Friday, 15 October 2021

`முதல் வகுப்பு பொதுத் தேர்வு’

`குட்டி இளவரசன்’ என்றொரு குறுநாவல் வந்தது. சிறுவர் நாவல் என்ற போதும் அது வளர்ந்தவர்களுக்குமானது. அதேபோல `முதல் வகுப்பு பொதுத் தேர்வு’ குறுநாவலையும் நான் வளர்ந்தோருக்கும் ஏற்றதெனப் பார்க்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு அரசியல் நாவலாக வந்திருக்கின்றது. சிறுவர்கள் மீது ஆரம்பப் பாடசாலைகளிலேயே வரலாற்றுத் திரிபைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆசிரியர் சுவைபடச் சொல்லிச் செல்கின்றார்.

ஐந்தாம் வகுப்பு மாணவனான சுரேந்திரனைப் `பின்னிப் பெடல் எடுக்கும்’ ஆசிரியர் சிவப்பிரகாசமும், எதற்கும் சளைத்தவன் அல்ல என வரும் சுரேந்திரனும் சுவையான பாத்திரங்கள்.

பொதுத்தேர்வின் போது மாணவர்களின் ஆடைகள் களையப்பட்டு சோதிக்கப்படுகின்றது. உண்மையில் இங்கே ஆடை களையப்பட்டு அம்மணமாக்கப்படுபவர் ஆசிரியர் சிவப்பிரகாசம் தான்.

`தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? 1.சிவாஜி 2.சத்திரபதி சிவாஜி 3.மராட்டிய வீரன் சிவாஜி 4.சிவாஜி ராஜே போன்சலே’ – இந்தக் கேள்வி, 2018 ஆம் ஆண்டு தாஜ்மகாலை நேரில் சென்று பார்த்த என்னை நிலைதடுமாறச் செய்துவிட்டது.

இலங்கையில் நான் சிறுவனாக கல்வி பயின்றபோது, புதிய கல்வித்திட்டம் என்ற போர்வையில் அரசு, பல `தகிடு தத்தங்களை’ சமூகக்கல்வி என்ற பாடத்தில் திணித்திருந்தது. இங்கே முகலாயர்களின் சரித்திரத்தை மறைப்பதற்கு, ஆசிரியர் சிவப்பிரகாசம் சத்ரபதி சிவாஜியைக் கையில் எடுக்கின்றார்.

பதிவு: 35 + 10 + 3 + 2 ; வருகை: 35 + 8 + 1 + 1 என்ற தகவலில் ஆசிரியர் என்னத்தைச் சொல்ல வருகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. அத்துடன் `தாஜ்மகாலைக் கட்டியவர் யார்?’ என்ற கேள்விக்கான பதிலை நான்கு விடைகளிலிருந்து தெரிவு செய்து எழுத வேண்டுமா? அல்லது   தெரிவு செய்து, அவரைப்பற்றி எழுத வேண்டுமா? என்பதும் தெளிவாக இல்லை. அந்த ஒரு கேள்விக்கு மாத்திரம் மதிப்பெண்கள் 60 வழங்கப்படுவதும், விடை எழுதுவதற்கான நேரம் ஒன்றரை மணித்தியாலம் என்பதில் இருந்தும் – தாஜ்மகாலைக் கட்டியவரைத் தெரிவு செய்து அவரைப்பற்றி எழுத வேண்டும் என்பதே சரியாக இருக்க வேண்டும்.

குறியீட்டுப் பாணியில் வரலாற்றுத் திணிப்பை முன் வைக்கின்ற இந்த நாவலுக்கு வரைந்திருக்கும் ஓவியங்கள் அற்புதமானவை. எளிமையான நடையில் சுவைபடச் சொல்லியிருக்கின்றார் அண்டனூர் சுரா.

 

Tuesday, 5 October 2021

புத்தகங்கள் மத்தியில் வாழ்வு - பத்மநாப ஐயர்

 

இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது இணைய நூலகம் (noolaham.org) ஆகும். உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஒரு நொடிப்பொழுதில் இந்த நூலகத்தை அணுகிவிடலாம். இந்த நூலகம் திட்டத்தின் ஒரு முன்னோடியாகத் திகழ்பவர்---சமீபத்தில் அமுதவிழாக் கண்ட நாயகர்---பத்மநாப ஐயர்.

1981 ஆம் ஆண்டு இலங்கைப் பேரினவாத அரசு மேற்கொண்ட யாழ் பொதுநூலக எரிப்பில், ஏறக்குறைய ஒரு இலட்சம் புத்தகங்கள், ஆவணங்கள் எரியுண்டன. இந்தப் பண்பாட்டு அழிப்புத் தான் நூலகம் திட்டத்திற்கு வித்திட்டது.

Friday, 1 October 2021

விடியல் சஞ்சிகை – புரட்டாதி இதழ்

 

`விடியல்’ புரட்டாதி (2021) இதழ் வாசிப்புக்குக் கிட்டியது. `சுட்டுத் தள்ளுங்கள்! எல்லாவற்றையும்..’ மொபைல் காமிரா காதலர் சேலம் லக்சுமிகாந்தன், `பேருருவின் புறவாசல்’ மகரந்தன் ஆகியோரை அதிதிகளாகக் கொண்ட அழகான அட்டைப்படத்துடன் வந்திருக்கின்றது.

லக்சுமிகாந்தன், டப்பாக் கமராவிலிருந்து மொபைல் கமரா வரை எதையும் விட்டுவைக்காத கலைஞர், கமராக்களின் நுணுக்கங்களை விவரித்துச் செல்லும் இவர் `இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்ற எழுத்தாளர் என்பது கூடுதல் செய்தி.

மகரந்தன் எழுதிய `பேருருவின் புறவாசல்’ – பேருரு தும்பியா யானையா மக்கள் கூட்டமா? விறுவிறுப்பாக பல தகவல்களைத் தந்துகொண்டே சென்றது.

ஆவணி இதழ் பக்கத்துக்குப் பக்கம் கைக்கூ கவிதைகளால் சுவை சேர்த்தது, எனில் புரட்டாதி இதழ் வாசகர்களின் சுவைமிகு கடிதங்களால் நிரம்பி வழிகின்றது.

`ஆலகால விஷம்’ – ஐந்தாவது முத்தம் – ஒரே `இச்’சில் போட்டுத் தள்ளும் கைங்கரியம். விஷக்கன்னி – உடம்பு பூரா விஷம். நகைச்சுவைப் பாணியில் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. ராஜ்ஜாவுக்கு வாழ்த்துகள்.

மு. முருகேஷ் எழுதிய `பின்னிருக்கையில் மனிதம்’ நல்ல படைப்பு. உண்மைக்கதை. அடுத்தவருக்கு உதவுதல் பற்றிய படைப்பு.

தவிர பல நேர்காணல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என சஞ்சிகையைச் சிறப்புற வைக்கின்றன. பக்க எண்ணிக்கைகளில் சஞ்சிகை சிறிதாயினும் - கடுகு சிறிது, காரம் பெரிது என உணர்த்தி நிற்கும் சஞ்சிகை.

ஒரு வட்டத்திற்குள் செயல்படாது இலக்கியப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில் விரிவதைப் பாராட்டுகின்றேன். `ஈழத்துச் சிறப்பிதழ்’ வருவதைத் தொடர்ந்து பல சிறப்பிதழ்கள் வெளிவர வாழ்த்துகள்.