தொடர்ந்து மாடா உழைகிறேன். அதிகாலை ஸீபஹீக்கு எழுந்து தேயிலைக்குத் தண்ணி வைத்திற்று, வீடு வாசலைக் கூட்டத் தொடங்கினா, அப்புறம் இரவு ரேடியோவில் பாட்டெல்லாம் முடிந்த பொறகுதான் படுக்கையில் கொண்டு விழுவேன். என்னேரமும் சுழன்று சுழன்று வேலை செய்வது எனக்குப் பழகிப்போயிற்று. சும்மா உட்கார்ந்திருப்பது ஏலாமலிருக்கிறது. 'துடிதுடிப்பானவ, அலுப்பில்லாம வேலை செய்வாள். நல்லவள்' என்று போடியார் பெண்சாதி, வீட்டுக்கு வருகின்றவர்களிடம் என்னப்பந்தி புகழுவா, ஒரு விஷயத்தில் மட்டும் போடியார் பெண்சாதிக்கு என்னோட கோபமும் சந்தேகமும் கூட.
ஓன்றுமில்ல, போடியாரின் மூத்த மகன் தாஹா என்னோடு கொஞ்சம் இரக்கமாகப் பழகுவார். அவரும் மகா வித்தியாலயத்தில் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறார். அவர் உடுப்புகளைக் காயவைத்தால், நான் அதை எடுத்து மடித்துக்கொண்டு போய், அவரது அறையில் வைப்பேன். அவரது அறைக்குத் தேனீர் கொண்டுபோனால், மேசையில் கிடக்கும் புத்தகங்களைப் புரட்டிப் படம் பார்த்துக்கொண்டு நின்றுவிடுவேன். அவர் எதுக்கு எடுத்தாலும், 'ஸல்மா, இஞ்சவா, இந்தச் செருப்பில் சேறு பட்டிரிக்கி, அதைச் கழுவிக் கொண்டுவா! குடிக்கத் தண்ணி கொண்டுவா! இந்தத் தலையணைக்கு உறைமாற்று' இப்படி ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருப்பார். ஓளிக்காமல் சொன்னால் அவர் என்ன வேலை சொன்னாலும் அதச் செய்வதில் எனக்கொரு மகிழ்ச்சி.
இந்தச் சம்பவம் ஒன்றும் போடியார் பெண்சாதிக்குப் பிடிக்காது. 'வளந்த ஆண் பிள்ளையோட கணக்காகப் பழகணும்டி' என்று என்னைக் கண்டித்துப் பேசுவா. இதுக்கு நான் என்ன செய்வேன். நான் அவரை மிக மரியாதையாகக் காக்கா எண்டுதான் கூப்பிடுவேன். ஆனால் ஒருநாள் அவர் தான் என்னைக் கையில பிடித்து இழுத்து என் கன்னத்தில் செல்லமாக அடித்தார். இத நான் யாரிடமும் சொல்லவில்லை. இவ்வளவு இரக்கமாக இருக்காரேயெண்டு எனக்கும் அவரோட ஒரு பாசம் இல்லாமற் போகுமா?
இத மனதில் வச்சித்தானோ என்னவோ 'அவருக்கும் வயதாப்போயிற்று, எப்படியும் அவள, அவள்ற வீட்டுக்கு அனுப்பினாக்கூட நல்லது. நாம வேற சின்னப் பிள்ளையாக ஒண்டு பாப்பம்' என்று போடியார் மனைவி, போடியாரிடம் ஒரு நாள் கூறினார். அதுக்கும் போடியார், 'இவள அனுப்பினா இவளைப்போல பழகின பிள்ளையொண்டு இலேசில் அகப்படுமா? அதுவும் பதினைந்து ரூபாக்கு எங்கே கிடைக்கப் போகுது?' என்று சொன்னார். போடியார் பெண்சாதி விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் கஷ்டப்பட்டதை குசினிக்குள் நின்ற நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இந்தச் சம்பவத்துப் பிறகு நான் காக்காவோடு அவ்வளவாகப் பழகுவதில்லை. 'ஸல்மா! ஸல்மா!! எண்டு அவர் கூப்பிட்டாக்கூட, நான் அவர்ர அறைப்பக்கமே போகமாட்டேன், 'என்னெண்டு கேளேன்' எண்டு போடியார் பெண் சாதியும் கூறமாட்டா. பதிலுக்கு அவவே போய் 'என்ன தம்பி வேணும்?' என்று கேட்பா, அல்லது ஸரீனா போய் அந்த வேலையைச் செய்வா, இந்த வித்தியாசம் எனக்கு விளங்காமல் நான் என்ன சிறு குழந்தையா? எனக்கு இதப் பத்திக் கவலையும் இல்லை.
இப்போது காக்கா என்கிறேன், நாளைக்கு மச்சான் என்கிற காலமும் நேரமும் வந்துவிடவா போகிறது? நான் எவ்வளவு நல்லவளாகவும், அழகியாகவும் இருந்தாலும், நான் ஏழை அவங்க பணக்காரர். நான் தண்ணி, அவங்க எண்ணெய், ஒரு போத்தலுக்க இரண்டு இருந்தாலும் ஒன்று சேரவா போகிறது?
தின்ன உண்ண மட்டும் இவ்வீட்டில ஒரு குறையும் இல்லை. இருநூறு அவணம் முன்னூறு அவணம் என்று ஒவ்வொரு வருஷமும் நெல் வருது. இந்த நிலையில் சோற்றுப் பஞ்சம் இந்த வீட்டில் எப்பிடி வரும்? இருந்தும் உணவால் உடல் வளரும். மன மகிழ்வும் திருப்தியும் எப்படி வரும்? என்று நான் யோசிப்பேன். தின்பதில் குடிப்பதில்கூட நான் ஒரு வேலைக்காரியாகத்தான் நடத்தப்படுகிறேன். எனக்கு சோறு தின்ன ஒரு பீங்கான். தேனீர் குடிக்க ஒரு கோப்பை. படுக்க ஒரு தனிப்பாய். அதற்குத் தலையணையே கிடையாது. இப்படி ஒரு நடைமுறை இந்த வீட்டில் உண்டு.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் நான் என் பீங்கானைக் கழுவி எடுத்துப்போய் என் சோத்தை வாங்கிக் கொள்ளவேண்டும். அதுபோல் எல்லோரும் தேனீர் குடித்து முடிந்ததும், நான் எனது கோப்பையைக் கழுவி எடுத்துச் செல்லவேண்டும். சிறைக்கைதிகளும் இப்படித்தான் என்று யாரோ கதைத்தார்கள். நானும் இவ்வீட்டில் ஒரு சிறைக்கைதியா? தேயிலைக்குத் தண்ணீர் வைப்பது நான். அரிசி கழுவுவது, மீன் வெட்டுவது, மரக்கறிவகை அரிவது எல்லாம் நான். உண்ணும்போதும் குடிக்கும்போதும் மட்டும் நான் ஒரு இழிந்த சாதியாக எப்படி மாறுகிறேன்.
முஸ்லிம்களெல்லாம் சமமானவர்கள், சகோதார்கள் என்று சொல்கிறார்கள். நான் மட்டும் இந்தச் சகோதார்களில் சேரவில்லையா? என் உம்மா, ஐந்து 'வக்து'ம் ஒழுகாகத் தொழாவிட்டாலும் நோன்பு முப்பதும் பிடிப்பா, 'தறாவீஹ்' தொழப்போவா, ஹறாம் ஹலாலுக்கு பயந்து நடப்பா. அவ வயத்துல பிறந்து ஸல்மா என்று பெயரும் வைத்துக்கொண்ட நான் வேலைக்காரியான காரணத்தினால்தானே இழித்தவளானேன்! என் ஆசையின்படி உடுக்க முடியவில்லை! என் எண்ணத்தின்படி நடக்கமுடியவில்லை!
அடுத்த தெருவில் ஒரு நெசவு நிலையம் இருக்கிறது. குமர்ப்பிள்ளைகளெல்லாம் அங்குபோய் தொழில் பழகுதுகள். அதன் விருப்பம்போல உடுத்திக்கொண்டு சந்தோஷமாகக் கதைத்துக் கொண்டு போகுதுகள். எனக்கு என்ன தொழில் தெரியும்? இந்த வீட்டுக்கு வந்து என்னத்தப் படிச்சுக் கொண்டேன்! ஸல்மாவின் சிந்தனை எதிர்நீச்சல் அடிக்கத் தொடங்கிற்று அதனைத் திருப்பி எடுப்பது இனி இயலாத காரியம்.
மறுநாள் ஸல்மா அந்த வீட்டில் இருந்து விலகினாள். போடியார் பெண்சாதி சந்தோஷமாகப் பதினைந்து ரூபாய் சம்பளத்தையும் கொடுத்தா. போடியார் அன்பளிப்பாக நூறு ரூபா கொடுத்தனுப்பினார். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தன் தாய் வீட்டில் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு மனநிறைவான ஒரு வாழ்வு வாழ ஸல்மா மிக வேகமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
பாய் களிச்சான், கௌன், மார்பகத்தில தாவணி இத்தனையும் அணிந்துகொண்டு, எடுப்பான அழகுத் தோற்றத்தோடு, கையில் குறிப்புக் கொப்பியுடன் நெசவு நிலையம் நோக்கி நடந்து செல்லும் புதுப்பிள்ளை வேறு யாருமில்லை! அந்தப் பதின்மூன்று வயது வேலைக்காரி ஸல்மாதான். அவள் இப்பொழுது நெசவு பழகுகிறாள். அவளது கம்பீரமான நடை, களங்கமற்ற நேர்பார்வை என்பன அவளுடைய எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு நம்பிக்கையான ஆதாரங்களாக அமைந்தன.
(1975)
No comments:
Post a Comment